தொகை பதிப்பகம்
என்னுடைய நண்பர் னோ அவர்களுக்கு சமீபத்தில் பிறந்தநாள் வந்திற்று. அழைத்துப் பேசவேண்டுமென்று நினைத்ததுதான் மிச்சம். அவ்வின்பம் வாய்க்கவில்லை எனக்கு. அன்று முழுதும் ஒரு திராபையான சினிமாவுக்கு கதை விவாதத்தில் இருந்தேன். அந்தக் கதை எழுதிய இயக்குனர் அக்குரோ குரோசாவை ஏழு தலைமுறைக்கும் சேர்த்துப் பார்த்திருக்கிறேன் என்றார். ஆனால் சவத்த மூதிக்கு ஒரு காட்சி எழுதவரவில்லையென தெக்கத்தி நண்பரொருவர் கொதித்தார். அவர் கதை விவாதத்தை விட்டு அவசரகதியில் வெளியேறினார். வழிமறித்த இயக்குனர் எங்கே போகிறீர்கள் என்று கேட்டமைக்கு தெக்கத்தி நண்பர் அளித்த பதில் இவ்வாறு வெளிப்பட்டது.
“எலே…நீ பார்த்த குரோசவாவை நானும் பார்க்கணும். அதுக்குத்தான் போய்ட்டு இருக்கேன். குமரன் காலனியில அவரு சிக்கமாட்டாரா என்ன” என்றபடிக்கு விறுவிறுவென விலகினார். அந்தக் களேபரங்களுக்கு மத்தியில் நண்பர் னோவை அழைத்து வாழ்த்துச் சொல்ல மறந்திருந்தேன்.
இன்று காலை னோ அவர்களை வேறொரு தேவைக்கு அழைக்க வேண்டியிருந்தது. அவருடைய தொகை பதிப்பகத்தில் வெளியான புத்தகமொன்றைப் பற்றி அறிவதே அந்த அழைப்பின் நோக்கம். அழைப்புப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. “அத்தனை செல்வமும் உன்னிடத்தில், நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்” என்ற அந்தக்குரலில் எவ்வளவு தூய்மையும் பிரார்த்தனையும் பொழிகிறது. இணைப்புத் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அழைத்தேன். பாடல் தொடங்கும் போதே “சொல்லுங்க எழுத்தாளரே நலமாக இருக்கிறீர்களா? என்று பதில் அளித்தார். “அடேயப்பா உங்களோடு பேசுவது குதிரைக் கொம்பாக ஆகிவிட்டது” என்றேன். ஒரு மெல்லிய சிரிப்பும் அதனை ஒத்துக்கொள்வதைப் போலான அமைதியும் எதிர்புறத்தில் இருந்து வந்தது.
“சொல்லுங்கள் என்ன விஷயம். சும்மா அழைக்கமாட்டீர்களே” னோ கேட்டார்.
ஆமாம் உங்களுடைய பதிப்பகத்தில் சென்ற மாதம் வெளியான “ஜஜஜ” கவிதை தொகுப்பின் நிறையப் பிரதிகளை ஒரு பழைய புத்தகக் கடையில் காண முடிகிறதே, என்ன நடந்தது? ஒருமாதத்தில் இப்படியான முடிவுகளை எடுத்தது கவிஞரா? பதிப்பகமா? என்று கேட்டேன்.
எந்தப் பழைய புத்தக கடையென்று கேட்டார். மயிலாப்பூரில் உள்ள நடைபாதைக் கடையை அடையாளமாகச் சொன்னேன். அப்படியா அந்த நூலின் ஆசிரியர் அங்குதான் இருக்கிறார். நேற்றைக்கு முன்தினம் முப்பது பிரதிகளை வாங்கிக்கொண்டு போனார். எதற்கும் நான் விசாரித்துப் பார்க்கிறேன் என்றார்.
“அந்தக் கவிஞரது சொந்தவூர் வேறெங்கோ போட்டிருந்ததாக ஞாபகம்” என்றேன்.
“ஆமாம்… எள்ளூர் பக்கம் ஒரு சிறுகிராமம். இங்கதான் ஏதோவொரு காலேஜ்ல படிக்கிறதா பையன் சொன்னாப்டி” என்றார் னோ.
“கவிதைகள் எதுவும் தேறாது. ஆனா கண்டிப்பா புக் போடணும்னு அடம்பிடிச்சு ஆபிஸ் வந்திட்டே இருந்தான். அதுதான் புத்தகமாக்கினேன். நாம அழிஞ்சாலும் பரவாயில்லை. கவிதை வாழணும்ல” சொல்லிவிட்டு னோ சிரித்தான்.
நான் கடுமையாக கோபம் கொண்டு, நீ என்ன சும்மாவா போட்டிருப்பாய், அந்தப் பையங்கிட்ட எவ்வளவு தீட்டினாய் என்று கேட்டேன்.
“அடேய் எழுத்தாளா உன் அறவுணர்ச்சி கொண்ட விசாரணையைத் தொடங்கிட்டியா- என்று கேட்டபடிக்கு இருநூறு காப்பி – முப்பதாயிரம் என்றான்.
இந்தப் பாவம் எல்லாம் உன்னைத் தண்டிக்காதுன்னு நினைக்கிறியா னோ? – கேட்டேன்.
இல்லைத் தண்டிக்காது. எனக்கு முன்ன இப்பிடித் தொழில் பண்ணின பலரு இன்னைக்கு நல்லாத்தானே இருக்காங்க என்றான்.
சொல்வதற்கு எதுவுமில்லையென அழைப்பைத் துண்டித்தேன்.
பதிப்பகமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக னோ என்னிடம் சொன்னதும் நிறையப் பெயர்களைப் பரிந்துரைத்தேன். “தோகை”அவனுக்குப் பிடித்திருந்தது. ஆனால் நெடிலை குறிலாக்கி “தொகை பதிப்பகம்” என நாமம் அளித்தான். எட்டுத்தொகையிலிருக்கும் தொகை என்று என்முன்னேயே மார் தட்டிக்கொண்டான். அவனை வாழ்த்தினேன். எனக்குத் தெரிந்த புத்தக வடிவமைப்பாளர், அச்சகத்தார் ஆகியோரை அறிமுகப்படுத்தினேன். அட்டை ஓவியம் வரை வளர்ந்து வருகிற ஓவியர் ஒருவரை அழைத்துச் சென்று சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். யாரேனும் ஒரு நல்ல எழுத்தாளரின் புத்தகத்தையே முதல் வெளியிடவேண்டுமென ஆசைப்பட்டான். அந்த ஆசையில் மண் விழுகிற வகையில், அவனது கூடா நட்பொன்றின் மூலம் முகநூல் வழியாக வந்தடைந்த “அன்பே…இன்று உன்னுடைய இன்ஸ்டாவின் ஸ்டோரி என்ன?” எனும் புகழ்பெற்ற கவிதாயினி ஒருவரின் நூலையே வெளியிட வேண்டியதாயிற்று.
அந்த நூல் உருவாக்கத்திற்கு தேவையான பொருளுதவியில் மூன்றில் ஒருபங்கை நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். னோ மிகுந்த நன்றியோடு அதனைப் பெற்றுக்கொண்டான். பிறகு சில மாதங்களில் ஒரு பதிப்பகமாக தன்னை முன்னிறுத்த னோ வழிகள் கண்டான். இன்று தொகை பதிப்பகத்தை அறியாவதவர் எவருமில்லை. எட்டுத்தொகையை மறந்தாலும் மறப்பான் தமிழன் – என் தொகைப் பதிப்பகம் மறந்திடுமோ என்று னோ சவால் விடுகிறார் என்றால் பாருங்களேன். னோ ஐந்தாறு மாதங்களில் பதிப்பகத்தை டெவலப் செய்தார். அவர் படிப்பதெல்லாம் கவிதை, ஏனெனில் அதன்பொருட்டு கிடைப்பது எல்லாம் பொன். தொகை பதிப்பகத்தில் ஒரு நூல் வரவேண்டுமெனில் கவிதைகளோ, கதைகளோ, கட்டுரைகளோ தொகையாக இருக்கவேண்டுமென இல்லை. ஆனால் தொகை மட்டும் தொகையாக வேண்டுமென அறிவிக்குமளவு டெவலப் அடைந்திருக்கிறது.
தமிழில் தொகை பதிப்பகம் மட்டுமா இப்படி இயங்குகிறது? உனக்கு நான் செய்வது மட்டுந்தான் தெரிகிறதா? என்றெல்லாம் அழுதுவடிக்கும் எந்தச் சமரசமும் னோவிடம் இல்லை. அவன் தன்னுடைய பதிப்பகத்திற்கு எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் கண்டடையும் இடமாக முகநூலை ஆக்கிக்கொண்டான். எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் எழுதிய சிறிய பத்தியொன்று கைபேசியில் எழுதப்பட்டு முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார். ஆதலால் அது வடிவம் குழம்பி சொற்கள் மடிந்து மடிந்து கீழே கீழேயென பார்ப்பதற்கு கவிதையைப் போலிருந்தது. உள்பெட்டியில் னோ மருத்துவருக்கு ஒரு தகவல் அனுப்புகிறார்.
அன்புள்ள கவிஞருக்கு ! உங்களுடைய இந்தக் கவிதையின் சொற்சேர்க்கைகள் அபாரமாயுள்ளன. இதுபோலவே இன்னும் ஐம்பத்து ஒன்பது கவிதைகளை எழுதினால் மொத்தமாக அறுபது கவிதைகளைச் சேர்த்து ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்
என்னுடைய இன்னொரு நண்பருக்குச் சுட்டுப்போட்டாலும் இலக்கியம் வராது. அதுவும் தமிழ் இலக்கிய வாதிகளைக் கண்டால் ஆகாது. ஒரு அரசியல் கட்சியின் தீவிரமான அபிமானி. முகநூலில் நாளும் பொழுதும் எழுதும் பதிவுகளின் வழியாகவே தனது இருப்பை தன்னிடமே உறுதி செய்யும் தற்குறி. எந்த எழுத்தாளரையும் வெறிகொண்டு அவதூறுகளால் கடித்துக் குதறக் காத்திருக்கும் வெறிநாய் மூர்க்கம் அவருடையது. தன்னுடைய நண்பனின் மரணத்திலிருந்து மீளமுடியாமல் அவர் எழுதிய அஞ்சலிக்குறிப்பைப் பார்த்துவிட்டு, னோ உள்பெட்டியில் ஒரு தகவல் அனுப்புகிறான்.
அன்புள்ள எழுத்தாளருக்கு! உங்களுடைய இந்தச் சிறுகதையின் சம்பவ நேர்த்தி அபாரமாயுள்ளது. இதுபோலேவ இன்னும் ஒன்பது கதைகளை எழுதினால் மொத்தமாக பத்து கதைகளைச் சேர்த்து ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்.
இந்த நண்பர் என்னை அழைத்து னோவின் தொடர்பு எண்ணைக் கேட்டார். விஷயம் தெரியாமல் கொடுத்துவிட்டேன். னோவை சில நாட்கள் இலக்கிய விழாக்களில் பார்த்தாலும் என்னோடு பேசுவதில்லை. பிறகுதான் என்னடா ஆச்சு என்று கேட்டால், நண்பர் கடுமையாகத் திட்டியதைச் சொன்னான்.
தொகையைப் போல பதிப்பகங்கள் வெவ்வேறு பெயர்களில் நிறையவே உள்ளன. எழுத வருவோரிடம் பணம் வாங்கிக்கொண்டு அந்தப் பணத்திற்கு ஏற்ற அளவில் பிரதிகளை வழங்காமல் ஏமாற்றும் செயலைப் புரிபவர்களை னோ அறிந்திருக்கிறான். அவர்களையே தனது முன்னோடியாகக் கூறுவான். தொகை பதிப்பகத்தில் வெளியான சில புத்தகங்களை இலக்கியக்காரர் ஒருவருடைய வீட்டில் பார்த்தேன். அதெல்லாம் வீண். வெறும் காகித குப்பைகள் என்றார் அந்த இலக்கியக்காரர். சிலவற்றை எடுத்துப் புரட்டிப்பார்த்தேன். அவர் கொஞ்சம் நாகரீகமாக அவற்றை விமர்சனம் செய்திருக்கிறார் என்றுதான் தோன்றிற்று.
இலக்கியம் சோறு போடுமா என்று எழுதுபவர்களைப் பார்த்துக் கேட்பது புதுமைப்பித்தன் காலத்திலிருந்து இன்று எழுத வந்திருக்கிற என்னிடமும் கேட்கப்படுகிறது. அது சோறு போடுமென்று யாரும் எழுதவரவில்லை. இலக்கியத்திற்கு உண்மை தெரியும்.,எழுத்தாளனுக்கு இருப்பது சோற்றுப்பசியல்லவென்று. ஆனால் சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களை, எழுத வருவோர்களை வஞ்சிக்கும் ஒரு துயர வரலாறு தொடர்வது பெருஞ்சாபம். தொகை போன்ற பதிப்பகங்கள் எழுத முனைவோரிடம் தமக்கு நேர்கிற பணச்செலவை மட்டும் அறவிடுவது குறித்து சந்தை நிலவரம் அறிந்தவொருவராக எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உழைப்புக்கான ஊதியத்தை விடவும் மூன்று மடங்கு அதிகமாக பணத்தைப் பிடுங்கித் தின்பதெல்லாம் கேடு.
உபகதை
நண்பர் னோவுக்கு இந்தப் பத்தியை அனுப்பி வைத்தேன். அவர் இப்படி பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.
அன்புள்ள நண்பனுக்கு ! உங்களுடைய இந்தப் பத்தியில் வெளிப்படும் ரெளத்திரம் அபாரமாயுள்ளது. இதுபோலவே இன்னும் ஒன்பது பத்திகளை எழுதினால் மொத்தமாக பத்து பத்திகளை சேர்த்து ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்
நான் இப்படி ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்.
“பாவப்பட்டவர்களிடம் எஞ்சியிருக்கும் உணவுகளை, செல்வங்களை வழிப்பறி செய்கிற கொள்ளையர்களைப் பார்க்கிலும், நீங்கள் ஆபத்தானவர்கள் நண்ப! – உங்கள் தொகை வளரவும் பெருகவும், நீங்கள் செய்வதெல்லாம் ஒருவகையான கொள்ளைதான் என்று உணர்க!
அவனிடமிருந்து பதில் வந்திருந்தது.
அன்புள்ள நண்பனுக்கு ! உங்களுடைய இந்தப் பதிலில் வெளிப்படும் சொற்சித்திர தன்மை அபாரமாயுள்ளது. இதுபோலவே இன்னும் தொன்னூற்று ஒன்பது சொற்சித்திரங்களை எழுதினால் மொத்தமாக நூறாக்கி ஒரு தொகுப்பாக கொண்டு வரலாம். நன்றி. நிறுவுனர் – தொகை பதிப்பகம்.
நான் இப்படி ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பினேன்.
உங்கள் பாவத்தின் தொகை எண்ணப்படும் நாளில் என்னுடைய சொற்களை சித்திரமாக ஆக்குவேன். அதுவரை அது உங்களைப் போன்ற அநியாயவான்களை தூங்கவிடாமல் செய்கிற நாயின் குரைப்பொலியாய் கேட்கும். நன்றி.
னோ என்னை அழைக்கத்தொடங்கியிருந்தார். நான் அழைப்பை எடுக்கவில்லை. ஆனால் அவருக்கு என்னுடைய கைபேசி அழைப்பின் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கவேண்டுமென விரும்பினேன்.
மனுஷனை மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பிப் பயலே இது
மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை
—
The post தொகை பதிப்பகம் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

