இயக்குனர் “பூ” சசி – வாசக கலைஞன்
இலக்கிய வாசிப்பை மதிப்புமிகுந்த செயலாக கருதுபவர்கள் திரைத்துறையில் சொற்பமானவர்களே. ஆனால் சில இயக்குனர்கள் அதனை ஒரு தவம் போல எண்ணுகிறார்கள். இன்றைக்கு நவீன இலக்கியத்திலிருந்து திரைப்படங்களை உருவாக்க பலர் முன்வருகிறார்கள். எழுத்தாளர்களை நாளும் பொழுதும் அழைத்துப் பேசி கதைகளை விவாதிக்கிறார்கள். தமிழ் திரைப்படங்களோடு நவீன எழுத்தாளர்கள் பலர் இணைந்து பணியாற்றும் ஒரு பொற்காலமாக நடப்பு நாட்களைக் குறிப்பிடலாம். இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ச்சியாக படைப்பிலக்கியங்களை திரைப்படமாக ஆக்குகிற முயற்சிகளை முன்னெடுக்கிறார். அவருடைய தயாரிப்பில் வெளியான சங்கத்தலைவன் என்றொரு திரைப்படமும் தமிழ்நாவலொன்றை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இன்றைக்கு இதுபோன்ற முயற்சிகளுக்கு ஒரு விஷேட கவனமிருக்கிறது. இந்தக் காலத்திற்கு முன்னரே “வெயிலோடு போய்” சிறுகதையை “பூ” என்ற திரைப்படமாக்கி பெரிய வெற்றி பெற்றவர் இயக்குனர் சசி. அவருடைய கதைத் தேர்வும், அதனை திரைக்கதையாக மாற்றி திரையில் உருவாக்கிய வாழ்வும் பாராட்டுக்குரியது. “பூ” சசி என்கிற உதிராதவொரு பெயரை அவருக்கு பெற்றுக்கொடுத்த படமது. நவீன இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிப்பின் வழியாகவே அவதானிக்கும் இயக்குனர்களில் மிக மிக முக்கியமானவர் சசி.
எனக்கொரு அழைப்பு வந்தது. “எழுத்தாளர் அகரமுதல்வன் தானே!” என்ற குரலில் ஒரு எதிர்பார்ப்பு. “நீங்கள்?” என்றேன். நான் இயக்குனர் சசி பேசுகிறேன் என்றார். சொல்லுங்கோ என்றேன். உங்களுடைய “மாபெரும் தாய்” சிறுகதைத் தொகுப்பினை வாசித்தேன், நேரில் சந்திக்க வேண்டுமென விரும்பினார். பிறகு சிறிதாக மலர்ந்து கமழ்ந்த உரையாடலை நேரில் பார்க்கையில் நீட்டிக்கொள்ளலாம் என துண்டித்துக் கொண்டோம். அடுத்தநாள் இயக்குனர் “பூ “சசியும் நானும் சந்தித்தோம். என்னுடைய சகோதரரும் கவிஞருமான கடங்கநேரியானும் உடனிருந்தார். என்னைப் பார்த்ததும் நீங்கள் தான் அகரமுதல்வனா என்று கேட்டார். அவருடைய எண்ணத்தில் நான் கொஞ்சம் வயதான ஆளாக இருந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. ஊஞ்சல் போன்ற இருக்கைகளில் எதிரும் புதிருமாக அமர்ந்தோம். என்னுடைய கதைகளைப் பற்றி சிலாகித்துப் பேசினார். உணர்ச்சி மேலிட்ட அவரின் பேச்சில் இலக்கிய வாசிப்புக் கொண்ட ஒருவரின் ஆழமான பதங்களே நிரம்பியிருந்தன. வெறுமென கதையை மட்டும் பேசாது, கதை மொழி, விவரணை, கதையின் கட்டமைப்பு என ஒரு விமர்சக அளவு கோலோடு பாராட்டினார். அதன் பிறகு நெகிழ்ச்சியான உரையாடல்கள் நீண்டன. அன்றே என் எழுத்தூழிய வாழ்வில் மறக்க முடியாதவொரு பரிசினை மகா கலைஞன் “பூ” சசி எனக்களித்தார். அது எப்போதும் தட்பவெப்பமாக என்னோடு இருப்பது. என்னுடன் மட்டுமே இருப்பது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு விஷேச வீடொன்றில் நண்பரொருவரைச் சந்தித்தேன். அவருக்கு இலக்கியம் என்பது பாட்டாளிகளின் பாடுகளைச் சொல்வது மட்டும் தான். ஏனையவை எல்லாம் வெறும் குப்பைகள் என்பார். அவரோடு எப்போதும் இலக்கியம் பேசி நேரத்தை வீணடிப்பதில்லை என்பது என்னுடைய அணையாத கொள்கை. இந்த முறை சினிமாப்பக்கம் அவர் கரையொதுங்கி நின்றார். விடுதலை பார்த்தீர்களா என்று கேட்டதும் நான் விழிப்புற்று இல்லையென்றிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. ஆனாலும் வாய் விடாது அல்லவா… பார்த்தேன், எனக்குப் பிடித்திருந்தது என்று சொல்லிவிட்டேன். அவர் கொந்தளிப்புற்று “அந்தப் படத்தில் என்னதான் நல்லாயிருக்கு தோழர்” என்றார். எனக்கு தோழர் என்று கேட்டதுமே உறைத்துவிட்டது. காலையில் நாட்காட்டியில் எனது நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் என்று வாசித்தும் நினைவில் வந்தது.
அமைதியாக இருப்பதை விட இந்தச் சூறையை எதிர்கொள்ள வேறுவழியில்லையென விஷேச வீட்டு ஆட்களை வேடிக்கை பார்த்தேன். ஆனாலும் நண்பர் விடுவதாயில்லை. “இவங்களுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள பற்றி என்ன தெரியும்னு படம் எடுக்கிறாங்க. இல்லை நாம அவங்கிட்ட போய் கேட்டமா. அந்த எழுத்தாளனே ஒரு வலதுசாரி. அவன் எழுதின கதையை வைச்சு சினிமா பண்ணி தேறுமா சொல்லுங்க” என்றார். இதுபோன்ற வேளைகளில் எவ்வளவு காட்டுக்கூச்சலான பாடலும் இன்பம் தரும். ஒலித்த பாடலையே கேட்டு மெய்மறந்ததைப் போல பாவனை செய்தேன். எனக்குத் துன்பம் நேர்கையிலே யாழெடுத்து இன்பம் சேர்த்த இசையமைப்பாளருக்கு இசையென்றால் என்னவென்று கொஞ்சமேனும் தெரிந்திருந்தால், இப்படியொரு பாடலை அமைத்திருக்க மாட்டார் என்று உள்ளூர நொந்தேன். நண்பர் “சினிமாக்காரன் என்னத்த படிச்சுக் கிழிக்கிறான், அவனுக்கு கிசுகிசு படிக்கவே நேரம் போதாது. இதில இலக்கியமும் இசங்களும்” என்றார்.
அப்போதுதான் எனக்கு சந்திராஷ்டமம் அணையுடைத்தது. என்னுடைய அமைதியை நண்பருடைய இந்த பொத்தாம் பொதுவான ஏளன இரைச்சல் தொந்தரவு செய்தது. அவரைப் பார்த்துக் கேட்டேன் “சினிமாக்காரன் கிசுகிசு படிக்கிறானா, அல்லது சினிமாக்காரன் கிசுகிசுவ நாம படிக்கிறமா? வாய்க்கு வந்தது மாதிரி பேசாதீங்க” என்றேன். “அப்புறம் என்ன, எந்த சினிமாக்காரன் இலக்கியம் வாசிக்கிறான் சொல்லுங்க, சும்மா சில புத்தகங்களோட பேரைத் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு கம்பு சுத்துறாங்க” என்றார். “உங்களைப் போன்று அவர்கள் பொய் சொல்ல வேண்டுமென்று எந்த அவசியமும் இல்லை. வாசிக்கிறேன் என்று சொல்வதால் நாளையே அவர்களுக்கு நூறு தயாரிப்பாளர்கள் வந்து படம் பண்ணு என்று சொல்லமாட்டார்கள்” என்றேன்.
அவர் பதற்றப்பட்டு “நான் எப்போது பொய் சொன்னேன், இன்றும் கூட ஐம்பது பக்கம் வாசித்து விட்டுத் தான் வருகிறேன்.” என்றார். என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் என்றதும் “அதுவொரு மொழிபெயர்ப்பு நாவல், ஆனால் பெயரை மறந்து விட்டேன்” என்றார். சரி நம்புகிறேன். ஆனால் சினிமாக்காரன் வாசிக்கவில்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லாதீர்கள். அவர்களில் ஒரு தொகுதியினர் மீண்டும் மீண்டும் இலக்கியத்தை வெகுஜன பரப்பில் தீவிரத்தோடு முன்வைக்க முயற்சிக்கிறார்கள் என்றேன். நண்பர் சிரித்துக் கொண்டே “ ஏன் உங்களுடைய கதை ஏதேனும் திரைப்படம் ஆகப்போகிறதா” என்று கேட்டார்.
இதுவொரு சாதாரணனின் சீண்டல். அதற்கு நான் பலியாகப் போவதில்லை. ஆனால் அந்த நண்பரிடம் மறுபடியும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன் “ எழுத்தாளன் ஏதேனுமொரு வகையில் யாருக்கேனும் கால்பிடித்து, தாளமிட்டு தன்னை முன்னிறுத்துவான் என்று கருதும் உங்களுடைய எண்ணத்தை நினைத்துக் கவலை கொள்கிறேன். இதைப்போன்று இலக்கியம் வாசிக்கும் திரைப்படத்துறையினர் எழுத்தாளனை எண்ணுவதில்லை” என்றேன். நண்பர் கொஞ்சம் வெட்கித் தலைகுனிந்தார். ஆனாலும் அவருக்குள் இருந்து ஏதோவொரு கோஷம் வெளியே வந்தது. “இவர்கள் எல்லோரும் பெருமுதலாளிகளுக்கு சம்பாதித்து தருபவர்கள். இவர்களின் கலை பாட்டாளிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை” என்றார்.
ஆமாம் நண்பா! அவர்கள் அதற்காக பட்டினி கிடந்து அவமானப்பட்டு இந்தப் படுகளத்தில் தங்கள் குடல் உருவி கொடியேற்றவில்லை. மாறாக அவர்கள் கலையை வைத்து முடிந்தளவு சமரசங்கள் செய்யாது, அறத்தைப் பேசுகிறார்கள்” என்றேன்.
நண்பருக்கு அது விளங்கியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் பேச்சை முறித்துக் கொண்டு வெளியேறியிருக்கிறார் என்று பொருள். இந்த நண்பரை அழைத்துக் கொண்டு இலக்கிய வாசிப்புக் கொண்ட இயக்குனர்கள் சிலரைச் சந்திக்கச் செல்ல வேண்டுமென விரும்பியிருக்கிறேன். அவர்கள் படித்த மூன்றிலொரு பங்கு புத்தகத்தை தானும் வாசித்ததில்லை என்பதை அப்போதாவது அவர் உணரவேண்டும். அப்படியாக நண்பரை அழைத்துச் செல்ல விரும்புவது பூ சசியின் அலுவலகத்திற்கு தான். அவர் வாசித்து புத்தகங்களையும், வாசிக்க இருக்கும் புத்தகங்களையும் காண்பிக்கலாமென்று நினைத்திருக்கிறேன்.
இயக்குனர் “பூ” சசி மாதத்தில் இரண்டு தடவைகள் டிஸ்கவரி புத்தக நிலையம் சென்று புத்தகங்களை வாங்கிக் கொள்கிறார். தொடர்ந்து புத்தக கண்காட்சிகளுக்கு வருகை தருகிறார். இடைவிடாத வாசிப்பின் வழியாக அவர் இன்னொரு “பூ”வை தமிழ் திரைப்பட உலகுக்கு சூடுவார் என்றே நம்புகிறேன். ஏனெனில் அவரது வேர் ஆழமாக இலக்கியத்தில் பதிந்துள்ளது.
The post இயக்குனர் “பூ” சசி – வாசக கலைஞன் first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

