நின்று நடத்தும் பேச்சுவார்த்தை

வாழ்ந்து    போதீரே – 4வது அரசூர் நாவலில் இருந்து

கொச்சு தெரிசாவாகப் பரிச்சயம் இல்லாவிட்டாலும் இந்த விழிகள் அவனுக்குப் பரிச்சயமானவை. ஒரு வினாடி பார்வையில் பட்டு ஈர்த்து, அவசரமாகப் பின் வாங்க வைக்கும் செழுமையான மார்பும் கூட. குரல் மட்டும் இன்னும் கீச்சென்று இருந்தால் தில்ஷித் கவுரே தான் இவள். தில்ஷித் கவுரை பத்து வினாடியாவது தொடர்ந்து கண் இமையாது பார்க்க முடியும். அமைச்சக அலுவலகத்தில் சங்கரனுக்கு சில படிகள் கீழே உத்தியோகம் பார்க்கிறவள். பார்வை நிலைக்கும் போது புத்தி ஏதாவது ஆபீஸ் காரியத்தைப் பேச முன்னால் கொண்டு வந்து வைத்துவிடும். பேசியபடி பார்க்கும் அதிகாரியின் வார்த்தைகளில் மட்டும் சிரத்தை வைப்பது எதிர்ப்பட்ட ஊழியரின் கடமை. இந்தத் தெரிசா கீழ்ப்படிதலுள்ள ஊழியர் இல்லை. திமிர்த்து நின்று பேசும் அவளுடைய தோரணை அவனுக்கு வேண்டி இருந்தது. எதுவோ சவாலாக அவனிடம் பிரயோகிக்கப் படுகிறது. எதிர்கொண்டு ஏற்று வாங்கி நின்று சமாளிப்பது மனசுக்கு இஷ்டமானது.

 

ஜாக்கிரதையான, பிழை வராத சுத்தமான ஆங்கிலத்தில் கூறினான் சங்கரன் –

 

நீங்கள் ஆங்கிலத்திலேயே பேசலாம். தமிழ் தாய்மொழி என்றாலும், இந்தி தான் தில்லியில் அதிகாரிகளும் மற்றவர்களும் பேச வேண்டும் என்று சர்க்காரால் எதிர்பார்க்கப்படுவது. இந்தி பேசாதவர்கள் நாவை ஒட்ட நறுக்க எல்லா அமைச்சகங்களிலும் சகலவிதமான சைஸில் கத்திகள், ரம்பங்கள் சகிதமாக ஒரு அதிகாரி உண்டு. ராஜ்பாஷா அதிகாரி என்று கிரீடம் வைத்த பதவி. சங்கரனாகிய நான், மாதம் மூன்று முறையாவது இந்தியில் கையெழுத்துப் போட வேண்டும் என்ற அரசு உத்தரவைக் கடைப்பிடிக்கிறேன் என அவர் சான்றிதழ் தராவிட்டால் எனக்கு அடுத்த புரமோஷன் கிட்டாது. என் மனைவி ஆயுசுக்கும் வெறும் அண்டர் செக்ரட்டரி பெண்டாட்டியாகவே இருப்பாள்.

 

அண்டர் செக்ரட்டரி மனைவி எங்கே, கோவிலுக்குப் போயிருக்காங்களா?

 

கொச்சு தெரிசா குரல் அவனை நேசமாக வருட, ஆபீஸ் டூர் என்பதால் குடும்பத்தோடு பயணம் எல்லாம் கிடையாது என்றான் அவன். அதில் கொஞ்சம் வருத்தம் தெறித்தாலும் நல்ல சந்தோஷமும் குரலில் கலந்து வந்தது. இவளுடைய அகலமான தோள்களுக்கு நடுவே ஒரு வினாடி முகம் புதைக்க முடிந்தால்.

 

சின்னச் சங்கரன் நினைப்பை வலுக்கட்டாயமாக விரட்டினான். அவளை உட்காரச் சொன்னான். தொடையில் கை படும் தொலைவில் நிற்கும் பெண் அருகே அமர்ந்து பேசினால் பேச்சில் மட்டும் புத்தியைக் கொண்டு மேலே பேச்சு வார்த்தை நடத்திப் போக அவனால் முடியும். நின்றால் பார்வை கொண்டு தலை குப்புற வீழ்த்தி விடுகிறாள். திமிர்த்த உடல் மிரட்டுகிறது.

May 15 2024

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2024 20:49
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.