01
வண்ணங்கள் பெருகியோடுகிற நதிக்கரைக்கு
ஒருபெண் இடுப்பில் குடத்தோடு செல்கிறாள்
நாணற் புதர்கள் அடர்ந்த அவ்வாற்றங்கரையில்
காமத்தின் வண்ணம் கனிந்து பழுத்திருக்கிறது
பெருகியோடும் ஆற்றில்
கால்களை அளைந்து விளையாடி
நீர் மொண்டு திரும்புகிறாள்.
நதியில் நழுவிய அவள் கைவளை
வானில் ஒளிர்கிறது.
02
நான் புசிக்க நினைக்கிற மாமிசம்
நான் குடிக்க விழைகிற குருதி
நான் செய்ய விரும்புகிற துரோகம்
நான் வழங்க விரும்புகிற மன்னிப்பு
எல்லாம் நீயே
தெப்பத்தில் மிதக்கிற என் சிறு இலையே
இனி நீ வழிபட வேண்டிய கடவுள்
நானே.
03
நிறைசூல் வயிற்றை
நான் சுமந்தலைகிறேன்
நீலத் தாமரை வளர்கிற தடாகம்
சிறிய நாகங்களுக்கு மெத்தைகளாகும் தாழம்பூக்கள்
புணர்ந்து களித்துப் பிரிந்த
செண்பக மரக் குளக்கரையின்
முப்பதாம் நாளில்
மிகு பறவைகள் தங்க வேண்டி
என் தொப்புள் கொடியில்
வளர்கிறதொரு
ஆலமரம்.
பொன்முகலி தமிழ் விக்கி – https://tamil.wiki/wiki/%E0%AE%A4%E0%AF%E0%AE%AA%E0%AF_%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF
The post பொன்முகலி கவிதைகள் first appeared on அகரமுதல்வன்.
Published on May 10, 2024 10:27