நிமிடங்களின் மயில்தோகை
புதிய குறுங்கதை
அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கும். கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருந்தாள். சிவப்பு நிற ஸ்கூட்டியில் வந்திருந்தாள். அவள் ரகுவிடம் மணி கேட்டாள். மூன்று நாற்பது என்றான் அவள் மெல்லிய குரலில் மூன்று நாற்பதா என்று திரும்பக் கேட்டாள். மறுபடியும் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஆமாம் என்றான் அவள் எதையோ நினைத்து பெருமூச்சிட்டுக் கொண்டாள்.
அவள் மழலையர் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்துப் போவதற்காக வந்திருந்தாள். ரகுவும் தனது மகளுக்காகவே வந்திருந்தான்.

பள்ளிவிடுவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் இருந்தன. அந்த நிமிடங்கள் மயில்தோகை போல அவளைச் சுற்றி விரிந்து கொண்டிருப்பதைக் கண்டான். ஸ்கூட்டியின் வேகத்தை அதிகரிப்பது போல அவளால் இந்த இருபது நிமிடங்களை மாற்றிவிட முடியாது.
இருபது நிமிடங்கள் என்பது இருபது நீண்ட குகைகள் போலத் தோன்றியது. மருத்துவமனையிலும், அரசாங்க அலுவலகத்தில் காத்திருக்கும் போதும் நிமிடங்கள் எடை கூடிவிடுகின்றன.
தன்னைப் போலவே பள்ளியின் முன்பாகக் காத்திருப்பவர்களை அவள் பார்த்தாள். காத்திருப்பவர்களுக்கு ஒரே முகசாடைதானிருக்கிறது. பள்ளியின் மதிற்சுவரில் ஒரு காகம் அமர்ந்திருப்பதைக் கண்டாள். யாருக்காகக் காத்திருக்கிறது என்று தெரியவில்லை
பின் மதிய வெயிலில் வேப்பமரங்கள் விநோத தோற்றம் கொண்டிருந்தன. இரும்பு கேட்டின் முன் அமர்ந்திருந்த அடர்நீல உடை அணிந்த காவலாளி நேரமிருக்கு என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.
இரண்டு முதியவர்கள் ஒருவருக்கொருவர் தோளில் கைபோட்டபடி நின்றிருந்தார்கள். பருத்த உடல் கொண்ட பெண் நிற்கமுடியாமல் தரையில் அமர்ந்திருந்தாள். காத்திருக்கும் நிமிடங்கள் உயரமான மதிற்சுவர் போலாகியிருந்தன.
தன்வசமிருந்த நிமிடங்களை அவள் தானமளிக்க விரும்பினாள். செலவு செய்யாத மணித்துளிகளை, நாட்களை யார் வாங்கிக் கொள்வார்கள்.
எதிர்டீக்கடையில் ஒருவர் நிதானமாகப் பஜ்ஜி போட்டுக் கொண்டிருந்தார். எத்தனை பஜ்ஜிகள் போட்டு முடித்தால் இருபது நிமிடங்கள் போய்விடும் என யோசித்தாள். சாலையில் கிழிந்த சுவரொட்டியொன்று காற்றில் பறந்து கொண்டிருந்தது.
பள்ளியின் முன்பாகப் பெற்றோர்களின் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனது. சென்ற நூற்றாண்டில் இப்படி ஒரு காட்சியே கிடையாது என்று ரகுவிற்குத் தோன்றியது. அவள் சலிப்பை வெளிப்படுத்துவது போல ஸ்கூட்டியின் கண்ணாடியைத் துடைத்துக் கொண்டாள். காத்திருக்கும் போது மனதின் நூறு சிற்றறைகள் திறந்து கொள்கின்றன.
இரவு விளக்குகள் பகலைக் கடப்பது போல என்றொரு வரி ரகுவின் மனதில் வந்து போனது. எங்கே படித்தான். யாருடைய வரி என்று தெரியவில்லை நேரத்தை எப்படிக் கொல்வது என்று தெரியாமல் அவளும் ரகுவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
அவள் மறுபடியும் மணி எவ்வளவு என்று கேட்டாள். இந்தக் கேள்வி வெறும் நேரம் தெரிந்து கொள்வதற்கானதில்லை. ஸ்கூல் விடப்போகுது என்று ரகு பதில் சொன்னான். அதைக் கேட்டு அவள் சிரித்தாள். ரகுவும் சிரித்துக் கொண்டான்.
பள்ளியின் இரும்பு கேட் திறக்கும் சப்தம் கேட்டது. கரையை நோக்கி வரும் சிற்றலைகளைப் போலச் சீருடை அணிந்த சிறுவர்கள் வாசலை நோக்கி விரைந்து கொண்டிருந்தார்கள். ரகுவும் அவளும் நழுவ விட்ட இருபது நிமிடங்கள் சுவடின்றி மறைந்திருந்தன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers
 


