புது சீலம், புது ஒழுங்கு, புது கட்டற்ற தன்மை, புது சிந்தனை – சகல ரோக நிவாரணி

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 41 இப்போது திண்ணை இணைய வார இதழில் பிரசுரமாகியுள்ளது. அதிலிருந்து

கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது.

சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன.

தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும் பானைகளில் ஏற்றி உடைத்து புளிவாடை எங்கும் மூக்கில் குத்த, பாதை வழுக்கச் செய்திருந்தனர்.

கூட்டம் கூட்டமாக தலையில் சகல இன சஞ்சீவனி ஏற்றி வந்து தேளரசர் அரண்மனை முன்னும் துயிலரங்கத்துச் சுற்று வெளியிலும் மேலும் கர்ப்பூரம் வீட்டு வாசலிலும் பானை உடைத்துப் போனார்கள்.

சகல இன சஞ்சீவனி ஏற்றுமதி மையம் என்று பலகை வைத்த பழைய பெரிய கட்டிடத்துக்குள் ஏழெட்டு நாய்கள் சுருண்டு படுத்திருக்க, ஒரு நாற்காலியோ மேசையோ காணக் கிடைக்கவில்லை எனினும் மின்விசிறிகள் அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.

சகல இன சஞ்சீவனி என்ற கர்ப்பூரத்தின் திட்டம் தோல்வி. அதைப் பற்றிய கவலையே இல்லாமல் கர்ப்பூரம் தேளரசரின் ஆட்சியை உடனே பாதுகாக்க என்ன செய்யலாம் எனத் தீவிரமாக யோசித்தபடி பழைய சிற்றுந்துவில் பெருந்தேளரசரைச் சந்திக்கப் போய்க்கொண்டிருந்தான்.

கூடவே பிரதி நீலனான ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலனும் அமர்ந்திருந்தார். அவர் தேளரசரோடு சேர்ந்தாலும் குழலனோடு ஓர் அணியில் நின்றாலும் அவர்களுக்கு என்ன பயன்? அவருக்குத்தான், கசாப்புக்கடை நீலனுக்குத்தான் என்ன பயன்?

கர்ப்பூரத்திடம் சொல்லி விடலாமா நான் அசல் நீலன் இல்லை, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலன் என்று?

கசாப்புக்கடைக் கத்தி அவர் தலையைக் கழுத்திலிருந்து அகற்ற வேண்டுமென்றால் அதை வெளிப்படுத்தலாம். ஏன் அந்த விபரீத ஆசை?

தேளரசனைப் பொறுத்தவரை சகல இன சஞ்சீவனி ஒரு திசையில் முழு வெற்றி. உறவுக்கு தூண்டும் உறுதியான மனமும் உடலும் நீள்நேரக் கலவியும் மருந்தில் இருக்கிறதோ என்னமோ, நம்புகிறார்கள் அது உண்டென்று.

அசல் நீலன் வந்திருந்தால் கூட இப்படி ஒரு புது மருந்தை உருவாக்கி இருக்க முடியாது. ஆடச் சொன்னதற்கு மேலாகவே ஆடி விட்டார் கசாப்பு நீலன்.

குழலன் கூட்டி வரும்போது தருவதாகச் சத்தியம் செய்த பத்தாயிரம் பைனரி நாணயங்களைக் குழலனிடமிருந்தும், கர்ப்பூரத்திடம் இருந்து சகல இன சஞ்சீவனி வருமானத்தில் பங்கையும் வாங்கிக்கொண்டு, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்துக்கு அடுத்த ஆட்டையும் மாட்டையும் வெட்டப் போய்விடுவார் அவர்.

ஒரு வாரமாக இந்த சகல இன சஞ்சீவனி காய்ச்சுவதில் மும்முரமாக கசாப்பு நீலன் மூழ்கியதை தேளரசர் கவனித்திருப்பார். சகல இன சஞ்சீவனி வருமானம் மூன்றில் ஒரு பாகம் ஆல்ட் க்யூ நீலனுக்கும் மீதி வருமானத்தில் 60% பெருந்தேளருக்கும் பாக்கி 40% கர்ப்பூரத்துக்கும் போகிறது.

வினாடி நேரமும் ஓய்வு எடுக்காத, உறக்கத்தைக் குறைத்து ஓய்வைக் குறைத்து ஊர் முழுக்க நாடு முழுக்க எல்லாம் மாற்றி இருக்க புது சீலம், புதுச் சிந்தனை, புது ஒழுங்கு, புது கட்டற்ற தன்மை என்று மாறி இருக்கச் செய்ததை தேளரசன் தனியாகச் செய்திருக்க முடியாது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2023 18:17
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.