மறைந்த இறை ஊழியர்கள் பற்றிய நினைப்புகளும் புனிதமானவை

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி

பயணத்தில் சந்தித்த போது மனதில் மேலோட்டமாகப் பதிந்து கடந்து போன அழகெல்லாம் அவள் இப்போது தனியாக வந்திருக்கும் போது மேலெழுந்து சூழ்ந்து எதிரே நிலைகொண்டு சஞ்சலப்படுத்துகிறது. அவன் தனியாக இருப்பதும், இந்த வனப்பால் நிலைகுலைந்து போனதற்கு இன்னொரு காரணம்.

 

அந்த பஸ் பயணம். அது ஒரு வருடம் முன்பாக இல்லையா? நீங்கள் எப்படி இன்னும் இங்கே?

 

நம்ப முடியாத குரலில் கேட்டான் சங்கரன். வெளிநாட்டுப் பெண் ஒரு வருடமாக இங்கே தங்கி இருக்கிறாளா என்ற ஆச்சரியம் குரலில் தெரிந்தது.

 

ஆமா, வரும்போது ஆறு மாதம் தங்க அனுமதி கிடைச்சது. இந்திய வம்சாவளி எங்கிறதாலே அதை புதுப்பித்து இன்னொரு வருஷம் இருக்கக் கிடைச்சிருக்கு.

 

அடேயப்பா ஒண்ணரை வருஷமா, நல்லது என்றான் சங்கரன். அழகான பெண்கள் எல்லா வெளி தேசங்களில் இருந்தும் வந்து இந்த பச்சை மணக்கும் வனப்பான பிரதேசத்தில் நடமாடட்டும். அது என்ன ஒரு வருஷம் நீட்டிப்பு?

 

உங்களுக்குத் தெரியாததில்லை. இந்திய வம்சாவளின்னா ஒரு வருடம் விசா நீட்டிப்பு அது முடிஞ்சு இன்னொரு வருஷம் இப்படி மொத்தம் அஞ்சு வருடம் இங்கே தங்கி இருக்கலாம். எனக்கு என் வேர்களைத் தேடவும் இன்னும் சில முன்னோர் கடமைகளுக்காகவும் தங்க வேண்டி நேர்ந்தது. உங்களைப் போல நல்ல நண்பர்கள் உதவி செஞ்சா,  இங்கேயே நான் குடிமாற்றம் ஆகி விடுவேனோ என்னமோ.

 

கொச்சு தெரிசா அவனிடம் சிரிப்பை எதிர்நோக்கி, என்ன சொல்றீங்க என்று கொஞ்சம் அதிகாரத்தோடு தொடர்ந்து கேட்க சங்கரன் அவசரமாக அப்படி நடந்தால் மிக்க நல்லதே  என்றான். அவள் நிரந்தரமாக இங்கே இருக்க நேர்ந்தால் அதனால் அவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லைதான்.

 

பாதிரியாரும் லுங்கி தரித்த கனவானும் கூட விசா நீட்டிப்பு பெற்றார்களா?

 

அந்தக் கனவான் லுங்கியைத் துறந்து டூ பீஸ் சூட் அணிந்து இங்கிலாந்து திரும்பி விட்டார். என் கணவர் தான் அவர். அவருக்கு விசா நீட்டிப்பாகவில்லை.

 

சங்கரனுக்கு இனம் புரியாத மகிழ்ச்சி. இன்னும் ஒரு வருஷம் இவள் தனியாக இங்கே இருப்பாள் என்பது தனக்கு எந்த விதத்தில் சந்தோஷம் தருகிறது? தெரியவில்லை. மூளையில் நியூரான் நினைவாக, உடலில் புதிய திசுவாக, இனக் கவர்ச்சி கலந்த உயிரணுக்களாக ஏதோ விதமாக இயங்கும் நிமிடங்கள் இவை..

 

உங்கள் கணவர் திரும்பப் போக வேண்டி வந்ததா? வருத்தப்படுகிறேன். எங்கள் அரசுத் துறை அப்படித்தான் சில நேரம் ஜோடிகளைப் பிரித்து வைத்து ஏதோ புண்ணியம் கட்டிக் கொள்கிறது. இரண்டு பேருமே சர்க்கார் ஊழியர்களாக இருக்கும் பட்சத்திலும் சர்க்கார் விளையாடுவதுண்டு. ரிடயர் ஆனதும் தான் சேர்ந்து இருக்க முடியும். சந்ததி அப்போது எப்படி வளரும்?

 

சங்கரன் சீரியஸான தொனியில் அவளிடம் கரிசனமாகக் கேட்க, அவள் கலகலவென்று சிரித்தாள். சிரிக்கும் பெண்ணைத் தானும் சிரித்தபடி ரசித்து உற்றுப் பார்க்கலாம். தப்பே இல்லை. சங்கரன் அதைத்தான் செய்தான்.

 

கையை முகத்துக்கு நேரே அழகாக அசைத்து, அது போகட்டும், முடிந்த கதை முசாபர் போனது என்றாள் கொச்சு தெரிசா. சரி, புதுக் கதை பேச சங்கரன் தயார் தான். ஆனால் அந்தப் பாதிரியார்? பாதிக் கதையில் திரும்ப உள்ளே வந்து விட்டால்? அல்லது இறந்து போயிருந்தால்? மறைந்த பாதிரியார்கள் நினைப்பைப் புனிதமாக்குகிறார்கள். அவர்களை அன்போடு நினைவு கூர்வது போல் கண்ணியமான செயல் வேறேதும் இருக்க முடியாது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 16, 2024 18:30
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.