ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3

தஸ்தயேவ்ஸ்கி ஓஷோவுக்குப் பிரியமானவர். தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலில் உள்ள மையக்கதாபாத்திரங்களில் ஒன்றான மர்மல்டோஃப் பற்றி ஓஷோ பேசியிருக்கிறார். [ஓஷோ மேலை இலக்கியத்தில் யாரையெல்லாம் கவனித்திருக்கிறார், அவர்களுடன் அவர் எந்த கீழைச்சிந்தனையாளரை இணைத்திருக்கிறார் என்பது மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது]


தன்னை ஒரு கீழ்த்தரமான குடிகாரனாக, மோசடிக்காரனாக, பொறுப்பற்ற தந்தையாக, முற்றிலும் கீழ்மகனாக உணரும் மார்மல்டோஃப் தன் மீட்பர் தன்னிடம் ஒரு புனிதராக வந்தால் அவர் முகத்தில் காறி உமிழ்வேன் என்கிறான். அவரும் தன்னைப்போன்ற ஒரு பொறுக்கியாக, கையாலாகாதவராகத்தான் தன்னிடம் வரவேண்டும் என்கிறான். தன் அழுக்குகளையும் துக்கங்களையும் தானும் கொண்டவராக தன்னைப் போன்றவர்களில் ஒருவராக இருக்கவேண்டும் என்கிறான்.



மிக நுட்பமான ஒரு மனநிலை இது. ஓஷோ எப்போதுமே இந்த மனநிலையை அங்கீகரிப்பதை அத்தனை உரைகளிலும் காணலாம். அவர்களுக்கு ஓஷோ உபதேசம் செய்வதில்லை. அவர்களை வழிநடத்துவதில்லை. அவர்களுடன் சேர்ந்து அவரும் போதை இழுத்து, புணர்ச்சிக்களியாட்டமிட்டு, கொண்டாடினார். தொழுநோயாளிகள் நடுவே தன்னையும் தொழுநோயாளியாக ஆக்கிக்கொண்ட மருத்துவனின் பெருங்கருணை.


ஆனால் ஓஷோ அவர்களில் ஒருவராக ஒருபோதும் இருக்கவில்லை. அவரது மனம் பீட் தலைமுறையின் எந்தப் பண்பாட்டு அடையாளங்களிலும் நிலைகொள்ளவில்லை. அது கிருஷ்ணனின் ஞானவிளையாட்டை, புத்தரின் ஞானச்சமநிலையைத்தான் எப்போதும் நாடியது. அவரது சொற்கள் எல்லாம் அவற்றின் அனைத்து மேல்மட்ட அராஜகங்களுடனும் ஆழத்து நிலைத்த பேரமைதியையே சுட்டி நின்றன.


இங்கே சுடுகாட்டுப்பக்கமாக நான் காலைநடை செல்வதுண்டு. நகரத்தின் புறனடைப்பகுதி என்பதனால் குப்பைகள் வந்து குவியும் இடம் அது. ஒருநாள் கன்னங்கரிதாக ஏதோ மலக்கிடங்கை அள்ளிக்கொண்டுவந்து கொட்டியிருந்தார்கள். ஏழெட்டு நாட்களுக்குப்பின் மீண்டும் அவ்வழியாகச் சென்றேன். அந்தக் கரும்பரப்பு முழுக்க மகத்தானதோர் வண்ணக் கம்பளம் போல சின்னஞ்சிறு செடிகள் அடர்த்தியாக தளிர்விட்டு செந்நிறமான சிறிய பூக்களுடன் இளவெயிலாடி நின்றன.


கண்ணீர் மல்கச்செய்யும் உச்சநிலையில் அங்கே நெடுநேரம் நின்றேன். அந்தப் பேரெழில் மலர்கள்! அவற்றின் தேனும் நறுமணமும் எந்த தெய்வத்துக்கும் பூஜைப்பொருளாகும் தூய்மை கொண்டதுதானே? ஒரு வகையில் அந்த மலமும் கூட அந்தத் தூய்மை கொண்டதுதான். பல்லாயிரம் உயிர்களுக்கு பிரம்மத்தின் பருவடிவமாக வந்த உணவு அல்லவா அது? அன்னம் லட்சுமி என்றால் அதுவும் லட்சுமியல்லவா?


என் குடலும் நாசியும் மனமும்தான் அதை அருவருப்பாக்குகின்றன. அதற்கு அப்பால் ஒப்பீட்டில்லாத பெருவெளியில் அதுவும் மலரும் ஒன்றேயல்லவா? பேதபுத்தியே ஞானத்தை மறைக்கும் திரை என்கிறது வேதாந்தம். நூறுநூறாண்டுக்காலம் அதைக் கற்றறிந்தாலும் பேதங்களைக் கடப்பது சாத்தியமாவதில்லை. ஆனால் மலம் மலராகும் லீலையை உணராமல் மெய்ஞானமில்லை.





தஸ்தயேவ்ஸ்கி


முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஓஷோவின் ஓர் ஆன்மீக விவாதத்தில் பெண்குறி பற்றிய ஆபாச நகைச்சுவையை வாசிக்க நேர்ந்தபோது அடைந்த அதிர்ச்சியை நினைவுறுகிறேன். பாவம்-புண்ணியம், அறம்-மறம், அழகு-அருவருப்பு, கருணை-குரூரம், நன்மை-தீமைக்கு அப்பால் உள்ள ஒரு வெளியை எங்கேனும் உணராமல் ஒருவன் ஓஷோவின் எந்த நூலையாவது உள்வாங்கிக்கொள்ளமுடியுமா என்ன?


இன்று அச்சிடப்பட்டு குவிக்கப்படும் ஓஷோ நூல்களை முற்றிலும் வேறு சூழலில் இளம் வாசகர்கள் வாசிக்கிறார்கள். இன்று உலகம் முழுக்க மாறிவிட்டிருக்கிறது. கட்டற்றநுகர்வே உலகின் ஒரே கொள்கையாக ஆக்கப்பட்டுவிட்டது. உலகளாவிய வணிக சக்திகள் அதற்கான சிந்தனைகளை, கலைகளை உருவாக்கித்தள்ளுகிறார்கள். அவை உலகளாவிய மோஸ்தர்களாக பிரம்மாண்டமான ஊடக சக்தி மூலம் பரப்பப்படுகின்றன.


ஓஷோ சொன்ன இருத்தலின் கொண்டாட்டத்தை இன்றைய வாசகன் கட்டற்ற நுகர்வுக்களியாட்டமாகப் புரிந்துகொள்கிறான். நுகர்வின் சுரண்டல் மீதான குற்றவுணர்ச்சியை தவிர்க்க அதைப் பயன்படுத்திக்கொள்கிறான். அவர் கற்பித்த கட்டற்ற அகம் என்பதை இன்றைய உலகின் அநீதிக்கு முன் கண்களை மூடிக்கொண்டு தன் சுயநலத்திலும் கோழைத்தனத்திலும் ஊறிக்கிடக்க சாக்காக்கிக் கொள்கிறான்.


அவ்வுலகைப்பற்றி மட்டுமே பேசிய ஆசாரவாதிகளிடம் இந்த உலகை, இந்தக்கணத்தைப்பற்றி பேசிய ஓஷோவின் சொற்களை தன்னுடைய லௌகீக வெறியை நியாயப்படுத்தும் தர்க்கமாக ஆக்கிக்கொள்கிறான்.


ஒருவன் தன் சொந்த அனுபவத்தால், சொந்த ஞானத்தால் செய்யவேண்டிய அகப்பயணத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதற்குப்பதிலாக அவரது நூல்களின் சில வரிகளை அவ்வப்போது சொல்வதே போதும் என்று புரிந்துகொண்டிருக்கிறான். நுண்ணிய மெய்ஞானம் பற்றிய ஓஷோவின் வரிகளை சினிமாப்பாட்டு வரிகளைச் சொல்வதுபோல எங்கும் சொல்லிக்கொண்டிருக்கிறான்.


ஓஷோ என்பது ஒரு மாபெரும் பிம்பம். இருபதாம் நூற்றாண்டின் இப்பகுதியில் வந்துசென்ற ஒரு ஞானி தனக்கென உருவாக்கிக்கொண்ட பிம்பம். அந்தப் பிம்பமே அவரது கையில் இருந்த சம்மட்டி. அதைக்கொண்டுதான் அவர் இங்கிருந்த பாறைகளை உடைத்தார்.


ஆசார மடாதிபதிகளையும் மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பவர்களையும் கும்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு முன்னால் தன்னை கடவுள் என அறிவித்துக்கொண்டு அவர் முன்வைத்த பிம்பம் முதலாவது. சிக்குப்பிடித்த தலையும் கலங்கிய கண்களுமாக தன்னைச்சுற்றி வந்து கூடிய இளையதலைமுறைக்கு முன்னால் வைரப்பட்டைகளும் ரோல்ஸ்ராய்ஸ்கார்களுமாக வந்து அமர்ந்து அவர் காட்டிய பிம்பம் இன்னொன்று. அவ்விரண்டையும் தொகுத்து அவரே உருவாக்கிச்சென்றது ஓஷோ என்ற பிம்பம்.


ஓஷோவின் இந்தப் பிம்பம் கிலுகிலுப்பைப் பாம்பு [rattle snake] காட்டும் வாலைப்போன்றது. பொய்யான கண்கள் உள்ள போலியான தலை அந்த வால்நுனி. கண்ணைப்பறிக்கும் நிறமும் கவனத்தைக் கவரும் சத்தமும் கொண்டது. அவர் இரைகளை அதைக்கொண்டே கவர்கிறார். அவை அதை அவரது தலை என எண்ணி அருகே சென்று திகைத்துப்பார்க்கையில் தன் உக்கிர விஷத்தால் தீண்டுகிறார். மயங்கி திசைகலங்கிய இரையை இமையாவிழிகள் சிரிக்க மெல்ல விழுங்குகிறார். வயிற்றைக்கிழித்து வெளிவருபவர்களை மட்டும் ஆசீர்வதிக்கிறார்.


ஓஷோ உருவாக்கி வைத்த பிம்பத்துக்கு உள்ளே ஓஷோ இருக்கிறார். ஓஷோவை உடைக்காத எவராலும் அவரை அறிய முடியாது. ஓஷோ அவரது சொற்களாலும் புகைப்படங்களாலும் தன்னைச்சுற்றி உருவாக்கி வைத்திருப்பது மிகச்சிக்கலான ஒரு பிம்பவலை. ஒரு சுருள்வழிப்பாதை. அதைத் தாண்டி அவரை அணுகுபவர்களுக்குரியது அவரது ஞானம்.


ஓஷோவே மீண்டும் மீண்டும் அதைத்தான் சொல்கிறார். அவரது மைய வரியே அதற்கான அறைகூவல்தான். அறிதல் என்பது கடந்துசெல்லுதலே என்கிறார் ஓஷோ.


புத்தரை தெருவில் கண்டால் அக்கணமே கொன்றுவிட்டு மேலே செல் என்கிறார் ஓஷோ. இருபதாண்டுகளுக்கு முன் நான் குருதிவழிய கொன்று வீழ்த்திய ஓஷோவுக்கு என் குருவணக்கம்!


தொடர்புடைய பதிவுகள்

ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 2
ஓஷோ — உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் — 1
காந்தி காமம் ஓஷோ
கிரிமினல் ஞானி
ஓஷோ-கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
ஓஷோ — கடிதங்கள்
முட்டாள்களின் மடாதிபதி
தமிழில் வாசிப்பதற்கு…
அசடன்
குற்றமும் தண்டனையும்
தத்துவம், தியானம்-கடிதம்
இருவகை எழுத்து
தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள்
குற்றமும் தண்டனையும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 11, 2012 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.