போதமும் காணாத போதம் – 12
கிளிநொச்சி சந்தையில் மரக்கறிகளை வாங்கி அவசர அவசரமாக வெளியே வந்த “பச்சை” இரணைமடுவுக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தார். உளமழுத்தும் இன்னல் முகம் முழுதும் நின்றது. வியர்வையில் தோய்ந்திருந்தார். இன்னுமிரண்டு நாட்களில் பயணம் சரிப்பட்டால் பிள்ளைகளைக் காப்பாற்றி விடமுடியுமென்ற வேண்டுதல். பச்சைக்கு அருகில் வந்தமர்ந்தார் கருவாட்டி யாபாரி மாசிலா. அவரின் பொய்க்கால் நன்றாகப் பழுதடைந்திருந்தது. வெண்புறா நிறுவனத்தில் புதிய பொய்க்கால் வேண்டிப் பதிவு செய்துள்ளதாக பச்சையிடம் தெரிவித்தார். இரணைமடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய பச்சை, ஜன்னல் வழியாக மாசிலாவைப் பார்த்தார். மாசிலா தனது பொய்க்காலை சரிப்படுத்தி கொஞ்சம் ஆசுவாசமாக அமர்ந்திருந்தான்.
வீட்டில் நின்ற இரண்டு கிடாய்களுக்கும் தவிடு கரைத்து வைத்த “கொண்டோடி” சுகந்தா படலைக்குள் நுழையும் பச்சையை பார்த்தாள். புருஷனின் நடையில் ஏதாவொரு குழப்பமிருப்பதாக உணர்ந்தாள். “என்னன, ரத்தச் சோகை வந்த ஆக்கள் மாதிரி தெம்பில்லாம நடக்கிறியள்” என்று கேட்டாள். பச்சையிடம் பதிலில்லை. வாசலிலிருந்த வாளி நீரில் கால்களைக் கழுவி, வீட்டிற்குள் நுழைந்தார். இரண்டு கிடாய்களும் தவிட்டுத் தண்ணியை மூசி மூசி உள்ளிளுக்கும் சத்தம் மத்தியான வெயிலோடு கூடியிருந்தது. கறுத்து மினுமினுத்து நன்றாக உயர்ந்து நிற்கும் முதல் கிடாய் சித்திரனுக்கும், செவி நீண்ட கறுப்பு நிறத்திலான துடியான மற்ற கிடாய் அப்பனுக்குமென பாலத்தடி சிவன் கோவிலுக்கு நேர்த்தியாக வளர்த்தாள்.
ஆனால் பிள்ளைகளை காப்பாற்ற தெய்வத்தால் முடியாதென்றும், அது தெய்வத்தையே படைத்த மனுஷனாலேயே ஆகும் காரியமெனவும் பச்சை நம்பினார். தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் மனம் நிறுத்தி எண்ணினார். கனகாம்பிகைக் குளத்தடியில் ஏக்கர் கணக்கிலிருந்த தென்னந்தோப்பும், முறிகண்டியில் தரிசாகக் கிடக்கும் எழுபது ஏக்கர் நிலமும் வேண்டாமெனத் தோன்றியது. கையிருப்பிலிருந்த பணம் பல லட்சங்கள். வங்கியில் வைப்பிலுள்ள பணத்தையும் கணக்குப் போட்டார். தமிழீழ வைப்பகத்தில் இருக்கிற பணத்தை எடுப்பதில்லை என முடிவு செய்தார். சொத்துக்களை விற்பது இயக்கத்திற்கு தெரிந்தாலும் ஆபத்து நேரும். எதுவும் வேண்டாம். “உயிர். அந்த பொக்கிஷத்தை மட்டும் மீட்டுவிட்டால் போதுமானது. “எத்தனை காலம் இந்த மயிரெல்லாம் நீடிக்கப்போகிறது. இவர்கள் எல்லாம் அழிந்து போகுமொரு நாள் வராமலா போகும். நிலத்துக்காக சாவதெல்லாம் விஷர்த்தனம். ஆயுத வெறி. இத்தனை வசதிகளோடு இருக்கும் எனது பிள்ளைகள் ஏன் துவக்கெடுத்து சண்டை செய்ய வேண்டும்?” என்று கற்பூரத்தைக் கொளுத்தி பாலத்தடி சிவனை வழிபட்டார் பச்சை.
“கொண்டோடி”சுகந்தாவிடம் பச்சைத் தண்ணீர் கேட்டால் கூட கிடைக்காது. கோவில் உண்டியலில் ஒரு ரூபாய் போட்டுக்கூட சனங்கள் பார்த்ததில்லை. இயக்கம் சனங்களிடம் நகையும், பணமும் கேட்ட காலத்தில் தன்னுடைய இரண்டு தோட்டையும் கழற்றிக் கொடுத்ததாக ஒரு வரலாறு சொல்லுவாள். ஏற்பாடுகள் எதனையும் சுகந்தாவிடம் பச்சை சொல்லவில்லை. அவளை நம்பமுடியாது. யாரிடமாவது வாய்தவறிச் சொல்லவும் செய்வாள். சித்திரன் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அப்பன் பதினோராவது வகுப்பு. இருவரும் நல்ல கெட்டிக்காரர்கள். இந்தியாவிற்கு அழைத்துச் சென்று தனது பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்கவேண்டுமென பச்சை ஆவலாதிப்பட்டார். முதன்முதலில் சித்திரனுக்கு தனது திட்டத்தைச் சொல்லலாமென பச்சை உறுதி பூண்டார். வீட்டுக்குப் பின்னாலுள்ள மாந்தோப்பில் கட்டிலில் உறங்கியிருந்த சித்திரனை தட்டியெழுப்பினார். எப்போதுமற்ற பழக்கமொன்றை எதிர்கொண்ட திகைப்பில் கொஞ்சம் நேரம் கதையாமல் இருந்தான். ஆனாலும் பச்சை கதைக்கத் தொடங்கினார்.
“சித்து, நாங்கள் இஞ்ச இருந்து வெளிக்கிடலாம், இயக்கம் நல்லா இறுகப்போகுது. பிள்ளையளை பிடிச்சு போருக்கு படைக்கப்போறாங்கள். நான் எல்லா ஏற்பாட்டையும் செய்திட்டன். நாளைக்கு பின்நேரமாய் இஞ்சயிருந்து வெளிக்கிட்டு போய்டலாம். பிறகு கடலால இந்தியாவுக்கு”
“அப்பா, உங்கட திட்டம் சரி வருமே, ஏதேனும் தகவல் கசிஞ்சால் கூட இயக்கம் மன்னிக்காது. எல்லாத்தையும் பறிச்சுப்போட்டு உள்ள தள்ளிடுவாங்கள்”
சித்திரன் ஒத்துக்கொண்டது நல்ல சகுனமென எண்ணினார். பச்சைக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. “அதைப் பற்றி நீ கவலைப்படாத. கொம்மாவை மட்டும் சம்மதிக்க வைச்சுப் போடு. அதுதான் இப்ப ஒரே தலையிடி.” என்றார். “நாங்கள் எல்லாரும் வெளிக்கிடப் போகிறம் எண்டால் அம்மா இஞ்ச தனிய இருப்பாவே, வரத்தானே வேணும்” காலில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, நான் அம்மாவிட்ட கதைக்கிறன்” என்றான் சித்திரன்.
அன்றிரவு வீட்டில் கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. “இத்தனை சொத்துக்களையும், நிலங்களையும் அம்போவிண்டு விட்டிட்டு ஆள்தெரியாத ஊருக்கு எதுக்கு ஓடோணும். செத்தால் சாவம். எல்லாற்ற பிள்ளையளுக்கும் நடக்கப்போறது தானே எனக்கும் நடக்கப்போகுது. நான் அதைத் தாங்கிக் கொள்வன். ஆனால் இந்த ஊரை விட்டு என்னால வர ஏலாது” சுகந்தா மறுத்தாள். அப்பனுக்கு எந்த விருப்பும் வெறுப்பும் இல்லை. அவன் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான். “சுகந்தா நாட்டில நடக்கப்போறது என்னெண்டு தெரியாமல் கதையாத, இஞ்ச இருக்கிற ஒருத்தரும் மிஞ்சப்போவதில்லை. அந்த நிலைமைக்குத் தான் இவங்கள் ரெடியாகுறாங்கள்”பச்சை சொன்னார்.
“உயிர் சாம்பலாய்ப் போனாலும் இந்த மண்ணில போகட்டும். இவ்வளவு சனமும் இஞ்ச இருக்க நாங்கள் மட்டும் சாகப்பயந்து ஓடித்தப்புறத நினைக்க குமட்டுது. அவமானம்”
“எடியே வேஷை, உனக்கு அப்பிடியென்னடி கரப்பன் வியாதி. இஞ்ச ஆரோடையோ படுக்க நாள் பார்த்து வைச்சிருக்கிறியோ. நான் என்ன சொல்லுறனோ. அதைச் செய்”
அப்பன் வெகுண்டு துடித்தான். அவனது கை நரம்புகளில் கொலைத்துடி எழுந்தது. பச்சையை நோக்கி நடந்து போய் பளார் என்று கன்னத்தில் அறைந்தான். சித்திரன் அதிர்ச்சி அடைந்து அப்பனை இழுத்துப் பிடித்தான். பச்சை கன்னத்தைப் பிடித்தபடி பார்வை மங்க அமர்ந்தார். உடல் சிவந்து தளும்பி அழுதார். சுகந்தா அப்பனை அரவணைத்து நின்றாள்.
மாந்தோப்பிலிருந்த கட்டிலில் அமர்ந்திருந்த பச்சையிடம் “ அப்போய், இவையள் வராட்டி என்ன நீங்களும் நானும் வெளிக்கிடுவம்” சித்திரன் சொன்னது அவ்வளவு தீவிரமாயிருந்தது. அது பச்சையின் உடலில் எரிந்தடங்க மறுத்த காயத்தின் எரிச்சலுக்கு குளிர் பரப்பியது. ஆனாலும் வேண்டாமென்று மறுத்தார். எல்லாரும் மனம் ஒத்து வெளிக்கிடுவம். அது விரைவிலேயே நடக்கும். பொறுத்திருப்பம்” என்றார். “அதுக்குள்ள தமிழீழம் கிடைச்சால் என்ன செய்யிறது” சித்திரன் கேட்டான். பச்சை தன்னுடைய கன்னத்திலிருந்த கையை எடுத்து “எழும்பிப் போடா மடப்புண்டையாண்டி” என்று ஏசினார்.
ஒரு சில மாதங்களில் வன்னியில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. “புலிகள் படையில் சேர்க” என்ற பிரச்சாரங்கள் வீதிகள் தோறும் நிகழ்ந்தன. பள்ளிக்கூடம் சென்று வருகிற இளவட்டங்களை நிறுத்தி வைத்து போராட்டத்தின் அவசியத்தையும் இக்கட்டையும் பிரச்சாரப் பிரிவு போராளிகள் முன்வைத்தனர். கதைத்து விளங்கவைத்து இயக்கத்தில் இணையுங்கள் என்பது மேலிடத்து ஆணையாம். சுகந்தாவுக்கு சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்தின. சித்திரன் நாளும் பொழுதும் தாயிடம் ஒப்புக்கொள்ளல் வாங்கவே நேரம் செலவழித்தான். பச்சை முல்லைத்தீவுக்குச் சென்று ஓட்டியைச் சந்தித்து வந்தார். ஏற்கனவே நடந்ததைப் போல ஏமாற்றம் எதுவும் இந்தத் தடவை நிகழாதென ஓட்டிக்கு உறுதியளித்தார்.
சுகந்தா ஆடுகளையும் வீட்டிலுள்ள சில பொருட்களையும் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்க விரும்பினாள். “எதுவும் செய்ய வேண்டாம். நாங்கள் இல்லையென அறிந்த பிறகு மாமாவே எல்லாவற்றையும் வந்து எடுத்துவிடுவார்” என்றான் சித்திரன். கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் பச்சை இறங்கினார். அங்கிருந்து இரணைமடுவுக்கு செல்லும் பேருந்துக்காக காத்திருந்தார்.
சித்திரன் தன்னுடைய நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பன் வீரபத்திரர் கோவிலுக்குப் பின்புறமுள்ள பெரிய கல்லொன்றில் அமர்ந்திருந்தான். சுகந்தா தன்னுடைய நகைகளை எடுத்து ஒரு பெரிய தலையணைக்குள் பதுக்கினாள். தங்கத் தலையணை. அதற்கு மேல் எத்தனையோ மெழுகுத்தாள்களால் அரண் அமைத்தாள். எல்லோருக்குள்ளும் நெடிய வலி குறுக்குமறுக்காக தையலிட்டது. எதன்பொருட்டு நிலம் பிரிந்தாலும் வருந்துயர் ஆறாதது.
அப்பனுக்குப் பின்னால் வந்து நின்றாள் நறுமுகை. அவளது கைகளில் பனங்காய் பனியாரம் நிரம்பியிருந்தது. நிலத்தின் வாசனையோடு கமழும் பொழுது. அப்பன் அவளை இறுகக் கட்டியணைத்து முத்தமிட்டான். அவளுடைய கைகள் தளர்ந்தன. மண்ணில் சிறுமுலைக்காம்புகள் தோன்றியதைப் போல பனங்காய்பனியாரம் சிதறுண்டன. கல்லின் மீது யாக்கைகள் கனன்றன. அமுதுண்ணும் பொலிவுடன் வண்டுகள் பறந்தன. அப்பனின் மூச்சில் சிவந்த உதடுகளால் நறுமுகை தாகம் பெருகி மிடறு எச்சில் விழுங்கினாள். அப்பனின் தவிப்புக்கூடியது. அவன் சொன்னான் “ நாங்கள் இஞ்ச இருந்து தப்பியோடப் போகிறம்”
“எங்க”
“இந்தியாவுக்கு. அப்பா ஏற்பாடு செய்திட்டார். படகில போகப் போகிறம்”
“உங்கட குடும்பத்துக்கு என்ன விசரே, கடல் முழுக்க இயக்கம் தான். அலைகளையே எண்ணிக் கொண்டிருப்பினம். இதில நீங்கள் எங்க தப்பி, எங்க போகப்போறியள்”
“தெரியேல்ல, நடக்கிறது நடக்கட்டும். எல்லாரும் போய், நான் மட்டும் நிண்டால் இயக்கம் என்னைத்தான் சிறையில அடைக்கும்”
“நீ, போய் இயக்கத்திட்ட சொல்லு. அப்படியெண்டால் உனக்கு தண்டனை இருக்காது”
“அய்யோ, குடும்பத்தைக் காட்டி குடுக்கச் சொல்லுறியோ, அம்மா பாவம்”
“அப்ப, கடலில போய் சாகப்போறாய். அப்பிடித்தானே?”
“நீ இயக்கத்தில போய் சொல்லிப்போடாத, எனக்கு பயமாயிருக்கு. எதோ ஒரு குறுகுறுப்பில உன்னட்ட சொல்லிட்டேன்”
“எனக்கு அது வேலை கிடையாது. ஆனால் உங்கட அப்பா, இதுமாதிரி திட்டத்தில இருக்கிறார் என்று இயக்கத்துக்கு தெரியாமல் இருக்காது. ஊரில இருக்கிற முகவர்கள் ஆரேனும் மணந்து பிடிச்சிருப்பினம்”
“எப்பிடி உறுதியாய் சொல்லுறாய் நறுமுகை”
“இஞ்ச எதையும் ஆரும் ரகசியமாய் செய்து தப்ப ஏலாது. ஏனென்டால் இயக்கத்தை விடவும் அதைச் செய்ய உலகத்தில ஆளில்லை. ஆனா நீ உந்தப் பயணத்தில சேராத. எனக்காக மட்டுமில்ல, உனக்காகவும் சொல்லுறன்” என்று சொல்லிய நறுமுகை மண்ணில் விழுந்து கிடந்த பனங்காய் பணியாரங்களை ஊதி ஊதி அவனுக்கு தீத்திவிட்டாள். “இவ்வளவு உருசையாய் கிடக்கு” அப்பன் கேட்டான், “மண்ணில இருந்தெடுத்தால” என்ற நறுமுகை அங்கிருந்து புறப்பட்டாள்.
அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். இரவு முழுவதும் அவனைக் காணாது தேடிய சித்திரன் அதிகாலையில் அப்பனைக் கண்டான். வீட்டிற்கு தன்னால் வரமுடியாதென மறுத்து அங்கேயே அமர்ந்தான். சுகந்தா சென்றழைத்தும், பச்சை கெஞ்சிக் கேட்டும் வரப்போவதில்லையென உறுதியாக கூறிவிட்டான்.
குறிப்பிட்ட நாளில் மூவரும் வீட்டிலிருந்து புறப்பட்டனர். அப்பன் அதே கல்லிலேயே அமர்ந்திருந்தான். சுகந்தா சென்று பயணம் சொன்னாள். அவன் கைகளை காட்டி செல் என்றான். இரண்டு நாட்கள் வெவ்வேறு இடங்களில் பதுங்கியிருந்த மூவரும் கடற்கரைக்கு ஓட்டியொருவரால் அழைத்துச் செல்லப்பட்டனர். பச்சை ஒரு தலைக்கு ஐம்பதாயிரம் ரூபாய்ப் படி பணத்தை அளித்தார். படகு இந்தியாவை நோக்கிப் புறப்பட்டது. அடுத்தநாள் காலையிலேயே படகு ஆளற்ற கரையை அடைந்தது. கண்டல் செடிகளும் தென்னைகளும் நிரம்பி நின்றன.
“வந்திட்டமா” பச்சை ஓட்டியிடம் கேட்டார்.
“ஓம் அண்ணே, இன்னும் கொஞ்சத் தூரம் நடந்து போனால் ராமேஸ்வரம் கோவிலே வந்திடும். இறங்குங்கோ. அக்கா பார்த்து இறங்க வேணும்” என்றான் ஓட்டி. சித்திரன் பாய்ந்து இறங்கி தாய்க்கு கைகொடுத்தான். கடல் மணலில் புதையுண்ட பாதங்களை முன்நகர்த்தாமல் பின்நோக்கித் திரும்பி அவள் இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி “என்ர பாலத்தடி சிவனே, அப்பனைக் காப்பாற்றிப் போடு” என்று வணங்கினாள்.
கொஞ்சத் தூரத்தில் நடந்து சென்றதும் ஓட்டி சொன்னதைப் போலவே விசாரணை அதிகாரிகள் அவர்களை அகதிகளாக பதிவு செய்தனர். பிறகு அவர்களை கூட்டிச் சென்றதொரு வாகனத்தில் ஏற்றினார்கள். வாகனம் சில நிமிட பயணத்துக்குப் பின்பு வீதிக்கு வந்தது. முல்லைத்தீவு என்று கடைப்பலகைகள் தொங்கின. பச்சை அதிகாரிகளிடம் கேட்டார் “ இஞ்சையும் ஒரு முல்லைத்தீவு இருக்கோ”
“இருக்கு. அதுக்கு நீங்கள் விசுவமடுவாலையே வந்திருக்கலாம். ஏன் இப்பிடி சுத்தி படகில வந்தனியள்” – அதிகாரியொருவர் கேட்டார்.
பச்சைக்கு வியர்த்துவிட்டது. சித்திரனுக்கு நடுங்கத் தொடங்கியது. சுகந்தா தனது கைகளை மேலே உயர்த்தி என்ர அப்பனே, உன்னட்டையே கூட்டிக்கொண்டு வந்திட்டாய்” என்றாள். பச்சை அழுது புலம்பி அவர்களின் கையப்பிடித்து “தம்பியவே என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ” என்றார். “இயக்கத்தைச் சுத்திப் போட்டு போகலாமெண்டு நினைச்சியளோ” என்று கேட்டார்கள். “ ஓம். அதுக்கு என்ன, பிள்ளையள அம்மா அப்பா ஏமாத்தக் கூடாதோ?”
“அம்மா, நீங்கள் வீட்டுக்கு போகலாம். இவர்களை மட்டும் விசாரணை செய்து விட்டு அனுப்பி வைக்கிறோம்” என்றார்கள்.
சுகந்தாவை இன்னொரு இயக்க வாகனத்தில் வீட்டில் கொண்டே இறக்கினார்கள். அவள் நேராக அப்பன் அமர்ந்திருக்கும் கல் நோக்கி ஓடினாள். அப்பன் அப்படியே அமர்ந்திருந்தான்.
“பிள்ளை, அம்மா வந்திட்டன். எழும்பி வா. இனி எங்கையும் போகேல்ல”
“நானும் தான். இனி இதுதான் என்னோட இடம். என்னைப் பார்க்க ஆர் வந்தாலும் இங்க வரட்டும்” என்றான்.
இயக்கத்தினரால் விசாரணை செய்யப்பட்ட பச்சைக்கும் சித்திரனுக்கும் ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைப் பணமாக லட்சங்கள் அளிக்கப்பட்டன. பச்சை சிறைக்குள் தனது ஓட்டியை ஒருநாள் கண்டார். புலிச்சீருடையணிந்த அவனது இடுப்பில் கைத்துப்பாக்கி பட்டியில் இருந்தது. அவனுக்குப் பின்னால் பொய்க்காலால் தாண்டித் தாண்டி கருவாட்டு யாபாரி மாசிலா புலிச்சீருடையோடு வந்திருந்தார். பச்சைக்கு நடுநடுங்கியது. மாசிலாவை அழைத்த பச்சை “நீயும் இயக்கமே, என்னட்ட ஒருநாளும் சொன்னதேயில்லையே” என்றார். உங்களுக்கும் எனக்குமிடையே கருவாட்டில் விலைகுறைப்பதற்கு தானே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. கருவாடு வாங்கிற எல்லாரிட்டையும் நான் இயக்கமெண்டு சொல்லி என்ன நடக்கப்போகுது “ என்றார்.
கல்லின் மீது அமர்ந்திருந்த அப்பன் ஒரு நாள் காணாமல் போனான். நறுமுகையையும் காணவில்லை. ஊரிலுள்ளவர்கள் தேடும் போது இருவரும் மறுகரையில் படகை விட்டு கீழே இறங்கினர். வேதாரண்யம் கடற்கரையில் மீனவர்கள் சிலர் அவர்களைக் கண்டனர். ஓடிச் சென்று அரவணைத்தனர். அப்பனும் நறுமுகையும் அவர்களிடம் குடிப்பதற்கு தண்ணீர் தாருங்கள் எனக்கேட்டனர். அளிக்கப்பட்ட நீரை அள்ளித்தரும் மீனின் வாசனையோடு பருகினர்.
“இருவரும் கணவன் மனைவியா”
“ஓம்”
“சின்னஞ்சிறுசுகளாக இருக்கிறீர்களே”
“எங்கள் நாட்டில் எல்லோரும் சீக்கிரமாக வளர்ந்து விடுவோம்”
“ஏன்”
“துவக்கேந்த வேண்டும்” என்றான் அப்பன்.
The post போதமும் காணாத போதம் – 12 first appeared on அகரமுதல்வன்.
அகரமுதல்வன்'s Blog
- அகரமுதல்வன்'s profile
- 17 followers

