டெர்சுவின் பாதை.

அகிரா குரோசாவா இயக்கிய “டெர்சு உசாலா” திரைப்படத்தில் டெர்சுவாக நடித்திருப்பவர் சோவியத் யூனியனைச் சேர்ந்த நடிகர் மாக்சிம் முன்சுக். இவர் 1975 மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றிருக்கிறார்

டெர்சு உசாலா  குரோசாவாவின் 25 வது படம். ஜப்பானுக்கு வெளியே அவர் எடுத்த முதல் படம். விளாடிமிர் அர்செனியேவ் எழுதிய இந்த நாவலை ரஷ்யாவில் 1961ம் ஆண்டு இயக்குனர் அகாசி பாபயன் படமாக்ககியிருக்கிறார். ஆனாலும் குரோசாவா இதனைப் படமாக்க விரும்பினார்.  ரஷ்ய ஜப்பானிய கூட்டுறவில் இப்படம் உருவாக்கபட்டது.

மாக்சிம் முன்சுக் நடித்த “Disappearance of a witness” படத்தைப் பார்த்த அகிரா குரோசாவா, டெர்சு உசாலா கதாபாத்திரத்திற்கு முன்சுக்கை;த தேர்வு செய்தார். நாவலில் இருந்து படத்தின் திரைக்கதை பெரிதும் மாறுபட்டது. படம் கேப்டனின் நினைவுகளில் இருந்தே துவங்குகிறது.

அடையாளமற்றுப் போய்விட்ட புதைமேட்டினைத் தேடும் கேப்டனின் தூய அன்பின் வழியாகவே டெர்சு நினைவு கொள்ளப்படுகிறார்.

நாவலில் வரும் டெர்சுவிற்கு வயது நாற்பத்தைந்து, அவர் குள்ளமான உருவம் கொண்டிருக்கிறார், ஆனால் பரந்த மற்றும் தடித்த உடலமைப்பு, அகலமான மார்பு. வலுவான கைகால்கள். பழங்குடியினருக்கே உரித்தான முகம். சிறிய மூக்கு. துருத்திய கன்னத்து எலும்புகள். முகத்தில் ஆழமான வடுக்கள் மங்கோலியர்களுக்கே உரித்த சிறிய கண்கள். பெரிய பற்கள் செம்பட்டையான தாடி மற்றும் மீசை. அவரது கச்சையில் ஒரு வேட்டைக் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது, தோற்றத்தில் அப்பாவியான வெளிப்பாடு இருந்தது என்கிறார் அர்செனியேவ்

படத்தில் நாம் காணும் டெர்சு இதே உருவத்துடன் இருக்கிறார். ஆனால் அவரது பேச்சும் நடையும் தனித்துவமாக  உள்ளது. அவரது கண்களில் அச்சமின்மையும் தெளிவும் ஆழ்ந்த துயரும் வெளிப்படுகிறது. அதுவே நம்மைக் கவர்கிறது. படத்தில் டெர்சுவிற்கும் கேப்டனுக்குமான நட்பும் புரிதலும் மிக அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

டெர்சு அறிமுகமாகும் காட்சியில் ராணுவ வீரர்கள் கரடி வரப்போகிறது என்றே காத்திருக்கிறார்கள். ஆனால் முதுகில் சுமையோடு டெர்சு அவர்களை நோக்கி வந்து சேருகிறார். அவர்களை அந்நியர்களாக நினைக்காமல் நீண்டகாலம் பழகியது போல எளிதாக அவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்கிறார். கேப்டனுக்கு வணக்கம் தெரிவிக்கிறார். ராணுவ வீரர்கள் அவரை கேலி செய்கிறார்கள். அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

நெருப்பின் அருகில் அமர்ந்தபடி தனது புகைக்குழாயை நிரப்பிப் புகைக்க ஆரம்பிக்கிறார். அத்தோடு தான் நாள் முழுவதும் சாப்பிடவில்லை. பசிக்கிறது என்றும் சொல்கிறார். அதை அவர் சொல்லும் விதம் இயல்பானது.  இது ஒன்றும் தனக்கு புதிய விஷயமில்லை என்பது போலவே சொல்கிறார்.

அவருக்கு உணவு தருகிறார்கள். அவர் நாள் முழுவதும் பட்டினிகிடந்தவரின் ஆவேசமின்றி நிதானமாக உணவைச் சாப்பிடுகிறார். அந்தக் காட்சியிலே டெர்சுவின் ஆளுமை வெளிப்பட்டுவிடுகிறது.

கேப்டன் அர்செனியேவ் முதல்சந்திப்பிலே டெர்சுவைப் புரிந்து கொண்டுவிடுகிறான். அவர். அசாதாரணமானவர். எளிமையாகவும், அமைதியாகவும், அடக்கமாகவும், பேசுகிறார். தனது முழு வாழ்க்கையையும் தைகாவில் கழித்திருக்கிறார். நகரவாழ்வின் சுவடே இல்லாத மனிதர். வீடில்லாத அவர் காட்டிற்குள் சிறிய கூடாரம் அமைத்து தங்கிக் கொள்கிறார். ஒரு காலத்தில் அவருக்கு மனைவி பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் பெரியம்மை நோயால் இறந்துவிட்டார்கள். வீடு தீக்கிரையாகிவிட்டது என்ற அவரது வாழ்க்கைக் கதையை முதற்சந்திப்பிலே தெரிந்து கொண்டுவிடுகிறான்.

டெர்சுவின் வாழ்க்கை கதை சின்னஞ்சிறியது. ஆனால் அவரது நினைவுகள் இதிகாசம் போன்று மிகப்பெரியது. இயற்கையைப் பற்றிய அவரது புரிதல் தெளிந்த ஞானமாக வெளிப்படுகிறது. அதன் அடையாளம் தான் புலியின் ஆவியைப் பற்றிச் சொல்வது ஒவ்வொரு இரவும் நெருப்பின் மூலம் அவர் தனது குடும்பத்தின் ஆவிகளுடன் தொடர்பு கொள்வது. காட்டிலுள்ள எல்லா உயிர்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் என்பது.

தனியே வாழும் டெர்சுவிற்கு அவரது வயது எவ்வளவு என்று கூடத் தெரியவில்லை. நீண்டகாலம் வாழ்ந்துவிட்டேன் என்றே சொல்கிறார். அந்த பதிலில் சலிப்பும் நிறைவும் வெளிப்படுகிறது.  காட்டின் உருவம் போலவே டெர்சு சித்தரிக்கபடுகிறார்.

நீங்கள் வேட்டைக்காரனா எனக் கேட்கும் போது நான் எல்லா நேரமும் வேட்டையாடுவேன்; வேறு வேலையே கிடையாது. எனக்கு வேட்டையாட மட்டுமே தெரியும். என்கிறார் டெர்சு.

தங்களுக்கு வழிகாட்டியாக அவர் இருக்க முடியுமா எனக் கேப்டன் கேட்கிறார். டெர்சு அதற்குப் பதில் தருவதில்லை. மாறாக மறுநாள் வழிகாட்டத் துவங்கிவிடுகிறார். நேரடியான பதிலை விடவும் செயலே அவரது வழிமுறை.

நாவலில் டெர்சுவின் பழைய துப்பாக்கிக்கு பதிலாகப் புதிய துப்பாக்கி ஒன்றை தர முயலுகிறார் கேப்டன். அது தனது தந்தையின் துப்பாக்கி என்பதால் அதன் நினைவுகளுக்காகத் தான் வைத்திருக்க விரும்புவதாகப் புதிய துப்பாக்கியை மறுக்கிறார் டெர்சு.

டெர்சு உசாலா நாவலை தமிழில் அவைநாயகன் மொழியாக்கம் செய்திருக்கிறார். நல்ல மொழியாக்கம். அரிய புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்து மொழியாக்கம் செய்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது

நாவலில் இருந்து படத்தின் திரைக்கதையை உருவாக்கும் போது எவ்வளவு காட்சிகளைத் தேவையில்லை எனக் குரசோவா நீக்கியிருக்கிறார் என்பது திரைக்கதை எழுதும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

டெர்சு ராணுவ வீரர்களைக் கண்டு பயப்படுவதில்லை. அவர்கள் தேவையில்லாமல் துப்பாக்கிக் குண்டுகளை வீணடிக்கிறார்கள் என்று சொல்கிறார். படம் முழுவதும் பாதைகளைக் கண்டறிவதே அவரது வேலை. உன்னிப்பாக எதையும் பார்க்காமல் போனால் காட்டில் உயிர்வாழ முடியாது என்கிறார் டெர்சு

அவரும் கேப்டனும் தனிமைப்படுத்தப்பட்டு, பனிப்புயலால் உறைந்த ஏரியில் வழிதவறிப் போன நாளில் அந்தி மறைவதற்குள் ஒடியோடி வேலை செய்வதும் பனிப்புயலுக்குள் இரவைக் கழிப்பதும் மறக்க முடியாத காட்சி. அதுவும் வானில் மறையும் சிவப்பு கோளமான சூரியனும் அதே பிரேமில் பாதி வெளிப்பட்ட நிலவும் தெரிய அவர்கள் நிற்கும் காட்சி அபாரம்.

இயற்கையும் மனிதனும் இணைந்த அந்த உலகில் வன்முறையில்லை. குரூரங்கள் இல்லை. ,படம் அமைதியாகவும், அழகாகவும், தத்துவமாகவும், கலை ரீதியாகவும் உருவாக்கபட்டிருக்கிறது. கலையின் வழியாக மனித இதயத்தினை நோக்கிய தூய பாதை ஒன்றினை குரோசாவா உருவாக்கிக் காட்டியிருக்கிறார்.

தனிமையில், பழைய நினைவுகளின் துயரத்தில் வாழுகிறவனுக்கு நட்பு தான் ஒரே மீட்சி. புதிய வெளிச்சம். அந்தப் பாதையில் கேப்டனும் இணைந்து பயணிக்கும் போது டெர்சு புதிய உறவினை அடைகிறார். இரண்டு பறவைகள் ஒன்றிணைந்து பறப்பது போலவே அவர்கள் செயல்படுகிறார்கள்.

உலகசினிமா வரலாற்றில் டெர்சு உசாலாவிற்கு எப்போதும் தனியிடம் உண்டு. செவ்வியல் நாவல்களைப் போலத் திரையில் உருவாக்கபட்ட செவ்வியல் காவியம் என்றே இதனைக் கருதுகிறேன்.

••

மாக்சிம் முன்சுக் துவா குடியரசின் பிராந்திய நாடக அரங்கை நிறுவியவர்களில் முக்கியமானவர். அவர் ஒரு பாடகர், இசையமைப்பாளர். வேட்டைக்காரர். குதிரை மேய்ப்பவர், நாட்டுப்புறக் கதைகளைச் சேகரிப்பவர், ராணுவ வீரர் எனப் பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார்

துவாவிலுள்ள உர்கைலிக் என்ற சிறிய கிராமத்தில் முன்சுக் பிறந்தார். அவரது உண்மையான பிறந்த நாள் எதுவெனத் தெரியவில்லை. ஆகவே ஆண்டில் இரண்டு முறை அவர் பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறார். ஒன்று மே 2 மற்றொன்று செப்டம்பர் 15.

1927ல் முன்சுக் மக்கள் புரட்சிகர இராணுவத்தில் இணைந்து ஒரு பணியாற்றியிருக்கிறார். இசையிலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்ட அவர் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். அதுவே சினிமாவிற்குள் நுழைய வழிகாட்டியிருக்கிறது.

டெர்சு உசாலா படத்தின் படப்பிடிப்பு 1974 ஆம் ஆண்டு மே 28ல் தைகா வனப்பகுதியில் துவங்கியது. 1975 இல் ஜனவரி 14 நிறைவு பெற்றது. படப்பிடிப்பில் ஏராளமான பிரச்சனைகள், நெருக்கடிகள். புத்த துறவியைப் போல அமைதியாக, உறுதியாக செயல்பட்டு படத்தை முடித்திருக்கிறார் குரோசாவா.

 படப்பிடிப்பு நாட்களில் அங்கே நடந்த அனைத்தையும் மனைவிக்கு எழுதிய கடிதம் மூலம் பதிவு செய்திருக்கிறார் முன்சுக்.

அவரும் குரோசாவும் ஒரே வயதுடையவர்கள். ஆகவே நண்பர்கள் போலப் பழகியிருக்கிறார்கள். ஆண்டுத் தோறும் முன்சுக்கிற்குப் புத்தாண்டு வாழ்த்து அட்டையைப் பரிசுடன் அனுப்பி வைத்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார் குரோசாவா.

படப்பிடிப்புத் தளத்தில் அகிரா குரோசாவா எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்து கொண்டிருப்பார். ஆகவே அவரது கண்களை நேரடியாகப் பார்க்க முடியாது. ஒருமுறையாவது அந்தக் கண்களை நேரில் காண ஆசைப்பட்ட முன்சுக் அப்படி ஒரு தருணம் கிடைத்ததைப் பற்றிக் கடிதத்தில் எழுதியிருக்கிறார்

தைகாவில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்த காரணத்தால் படக்குழுவினர்கள் அனைவருக்கும் தாடியும் மீசையும் வளர்ந்து போனது. அகிரா குரோசாவா மொட்டை அடித்துக் கொள்ள விரும்பி நாவிதரை வரவழைத்திருந்தார். அப்போது அவரது கண்களைத் தான் நேரில் கண்டதாகவும் அன்பும் கருணை கொண்டதாக அந்தக் கண்கள் இருந்தன என்றும் முன்சுக் குறிப்பிடுகிறார்

உண்மையான டெர்சுவின் தோற்றம்.

விளாடிமிர் அர்செனியேவ் புத்தகத்தில் காணப்படும் உண்மையான டெர்சுவிற்கும் அதன் புதிய பதிப்பின் அட்டையில் இடம்பெற்றுள் முன்சுக்கிற்கும் ஒரு வேறுபாடும் இல்லை

டெர்சுவின் ஆன்மா இந்தப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்று சொல்கிறார் முன்சுக்கின் மகள். அந்த நம்பிக்கை தைகா மக்களிடம் உண்டு. அதனால் தான் குரோசாவா இறந்து போன பிறகு முன்சுக் அவரது ஆவியுடன் தான் உரையாடுவதாகவும் இன்னொரு படம் சேர்ந்து வேலை செய்ய அவர் விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார் .

பனிபடர்ந்த ஏரியின் அழகை கேப்டனும் டெர்சுவும் அதிகாலை மென்னொளியில் நின்று பார்க்கும் காட்சி ஏதோ இரண்டு தேவதூதர்கள் பூமியின் அழகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பது போல நினைக்க வைக்கிறது.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2024 09:38
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.