போதமும் காணாத போதம் – 14

திருவாசகப்பிள்ளை மாமா அதிகாலையிலேயே வீட்டுக்கு வந்திருந்தார். அமிலம் வேகித் தோலுரிந்தது மாதிரி முகமிருந்தது. தீட்சை அணிந்த மேனியில் வாசனை கமழ்ந்தது. செந்தளிப்பும், புன்சிரிப்பும் உடைந்த மாமாவைப் பார்க்கவே பயமாகவிருந்தது. “நீ கதைச்சால் தான், அவன் விளங்கிக் கொள்ளுவான். மனசு மாறுவான்” என்று அம்மாவிடம் சொன்னார். குங்குமம் இயக்கத்தில் சேர்ந்துவிட்டானா! என்று வியந்தேன். ஊரை உலையில் போட்டு கஞ்சியாக குடித்துவிடும் நரியவன். அவனிடம் இனி மரியாதையாக நடக்கவேண்டுமேயென நினைத்து தலையிலடித்தேன். ஆனால் இயக்கத்துக்கு போனவனை மனசு மாற்றச்சொல்லி அம்மாவிடம் வந்து கேட்கும் மாமாவைப் பார்த்தால் கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது. சொந்தச் சகோதரியாக இருந்தாலும் இவ்வளவு நம்பியிருக்க வேண்டாம். தன்னுடைய பிள்ளை இயக்கத்துக்கு போனதும் “பால்ராஜ் மாதிரி ஒரு சண்டைக்காரனோட போய் நில்லு. உனக்கு ரத்தம் கொடுத்தது நானில்லை, நிலம். இரத்தம் நிலத்தினது. என்றவள் அம்மா.

மாமாவையும் அம்மாவையும் ஊடறுத்து என்னுடைய ஷெல்லை இறக்கினேன். அவன் இயக்கத்துக்கு போனால், அவனுக்கு அழிவில்லை. அங்கயிருக்கிற மிச்சப்பேரை நினைச்சுத்தான் எனக்கு கவலை” என்றேன். எடேய், அவன் இயக்கத்துக்கு போகேல்ல, யெகோவா சபையில சேர்ந்திட்டானாம்” என்று சொன்ன அம்மா சிரித்தாள்.

“என்ர தெய்வமே. இயக்கத்துக்கு இன்னும் நல்ல காலமிருக்கு” ஆறுதலடைந்தேன்.

மாமாவின் நெற்றியில் அழியாது காய்ந்திருந்த திருநீற்றை பிளந்தறுக்கும் ரகசியமாய் வேர்வை இறங்கியது. கொஞ்சம் நிமிர்ந்தமர்ந்து “அவனை நேற்றே வீட்டிலிருந்து வெளியேறுமாறு சொல்லியிட்டன்” என்ற மாமா எழுந்தார்.  “குங்குமம் இப்ப எங்கயிருக்கிறான்” என்று கேட்டேன். கைவிரித்து தெரியாதென்றார்.

மாலையில் யெகோவாவின் ராஜ்ஜியத்தை அறிவிக்கும் சபைக்குச் சென்றேன். கொய்யா மரத்தடியிலிருந்து பைபிளை வாசித்த குங்குமம் என்னைக் கண்டதும் பரபரப்படைந்து மூடி மறைத்தான். என்ன குற்றமிழைத்தான், ஏன் பதறுகிறான். சிறியவர்களாக இருந்தபோது காகிதத்தைச் சுருட்டி பீக்காட்டில் புகைத்த பீடிக்கு கூட அஞ்சாதவன் குங்குமம். என்னை அமரச் சொல்லி கதிரையை எடுத்துத் தந்தான். “பைபிள் என்ன சொல்லுகிறது” என்று எழுதப்பட்ட புத்தகமொன்றும் இருந்தது. காவற்கோபுரம் வண்ணமயமான சஞ்சிகை. ஒருமுறை விக்டர் பிரதரிடமிருந்து வாங்கிச் சென்றேன். ஏதேன் தோட்டத்தில் கனியுண்ணும் ஆதாமும் ஏவாளும் கண்சொருகி தித்திக்கும் கணத்தை வரைந்திருந்தார்கள். பாம்போ அதனை வேடிக்கை பார்த்தது. பாவத்தின் விளைவுகளை அறியாத மானுடரின் மூதாதையர்களை கையிலேந்தியபடி வீட்டுக்குள் சென்றேன்.

வாசலில் அமர்ந்திருந்த உண்ணி ஆச்சி, “கையில என்ன புத்தகமடா மோனே” என்று கேட்டாள். காவற்கோபுரம், பிரதரிட்ட வாங்கி வந்தனான் என்றேன். “பிரதரோ, அது ஆரடா?” புத்தகத்தை வந்து பார்த்தாள், உலக முடிவு எப்போது என்று எழுதப்பட்டிருந்தது. எடேய் சனியனே, உந்த வேதக்காரற்ற தரித்திரியத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து வைச்சிருக்கிறியே, உனக்கு பாவமாய் தெரியேல்லையோ. எடுத்து எரிச்சுப் போடுவன்” என்றாள்.  “விழிப்புடன் இருங்கள். ஏனென்றால் உங்களுக்கு அந்த நாளும் தெரியாது, அந்த நேரமும் தெரியாது” – மத்தேயு அதிகாரத்திலிருந்து அச்சிடப்பட்டிருந்த வாசகத்தை ஆச்சிக்கு முன்நின்று சத்தமாக வாசித்தேன். ஆச்சி கழுத்தில் கிடந்த உண்ணிகளை பிய்த்து எறிந்து வருகிற ரத்தத்தை விரல்களில் தொட்டுப் பார்த்தாள்.

உண்ணி ஆச்சி இருந்திருந்தால் குங்குமத்தை தோலுரித்திருப்பாள். இவனின் நல்ல காலத்துக்கு ஆச்சி இறைபதம் அடைந்திருந்தாள்.  நாங்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போதுதான் விக்டர் பிரதர் வந்து சேர்ந்தார். வணக்கம் சொன்னார், எழுந்து நின்று வணங்கினேன். அமரும்படி சைகை செய்தார்.

அம்மா சொன்னதைப் போலவே குங்குமத்தை வீட்டுக்கு அழைத்து வந்தேன். அன்றிரவு  பைபிளும் கையுமாக இருந்தான். நீண்ட பிரார்த்தனையைப் போல ஒளிவீசும் குப்பி விளக்கில் வாசித்தான். நுளம்புக்கடி தாங்காது வலைக்குள் உறங்கினேன். விடியும் வரை பைபிளோடோயிருந்தான். தழும்பேறிய சிலுவையைப் போல என் மனத்துள் குங்குமம் உயர்ந்தான். ஏற்றுக்கொண்டதில் தீவிரமாகவிருப்பவன் மதிப்புடையவன். காலையில் ஒன்றாக காட்டுக்குப் போனோம். இரண்டு போராளிகள் சைக்கிளில் வீதியைக் குறுக்கறுத்துப் போயினர். காட்டில் கருமம் முடித்து அடிகழுவி எழுந்தோம்.

“நான் செய்தது பிழையில்லை. ஆனால் அப்பா நடந்து கொண்ட விதம் குரூரமானது. வேதத்துக்கு மாறினால் இவருக்கு என்ன பிரச்சனை” குங்குமம் பனிவிலக்கும் பூமியோடு கதகதப்பை உருவாக்கினான்.

“மச்சான், நீ விரும்புறது தான் உன்ர சமயம். தெய்வம். அதில எவரும் தலைநீட்டேலாது. அது அப்பாவா இருந்தாலும் பொருந்தும்” என்றேன்.

“இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுகையில் திருவாசகப்பிள்ளை யெகோவாவை நம்புவார். அதுவரைக்கும் என்னை ஏசட்டும். நான் வீடு வீடாகச் சென்று ராஜ்ஜத்தை பிரச்சாரம் செய்யப் போறன்” என்றான்.

வீட்டுக்கு வந்தோம். இயக்கத்தின் பிரச்சார பிரிவுப் போராளிகள் மூவர் வந்து நின்றனர்.  மாலையில் எங்களுடைய கிராமத்தில் நடைபெறவிருக்கும் தெருநாடகமொன்றிற்கு வரும் கலைஞர்களை வீட்டில் தங்கவைக்க முடியுமாவென அம்மாவிடம் கேட்டார்கள். மறுப்பாளா அவள். இரவு இங்கேயே சாப்பிட வேண்டுமென வேண்டினாள். அவர்கள் பெருவிருப்புடன் தலையசைத்துச் சென்றனர்.

“இவர்கள் எல்லோரையும் ஒருநாள் யெகோவா மன்னிப்பார்” என்றான். குங்குமத்தின் நல்ல காலம், அம்மா அவர்களை வழியனுப்பச் சென்றிருந்தாள். அவள் காதில் விழுந்தால் மன்னிப்பெல்லாம் இல்லை. உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றுவாள். ஜென்மம் தீர்ந்தாலும் படலை திறக்காள். குங்குமம் இவையெல்லாவற்றையும் அறிந்திருந்தும் துடுக்குத்தனமாய் நடந்தான். அம்மா சாப்பாடு போடுகிறேன் என்ற போது வேண்டாமென மறுத்தான். விரதமிருப்பதாக கூறினான். எப்போது பசித்தாலும் சாப்பிடு என்றாள்.

மாமா வீட்டுக்கு வந்தார். பைபிள் படித்துக் கொண்டிருந்த குங்குமம் எழுந்து ஆச்சியின் கொட்டிலுக்குப் போனான். “இவனை ஏன் வீட்டில அண்டி வைச்சிருக்கிறாய்” என்று அம்மாவோடு சண்டை போட்டார். “மாமா அவனை நீங்கள் குறைச்சு மதிப்பிடாதேங்கோ. இப்ப பழைய குங்குமம் இல்ல” என்றதும் “ஓமோம், படிச்சு கம்பெஸ்க்கெல்லே போய்ட்டான்” என்று நக்கல் அடித்தார். தனக்குப் பிடிச்ச சமயத்தில சேர்கிறதொண்டும் ராஜ துரோகம் இல்ல. இப்பிடி அவனைப் போட்டு எதையாவது செய்து கொண்டிருந்தால், நான் இயக்கத்திட்ட போய் சொல்லிப்போடுவன். மதவுணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் இருக்கிறது பாரிய குற்றம்” என்றேன். “நாங்கள் பார்க்காத இயக்கத்தை இப்ப எங்களுக்கு நீங்கள் காட்டுறியள்” என்றார். “அப்பிடி வைச்சுக் கொள்ளுங்களேன்” என்று சொன்னதும் “இனிமேல் இந்த வீட்டுக்கும் நான் வரப்போறதில்லை” என்றார் மாமா.

குங்குமம் ஊழியக்காரனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பித்தான். இரண்டு மாதங்களுக்கிடையில் சொந்தக்காரப் பெண்ணொருத்தி உட்பட எட்டுப்பேரை சபையில் இணைத்துக் கொண்டான். திருமுழுக்கு நடைபெறும் நாளையும் அவர்களுக்கு குறித்தனர். குங்குமம் களப்பணி அறிக்கையை கொடுத்து டேவிட் பிரதரிடம் பாராட்டுக்களை வாங்கியதாகச் சொன்னான். அவனிடமிருந்த நரித்தனமும் கெடு நினைப்புக்களும் இல்லாமல் சாதுவாகியிருந்தான். யெகோவாவின் அற்புதமே ஓங்குக! என்று ஒருதடவை மனதுக்குள் சொன்னேன்.

உண்ணி ஆச்சி வாசலில் அமர்ந்திருக்கிறாள். அவளுடைய காலுக்கடியில் கறுப்பன் வால் சுருட்டி படுத்திருந்தான். முகத்தில் வளர்ந்திருந்த உண்ணிகளை பிய்த்தெறிந்து  ரத்தம் கசிய குந்தியிருந்து “என்னடா மோனே” என்று கேட்டாள். என்னுடைய கையில் கிடந்த துண்டுப் பிரசுரத்தை வாங்கிப் பார்த்தாள். “தமிழீழ விடுதலைக்கு தோள் கொடுங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. பார்த்துவிட்டு தருவித்தாள். “இவன் குங்குமம் எங்க” கேட்டாள். அவன் யெகோவா சபையில இருக்கிறான். “அவனைக் கவனமாய்ப் பார், பெரிய பாரத்தை சுமந்து  நெடுந்தூரம் போகப்போறான்” என்றாள். குங்குமம் சிலுவையில் அறையைப்பட்டு வானத்துக்கு உயர்ந்து நின்றான். அவனுடைய கால்கள் அசையமுடியாமல் ஆணியில் இறுக்கப்பட்டிருந்தன. முள்முடியில் ஒரு செம்போத்து அமர்ந்திருந்து அவனை கீழ்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது. குங்குமத்தின் முகம் மலர்ந்து புன்னகைத்தபடியிருந்தது. கண்ணீர் வழிந்து ஒழுகியது. கண்களைத் திறந்தேன். சித்தம் படபடத்தது. தலைமாட்டிலிருந்த செம்புத் தண்ணீரைக் குடித்தேன். எழுந்து வெளியே வந்தேன். வாசலில் உண்ணித் தோல்கள் பரவியிருந்தன. ஆச்சியின் காலடிகள் வீட்டு முற்றத்திலிருந்து கிணற்றடி வரைக்கும் அழியாமல் இருந்தது. குசினிக்குள்ளிருந்த அம்மாவிடம் ஓடிச்சென்றேன். வானொலியில் திருச்சி லோகநாதன் “நெஞ்சம் கனிந்து முருகா என்று மனதில் நினைக்கின்ற நேரமெல்லாம்” என்று பாடிக்கொண்டிருந்தார். பாடலைக் கேட்டபடி அப்பம் சுட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் ஆச்சி கனவில் சொன்னதை தெரிவித்தேன்.

ஒருநாள் மாலையில் குங்குமம் வீட்டிற்கு வந்திருந்தான். யெகோவா சபையின் வேலையாக மூன்று நாட்களில் கொழும்புக்கு செல்லவிருப்பதாக சொன்னான். இயக்கத்திடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் அது கிடைத்துவிட்டால் பிரதர் டேவிட்டோடு பயணமென்றான். ஆச்சி கனவில் வந்து சொன்னவவற்றை ஒரு சொல்லும் விடாமல் குங்குமத்துக்கும் அறிவித்தேன். “என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள். எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப் பாரும்” என கர்த்தரிடமும் ஆச்சியிடமும் பிரார்த்தித்து விட்டேனென குங்குமம் சொன்னான். ஒன்றாக அமர்ந்திருந்து சாப்பிட்டோம். அவனுக்குப் பிடித்தது மண்சட்டியில் வைக்கப்பட்டிருந்த மீன் குழம்பு. அம்மா நிறைவாகச் சாப்பிடுமாறு சொன்னாள். நிலவூறி வளர்ந்த இரவுக்கு சந்தோஷத்தை காணிக்கையாக்கினோம்.

குங்குமம் கொழும்புக்குச் சென்று நான்கு நாட்களில் தொடர்பு கொண்டான். வன்னியன் தொலைத்தொடர்பு நிலையத்தில் நானும் அம்மாவும் சென்றும் கதைத்தோம். அங்குள்ள சபையின் தலைமைக்காரியத்தில் இருப்பதாகச் சொன்னான். நன்றாக படித்து சமயக்குருவாக ஆகிவிடு என்றேன். குங்குமம் சரி மச்சான் என்று சொல்லி தொடர்பை துண்டித்தான். மாமாவுக்கு அவன் கொழும்பு சென்றடைந்ததைப் போய்ச் சொன்னேன். இறுகிப் போய் கேட்டு, தலையை மட்டும் ஆட்டினார்.

இயக்கம் பிரச்சாரத்தின் மூலம் ஆட்களை படையில் சேர்க்கும் ஒரு களமுனையை திறந்திருந்தது. சைக்கிளில் செல்லும் இளையோரை வழிமறித்து “வயது என்ன” என்று கேட்கும் போராளிகள், போராட்டத்தின் அவசியத்தைக் கூறி ஐந்து நிமிடங்கள் பேச எண்ணுவார்கள். பதினெட்டு வயது என்றால் அவர்களுடன் கதைப்பார்கள். குறைவான வயதென்றால் போகலாம் என்பார்கள். “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை” என்பதைப் போல போராட்டம் வீதியில் பிரச்சாரம் செய்தது. நாங்கள் எங்களுடைய கிராமத்தை விட்டு இடம்பெயருமளவுக்கு யுத்தம் தொடங்கியது. யெகோவா சபைக்குள்ளிருந்த புத்தகங்களையும், பைபிள்களையும் ஒரு மூட்டையில் கட்டி நடக்க ஆரம்பித்தேன்.

இடம்பெயர்ந்து போன இடத்தில் மரத்தடியொன்றின் கீழே அமர்ந்திருந்தோம். அங்கே சமையல் செய்து, உண்டு, உறங்கி நான்கு நாட்களாகியும் பைபிளையே வாசித்தேன்.

“அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன்” என்ற வாசகத்தில் வேரூன்றி நின்றேன்.

கொழும்பில் நடந்த தாக்குதல் ஒன்றில் இராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. சூரியன் பண்பலைச் செய்தியில் அது தற்கொலைத் தாக்குதல் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இராணுவ அணிவகுப்பில் நடந்த இந்தத் தாக்குதலில் பலியான சிப்பாய்களின் எண்ணிக்கை பற்றிய விவரம் எதுவும் அப்போது தெரியவில்லை. வன்னியின் வான்பரப்பில் போர்விமானங்கள் ஆவேசங்கொண்டு புகுந்தன. ஆறுக்கும் மேற்பட்ட போர்விமானங்கள் புலிகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசின என்று ஊடகங்கள் தெரிவித்தன. வழமை போல சனங்களின் பிணங்களை அடுக்கி, வன்னியே ஓலமிட்டது.

நாங்களிருக்கும் இடத்தைத் தேடிக்கண்டு பிடித்த அரசியல் போராளிகள் மாமாவை அழைத்து உங்களுடைய மகன் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று சொல்லினர்.

“தம்பியவே, அவன் உங்கட கொம்பனியில இல்லை, கொழும்பில இருக்கிறான். அதுவும் யெகோவா சபையில. அவங்கள் சண்டைக்கு எதிரானவங்கள். ரத்தம் குடுக்கவே மாட்டங்கள். நீங்கள் மாறி வந்து நிண்டு கதைக்கிறியள்.”

அய்யா. உங்கட மகனுக்கு குங்கும சிலையோன் தானே பேர்.

“ஓம்”

“அவர் டேவிட் பிரதரோட இருந்தவர் தானே”

“ஓம்”

“இப்ப ஒரு மாசத்துக்கு முன்ன கொழும்புக்கு போனவர் தானே”

“ஓம் “

“நாலு நாளுக்கு முன்னம் கொழும்பில நடந்த தாக்குதலில ஒரு இராணுவத்தளபதியை அடிச்சம் தானே. அதில கரும்புலியாய் இருந்ததில ஒருவர் உங்கட மகன்  “மேஜர் இம்மானுவேல்” வீரச்சாவு அடைந்தார்.

மாமா ஓம்…ஓம்…ஓம்… என்பதைச் சொல்லிக் கொண்டே இருந்தார். விஷயம் கேள்விப்பட்ட அம்மாவும் நானும் சனங்களை விலத்திக்கொண்டு மாமாவிடம் ஓடிச் சென்றோம். ஓம்….ஓம்…ஓம் என்று சொல்லிக் கொண்டிருந்த மாமாவைப் பார்க்க இயலாது இருந்தது. ஏற்பற்ற பார்வையால் பூமியைப் பார்த்தார். வானத்தைப் பார்த்தார். அவனது தியாகத்தின் சாகசத்தில் உறைந்து நின்றேன். என்னைக் கண்டதும் கட்டியணைத்து “அவன் உன்னட்டையாவது உண்மையைச் சொல்லியிருக்கலாம் தானே” என்றார்.

“ஓம்”

அன்றிரவு மரத்தின் கீழே உறங்கச் சென்ற போது “உனக்கு அவன் இயக்கமெண்டு உண்மையிலும் தெரியாதோ” கேட்டாள் அம்மா.

“இல்லையம்மா, உங்களுக்குத் தெரியுமோ”

அம்மா எதுவும் சொல்லாமல் நின்றாள். அவளது ரகசிய காப்புக்களை தகர்க்க இயலாது. “உண்ணி ஆச்சி, கனவில சொன்ன பாரம் இப்ப தான் எனக்கு விளங்குது அம்மா” என்றேன்.

“அண்டைக்கு அவன் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்கோ”

“என்னம்மா”

“பரலோகப் படைகளின்ர யெகோவா எங்களோடு இருக்கிறார். யாக்கோபின்ர கடவுள் எங்களுக்கு பாதுகாப்பான அடைக்கலமாக இருக்கிறார். தேசங்களின் மத்தியில் நான் உயர்ந்திருப்பேன். பூமியில் உயர்ந்திருப்பேன்” என்றானே, மறந்திட்டியோ!

“எதோ சொன்னவன் தான். இப்ப நீங்கள் சொல்லும் போது தான் ஞாபகம் வருது”

“அவனை இனி நீயில்லை நானில்லை. தேசமும் மறக்காது” என்றாள்.

அன்றைக்கு ஆச்சியின் கனவை சொன்ன போது “இஞ்ச எல்லாப்பிள்ளையளும் பாரம் தான் சுமக்கினம். அவனும் சுமக்கட்டும். அது சிலுவையோ, துவக்கோ. என்னவென்றாலும் கவலைப்பட எதுவுமில்லை” என்ற அம்மாவின் வார்த்தைகளையும் என்னால் மறக்க முடியாது.

 

The post போதமும் காணாத போதம் – 14 first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2023 10:30
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.