துப்பாக்கி ஏந்திய துறவி

2006 இல் பூட்டான் ஜனநாயக நாடாக மாற விரும்பியது. அதுவரை நடைபெற்று வந்த மன்னராட்சி முடிவுக்கு வரவே பொதுத்தேர்தலை நடத்த முடிவு செய்தார்கள்.

தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாதிரி தேர்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட படமே The Monk and the Gun.

2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தைப் பாவோ சோய்னிங் டோர்ஜி இயக்கியுள்ளார். இப்படம் சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குப் போட்டியிட்டது

கதை மூன்று சரடுகளைக் கொண்டிருக்கிறது. தேர்தலை விரும்பாத லாமா மேற்கொள்ளும் முயற்சிகள். அவர் தனக்கு ஒரு துப்பாக்கி வேண்டும் என்கிறார். எதற்காகத் துப்பாக்கி கேட்கிறார் என்று தெரியாமலே அதைத் தேடி அலைகிறான் இளந்துறவி தாஷி

இரண்டாவது சரடு மாதிரி தேர்தல் நடத்துவதற்கான ஆயுத்தப்பணிகளை மேற்கொள்ளும் தேர்தல் அதிகாரி ஷேரிங்கின் பயணம். மூன்றாவது சரடு பழங்கால ஆயுதங்களை வாங்கி விற்கும் அமெரிக்கரான ரான் கோல்மனின் பூட்டான் வருகை.

இந்த மூன்று சரடுகளும் ஒன்றையொன்று தொட்டும் விலகியும் சென்று படத்தின் இறுதியில் ஒன்றுசேருகின்றன.

விவசாயி ஒருவரிடமுள்ள பழங்காலத் துப்பாக்கி ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதை வாங்குவதற்காகப் பூட்டான் வருகிறான் ரான். வழிகாட்டி ஒருவனுடன் காரில் பயணம் செய்கிறான். ரான் கோல்மன் தீவிரவாதச் செயல்களில் தொடர்பு கொண்டவனோ எனச் சந்தேகம் கொண்டு காவல்துறை அவனைப் பின்தொடர்கிறது.

நீண்டகாலமாக துப்பாக்கியைப் பாதுகாத்து வரும் விவசாயி வீட்டிற்குப் போகிறார்கள். அந்தத் துப்பாக்கிக்கு 75 ஆயிரம் டாலர் தருவதாகச் சொல்கிறான் ரான். பெரியவரோ அவ்வளவு தொகை தேவையற்றது. நான் என்ன வைரத்தையா விற்கிறேன் என்று மறுக்கிறார். அதிகப் பணம் வேண்டாம் என்று சொல்லும் ஒருவரைக் கண்டு ரான் வியப்படைகிறான். பரவாயில்லை. வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் கடனை அடையுங்கள் என்று வழிகாட்டி பென்ஜி சொல்கிறான். ஆனால்  உரிய பணம் கொடுத்தால் போதும் என்கிறார் விவசாயி . அவர்கள் பணத்தைத் திரட்டி வர நகருக்குச் செல்கிறார்கள்

ரேடியோவின் மூலம் தேர்தல் பற்றிய அறிவிப்பினைக் கேள்விப்பட்ட லாமா வரவிருக்கும் பௌர்ணமிக்கு முன் இரண்டு துப்பாக்கிகளைக் கொண்டு வருமாறு தாஷியிடம் கேட்டுக்கொள்கிறார். விவசாயி வீட்டில் துப்பாக்கி இருப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டு அங்கே வரும் தாஷி வெற்றிலைபாக்கிற்கு ஈடாகத் துப்பாக்கியைப் பெற்றுக் கொள்கிறான். ஒரு புத்தபிக்கு துப்பாக்கி ஏந்தி நடக்கும் காட்சி விநோதமாகவுள்ளது.

ஆத்திரமான ரான் எப்படியாவது புத்தபிக்குவிடமிருந்து துப்பாக்கியை வாங்கிவிட முயலுகிறான். இந்த முயற்சி என்னவானது என்பதையே படம் விவரிக்கிறது

அதுவரை தேர்தலைப் பற்றிக் கேள்விப்பட்டிராத பூட்டானிய மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதைப் படம் வேடிக்கையாகச் சித்தரிக்கிறது.

படத்தில் தொலைக்காட்சி பார்ப்பதற்காக ஒரு பெட்டிக்கடையில் கிராமத்து மக்கள் திரண்டிருக்கிறார்கள். ஜேம்ஸ்பாண்ட் படத்தை ஆசையாகப் பார்க்கிறார்கள். கோக்கைக் கறுப்புத் தண்ணீர் என்று தாஷி சொல்வதைக் கேட்க வேடிக்கையாக இருக்கிறது.

பூட்டானிய சமுதாயத்தில் துப்பாக்கி அரிதான பொருள். தாஷி துப்பாக்கி தேடியும் போது ஒரு இளம் பெண் தான் இதுவரை துப்பாக்கியை நேரில் கண்டதேயில்லை என்கிறாள்.

ஜனநாயக நடவடிக்கையை விரும்பாத லாமா படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு சடங்கு செய்கிறார். அது சமாதானத்தின் அடையாளம்

வேறு ஒரு காட்சியில் பெட்டிக்கடை சிறுமி சிறுமி. ஜேம்ஸ்பாண்ட் படத்தை ஆசையாக ஒட்டுகிறாள். தாஷி தனக்கு இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் வேண்டும் என்கிறான். பூட்டானில் துப்பாக்கி விற்பனை ரகசியமாக நடைபெறுவதைப் படம் சித்தரிக்கிறது.

பூட்டானின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தொலைக்காட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றில் நிலவில் தரையிறங்கும் காட்சிகள் மெதுவாக MTV யின் லோகோவாக மாறுகின்றன. ஜேம்ஸ் பாண்ட் 007யை மக்கள் விரும்புகிறார்கள். தேர்தல் அறிவிப்புகள் தொலைக்காட்சி வழியாகக் கிராமத்து மக்களைச் சென்றடைகின்றன. பசு மாட்டினை விற்றுவிட்டு விவசாயி புது டிவி வாங்குகிறான். CNN, BBC மற்றும் அல்-ஜசீரா போன்ற சர்வதேச ஊடகங்கள் தேர்தலைப் பார்வையிட வருகின்றன.

தேர்தல் அதிகாரியும் தாஷி பயணம் செய்யும் காட்சி. விவசாயி வீட்டில் ரானுடன் நடைபெறும் உரையாடல். பள்ளி சிறுமியும் அம்மாவும் பேசிக் கொள்ளும் காட்சி. ஸ்தூபியின் முன்பு நடைபெறும் இறுதிக்காட்சி போன்றவை மறக்க முடியாதவை. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன.

பூட்டானிய விவசாயி ஏன் அதிகப் பணம் வேண்டாம் என்று மறுக்கிறார். அது தான் பௌத்தம் கற்றுத்தந்த பாடம். எளிய வாழ்க்கை போதும் என்று நினைக்கிறார் விவசாயி. அவர் சாப்பிடும் காட்சி அதற்கு ஒரு உதாரணம். பை நிறையப் பணத்துடன் அலையும் ரானை விடவும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனக்குத் தேவை ஒரு அழிரப்பர். தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு உடனடியாக வேண்டும் என்று பள்ளிச்சிறுமி கேட்கிறாள். அது தான் பூட்டான் மக்களின் குரல்.

ரானுடன் தேர்தல் அதிகாரி உரையாடும் போது அவன் ஆர்வம் காட்டுவதில்லை. அவனது நோக்கம் வேறு. பூட்டான் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு இத்தகையதே. அதையே ரானின் மூலம் காட்டுகிறார்கள்.

பூட்டானிய கிராமப்புறங்களின் அழகைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். படத்தின் கிளைக்கதை போல விரியும் பள்ளிச்சிறுமியின் கதை மொத்த படத்திற்குமான குறியீடு போல உருவாக்கப்பட்டிருக்கிறது.

பூட்டானியர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றம் ஊடகங்களால் உருவாக்கப்படுகிறது. பூட்டானியர்களால் மன்னரை, பௌத்த சமயத்தைக் கைவிட முடியாது. அதே நேரம் மரபான வாழ்க்கை முறையிலிருந்து விடுபட்டு நவீன நுகர்வு கலாச்சாரத்தில் வாழ விரும்புகிறார்கள். இந்த இரட்டை மனநிலையின் அடையாளமே துப்பாக்கி ஏந்திய துறவி.

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 24, 2024 05:13
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.