காதலின் முடிவு
ஏதென்ஸில் நகரில் நடக்கும் மூன்று காதல்கதைகள். ஒன்று அகதி இளைஞனின் காதல். மற்றொன்று நடுத்தர வயதுக்காரனின் காதல். மூன்றாவது வயதான இருவரின் காதல். மூன்றும் ஒன்று சேரும் புள்ளி வியப்பளிக்கிறது. கதை இணையும் இடத்தை நாம் எதிர்பார்க்க முடியாது.

Worlds Apart 2015ல் வெளியான கிரேக்கத் திரைப்படமாகும் கிறிஸ்டோஃபோரோஸ் பாபகாலியாடிஸ் இயக்கியுள்ளார்
பல்கலைக்கழகத்தில் அரசியல் பாடம் பயிலும் டாப்னே இளம் பெண்ணுக்கும் சிரிய அகதி ஃபரிஸ்க்கும் இடையே ஏற்படும் காதலின் வழியே சமகால அரசியல் மற்றும் அகதிகளின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் பேசப்படுகின்றன.
ஃபரிஸ் தனது காதலிக்காகக் கிரேக்கச் சொற்களைக் கற்றுக் கொள்கிறான். அவர்களின் உரையாடலில் ஆங்கிலச் சொற்களைச் சரியாகக் கண்டுபிடிக்கும் போது அவன் அடையும் உற்சாகம் அலாதியானது.

ஏதென்ஸின் இரவு வாழ்க்கை படத்தில் மிகவும் அழகாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி சினிமா அரங்கு. வீதியில் அமைந்துள்ள மதுவிடுதிகள். இசை நிகழ்ச்சிகள். இளைஞர்களின் உற்சாகமான ஆடல்பாடல்கள் ஒரு பக்கமும். விமான நிலையத்தைத் தாக்க வரும் கும்பல்.கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை. சாலையோரம் பூமராங் விற்கும் அகதி. தனியே செல்லும் இளம்பெண்ணை மடக்கி வன்புணர்வு செய்ய முயலும் இளைஞர்கள். எனக் கிரேக்க வாழ்வின் மறுபக்கமும் ஒளிவு மறைவின்றிக் காட்டப்படுகின்றன.
நம் தேசம் ஏன் இப்படியானது. எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துவிட்ட பிறகு எப்படி வாழுவது. இதற்கு மாற்றமே கிடையாதா. அல்லது நாம் தான் மாற்றத்தைத் துவங்க வேண்டுமா என ஒரு காட்சியில் அன்டோனிஸ் கோபத்தில் கேட்கிறார். எளிய மனிதனின் இக்கோபம் கிரேக்கத்திற்கு மட்டும் உரியதில்லை.
கிரேக்கப் புராணக்கதை ஒன்று படத்தின் மையச் சட்டகம் போலக் கையாளப்படுகிறது.ஈரோஸ் (Eros) கிரேக்கக் காதற் கடவுளான அப்ரோடிட்டின் மகன், நம் ஊரின் மன்மதன் போல மக்கள் காதலில் விழுவதற்கு ஈரோஸ் ஒரு ஊக்கியாகச் செயல்படுகிறார், காதலின் சின்னமாக ஈரோஸ் கருதப்படுகிறான். அவன் ஆன்மாவின் வடிவமான சைக் என்ற பெண்ணைக் காதலிக்கிறான். அந்தக் காதல் கதையின் மறுவடிவம் போலவே ஃபரிஸின் காதல் கதை விவரிக்கப்படுகிறது. அதே தொன்மக் கதையின் மாறுபட்ட இரண்டு வடிவங்களாகவே மற்ற காதல்கதைகளும் இடம்பெற்றுள்ளன.

கைவிடப்பட்ட விமானத்தின் உட்புறத்தில் ஃபரிஸ் காதல் செய்வது அழகான காட்சி. இருப்பிடம் அற்றுப் போன அகதிக்கு விமானம் தான் வீடு. அந்த விமானம் ஒரு குறியீடு போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
டாப்னேவின் தந்தையான அன்டோனிஸ் அகதிகளை நாட்டைவிட்டுத் துரத்தி அடிக்க வேண்டும் என்று ஆட்களைத் திரட்டி வன்முறையில் இறங்குகிறார். கைவிடப்பட்ட விமானத்தைத் தாக்க வரும் போது, அவர் டாப்னேவையும் அவளுடைய காதலனையும் பார்க்கிறார். அவரால் தனது மகளின் காதலை ஏற்க முடியவில்லை.
இரண்டாவது காதல்கதை பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலை பறிபோகும் சூழலில் வசிக்கும் ஜியோர்கோஸ் என்ற நடுத்தரவயது சேல்ஸ்மேனிற்கும் அவனது அலுவலகத்திற்கு வருகை தரும் உயரதிகாரியான எலிஸிற்குமான காதலைச் சொல்கிறது..

ஜியோர்கோஸ் மன அழுத்தத்திற்காக மாத்திரை எடுத்துக் கொள்கிறான். அந்த மாத்திரை ஒரு குறியீடு. தன்னைப் போல ஒவ்வொரு நாளும் வேலை பறிபோய்விடுமோ எனப் பயந்து வாழும் தன்னைப் போன்றவர்களை அந்த மாத்திரை தான் காப்பாற்றி வைத்திருக்கிறது என்கிறான். அவனது அலுவலகத்தில் வேலை செய்யும் நபர் ஒரு நாள் தன்னை வேலையை விட்டுத் தூக்கப்போகிறார்கள். தனது மனைவி கர்ப்பிணியாக இருக்கிறாள். ஆகவே வேலையைக் காப்பாற்ற எப்படியாவது உதவி செய் என்று மன்றாடுகிறான்.
அதைப்பற்றி எலிஸிடம் ஜியோர் பேசுகிறான். ஆனால் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. வேலையை விட்டு நீக்கிவிடுகிறாள். அந்த அதிர்ச்சியில் வேலை பறி போனவன் தற்கொலை செய்து கொள்கிறான் அதை ஜியோர்கோஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனம் உடைந்து போகிறான். படம் முழுவதும் ஜியோர்கோஸின் மனக்குழப்பம் சரியாக வெளிப்படுத்தப்படுகிறது. இந்தக் கதையில் காதல் வலி நிவாரணி போலவே சித்தரிக்கபடுகிறது.
மூன்றாவது காதல்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்த்து. செபாஸ்டியன் என்ற வயதான ஜெர்மன் பேராசிரியர் அறுபது வயதுக்கு மேற்பட்ட மரியா என்ற குடும்பத் தலைவியைச் சூப்பர் மார்க்கெட்டில் சந்திக்கிறார். அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்கள் சந்தித்து உரையாடுகிறார்கள்ஒரு சந்திப்பில் இரண்டாவது வாய்ப்பு என்ற புத்தகத்தை அவளிடம் கொடுத்து வாசிக்கச் சொல்கிறார். அவளுக்கு இன்னொரு புது வாழ்க்கை இருக்கிறது. விரும்பினால் அதை அவள் தேர்வு செய்யலாம் என்பதை மரியா உணருகிறாள். ஆனால் தனது குடும்பத்தை விட்டு வெளியேற அவளால் முடியவில்லை.

மூன்று கண்ணிகளும் ஒன்று சேரும் இடத்தில் டாப்னே. மரியா ,ஜியோர்கோஸ் ஆகிய மூவரும் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்கிறோம்.
கிரேக்கத்தின் இன்றைய சமூகப் பொருளாதார நெருக்கடிகளை படம் மிகவும் வெளிப்படையாகப் பேசுகிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் மரியா இந்தக் குற்றச்சாட்டுகளைக் கோபத்துடன் முன்வைக்கிறாள். அப்போது வன்முறையைக் கையில் எடுத்த அவளது கணவன் மௌனமாகத் தலைகுனிந்து நிற்கிறான்.
பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் உருவாகி வரும் அரசியல் உணர்வு. பொது இடங்களை குறி வைத்து வன்முறை கும்பல்களின் தாக்குதல். பெண்கள் மீதான வன்முறைகள் என நகரவாழ்வின் சிக்கல்களை படம் அழுத்தமாகவே பேசுகிறது. தனித்துவிடப்பட்ட விமானநிலையத்தின் உட்புறம். கார்ப்பரேட் அலுவலக அறையில் நடக்கும் காட்சிகள். நகரின் இரவுக்காட்சிகள் என படத்தின் ஒளிப்பதிவு மிக நேர்த்தியாக உள்ளது. இசை அதற்கு கூடுதல் வலிமை சேர்க்கிறது.
படத்தின் இறுதிக்காட்சியில் நூலகத்தில் செபாஸ்ட்டியனைச் சந்தித்து மரியாவிற்கு அவர் கொடுத்த இரண்டாவது வாய்ப்பு என்ற புத்தகத்தை அவருக்கே திரும்ப அளிக்கிறார்கள். அவர் மகிழ்ச்சியோடே அதை ஏற்றுக் கொள்கிறார்.
பிரம்மாண்டமான அந்த நூலகம் இன்றைய நெருக்கடியான வாழ்க்கைக்கான மீட்சி இங்கே தானிருக்கிறது என்பது போலக் காட்சியளிக்கிறது.
காதலில் விழுவதால் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்று நீங்கள் நம்பவில்லையா? என்று ஒரு காட்சியில் எலிஸிடம் ஜியோர் கேட்கிறான். அவள் இல்லை என்றே பதில் அளிக்கிறாள்.
அது போலவே செபஸ்டியன் எல்லாமே காதலிலிருந்து தொடங்குகிறது. எவ்வளவு வயதானாலும் பரவாயில்லை என்று மரியாவிடம் சொல்கிறார். அவள் மொழி புரியாவிட்டாலும் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறாள்.
மூன்று காதலிலும் ஆண்கள் உணர்வுப்பூர்வமாக நடந்து கொள்கிறார்கள். பெண்கள் அதை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு இயல்பாக முடிவு எடுக்கிறார்கள்.
பூமராங் போல அவரவர் செயல்கள் அவர்களுக்கே திரும்பி வருகின்றன. கிரேக்கப் புராணக்கதையான ஈரோஸ் மற்றும் சைக் காதலை நவீனப்படுத்திய விதத்தில் இப்படம் நிறையவே ஆச்சரியமளிக்கிறது.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
