உலகின் சமநிலை

அனிமேஷன் திரைப்படங்கள் நமக்கு வியப்பூட்டும் மாற்று உலகை அறிமுகம் செய்கின்றன. அந்த உலகம் விசித்திரமானது. அற்புதங்களால் நிரம்பியது. நம் அன்றாடத்தைப் போலவே அங்கும் ஒரு அன்றாட வாழ்க்கையிருக்கிறது. ஆனால் அந்த வாழ்க்கை மனிதர்களை மட்டுமே மையப்படுத்தியதில்லை.

ஒரு முயலின், நாரையின், மீனின் பார்வையில் உலகைக் காணுவது வியப்பானது. குழந்தைகளே அப்படிக் கற்பனை செய்கிறார்கள்.

ஆலீஸின் அற்புத உலகம் நாவலில் முயலைத் துரத்திக் கொண்டு செல்லும் ஆலீஸ் புதிய உலகைக் கண்டறிகிறாள். அந்த உலகின் முட்டாள்தனங்களும் அபத்தங்களும் அவளை எரிச்சல்படுத்துகின்றன. அவள் சிறுமியா, அல்லது வளர்ந்த பெண்ணா என்று கம்பளிப்புழுவிற்குச் சந்தேகம் வருகிறது. அவள் கண்ணீர் குளத்தில் நீந்துகிறாள். பூக்களுக்கு வண்ணம் அடிப்பவர்களை சந்திக்கிறாள். இந்த சாகசப்பயணத்தில் அவளது உடல் நீண்டும் சுருங்கியும் மாறிக் கொண்டேயிருக்கிறது. இந்தக் கதை சிறுவர்கள் படிக்கும் போது வேடிக்கை கதையாக இருக்கிறது. பெரியவர்கள் படிக்கும் போது மிகச்சிறந்த தத்துவார்த்த நாவலாக மாறிவிடுகிறது.

மியாசாகியின் The Boy and the Heron அனிமேஷன் படத்தை திரையரங்கில் பார்த்த போது Alice in Wonderland கதையே நினைவிற்கு வந்தது. தனது 83வது வயதில் மியாசாகி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆண்டின் சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறது. இது போன்ற படத்தை திரையரங்கில் பார்ப்பது சிறந்த அனுபவம். சென்னையில் உள்ள திரையரங்கில் நான் காணச்சென்றிருந்த போது அரங்கு நிறைந்த கூட்டம்.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மியாசாகி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதுவே அவரது கடைசிப்படம் என்கிறார்கள். அவரது திரைப்பயணத்தில் இந்தப் படம் முக்கியமானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சாயல்கள் கொண்டது என்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மருத்துவமனை ஒன்றில் ஏற்படும் தீ விபத்தில் மஹிதோ என்ற சிறுவன் தனது தாயை இழக்கிறான். அவனது தந்தை ஷோய்ச்சி ஜப்பான் ராணுவத்திற்கான போர்விமானங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்துகிறார். மனைவியை இழந்த ஷோய்ச்சி நட்சுகோ என்ற இளம்பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார். அவள் மஹிதோ அம்மாவின் தங்கை.

சிற்றன்னையுடன் வாழ்வதற்காக டோக்கியாவோலிருந்து மஹிதோ ஒரு கிராமத்திற்குப் புறப்படுகிறான். அவனது பயணத்திலிருந்தே படம் துவங்குகிறது. சித்தி அவனை வரவேற்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போகிறாள். பயண அசதியில் வீட்டிற்கு வந்தவுடன் உறங்கிவிடுகிறான். கனவில் அம்மா நெருப்பில் எரியும் காட்சி வருகிறது. திடுக்கிட்டு எழுந்து கொள்கிறான்.

அவன் கிராமத்திலுள்ள வீட்டிற்கு வரும் போது வழியில் ஒரு நாரையைக் காணுகிறான். அந்தச் சாம்பல் நிற நாரை அவனது ஜன்னலைத் தட்டி எதையோ சொல்ல முற்படுகிறது. அவன் தனியே இருக்கும் நேரங்களில் அவன் கண்ணில் படுவது போலப் பறக்கிறது. அந்த நாரையைக் காணுவதற்காக வீட்டின் வெளியே செல்கிறான் மஹிதோ

. நாரை எதற்காகத் தன்னைச் சுற்றி வருகிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை

கர்ப்பிணியாக உள்ள அவனது சிற்றன்னை நட்சுகோ அவன் மீது அன்பு செலுத்துகிறாள். பணியாளர்களாக அந்த வீட்டிலிருக்கும் முதியவர்களின் தோற்றமும் செயலும் வியப்பளிக்கிறது.

வீட்டின் அருகிலுள்ள இடிந்த கோபுரம் ஒன்றிற்குள் நாரை போய்விட்டதைக் காணும் மஹிதோ அதற்குள் செல்லுகிறான். கைவிடப்பட்ட நிலையிலுள்ள அந்தக் கோபுரத்தைப் பற்றிப் பணியாளர்கள் அச்சமூட்டும் கதையைச் சொல்கிறார்கள்

அருகிலுள்ள பள்ளியில் மஹிதோ சேர்க்கப்படுகிறான். அங்கே மாணவர்களுடன் நடக்கும் சண்டையில் அவமானப்படுத்தப்படுகிறான். தன்னை அடித்தவனைப் பழிவாங்க வேண்டுமென்று தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும் மஹிதோ வீட்டில் ஓய்வெடுக்கிறான்.

இந்த நாட்களில் அவனைத்தேடி வரும் நாரை அவனது அம்மா இறந்து போகவில்லை. அவளைக் கண்டுபிடிக்கத் தான் உதவி செய்வதாகச் சொல்கிறது. மஹிதோ பேசும் நாரையைக் கண்டு வியப்படைகிறான். ஆனால் அது சொல்வது உண்மையில்லை என்று வாதிடுகிறான். அந்த நாரை அவனைத் தாக்க முற்படுகிறது. பணியாளர்கள் அவனைத் தேடிவரவே நாரை பறந்து போய்விடுகிறது. ஆத்திரமான மஹிதோ நாரையை வீழ்த்துவதற்காக வில் அம்புகளைச் செய்து வேட்டையாட முயலுகிறான். அவனது அம்பு விசேசமானது. மந்திர சக்தி கொண்டது.

ஒரு நாள் வீட்டிலிருந்த சிற்றன்னையைக் காணவில்லை எனப் பணியாளர்கள் தேடுகிறார்கள். அவளைத் தேடி மஹிதோ கிளம்புகிறான். அவனுடன் கிரிகோ என்ற வயதான பெண்ணும் உடன் வருகிறாள். அவர்கள் இடிந்த கோபுரத்திற்குள் செல்கிறார்கள்.

அந்தப் பயணம் வியப்பூட்டும் இன்னொரு உலகிற்குள் அவர்களை அழைத்துச் சென்றுவிடுகிறது.

கடல் உலகில் நடக்கும் சாகசங்கள். கிளிகளின் படையை வழிநடத்தும் கிளி ராஜா, மற்றும் அவரது ராஜ்ஜியத்திற்குள் நடக்கும் விநோத நிகழ்வுகள். உலகத்தின் பாதுகாவலரைத் தேடிச் சென்று சந்திப்பது. குமிழ் வடிவத்தில் உயிர்கள் பிறப்பதற்காகப் பயணிப்பது எனக் கற்பனையின் உச்சமாக மியாசாகி உருவாக்கியுள்ள உலகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

பிறப்பு, இறப்பு, உயிர்களின் தோற்றம், வாழ்க்கையின் அர்த்தம் எனத் தத்துவார்த்தமாகவும் படத்தின் சில காட்சிகளை மியாசாகி சித்தரித்துள்ளார்.

அனிமேஷன் படம் என்பது சிறார்களுக்கு மட்டுமானதில்லை. அது மாற்று மெய்மையின் சித்தரிப்பு. இயந்திரமயமாகிப் போன இன்றைய வாழ்க்கைக்கு மாற்றை உருவாக்க விரும்புகிறேன். நாட்டுப்புறக் கதைகளில் வருவது போல நிஜமும் மாயமும் ஒன்று கலந்த கதையைத் தான் எப்போதும் தேர்வு செய்கிறேன். இந்தப் படத்தில் வரும் நாரை படத்தின் ஆரம்பத்தில் ஆச்சரியப்படுத்தும் பறவையாக அறிமுகமாகிறது. பின்பு அது அச்சமூட்டும் பறவையாகிறது. பின்பு அதுவே வேடிக்கை செய்யும் பறவையாக மாறிவிடுகிறது. பார்வையாளரைச் சிரிக்க வைக்க ஒரு கதாபாத்திரத்தை உருவாக்குவதை விடவும் ஒரே கதாபாத்திரம் வேறுவேறு சூழல்களில் வேறுவிதமாக நடந்து கொள்ளச் செய்வதையே விரும்புகிறேன். பள்ளிச்சிறுவனாக அறிமுகமாகும் மஹிதோ இடிந்த கோபுரத்திற்குள் சிற்றனையைத் தேடிச் செல்வதிலிருந்து நாயகனாகிவிடுகிறான். அவனே பின்பு உலகின் மீட்பனாகவும் மாறுகிறது. உலகின் சமநிலை காப்பாற்றப்பட வேண்டும் என்பதையே படம் விளக்குகிறது என்கிறார் மியாசாகி.

மஹிதோ கிராமத்திலிருக்கும் தனது புதிய வீட்டிற்கு வரும் காட்சி மிகவும் அழகானது. பசுமையான மரங்கள். பழங்கால வீடு. வீட்டின் அருகில் குளம், வீட்டின் பின்புறமுள்ள மர்மமான இடிந்த கோபுரம், வீட்டிலுள்ள முதிய பணியாளர்கள். அவர்களின் குறும்புத்தனங்கள் எனக் கிராமப்புற வாழ்க்கை இனிதாகத் துவங்குகிறது. இது போலவே முதியவர்களின் உற்சாகம் மற்றும் ஆசைகள். கிளிகளின் அணிவகுப்பு மற்றும் கடல் வேட்டை காட்சிகள் அபாரமானவை.

படம் துவங்கும் போது தாயை இழந்த சிறுவனுக்குப் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கப் போவதாக நாமும் நம்புகிறோம். ஆனால் சிற்றன்னையைத் தேடிச் செல்வதிலிருந்து கதையின் போக்கு மாறிவிடுகிறது. தொடர் சாகசங்களால் ஆலீஸ் உருமாறுவது போல அவனும் மாறிக் கொண்டேயிருக்கிறான். முடிவில் தான் யார். தன் வாழ்விற்கு என்ன அர்த்தமிருக்கிறது. தான் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை மஹிதோ அறிந்து கொள்கிறான்.

ஜப்பானிய மரபில் நாரைகள் மரணம் மற்றும் இறுதிச் சடங்குகளுடன் தொடர்புடையவை. வெள்ளை நாரை நடனம் என ஒரு நடனச்சடங்கு ஜப்பானில் இன்றும் நிகழ்த்தப்படுகிறது. விண்ணுலகின் தூதுவன் போல அறிமுகமாகும் நாரை மெல்லத் தந்திரத்தின் அடையாளமாக மாறுகிறது. ஒரு காட்சியில் இந்த வாழ்க்கை நாங்கள் விரும்பி பெற்றதில்லை என்கிறது ஒரு பறவை.

இயற்கையின் பேரியக்கத்தையும் அதன் சமநிலையைப் பேணுவதற்காக மனிதர்கள் எடுக்க வேண்டிய முயற்சியினையும் மியாசாகி அழகாக வெளிப்படுத்துகிறார். மஹிதோவின் பயணம் என்பது இன்று நாம் இழந்துவிட்ட, மறந்துவிட்ட வாழ்க்கையைப் பற்றிய நினைவூட்டலாகும். கையால் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு நம்மை அற்புத உலகிற்குள் அழைத்துச் செல்கிறார் மியாசாகி. அந்த வகையில் இது பிரமிக்க வைக்கும் திரைப்படமாகும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2024 06:25
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.