ஊட்டியிலே

இன்று காலை ஊட்டி நாராயண குருகுலத்தில் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் குருநித்யா ஆய்வரங்கு ஆரம்பிக்கிறது. திடீரென்று யோசிக்கையில் ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த சந்திப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து பதினேழுவருடங்களாகின்றன!


தமிழில் இவ்வளவு காலம் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் இலக்கியச் சந்திப்புகள் மிகமிகக் குறைவே. வேடந்தாங்கலில் இலக்கியவீதி என்ற சந்திப்பு பலகாலம் நிகழ்ந்தது. அதை நிகழ்த்திய இனியவன் பலராலும் நினைவுகூரப்படுகிறார். காஞ்சிபுரம் இலக்கியவட்டம் வெ.நாராயணனால் நடத்தப்பட்டது.


சற்றே பெரிய இலக்கிய அமைப்புகளால் நடத்தப்பட்டவை என்றால் இலக்கியசிந்தனை அமைப்பின் சந்திப்பு நிகழ்ச்சியையும் கணையாழி இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சியையும் குறிப்பிடலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற கட்சிக்குழுக்களை நான் கணக்கில் கொள்ளவில்லை.


பல அமைப்புகள் சிலரால் ஆரம்ப உற்சாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டு மெல்லமெல்ல தேய்ந்து ஓரிரு நண்பர்களுடன் முடிவடையும். சில அமைப்புகள் தனிநபர் முயற்சிகளாக இருக்கும். அந்த தனிநபரின் உத்வேகத்தாலேயே அவை முன்னெடுக்கப்படும்.பெரும்பாலான சந்திப்புநிகழ்ச்சிகளில் கொஞ்சம் கொஞ்சமாக மனக்கசப்புகளும் பிரிவுகளும் உருவாகும். தமிழ் சிற்றிதழ்சார் இலக்கியச் சூழலில்


மாறாக இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒரு பொதுவான ஆர்வத்தின் அடிப்படையிலேயே நிகழ்ந்து வருகின்றன. இவற்றில் எப்போதும் நான் ஒரு மைய விசையாக இருந்து வருகிறேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் நான் இவற்றில் எப்போதுமே பெரும்பங்கு வகித்ததில்லை. வேறு நண்பர்கள்தான் உடலாலும் அறிவாலும் உழைத்து இதை நிகழ்த்துகிறார்கள்.


இந்த சந்திப்புநிகழ்ச்சிகள் ஆரம்பித்த காலத்தில் மிக ஊக்கத்துடன் இவற்றில் ஈடுபட்டு பின்னர் இலக்கிய ஆர்வமிழந்து தொடர்பற்றுப்போன பல நண்பர்கள் உண்டு. ஆனால் அனேகமாக எவருமே மனமுறிவடைந்து விலகிச்செல்லவில்லை. இன்றும் அந்த நட்புகள் அப்படியே தொடர்கின்றன. ஆரம்பகாலத்திலேயே இருந்து வருபவர்களுக்கெல்லாம் வயதாகிவிட்டது . துடிப்பான இளைஞராக அன்றிருந்த சூத்ரதாரி [எம்.கோபாலகிருஷ்ணன்] நரைமுடியுடன் தோற்றம் தருகையில் ஒரு இனிய சங்கடம் மனதை வந்தடைகிறது.


இந்த கூட்டங்களுக்கு முறையான வரலாற்றுப்பதிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. 1994 முதலே நித்ய சைதன்ய யதியை பார்க்க நான் செல்லும்போது நண்பர்களைக் கூட்டிச்செல்வதுண்டு. பலர் நித்யாவின் ஆளுமையால் கவரப்பட்டவர்கள்.


ஒருமுறை நித்யா நவீனக்கவிதைகளைப்பற்றி ஒரு உரையாடல் ஏற்பாடுசெய்யலாமே என்றார். நான் நவீனக்கவிஞர்கள் சிலரை அழைத்து அந்த உரையாடலுக்கு ஏற்பாடு செய்தேன். நித்யாவுக்காக அக்கவிதைகளை நானே மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன். நித்யா அந்த உரையாடலில் கலந்துகொண்டு கவிதைகளைப்பற்றிப் பேசினார்.


நித்யா இருக்கும்போதே ஏழு சந்திப்புகள் நடந்தன. அதன்பின் தொடர்ச்சியாக ஊட்டியில் இந்தச் சந்திப்புகளை ஏற்பாடு செய்தோம். நித்யா மறைந்தபின் கலாப்ரியா உதவியுடன் குற்றாலத்தில் மூன்று சந்திப்புகள். ஒருமுறை நண்பர் மூக்கனூர்ப்பட்டி தங்கமணி ஏற்பாட்டில் ஒகேனேக்கலில். ஸ்ரீதரன் ஏற்பாட்டில் திற்பரப்பில் ஒருமுறை. நீலகண்டன் அரவிந்தன் ஏற்பாட்டில் கன்யாகுமரியில் இன்னொரு முறை


வருடத்தில் மூன்று சந்திப்புகள் நிகழ்ந்து வந்தன. நான்குகூட நடந்திருக்கிறது. இப்போது வருடத்தில் இரண்டாகக் குறைந்துவிட்டது. ஊட்டியில் வருடத்திற்கு ஒருமுறைதான். பொதுவாக நான் இப்போதெல்லாம் எந்த முன்முயற்சியும் எடுப்பதில்லை. நண்பர்களே கூப்பிட்டு கூப்பிட்டு வற்புறுத்தி ஏற்பாடுகள் செய்து அவர்களே கூடி அவர்களே நடத்திக்கொள்கிறார்கள்.


பல வருடங்கள் ஒரு அடிப்படைப்பிடிவாதத்தை கொண்டிருதோம். ஆரம்பகால சந்திப்புகள் முழுக்க என் சொந்தச்செலவிலேயே நடந்தன. ஆகவே ஓர் அளவுக்குமேல் சந்திப்பாளர்கள் தேவை இல்லை என்று கணக்கிட்டிருந்தோம்.அப்படியே நடத்திவந்தோம்


ஆனால் இன்று மெல்லமெல்ல சந்திப்புநிகழ்ச்சி பெரிதாகிவிட்டது. இன்று இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து நண்பர்கள் வருகிறார்கள். மலேசியாவிலும் இலங்கையிலும் இருந்துகூட வருகிறார்கள். குருகுலத்தில் அதிகபட்சம் நாற்பதுபேர்தான் தங்க முடியும். ஆகவே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறோம்.


ஆனாலும் நெருக்கமானவர்களை தவிர்க்கமுடிவதில்லை. இப்போதெல்லாம் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். சென்றமுறை வெளியே அறைபோட்டிருந்தோம். இம்முறை அருகிலேயே ஒரு விடுதியை வாடகைக்கு எடுத்திருக்கிறோம். செலவில் பெரும்பகுதியை பங்கேற்பாளர்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நடைமுறை வந்துவிட்டது. செலவிட முடியாதவர்கள் பணம் தரவேண்டியதில்லை.


என்ன சிக்கல் என்றால் இந்த சந்திப்பு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை இணையத்தில் எங்கள் குழுமத்துக்குள் வெளியிட்ட உடனேயே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை முழுமையடைந்துவிட்டது. இருந்தாலும் பொது அறிவுப்பு தேவை என்பதற்காக இணையதளத்தில் வெளியிட்டோம். ஆனால் மூன்றே மணி நேரத்தில் பங்கேற்பாளர் பதிவை நிறுத்திக்கொள்ள நேர்ந்தது.


இதனால் பல நண்பர்கள் மனவருத்தம்டைந்து எழுதினார்கள். அச்சு ஊடகம் வழியாக வாசிப்பவர்கள் பலர் நான் இணையமாநாடு நடத்துகிறேனா என கோபம் கொண்டு கேட்டார்கள். இப்பிரச்சினையை சமாளிப்பது எப்படி என்று தெரியவில்லை. குருகுலம் அளிக்கும் இலவச இடம் இல்லாமல் இப்படி ஒரு வருடாந்தர சந்திப்பை நடத்துவது எளிதல்ல. குருகுலம் மிகச்சிறியது. இதற்குமேல் பெரிய நிகழ்ச்சிகள் அங்கே நடக்கமுடியாது.அந்தக்கூடத்தில் அறுபதுபேர் நெருக்கியடித்து அமரலாம். அதற்குமேல் சாத்தியமில்லை.


இந்தச் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடங்கிய நாள்முதல் இன்று வரை இதன் அச்சாணியாக இருப்பவர் என் நண்பரான நிர்மால்யா. அவருக்கு நான் நன்றி சொல்லக்கூடாது. நான் அவரிடம் பேசுவதே இப்போதெல்லாம் குறைந்துவிட்டது. சந்திக்கும்போதும் பிரியும்போதும் மார்போடு கட்டித்தழுவுவதுதான் எஞ்சியிருக்கிறது




நாராயணகுருகுலமும் வசவு இணையதளமும்




திற்பரப்பு




யுவன் கவிதையரங்கு




ஊட்டி பெண்களுக்கு இடமுண்டா?




ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை






ஊட்டி இருகடிதங்கள்



ஊட்டி சந்திப்பு அலைகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 24, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.