01
எங்குமில்லாத பேரிருள் வந்தடையும் பழங்குகை
நின் வாழ்வு
மூர்க்கச் சிறகசைக்கும் வெளவால்கள்
வழிமறந்து உறைந்த வீச்சம்
நின் குருதி
ஓயாது கொடுஞ்சூறை
பற்றி மூளும் யுகத்தில்
நின் வனம்.
வாழ்வே
குருதியே
வனமே
உங்களுக்காய் எங்ஙனம் பிரார்த்திக்க!
02
எனது மந்திரக்கோலின் நுனிக்கொம்பால்
பூமியைப் பிடித்திழுப்பேன்
வெட்ட வெளியில் தனித்திருந்த
காட்டுப் பூவரசின் மலர்களை
பிய்த்து போட்டதைப் போல
உண்ணிப் பழங்களை உமிழ்ந்து தின்றதைப் போல
பூமிக்கு பெருஞ்சுகம் அளிப்பேன்.
03
அலைபட்டு அணையும்
அதுவரை வெறிக்கும் இவ்வாழ்வு
அழிவது கனவா?
அழிவது ரணமா?
அதுவரை நிலைக்கும் இவ்வாழ்வு.
The post உங்களுக்காய் எங்ஙனம் பிரார்த்திக்க first appeared on அகரமுதல்வன்.
Published on May 15, 2024 11:27