01
முன்றிலில் உள்ள மரக்கிளையில்
கூட்டிலிருந்து தவறிய குஞ்சொன்று
உயிர் பதறி நின்றது.
குஞ்சின் குளிர்ந்த அழைப்பு
நீயென்னை அழைத்தது போலிருந்தது.
உன்னைப் பற்றிய நினைவுகளோடு
இன்றைய பொழுது உதிர்ந்தது.
போதும்
என் கூட்டிற்கு பறந்து செல்கிறேன்.
02
அறை முழுதும் ஆப்பிள் வாசனை
பாம்புகள் மிதந்தபடி ஊர்கின்றன
சாளரத்தின் அந்தியொளி
கலவியில் பின்னிய சரீரங்களில்
பரவிச் சிவந்தன.
03
பூங்காக்களில்
ஊஞ்சல்கள் போதுமானதில்லை.
ஆகாயத்தை
உள்ளங்கால்களால் உதைந்துவிட
வரிசையில் நிற்கிறார்கள்
குழந்தைகள்.
“ஊஞ்சல்… ஊஞ்சல்… எனக்கு எனக்கு”
எனக் கேட்கும் சத்தம்
இந்த நூற்றாண்டிற்கு
ஆறுதலானது.
The post ஊஞ்சல் first appeared on அகரமுதல்வன்.
Published on May 01, 2024 11:21