காதலின் விதி

இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்ட வரலாறு குறித்து விரிவான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் இந்தியாவில் காலண்டர் அச்சிடப்பட்டு விற்பனை பொருளாக மாறியது. அதிலும் கடந்த நூறு ஆண்டுகளில் தான் வீடு தோறும் காலண்டர் வாங்கி வைத்திருப்பது நடந்தேறியது. குறிப்பாக ஓவியர் ராஜா ரவிவர்மாவின் பங்களிப்பு மற்றும் கொண்டைய ராஜுவும் அவரது சீடர்களும் வரைந்த சாமிபடங்கள் பற்றிய ஆய்வின் மூலம் காலண்டர் கலையின் முக்கியத்துவம் மற்றும் சிறப்புகள் வெளிப்படுத்தபடுகின்றன.

1954 ஆம் ஆண்டில் வெளியான மிசோகுச்சியின் A Story from Chikamatsu திரைப்படம் காலண்டர் தயாரிக்கும் வேலையைப் பற்றியதே. அச்சுத் தொழிலில் ஈடுபடும் இஷூனை மையமாகக் கொண்டது.

மிசோகுச்சியின் புகழ்பெற்ற படங்களான Ugetsu, Sansho the Bailiff, Life of Oharu வரிசையில் வைத்து கொண்டாடப்பட வேண்டிய முக்கியமான திரைப்படமிது.

எடோ-கால ஜப்பானில் கியோட்டோவின் முக்கிய அச்சுக்கலைஞராக விளங்கியவர் இஷுன். நாடு முழுவதும் காலண்டர் அச்சிட்டு விநியோகம் செய்வதற்கான ஆணையை அவரது அச்சகம் பெறுகிறது. இதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு விருந்து கொடுத்துத் தேவையான கையூட்டுகள் கொடுத்து ஆணையைப் பெறுகிறார். தனித்துவமிக்க ஒவியங்களைக் கொண்ட காலண்டரை உருவாக்கித் தருகிறான் மோஹே. அவனுக்கும் இஷுனின் மனைவிக்குமான காதலையும் அவர்கள் வீட்டைவிட்டு ஒடிய போது ஏற்பட்ட நெருக்கடிகளையும் இப்படம் விவரிக்கிறது

படத்தின் ஒளிப்பதிவு அபாரமானது. ஒளிப்பதிவாளர் கஸுவோ மியாகா கறுப்பு வெள்ளைக்காட்சிகளை நிகரற்ற ஒவியங்களாக உருவாக்கியுள்ளார். குறிப்பாகக் காதலர்கள் ஏரியில் படகில் செல்லும் காட்சி, அவர்கள் ஒளிந்து வாழும் மலைப்பகுதி,. இரவு தங்கும் விடுதி அறை. சிலுவையில் அறைவதற்காகக் குதிரையில் அழைத்துச் செல்லப்படும் ஊர்வலம் போன்ற காட்சிகள் நிகரற்றவை. பாரம்பரிய ஜப்பானிய இசையின் மாறுபாடுகளை இதில் மிசோகுச்சி சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்

நான்கு இழைகளைக் கொண்ட கதை. இரண்டு தொழில்நிறுவனங்களுக்குள் நடக்கும் வணிகப் போட்டி, ஒவியன் மோஹேயை காதலிக்கும் பணிப் பெண்ணின் கதை, தனது சகோதரனின் கடனை அடைக்கப் பணஉதவி கேட்கும் இஷூனின் மனைவி ஓசனுக்கு ஏற்படும் சிக்கல்கள். அவளுக்கு உதவி செய்ய முயன்று வெளியேற்றப்பட்ட மோஹேயின் வாழ்க்கை. காதலர்களாக மாறிய ஓசன் மோஹே ஒளிந்து வாழ்வதும் தண்டிக்கப்படுவதும் என இந்த நான்கு இழைகளைக் கச்சிதமாகப் பின்னி திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். மேடை நாடகமாக நிகழ்த்தப்பட்ட பிரதியை மிசோகுச்சி தனது திரைக்கதையால் தேர்ந்த கலைப்படைப்பாக மாற்றியிருக்கிறார்.

ஜப்பானில் முறை தவறிய உறவில் ஈடுபடும் ஆணும் பெண்ணும் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்பது புதிய செய்தி.

தன்னை விடப் பல ஆண்டுகள் வயதில்மூத்த இஷூனை அவரது பணம் மற்றும் வசதிக்காகத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாள் ஓசுன். அந்தத் திருமண வாழ்க்கை இனிமையாக இல்லை. அவளது சகோதரன் வீடு தேடி வந்து உதவி கேட்கும் போது கணவனிடம் பணம் கேட்கிறாள் ஓசுன். ஆனால் இஷூன் அவளது குடும்பத்தை அவமானக பேசியதோடு பணம் தரவும் மறுக்கிறான்.

இந்நிலையில் அவளுக்கு உதவி செய்ய முன்வருகிறான் மோஹே. அவன் பொறுப்பில் தான் அச்சக பணமிருக்கிறது. அதை முறைகேடாகப் பயன்படுத்த நினைத்து சிக்கிக் கொள்கிறான். இஷூன் அவர்களுக்குள் ரகசிய காதல் இருப்பதாக நினைத்து மோஹேயை தண்டிக்கிறான். உண்மையில் அவர்கள் இஷூனின் நெருக்கடியால் தான் காதலர்களாக மாறுகிறார்கள். வீட்டைவிட்டு தப்பியோடி வாழுகிறார்கள். தனது மனைவி ஒடிப்போனதை மறைத்து வாழும் இஷூன் அவர்களைக் கண்டுபிடித்து மனைவியை மீட்க ஆட்களை அனுப்பி வைக்கிறான். அவர்கள் மோஹே இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து அவளை மீட்கிறார்கள். ஆனால் மோஹே திரும்ப வந்து அவளை மீண்டும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறான்.

ஒரு காட்சியில் இஷுன் தனது குடும்பப் பெயரைக் காக்க தற்கொலை செய்து கொள்ளும்படி அவரது மனைவியிடம் கத்தியை வீசி எறிகிறார். அதற்குப் பதிலாக அவள் மோஹேயை சந்திக்க வீட்டை விட்டு ஓடுகிறாள், அது போலவே தந்தையால் காட்டிக் கொடுக்கபடுகிறான் மோஹே. உறவுகளுக்குள் ஏற்படும் மோதல்கள் மற்றும் வெறுப்பைப் படம் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

ஏரியில் குதித்துக் காதலர்கள் இறந்துவிட்டதாகத் தேடும் காட்சி அபாரமான அழகுடன் படமாக்கபட்டிருக்கிறது.

முடிவில் அரசாங்க அதிகாரிகளை ஏமாற்றியதற்காக இஷுனும் குற்றவாளியாக அறிவிக்கபடுகிறான். அவனது சொத்து பறிமுதல் செய்யப்படுகிறது கடைசி ஊர்வலத்தின் போது மொஹேயும் ஓசனும் முன்பை விட மகிழ்ச்சியாக இருப்பதை மக்கள் காணுகிறார்கள். அந்தக் காட்சி மறக்க முடியாதது.

சிக்கமட்சு பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த முக்கியமான நாடகக் கலைஞர். அவரது இந்த நாடகம் ஜப்பானிய நாடக வரலாற்றில் மிக முக்கியமான நாடகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது

தண்டிக்கபடுவதற்கு முன்பாக அவர்கள் ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு அழுகிறார்கள், , அந்த இரவு முடிவற்று நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதயமற்ற கோடைகாலத்தின் இரவு எப்போதும் போல் குறுகியது, அவசரமாக விடைபெற்றுப் போய்விடுகிறது. சோனேசாகியில் என்றோ நடந்த காதல் தற்கொலையை மிசோகுச்சி நிகரற்ற காதல் கதையாகத் திரையில் உருவாக்கிக்காட்டி சாதனை செய்திருக்கிறார்

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2024 21:14
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.