வான்முகில் வழாது பெய்க

வணக்கம் அகரமுதல்வன்!

நெல்லையில் நீங்கள் ஆற்றிய “தமிழுக்கு ஒளவையென்றும் பெயர்” உரை மிகச்சிறப்பானது. நவீன இலக்கியத்தில் தீவிரம் கொண்ட பலரிடம் மரபிலக்கியம் சார்ந்த அடிப்படை அறிதல்கள் இல்லையெனவே உணர்கிறேன். இது நமக்கு நேர்ந்த ஊழ். ஒளவையைப் பலர் வெவ்வேறு விதங்களில் முன்வைத்திருக்கின்றனர். உங்களுடைய உரை மிகமிக உறுதியானது. உடல் மொழியில் மேடையை ஆளுகிறீர்கள். கேட்பவர்களுக்கு நீங்கள் கையளிக்கவிரும்பும் செய்திகளை சரியாக முதன்மைப்படுத்துகிறீர்கள். அச்சு அசலான மேடைப்பேச்சு. அதில் தீவிர இலக்கியவாதியாக உங்களுடைய கண்டடைதல்கள் ஆச்சரியமளிக்கின்றன. என்னுடைய கல்லூரிக்காலம் வரை மேடைகளில் பேசியுள்ளேன். அதன்பிறகு ஏதென்று அறியமுடியாத ஒருவகைத் தயக்கம். பட்டிமன்றங்கள், கவியரங்கங்களைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். பிறகுதான் தீவிர இலக்கியம் நோக்கி வந்தேன். இன்று  பட்டிமன்றங்களையோ, கவியரங்கங்களையோ பார்ப்பதிலும் தயக்கம் ஏற்பட்டு விட்டது. வாசிப்பின் வழியாக உண்மையான அறிவுத்தளத்தை அடைந்திருக்கிறேன். உங்களுடைய உரையைக் கேட்டதும், ஏதேனும் ஒரு தலைப்பில் உரையொன்றை தயார் செய்து, நானே எனக்கும் மட்டும் உரையாற்றிப் ஆற்றிப் பதிவு பண்ணவேண்டுமென ஆசை பிறந்திருக்கிறது. அதற்கொரு ஒரு தலைப்புத் தந்து வாழ்த்துங்கள்.

கிருபா

வணக்கம்! நீங்கள் எழுதிய கடிதத்தை கொஞ்சம் சுருக்கி வெளியிடுகிறேன். ஏனெனில் மீண்டும் மீண்டும் பிரதானமாக மேடை உரையாற்ற என்ன செய்யவேண்டுமென கேட்டிருக்கிறீர்கள். ஆதலால் அதனை செம்மைப்படுத்தினேன்.

கிருபா! மேடையுரை என்பது விசேடமான கலை வெளிப்பாடு. அதற்காக நாளும் மொழியோடு நீங்கள் இணங்கியிருத்தல் வேண்டும். அறிவுச் சேகரத்திலிருந்தே ஒருவரது உரை திகழும். வெறுமென ஒரு தலைப்புக்காக உடனடித் தயாரிப்புக்களிலான நூடில்ஸ் போல செய்து கொண்டு மேடைக்கு வந்தவர்கள் பாதியிலேயே நாவறண்டு சொந்தக் கதை பேசி இறுதியாக தலைப்பையே இரண்டு தடவைகள் குரல் பெருக்கி சொல்லிவிட்டு அமரும் வேடிக்கைகள் நம் சூழலில் அதிகம். மீண்டும் மீண்டும் முன்னோடிகளும், ஆளுமைகளும் மரபிலக்கியங்களைப் பற்றி பேசுவதற்கு காரணம் இதுதான். நெல்லைப் புத்தக திருவிழாவில் உரையாற்ற செல்லும் முன்பு வரை நண்பர்களோடு அறையில் அமர்ந்திருந்து சங்ககால கதைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையில் இந்தச் சேகரமும், தேடலும் தான் ஒரு நல்லுரையை அளிக்கிறது. மரபு இலக்கியங்களை அறியாதவர்களால் இது போன்றதொரு உரையின் அடியாழத்தில் இயங்கும் நவீன பார்வையையும் அறிய முடியாது. ஒருவர் மேடையுரைக்கு வருகிறார் என்றால், அவர் எடுத்துக் கொண்ட விஷயம் தொடர்பாக ஒரு தெள்ளத்தெளிவான பார்வையும், அதனை வெளிப்படுத்தக் கூடிய உடல் மொழியும், மொழியாற்றலும் அவசியமானது.

என்னைப் பொறுத்தவரையில் நவீன இலக்கியச் சூழலில் மரபு இலக்கியங்களைப் பற்றி பேசுவது வயதான எழுத்தாளர்களின் பணியெனக் கருதுகிறார்கள். இப்படியான கருதுகோள்களை இன்றுள்ள தலைமுறையினரிடம் விதைத்த காரணிகள் பலவுள்ளன. ஒரு மூதாய் மரத்தின் ஆணி வேரையும், அடிவேரையும் கத்தரித்து விட்டு, வீழும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மரத்திற்கு நீரூற்றி வளர்க்கும் மூடர்கள் நாம். வேரின் ஊட்டம் இல்லாது மரத்திற்கு ஏதுமில்லை. கல்வி நிலையங்களில், வீடுகளிலென இந்தத் தலைமுறைக்கு போதிக்கப்படும் எவற்றிலும் மரபு இலக்கியங்கள் இல்லை. வெறுமென புள்ளிக்கு பாடல்களை மனனம் செய்யும் இயந்திரச் சுழல்பட்டியாக மரபு இலக்கியங்களை எண்ணுகிறார்கள். நம் பெருமைக்குச் செழுமைக்கு காரணமாக அமையும் எதையும் பொருட்படுத்தாது வெறும் பெருமிதங்களால் மட்டும் எதனையும் அடையமுடியாது என்பதே என்னுடைய தரப்பு. அந்த வெற்றுப்பெருமிதம் தமிழ் மொழிக்கும், தமிழர் இனத்திற்கும் நாம் இறைக்கும் கேடு. ஆக நான் வலியுறுத்த விரும்புவது மரபிலக்கிய வாசிப்பை மட்டுமே. சங்கப்பாடல்கள் தொட்டு பக்தி இலக்கியங்கள் வரை ஏதேனும் ஒன்றையாவது பற்றிக்கொள்ளவேண்டும்.

தமிழுக்கு ஒளவையென்றும் பெயர் – என்ற தலைப்பை வழங்குவதற்கு காரணமே இதுபோன்றதொரு விழிப்புணர்வுக்காக அன்றி வேறெதெற்குமில்லை. தமிழன்னைக்கே இரண்டு தமிழன்னைகள். ஒருவர் காரைக்கால் அம்மையார், மற்றவர் ஒளவையார் என்று உரைநடுவில் சொல்லியிருப்பது வெறுமென கைதட்டல்களுக்கான தொழில்முறைப் பேச்சுக்களின் வாடிக்கையான வசனமல்ல. என்னுடைய வாசிப்பில் இதுவே நான் கண்டடைந்தது. “பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்” என்று தொடங்கும் காரைக்கால் அம்மையின் பாடல்களை வாசித்தவன் என்கிற வகையிலேயே இதனைக் கூறுகிறேன். சங்க ஒளவையாகவும், நீதி நூல் ஒளவையாகவும் நம்மில் வாழும் “ஒளவை” என்கிற மதிப்புமிகுந்த சொல்லின் அடையாளமாக விளங்கும் பாடல்கள் எத்தனையோ நம்மை வழிநடத்துபவை.

“சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்ஆகும்? – சீரிய
பொன்னின் குடம்உடைந்தால், பொன்ஆகும்; என்ஆகும்
மண்ணின் குடம்உடைந்தக் கால்?

என்கிற இந்த மூதுரைப்பாடலை வாழ்நாள் தோறும் வாசிக்கலாம். இந்தப் பாடல்களைச் சொல்லுபவள் எக்காலத்திற்கும் அன்னையாக வீற்றிருக்கும் சக்தி படைத்தவள்.

நீங்கள் மேடையுரை ஆற்றவேண்டுமென விரும்புகிறீர்கள். ஒருவகையில் என்னுடைய உரையைக் கேட்டதற்கு பிறகு ஊக்கம் அடைந்திருப்பதாக எழுதியுள்ளீர்கள். இதனைக் கேட்கும்  எனக்கும் ஊக்கம் நிறைந்து பூக்கிறது. மேடையுரைக்கு பயிற்சி செய்வதற்கு நீங்கள் கூறியிருக்கும் வழி மிகச் சிறந்தது. முதலில் பேசுவதும், கேட்பதும் நானே என்கிற பயிற்சியும், அதன் பிறகு அதனை பதிவு பண்ணிப் பார்ப்பதும் நல்லதொரு வழிமுறையாகவே இருக்கிறது. இன்றே இக்கணமே தொடங்குங்கள். ஆனால் இன்னொன்றையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது வெறுமென அச்சத்தையும், ஒருவித மேடைத்தயக்கத்தையும் விலக்கி தெளிவுறச் செய்யுமே தவிர, உரையாற்றுவதற்கான சேகரத்தை தராது. சொற்களைப் பெருக்காது. அதற்காக நாம் தீவிரமாக உழைக்க வேண்டும்.நீங்கள் செய்ய எண்ணும் வழிமுறைக்கு அடிப்படை அளவில் பெறுமதி உண்டு.

ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனிமையில் இருந்தவாறு தானே தனக்கு கூறியவற்றை ஒலிப்பதிவு செய்த பதிவுகள், புத்தகமாக வந்திருக்கிறது. “கிருஷ்ணமூர்த்தி தனக்கு கூறியவை” என்பது புத்தகத்தின் பெயர். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். ஆனால் இந்த  நூல் மேடைப்பேச்சுக்கு வழி நடத்துவது அல்ல. உங்களின் வழிமுறைக்கு முன்னோடியாக இருக்கும் சிறந்த உதாரணமொன்றாக கூறுகிறேன்.  ஒவ்வொரு தலைப்பின் கீழும் சிறிய அளவில் ஒரு உரையைத் தயார் செய்து, நீங்கள் பதிவு பண்ணலாம். உங்கள் விருப்பின் பேரில், முதல் தலைப்பைத் தருகிறேன்.

“வான்முகில் வழாது பெய்க”

நாம் தீவிரம் செலுத்தும் ஒன்று எக்கணத்திலும் எம்மை வந்தடையும் அருளோடுதான் இருக்கிறது.  தொடங்குங்கள் கிருபா. வாழ்த்துக்கள். அருள் கிட்டும்.

The post வான்முகில் வழாது பெய்க first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2024 01:10
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.