புத்துயிர்ப்பு
அன்பின் அகரமுதல்வனுக்கு!
இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் எழுத்தாளர் கலந்துரையாடல் அமர்வில் வாசு முருகவேல் அழைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய “கலாதீபம் லாட்ஜ்” நாவலை வாசித்தேன். சொல்லிக் கொள்ளும்படியான ஆக்கமாக அதில்லை. ஆனால் “மூத்த அகதி” நாவல் குறிப்பிடத்தகுந்ததே. உங்களுடைய அவதானிப்பில் வாசு முருகவேலின் நாவல்களின் முக்கியவத்தும் என்ன?
ஜாகிர்அன்பின் ஜாகிர்! எழுத்தாளர் வாசு முருகவேல் ஈழர் இலக்கியத்தில் ஒரு புத்துயிர்ப்பான நம்பிக்கை. அவருடைய முதல் நாவலான “ஜெப்னா பேக்கரி” தொட்டு மூத்த அகதி வரை வாசித்திருக்கிறேன். இந்த ஆண்டு வந்த “ஆக்காண்டி” நாவலை இன்னும் வாசிக்கவில்லை. வாசு முருகவேலின் எழுத்துக்கள் பிற ஈழ இலக்கியப் படைப்புக்களில் இருந்து வித்தியாசமானது. ஏனெனில் கொதிநிலையான போரையோ, போராட்டத்தின் உணர்வுத் தளங்களையோ அவர் படைப்புக்கள் கொண்டிருக்கவில்லை. மாறாக எவரும் தொடத்துணியாத அரசியல் சம்பவங்களையும், காலங்களையும் எழுதுகிறார். “ஜெப்னா பேக்கரி” நாவல் ஏற்படுத்திய அதிர்வுகள் கவனிக்கத்தக்கது. “மூத்த அகதி” நாவல் புலம்பெயர்வு இலக்கியத்தில் ஒரு சிறந்த முயற்சி. வாசு முருகவேலின் “கலாதீபம் லாட்ஜ்” நாவல் பற்றிய உங்கள் மதிப்பீட்டினை புரிந்து கொள்கிறேன். ஆனாலும் அந்த நாவலில் தத்தளிக்கும் இரண்டு காலங்களும், நிலங்களும் கடல்வழியாக பயணம் செல்லும் சம்பவங்களும் முக்கியமானவை. அது எழுதப்பட்ட விதம் சார்ந்து சில குறைகள் இருக்கின்றன. அதனை சுட்டிக்காட்டலாம். ஆனால் அது பொருட்படுத்த வேண்டிய நாவல் தான் என்பது என்னுடைய தரப்பு. எழுத்தாளர் வாசு முருகவேல் ஈழ இலக்கிய நிரையில் தனக்கென ஒரு இடத்தை உண்டாக்கியிருக்கிறார். அவருடைய நாவல்களின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எழுதும் நாளொன்றுக்காக நானும் காத்திருக்கிறேன். இந்தப் பதிலை எழுதும் போதும் அதற்கான தேவை இருப்பதாகவே உணர்கிறேன். நன்றி
The post புத்துயிர்ப்பு first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

