ஓஷோ-கடிதங்கள்

அன்பு ஜெயமோகன்..!


ஓஷோ குறித்த தங்களின் பதிவைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். திரைப்படத்தில் சண்டைக்காட்சியின் போது, கதாநாயகன் மீது அடி விழுந்து விடக்கூடாது என்று தோன்றும் மன நிலையே ஒவ்வோரு முறையும் ஏற்படுகிறது. ஓஷோ பற்றி நீங்கள், எப்போதும் சரியாகத்தான் சொல்லி வருகிறீர்கள். ஆனால், அதைப் புரிந்து கொள்ளாதவர்கள் தங்கள் மீது வசை மாரி பொழிந்து விடுவார்களோ? என்ற அச்சம் இருந்தது. ”ஓஷோ – உடைத்து வீசப்பட வேண்டிய பிம்பம்-3″ அதைப் போக்கிவிட்டது. படிக்கப் படிக்க என் உடல் நடுங்க தொடங்கி விட்டது. காரணம், ஓஷோவின் மீது என் மனதில் வெகு காலம், தோன்றி வந்த உணர்வுகளும் அதேதான்.



பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆன்மீகத் தேடலில் சுற்றி அலைந்து கொண்டிருந்தேன். ஒரு முறை ஓஷோ பற்றிய தியான வகுப்புக்குச் செல்ல நேர்ந்தது. அப்போது, எனக்குப் பெரிய அதிர்ச்சி காத்திருந்து. நான் ஆத்தூர் மேல் நிலைப்பள்ளியில் படித்த போது, 7ஆம் வகுப்பில் வீராச்சாமி என்பவர் வகுப்பு ஆசிரியராக இருந்தார். தினமும் வருகைப் பதிவு குறிக்கும் போது ‘‘டேய் ரஜீனிஷ், நீயும் சாமியாரா போறீயாடா?’’ என்று, ரஜீனிஷ் என்ற பெயர் கொண்ட மாணவனைக் கிண்டல் செய்வார். ரஜினிகாந்தைத் தெரியும், ரஜீனிஷ் என்று சாமியாரா? யார் அது? அப்போது தோன்றும். இந்தப் பெயரை நான் காதில் கேட்கும் போது, ஓஷோ இறந்து ஒரு வருடம் (1991) ஆகியிருந்தது. அந்த ரஜீனிஷ்சாமியார்தான் இப்போது ஓஷோ என்ற பெயரால் அழைக்கப்படுவதாக சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் புத்தகமும், ஆங்கில உரைகளும் ஒரு வித கிளர்ச்சியை கொடுத்தன. கொஞ்சம், கொஞ்சமாக அந்த தாடிக்காரன் என்னை விழுங்கத் தொடங்கினார்.




ஒரு கட்டத்தில் பூனாவில் உள்ள ஓஷோ ஆசிரமத்திற்கு சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகள் என்னை உலுக்கிப் போட்டன. ஓஷோ சொல்லியது ஒன்று,அவரைப் பின்பற்றுவதாக சொல்லும் மக்கள் நடந்து கொள்வது ஒன்றாக இருந்தன. பெரும்பாலும், அங்கு வருபவர்கள், வெளிநாட்டுக்காரர்கள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை வேடிக்கை பார்ப்பதும். ஓஷோ சமாதியில் வேண்டுதல் செய்பவர்களும்தான் அதிகமாக இருந்தார்கள். தன்னைப் பரிசோதித்துப் பார்க்க வந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஏறத்தாழ ஐந்து நட்சத்திர விடுதி போல இருந்த ஆசிரமத்தின் தோற்றமே பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.


ஓஷோ வின் ‘நியோ சன்னியாசி’ கொண்டாட்டத்தின் போது, நானும் சன்னியாஸம் பெற்றுக் கொண்டேன். எதற்காக என்றால் ஓஷோ என்ற பிம்பத்தை உடைக்க, அவர் வழியில் சென்றேன். உள்ளே, செல்லச் செல்ல அவர் மறைந்து போனார். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். ‘‘என்னை எப்போதும் முன்னிலைப் படுத்த வேண்டாம். நான் உங்கள் குரு அல்ல. உங்கள் நண்பன் அல்ல. சாதரண சக மனிதன். என்னுடைய அனுபங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வார்த்தைகளில் மயங்கினால், உங்களைப் போல முட்டாள் யாருமல்ல. என்னைக் கடந்து செல்லுங்கள்…’’ என்று சுட்டிக்காட்டியதை உணர்ந்த போது, இந்த உலகமே வேறு விதமாகத் தெரிந்தது.



‘‘ஓஷோ அதைச் சொன்னார், இதைச் சொன்னார்…’’ என்று சுட்டிக் காட்டும் அறிவு ஜீவிகளைப் பார்க்கும் போது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இன்றளவும் என் வீட்டில் ஓஷோவின் புகைப்படங்கள் ஒன்று கூட இல்லை. வெகு சொற்பமான, முக்கியமான ஓஷோ புத்தகங்களும், சி.டிக்களும் மட்டுமே வைத்திருக்கிறேன். முன்பு சேகரித்த வைத்த ஞானக் குப்பைகளைத் தூக்கி எறிந்துவிட்டேன். எப்போதாவது, ஓஷோ தியான முகாம்களுக்கு செல்வது வழக்கம். (என்னதான் நடக்கிறது என்பதைப் பார்க்க) ஆனால், அங்கு காணும் காட்சிகளை சகிக்க முடியவில்லை. ஒரு சிலரைத் தவிர, பணம் சம்பாதிக்கவும், தங்களை ஓஷோவின் வாரிசு போலக் காட்டிக் கொள்ளவுமே முகாம்களை நடத்துகிறார்கள்.


அதிலும் அங்கு வரும் நபர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கழுத்தில் மணி மாலை அணிவதையும், தன்னுடைய படத்துக்கு மாலை மரியாதை செய்வதையும் உயிருடன் இருக்கும் போதே, ஓஷோ தவிர்க்கச் சொன்னார். ஆனால், சட்டைக்கு வெளியே ஓஷோ படம் போட்ட டாலரை மாட்டிக் கொள்வது, வெண்தாடி தவழும் ஓஷோ படத்தை வணங்குவது என்று… ஓஷோ சொல்லியவைகளுக்கு மாறான செயல்களே பலவும் நடக்கின்றன. சில நேரங்களில் ஓஷோவின் சுதந்திரத்தைத் தப்பாகப் புரிந்து கொண்ட கார்ப்பரேட் கம்பெனி, இளைஞர்களும், பெண்களும்… பார்ட்டிக்கு செல்லும் மனோபாவத்தில் வருகிறார்கள். இதானலேயே அந்தப் பக்கம் தலை காட்ட பயமாக இருக்கிறது.



ஒரு முறை ஓஷோ வாழ்ந்த காலகட்டத்தில், அவரைப் பின்பற்றியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் நிறையப் பேர் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இரண்டு, மூன்று பேரை சந்தித்தேன். அவர்கள் இன்று நித்தியானந்தா, ரவி சங்கர்… என்று வேறு ஓட்டலுக்கு மாறியிருந்தார்கள். இறுதியாக அவிநாசியில் சித்தார்த் என்பவரை சந்தித்தேன். ஓஷோ வாழ்ந்த காலத்தில் பூனா சென்று நேரில் அவரைப் பார்த்திருக்கிறார். சில ஆண்டுகள் ஓஷோ ஆசிரமத்தில் வாழ்ந்தும் இருக்கிறார்.


அவரிடம் பேசியபோது பல திறப்புகள் என்னுள் தோன்றியது. ‘‘ஓஷோ, என்றாலே எல்லோரையும் விமர்சிப்பவர், அரசியல்வாதிகளைத் திட்டுபவர்… எதையும், ஏட்டிக்குப் போட்டியாக சொல்பவர்… என்ற எண்ணம் அப்போதைய இளைஞர்களுக்கு இருந்தது. எனக்குத் தெரிந்த நண்பர்கள், ஓஷோ போலவே, உடை உடுத்துவது, எல்லோரையும் ஏளனமாகப் பேசுவது, எல்லாவற்றையும் மறுத்துப் பேசுவது… என்று இருந்தார்கள். இன்று அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். ஓஷோவைத் தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் அதிகம்…’’ என்று சொன்னார். இந்த விஷயங்களை எல்லாம் தொகுத்து, விகடன் தீபாவளி மலர் 2011 இல் கட்டுரையாக எழுதியுள்ளேன்.


இறுதியாக… ஓஷோ கத்தியுடன் நிற்கிறார். அவரை வெட்டிச் சாய்ப்பதற்கு நம்மிடம் துணிவும், தெளிவும் வேண்டும். இல்லையே நாம் ஆன்மீக முடவர்களாகக் காலம் முழுவதும் சுற்றி அலையத்தான் நேரிடும்.


நேசத்துடன்,

பொன்.செந்தில்குமார்,



அன்புள்ள ஜெ.,


ஓஷோ எனக்குக் கல்லூரிப் பருவத்தில் அறிமுகமானார். அப்போது அவர் ‘செக்ஸ் சாமியார்’ என்ற லேபிளோடுதான் அறிமுகமானார். கட்டற்ற நுகர்வு என்ற அடையாளம் அவர்மீது அழுத்தமாக ஒட்டப்பட்டுள்ளது. ஆனால் அவர் நூல்களைத் தொடர்ந்து படிக்கும்போதுதான் தெரிந்தது – அவர் நுகர்வை ஒரு தியானமாக செய்யச் சொல்லுகிறார் என்பது.


உடலுறவோ, புகைபிடித்தலோ – எதையும் மிகுந்த பிரக்ஞையுடன் ஒரு தியானமாக ஒவ்வொரு கணத்தையும் உள்வாங்கி செய்வது எவ்வளவு கடினம் என்பது அதை முயற்சிக்கும்போதுதான் தெரிகிறது.


“நான் செக்ஸைப் பற்றிப் பத்து சதவிகிதம் தான் பேசியிருக்கிறேன்… மீதி 90% ஆன்மீக விஷயங்களைப் பேசுகிறேன்.. ஆனால், என்னை செக்ஸ் சாமியார் என்று சொல்வது பார்ப்பவர்களின் மனநிலையைத்தான் காட்டுகிறது…. விபத்தை ரசிப்பதற்காகக் கார்ப் பந்தயத்தைப் பார்ப்பவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” – இது ஓஷோ சொன்னது.


ஞானிகளை நாம் அவர்களின் தளத்தில் புரிந்துகொள்ள வேண்டும்… ஆனால் நாம் எப்போதுமே நம்முடைய தளத்திற்கு ஞானிகளை இறக்கித்தான் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம்… இதுவும் அவர் சொன்னதுதான்…


நன்றி

ரத்தன்



ஜெ


கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன் நான் ஓஷோ புத்தகம் படிக்கிறேன் என்று தெரிந்ததும் எனக்குக் கிடைத்ததெல்லாம் பல்வேறு அறிவுரைகள். அதுவரை என்னைக் கண்டுகொள்ளாதவர்களுக்கு எல்லாம் என்மீது ஏனோ பயங்கர அக்கறை பிறந்துவிட்டது.


பேருந்துப் பயணத்தின்போது அறிமுகமான ஒருவர் என்னைக் கிட்டத்தட்ட வலுக்கட்டாயமாக கோவையிலிருந்த தியான மையத்துக்கு அழைத்துச் சென்றார். என்னை உள்ளே அனுப்பிவிட்டு அவர் வெளியே காத்திருந்தார். வெளியே வந்தபிறகு ‘என்ன, இவர்களெல்லாம் யாரென்று புரிந்ததா? இனிமேல் ஓஷோவெல்லாம் படிப்பியா?’ என்றார். அவருடைய எண்ணம் அந்தச் சூழலைக் கண்டு நான் பயந்து ஓஷோவை விட்டுவிட்டு ஓடி வந்துவிடுவேன் என்பது அப்போதுதான் புரிந்தது.


அங்கு நிலவிய சூழல் முதலில் கொஞ்சம் அதிர்ச்சி தந்தாலும், அது அவர் கட்டமைத்துக் கொண்ட பிம்பத்தின் காரணம் என்பது புரிந்தது. அதைக் கொண்டு அவர் உயிரோடு இருந்த சமயத்தில் எப்படி இருந்திருக்க முடியும் என்று யூகிக்க முடிந்தது.


அவர் தேடியதெல்லாம் ஆன்மிகம் என்ற போர்வையில் ஒளிந்து கொள்ள விரும்பும் கோழைகளையல்ல. ஆன்மீகத்திற்காக எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடிய சீடர்களைத்தான். அதற்கு அவர் உருவாக்கிக் கொண்ட பிம்பம் உதவி செய்தது. அந்த பிம்பத்தைக் கடந்து அவரிடம் வருபவர்கள், கொஞ்சமாவது ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது


ஓஷோ மையத்தோடு நான் தொடர்பு கொண்டிருந்தபோதே மெல்லமெல்ல விதிமுறைகள் தளர்த்தப்பட்டன. தீட்சை பெற்றவர்களுக்குக் கட்டாயமாக இருந்த மெரூன் நிற உடையும், ஓஷோ படம் போட்ட மாலையும் வசதிக்கேற்றபடி அணிந்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. அவர்களுக்குத் தரப்பட்டிருந்த சுவாமி, மா போன்ற அடைமொழிகள் நீக்கப்பட்டன. அவருடைய பெரும்பாலான நூல்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழிலும், பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.


அடுத்த சில வருடங்களிலேயே ஓஷோவின் பிம்பம் பெரிதளவு மாற்றப்பட்டுவிட்டது. எனக்குத் தெரிந்த அளவில் இன்று ஓஷோ படிக்கும் பலருக்கும் அவரைப் பற்றி முன்பிருந்த பிம்பம் தெரியாது. அவர்களது இன்றைய வாழ்க்கை முறைக்கு அவை ஒத்து வருகின்றன. அவரைப் படிப்பதால் அவர்கள் எந்தவிதத்திலும் தங்களை மாற்றிக் கொள்ளத் தேவையில்லை. அதனால்தான் அவர்கள் அவரை விரும்புகிறார்கள்.


அவர்களைப் பற்றி ஜெ சொல்லி இருக்கும் வரிகள் மிக முக்கியமானவை.


//ஓஷோ சொன்ன இருத்தலின் கொண்டாட்டத்தை இன்றைய வாசகன் கட்டற்ற நுகர்வுக்களியாட்டமாகப் புரிந்துகொள்கிறான். நுகர்வின் சுரண்டல் மீதான குற்றவுணர்ச்சியைத் தவிர்க்க அதைப் பயன்படுத்திக்கொள்கிறான். அவர் கற்பித்த கட்டற்ற அகம் என்பதை இன்றைய உலகின் அநீதிக்கு முன் கண்களை மூடிக்கொண்டு தன் சுயநலத்திலும் கோழைத்தனத்திலும் ஊறிக்கிடக்க சாக்காக்கிக் கொள்கிறான்//


அதனால் ஓஷோவை மறுப்பதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.


ஆனந்த் உன்னத்



அன்புள்ள ஜெயமோகன்,


ஓஷோ ஒரு தேர்ந்த சொற்பொழிவாளர்.


அவரின் குரல் (உச்சரிப்பு கொஞ்சம் வட இந்தியத் தன்மை கொண்டிருந்தாலும்..). அதன் மித வேகம்.. எல்லாமே, கேட்பவரின் மனத்தைத் தயாராக்கி, அவர் திசையை நோக்கித் திருப்பி விடுகி்ன்றன.


ஜெயமோகன் சொல்லியது போல் – அவர் ஒரு கிலுகிலுப்பைப் பாம்பு..


ஜென் பத்து மாடுகள் புத்தகத்தின் முதல் வரி – “we enter on a rare pilgrimage” என்னுள் ஒரு பெரும் திறப்பை உண்டாக்கியது. அந்தப் பத்து ஓவியங்கள் வழியே நம்முடன் வருகிறார்.


அதற்கு முன்பு ஜென் பத்து மாடுகள் பற்றி சில புத்தகங்கள் படித்ததுண்டு. அவை வெறும் தகவலாக மட்டுமே மனதுள் நுழைந்திருந்தன. ஆனால், ஓஷோ நம் உள் நுழைந்து, ஒரு சக பயணியாக, ஒரு soul mate போலப் பயணிக்கிறார்.


ஒரு தெளிவான மாணவனுக்கு, ஓஷோவும், ஆசிரமும், களியாட்டங்களும் தாண்டிய ஓஷோ தெரிவார். அவர் உருவாக்கிய பிம்பம் வெறும் சீட்டுக் கட்டு கோபுரமே.


அவரின் மேற்கோள்கள் வழியேயும் பயணிக்கலாம். அவற்றை நாம் செல்ல வேண்டிய சாலையின் வழிகாட்டிப் பலகையென்று உணர்ந்து கொண்டால். (அவையே மந்திரங்களாகவும், நெறிகளாகவும் மாறிவிட்ட இடமே இன்றைய ஆசிரமம். ஆசிரமம் அவரின் உரைகளைப் பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு கோடௌன் மட்டுமே).


” Orgasm is momentary bliss; Bliss is eternal orgasm ” இப்படிச் சொல்லவும் ஒரு ஞானி தேவை.


பாலா


http://childhood-pictures.blogspot.in/2011/11/osho-rajneesh-old-photos-collection.html

தொடர்புடைய பதிவுகள்

ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 3
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 2
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 1
காந்தி காமம் ஓஷோ
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தத்துவம், தியானம்-கடிதம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 12, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.