காலச்சுவடு அய்யாச்சாமி
சிறந்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கும் நூல்களை வாங்குவதற்கு வாசர்கள் விரும்புகின்றனர். பரிந்துரைகளின் வழியாக மட்டுமே இலக்கியத்தை அடைய எண்ணுவது அசலான வாசக மனமோ, நியாயமான போதமாகவோ அமையமுடியாது என்பதே என்னுடைய தரப்பு. புதிதாக தீவிர இலக்கிய வாசகச் சூழலுக்குள் வந்திருப்பவர்களுக்கு தொடக்க காலங்களில் சிறந்த வழிகாட்டிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள். எனக்கு கவிஞர் வேல்கண்ணன் அமைந்தார். பின்னர் என்னுடைய தேடலை ஒரு லட்சியமாக ஆக்கிக்கொண்டேன். அறிதலை வேட்கையாக வரித்தேன்.
பரிந்துரைகள் தேவைப்படும் போது, சிறந்த எழுத்தாளர்களின் உதவியைக் கோரினேன். அறிவியக்கத்தின் அஞ்சலோட்டம் என்பது சிறந்தவற்றை பரிந்துரை செய்வதுதான். ஆனால் பரிந்துரைகளை மட்டுமே பின் தொடர்வது போதாமையே. மூத்த, சிறந்த எழுத்தாளர்கள் பரிந்துரைக்கு இயல்பிலேயே ஒரு பெருமதிப்பு உள்ளது. ஆனால் ஒரு பதிப்பகத்தின் விற்பனை பணியாளராக இருப்பவரின் புத்தக பரிந்துரைகளுக்கும், ஆலோசனைகளுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். இலக்கியத்தில் அவருடைய மெய்யான ஈடுபாடும், அறிமுகப்படுத்தும் முறையும் அறவே வியாபார நோக்கங்கொண்டது அல்ல. தேடலில் உள்ளவனுக்கு வழிகாட்டும் திசைமரமாக இருக்கிறார். அவருடைய பெயர் “காலச்சுவடு” அய்யாச்சாமி.
காலச்சுவடு பதிப்பகம் தமிழ் அறிவியக்கத்தின் உன்னதமான ஸ்தலங்களில் ஒன்று. அங்கு பணிபுரியும் அய்யாச்சாமியை வாசகர்கள் பலர் கண்டிருப்பார்கள். துடிப்பான மனுஷன். இவரின் அணுகுமுறையும் உபசரிப்பும் இலக்கியப் புலத்தில் அரிது. காலச்சுவடு அரங்கில் புத்தகங்களை வாங்கவரும் ஒரு புதிய வாசகன் எதனைப் படிக்கவேண்டுமென கேட்டால், இதுவரை நீங்கள் எவற்றையெல்லாம் வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்பதிலிருந்து அய்யாச்சாமியின் பணி தொடர்கிறது. அதன் நீட்சியாக வாசகனை அழைத்துச் சென்று புத்தகங்களை இனங்காட்டுகிறார். ஒரு இலக்கிய வாசகனாக காலச்சுவடு பதிப்பகத்தின் மீது எனக்குள்ள மரியாதை அளவற்றது. ஒரு நவீன வாசகனாக அங்கு வெளிவரும் பெரும்பாலான புத்தகங்களை வாங்கி வாசித்து வருகிறேன்.
புதிதாக இலக்கியத்துக்குள் புகுபவர்கள் எவற்றை வாசிக்கலாமென்ற குழப்பத்துடனே பெரும்பாலான புத்தகங்களைத் தேர்வு செய்கிறார்கள். ஓரான் பாமுக் படித்தால் அறிவுஜீவி என்கிற அபத்தமான கற்பனைகளை எங்கிருந்தோ அவர்கள் பெற்றுவிடுகிறார்கள். அய்யாச்சாமி போன்ற சிறந்த பரிந்துரையாளர் ஓரான் பாமுக்கை வாசிப்பின் எந்த இடத்தில் தொடவேண்டுமென கூறுபவர். மாவட்டங்கள் தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் காலச்சுவடு அரங்கில் அய்யாச்சாமி பங்குகொள்கிறார் என நினைக்கிறேன். நான் போகும் புத்தகத் திருவிழாக்களில் அவருடன் சென்று கதைத்துவிட்டுத்தான் திரும்புவேன். வாசிப்பில் தேடல் கொண்டவர்கள் அடையும் ஒரு அரிய பரிந்துரையாளர் அய்யாச்சாமி என்றால் மிகையில்லை.
அகரமுதல்வன்The post காலச்சுவடு அய்யாச்சாமி first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

