கோவை புத்தகத் திருவிழாவில்
கோவை புத்தகத் திருவிழாவில் மூன்று நாட்கள் இருந்தேன். நிறைய வாசகர்களைச் சந்தித்து உரையாடினேன். புத்தகங்களில் கையெழுத்து போட்டுக் கொடுத்தேன். சனி,ஞாயிறு இரண்டு நாட்களும் நிறையக் கூட்டம்.

விமானநிலையத்தின் அருகிலுள்ள மேரியட் ஹோட்டலில் ( Fairfield by Marriott) தங்கியிருந்தேன்.மேரியட் குழுமத்தின் தங்கும்விடுதிகள் இந்தியாவில் நிறைய இடங்களில் இருக்கின்றன. நானே தங்கியிருக்கிறேன்.
கோவையில் உள்ள விடுதி வெளித்தோற்றத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளது. உள்ளே எந்த வசதியும் கிடையாது. மிகச்சிறிய அறை. அவர்கள் போட்டுள்ள நாற்காலியை நகர்த்த இடம் கிடையாது. மின் இணைப்புகள் சரியாக வேலை செய்யவில்லை. காலை உணவுக்கு( 600 ரூபாய் + வரி ) கட்டணம் வைத்திருக்கிறார்கள். மதிய சாப்பாடு (1000 ரூபாய் + வரி ) பொதுவாக விடுதிகளில் காலை உணவு இலவசமாகவே வழங்குவார்கள். இவர்கள் அதற்கும் கட்டணம் வசூலித்துவிடுகிறார்கள்.
கோவையில் நல்ல சைவ உணவகங்கள் இருக்கின்றன. அதுவும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் பீளமேடு பகுதியிலே சிறந்த உணவகங்கள் இருப்பதால் மூன்று வேளையும் வெளியே தான் சாப்பிட்டேன்.
நண்பர் மூர்த்தி மூன்று நாட்களும் உடனிருந்து சிறப்பாகக் கவனித்துக் கொண்டார். அவருக்கு மனம் நிறைந்த நன்றி.

வெள்ளிகிழமை மாலை விஷ்ணுபுரம் அரங்கிற்குச் சென்றேன். அஜிதனைச் சந்தித்து அவரது எழுத்து குறித்த பாராட்டுகளைத் தெரிவித்தேன்.
விஷ்ணுபுரம் அரங்கில் அமர்ந்து போகன்சங்கர், சுகுமாரன், கோகுல்பிரசாத் உடன் பேசிக் கொண்டிருந்தேன். தமிழ், மலையாளத் திரையுலகம். எழுத்தாளர்களின் சினிமா அனுபவங்கள், கு.அழகிரிசாமி கதைகள் எனச் சுவாரஸ்யமாக அமைந்த உரையாடல்.

சனிக்கிழமை காலை சிறுவாணி வாசகர் மையத்தின் அரங்கிற்குச் சென்றேன். சுரேஷ் வெங்கடாத்ரி , நாஞ்சில் நாடன், ஜி. ஆர்.பிரகாஷ் மற்றும் சிறுவாணி அமைப்பின் நண்பர்களைச் சந்தித்தேன். அவர்கள் வெளியிட்ட புதிய நூல்களை வாங்கினேன்.
கண்காட்சியில் சுற்றியலைந்து வரலாறு, கலை, பௌத்தம், கிராபிக் நாவல் என இருபது புத்தகங்கள் வாங்கினேன். அதில் பாதி ஆங்கில நூல்கள்.
தேசாந்திரி அரங்கிற்கு வந்திருந்த இரண்டு ஆங்கிலப் பேராசிரியர்கள் சமகால ஆங்கிலப் படைப்புகள் குறித்து நிறையக் கேள்வி கேட்டார்கள். தனது பிறந்த நாளை என்னுடன் கொண்டாட வேண்டும் என்று பெங்களூரிலிருந்து வாசகர் பஷீர் வந்திருந்தார்.

எனது படைப்புகளில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட மாணவி ரேணுகா தனது ஆய்வேடினைக் கொண்டுவந்து கொடுத்தார்.
கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் தேசாந்திரி பாடமாக வைக்கபட்டுள்ளது. ஆகவே நிறைய மாணவர்கள் அந்த நூலில் கையெழுத்து பெற்றுக் கொண்டார்கள்.

காவல்துறை ஆணையர் சேகர். டாக்டர் சந்திரமௌலி, எழுத்தாளர் வேணுகோபால், தொழில் அதிபர் ராமலிங்கம், கவிஞர் க.வை.பழனிச்சாமி, டாக்டர் அருண், என நண்பர்கள் பலரும் தேசாந்திரி பதிப்பக அரங்கிற்கு வந்து சிறப்பித்தார்கள்.
கோவையில் உலக இலக்கியம் குறித்த பேருரை ஒன்றை நான் நிகழ்த்த வேண்டும் என நண்பர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
வாசகர் சந்திப்பும் இரண்டு நாட்கள் இரண்டு உலக இலக்கியச் சொற்பொழிவுகளும் நடத்தத் திட்டமிடுகிறேன். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும்.
சங்க இலக்கியங்களை எப்படிப் பயிலுவது, வரலாற்றை ஏன் வாசிக்க வேண்டும். இன்றைய தமிழ் சினிமாவில் திரைக்கதை எப்படி உள்ளது. செவ்விலக்கியங்களின் முக்கியத்துவம். வெளிநாட்டு கவிதைகளை வாசிப்பதில் உள்ள சிக்கல்கள், புரியாமை என ஒவ்வொரு நாளும் இலக்கிய அமர்வு போலப் பத்து பனிரெண்டு இளைஞர்கள் கூடி அரங்க வாசலில் நின்றபடி விவாதித்தோம்.

சனிக்கிழமை இரவு ஹரிபிரசாத் மற்றும் மூர்த்தியுடன் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த வாசகர்கள் செல்லா , மதுநிகாவோடு நாகர்கோவில் ஆர்யபவனுக்கு இரவு உணவுக்குச் சென்றேன். இரவு பத்து மணிக்கும் ஜேஜே என்றிருந்தது. பிரம்மாண்டமான உணவகம். மிகச் சுவையான உணவு. இரவு 11.30 வரை உரையாடினோம். மறக்க முடியாத இனிமையான சந்திப்பு.
ஞாயிறு மாலை விஷ்ணுபுரம் பதிப்பக அரங்கிற்குச் சென்று ஜெயமோகன், அருண்மொழி, அஜிதன். ஈரோடு கிருஷ்ணன், செல்வேந்திரனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். திருச்சூர் பயணத்திலிருந்து ஜெயமோகன் அன்று தான் திரும்பியிருந்தார். பேச்சில் எப்போதுமான உற்சாகம். அன்பு. மகிழ்ச்சியான சந்திப்பு.
இரவு எட்டரை மணிக்குக் கண்காட்சி நிறைவுபெற்றதாக அறிவிப்பு வந்த போதும் தேசாந்திரி அரங்க வாசலில் நின்று உரையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் கலைந்து போகவில்லை. மனமகிழ்வான மூன்று நாட்கள்.

தேசாந்திரி பதிப்பகத்திற்கு ஆதரவு தந்த வாசகர்கள். நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள். இணைய ஊடகர்கள், புத்தக விற்பனையாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி,
வாசகர்களின் மனதிலிருந்து வரும் உண்மையான வார்த்தைகள் தரும் மகிழ்ச்சிக்கு இணையே இல்லை. உங்கள் அனைவரின் அன்பே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது.
தேசாந்திரி பதிப்பக அரங்கினை சிறப்பாக நிர்வாகம் செய்த அன்புகரன், உதவி புரிந்த கபிலன், துணை நின்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
