தவற விட்ட மீச்சிறு தருணங்கள்

துணையெழுத்து- வாசிப்பனுபவம்

– கோபி சரபோஜி

எஸ். ராமகிருஷ்ணன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய சமயத்தில் வாசித்தேன். அதன் பின் நூல் வடிவில் பல தடவை வாசித்தாயிற்று. சமீபத்தில் செய்திருந்த அறுவை சிகிச்சை முழு ஓய்வைத் தந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்களை நகர்த்தவும், வலியின் வேதனையைக் குறைக்கவும் வாசிப்பே ஆறுதலாய் இருக்கிறது. உறவினர்களும், நண்பர்களும் நலம் விசாரிக்க வந்து போவதைக் கண்ட போது துணை எழுத்தை வாசிக்கலாம் எனத் தோன்றியது. வாசிக்கும் ஒவ்வொரு முறையும் என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், பார்க்கும் மனிதர்கள் குறித்து அது புதிய கண்ணோட்டத்தைத் தந்து கொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல வாசித்த ஒவ்வொருவரும் இதை உணர்ந்திருக்க முடியும்.

இந்தச் சமூகத்தை எப்பொழுதுமே அலட்சியமாக, சுயநலமாகப் பார்க்கப் பழகி விட்டோம். அந்தப் பழக்கம் வழக்கமாகி நம்முடைய வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து விட்டது. ஆனால், எஸ். ரா.வின் பார்வையின் வழியே கசியும் எழுத்து ஒவ்வொரு முறையும் நம்மை அந்தப் பிணைப்பில் இருந்து மீட்டுக் கொண்டே இருக்கிறது. அவர் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, பார்க்கு இடங்களை, சந்திக்கும் மனிதர்களை, அவர்களின் துயரங்களை, வாழ்வியலை, அறத்தை, இயல்பை அணுகும் விதத்தில் நம்மை வேறு ஒரு மனவெளிக்குக் கொண்டு வந்து நிறுத்தும் போது நம் தோல்வியை மறுக்க முடியவில்லை.

இந்தத் தொகுப்பில் இருக்கும் பலவித கட்டுரைகளுக்கான சம்பவங்களை என் பால்யத்தில் கண்டிருக்கிறேன். காணாமல் போவது எப்படி? உள்ளிட்ட சிலவற்றிக்குச் சாட்சியாக இருந்திருக்கிறேன். ஆனால், அவைகளை அந்த வயதில் நான் கண்டு இரசித்த விதமும், எஸ்.ரா. கண்டு உணர்ந்த விதமும் மலைக்கும், மடுவுக்குமானதாக இருக்கிறது. அதனால் தானோ என்னவோ எதையும் மீட்டுருவாக்கம் செய்யும் படைப்பாளியாக அவரால் எப்பொழுதும் நம்மோடு பயணிக்க முடிகிறது என்று நினைக்கிறேன்.

ஒரு வீட்டிற்குள் நடக்கும் அந்தரங்கமான புரிதலின்மை, விரிசல்கள், நீர்த்துப் போன விருந்தோம்பல், மனிதர்களின் மனப்புழுக்கங்கள், எதிர்பார்ப்புகள், பெண்கள் படும் துயரங்கள், சாதிய நிலைகள், அறிந்தும் அறியாது கடந்து போன நம் அக்ரோஷ முகங்கள், கலைகளின் நசிவு, நினைக்க மறந்த படைப்பாளிகளின் நினை கூரல்கள், நண்பர்களின் ஸ்பரிசம், உறோடுடனான உறவு, இலக்கியங்கள் என வாழ்வின் நான்கு திசைக மனிதர்களையும், சம்பவங்களையும் ஓரிழையாக்கி ”இப்படி இருக்கிறோமே” என ஆதங்கமாய்ச் சொல்லி விட்டு ”இப்படி இருந்திருக்கலாமே” என அன்பின் பால் நம்மைத் திசை திருப்புகிறார். சக மனிதனிலிருந்து விலகிப் அதன் எல்லைகளை நாம் எட்டி விட்ட நிலையில் சகமனிதன் மீதான பார்வைகளை மாற்றிப் போட வைத்து விடுகிறார்.

பெரும் வன்முறை ஒன்று நிகழும் இடத்தில் கூட அதன் பின் அலைந்து திரியும் மனிதத் துயரங்களை நமக்குக் காட்டுகிறார். புத்தகங்களுடனான நெருக்கமும், வாசிப்பும் ஒரு மனிதனை எப்படியெல்லாம் அலைந்து திரிய வைக்கும் என்பதை வாசித்த போது தேசாந்திரியாய் அவர் இன்று எடுத்திருக்கும் அவதாரத்தின் ஆரம்ப வித்துப் புரிகிறது. மனித துயரங்களை மட்டுமல்ல தான் பார்க்கும் அனைத்தையுமே அதே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார். “கூழாங்கல்லின் குளிர்ச்சியை, அழகை உணரத் தெரிந்த நமக்கு அது தண்ணீருக்குள் அடைந்த வேதனையை மட்டும் ஏனோ பார்க்கத் தெரியாமல் போகிறது” என்ற வரிகள் எஸ். ரா.வின் உள்ளக்கிடக்கையைச் சொல்லி விடுகிறது.

வாழ்வை நேசித்தல் குறித்தும், இழப்புகள் குறித்த ஆதங்கம் பற்றியும், நன்றியுணர்வு சார்ந்தும், வாழ்தலின் அர்த்தம் காட்டியும் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் வாழ்தலின் மீதான பிடிப்பைத் தருகிறது. “மனுசன் மட்டும் தான் ஒவ்வொன்னுக்கும் கணக்குப் பார்த்துகிட்டு” என்ற ஒற்றை வரி சொல்லி விடுகிறது நம் இன்றைய வாழ்வின் லட்சணத்தை! ஒவ்வொரு கட்டுரைகளின் வழியாகவும் இமயமலையைக் கடத்தல் போன்ற அசாத்திய வாழ்வியலில் காணத் தவறி விட்ட மீச்சிறு தருணங்களைக் குருவிகளைப் போலக் கடந்து நமக்கு மீட்டுத் தருகிறார்.

துணையெழுத்து வழியாக நான் என் வாழ்வை அவிழ்த்து பார்த்துக் கொண்டேன் என எஸ்.ரா. குறிப்பிடுகிறார். அவர் மட்டுமல்ல. வாசிக்கின்ற நாம் ஒவ்வொருவரும் தான்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2024 04:24
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.