எம். யுவன் கவிதைகள்
யாதுமாகி
அப்போது
பட்டாம் பூச்சியாயிருந்தேன்.
கணக்கற்று மலர்ந்தவற்றில்
தன் பூ தேடி
சிறகு துடிக்க அலைகிறது
பட்டாம் பூச்சி
பின் ஒரு
பூவானேன்.
ஆள் நிழல் காணா
நதியின் கரையில்
அன்றாடம் மலரும்
ஒரு பூ
கொஞ்ச காலம்
நதியாயுமிருந்தேன்.
தனக்குள் தான் விரையும்
நதியின் விசையில்
அசையும் பூ மேல்
அமர்ந்தது பூச்சி
கடல் பார்க்க வந்தவன்
காலடி மண்ணை அரிக்கும்
சமுத்திரத்துக்கு தப்பிய
ஒற்றைத் துளி
என் புறங்கையில் அமர்ந்தது:
‘உன் போல்தான் நானும்
கடல் பார்க்க வந்தவன்;
அலைகளில் மாட்டிக் கொண்டேன்.’
பின் காற்றில் உலர்ந்தது
அடுத்த சுற்றி நோக்கி.
ஹம்பி
அழிக்கப்பட்ட பெருநகரின் வீதிகளில்
ஆவிபோல அலைகிறேன்.
ஆந்தையின் கனவில்
புலரும்
இரவில் நிரம்பிய வெளிச்சமென
துலக்கமாய்க் கிடக்கிறது யாவும்.
திரும்பும் திக்கெல்லாம்
கல்பூத்த கட்டாந்தரை.
பிடிப்பு இன்றி
வீழும் அறிகுறியின்றி
தன்மேல் நடந்து சென்ற
யுகங்களின் தடயமின்றி
பாறைமேல் அமர்ந்த பாறைகள்.
விதானமும் நொறுங்கிய
கடைவீதியில்
காட்சிக்கு நின்றிருந்த தூண்கள்.
படிக்கட்டு சிதைந்த கலையரங்கில்
நிசப்தத்தின் பாடலுக்கு
வெறுமை அபிநயிக்கிறது.
அரசியர் நீராட அமைந்த
தடாகத்தின் வெற்றுத் தரையில்
புற்குச்சங்களில் பூச்சி தேடி
தவளைக்குஞ்சு தத்திச் செல்கிறது
அரைகுறையாய் நிற்கும்
கற்சிலையின் காதருகில்
ஒயிலாய்ப் படிந்திருக்கும் ஓணான்
என்றைக்குரிய ரகசியத்தை உரைக்கிறது?
நொறுங்கிய நகரத்தின்
நொறுங்காத உயிரோட்டமாய்
பாறைகள் மற்றும்
சகாப்தங்களுக்கிடையில்
ஊர்ந்து நகர்கிறாள்
துங்கபத்திரை.
அதோ, நீராடி
திரும்பி நின்று
உடைமாற்றும் பேரிளம்பெண்
தன்னுணர்வின்றிக் காட்டும்
ஒற்றை முலை வீசும் வசீகரம்
எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?
The post எம். யுவன் கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

