துயிலரங்கம் ஆக்ரமித்த தெள்ளுப்பூச்சி உயிர் கொல்லிப்படை

நாவல் தினை அல்லது சஞ்சீவனி அத்தியாயம் 41-லிருந்து – முழு அத்தியாயம் திண்ணை டாட் காம் இணைய இதழில்

பக்கத்தில் கர்ப்பூரம் வேறே லொடலொடவென்று ஈச்சம்பாயில் ஒண்ணுக்கு போனமாதிரி பேசிக்கொண்டே இருக்கிறான். அவன் குரல் சத்தமாக இருந்தாலும் மெலிந்திருந்தாலும் நிறுத்தாமல் கேட்டுக் காதை செவிப்பூரன் புகுந்த மாதிரி துளைக்கிறது. பேசாமல் இதே காஸ்மாஸ் பிரபஞ்சத்திலேயே பொது யுகம் 230-க்குப் போய் விடலாமா? அசல் நீலன் அங்கே இருந்தால் நான் யாராவது? இருத்தலியல் சிக்கல் என்பது இதுதானா?

இன்றைக்கு கர்ப்பூரத்தைத் தவிர்த்து விட்டுத் தனியாக தேளரசரைச் சந்தித்திருக்கலாம். எல்லாம் கிழட்டுப் பிணம் முதுதேளரசன் காரணமாக நினைத்தபடி எதுவும் செய்ய முடியாமல் போனது.

விடிகாலையில் எழுந்து உட்கார்ந்து ரொட்டி, ஜாம், வெண்ணெய் என்று அமர்க்களமாக உண்டு கொண்டிருந்தான். கொண்டிருந்தார். நீலரே, வாருங்கள் அரண்மனை போயாக வேண்டும். நீங்கள் தேளரசின் சக்கரவர்த்தியோடு வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நிமிடத்திலிருந்து நான் மீண்டும் பேரரசராகிறேன்.

சுவாமி அதெல்லாம் சரிதான். நீரே சக்கரவர்த்தி நீரே மெழுகுவர்த்தி. எல்லாம் இருக்கட்டும். அப்போது தற்போதைய தேளரசர் உம் புதல்வர் என்ன ஆவார்?

கசாப்புக்கடை பிரதி நீலன் அவரைக் கேட்டபடி நிற்க, உட்காருமய்யா என்று கைகாட்டி எதிர் வரிசையில் கால் ஆடிக் கொண்டிருந்த பழைய மர நாற்காலி ஒன்றைச் சுட்டிக்காட்டி. ரொட்டி எடுத்துக் கொள்ளும் என்றபடி தான் சவைத்துக் கொண்டிருந்த ரொட்டித் துண்டில் பாதியைக் கிழித்து நீலனிடம் நீட்டினார்.

இதேது பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரம் ஏறியது போல் இந்தத் தேட்சவத்தோடு பழகின தோஷத்துக்கு அதன் எச்சில் திங்கணுமோ கஷ்டம் என்று நினைத்தபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றார். வயிறு சரியில்லை அப்புறம் உண்கிறேன் என்றபடி அங்கிருந்து மெல்ல அகலப் பார்த்தார் ஆல்ட் க்யூ பிரபஞ்ச நீலன். தேட்சவமா விடும்? தேட்கிழமா போய்வரச் சொல்லிக்கனிவு காட்டும்?

நீலரே எனக்கு கொஞ்சம் அது ஏதோ மருந்து உற்பத்தி செய்திருப்பதாகப் போன தடவை எழுந்தபோது சொன்னீர்களே சகல ரோக சஞ்சீவினி.

ஐயா சகல இன சஞ்சீவனி.

என்னவோ ஒரு பெயர் அதில் ஒரு கோப்பை எடுத்து வரச் சொல்லுங்கள். வடிவான இரண்டு பையன்களை அந்தக் கோப்பைகளோடு அனுப்ப வேண்டும். என்ன புரிந்ததா? அழகான மங்கையர்கள் கோப்பையில் இருந்து ஊற்றிக் கொடுத்திடவும் புகட்டவும் மட்டும் போதும்.

கிழம் உளற ஆரம்பித்தபோது அது தன்னை உடனே வெளியேற விடாது என்று தோன்றியது ஆல்ட் க்யூ நீலனுக்கு. இந்த முதுதேளரை சமாளிக்க கர்ப்பூரம் வேண்டும் என்று தோன்ற அவனை அழைத்தார் அந்த கசாப்புக்கடை நீலன்.

கர்ப்பூரம் வந்ததுமே அதிகார தோரணையில் சத்தம் கூட்டிப் பேச ஆரம்பித்து விட்டான்.

ஓய் முதுபெருந்தேளா, எழுந்ததும் ஒண்ணுக்கு போய்ட்டு வந்தீரா இல்லே ஏற்கனவே பேழையை நாறடிச்சிருக்கியா என்று ஒருமையில் விளிக்க ஆல்ட் க்யூ கசாப்பு நீலன் பதறி அவர் ராஜா என்று அவர் பின்னால் இருந்து தலையில் கொம்பு முளைத்திருக்கும் அபிநயத்தைக் காட்டினார்.

பெரிசுக்கு இன்னொரு கொம்பு தலையிலே வந்திருக்காமே சபாஷ் என்று சொல்லி நீலனிடம் மெதுவாகச் சொன்னது – பொணம் ஆயாச்சு. ராஜா என்ன மந்திரி என்ன ஊரான் என்ன? கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு முதுபெரும்தேளர் உறுமினார் அதுவும் கிருத்திருமம் நிறைந்த கர்ப்பூரத்தைப் பார்த்து.

போய் சஞ்சீவனி எடுத்துக்கிட்டு பையன்களை கூட்டிட்டு வாடா. எல்லா வாடையோடும் இருக்கணும் ஆமா. என்னடா முறைக்கிறே.

கர்ப்பூரம் சிரித்துக் கொண்டே முதுதேளன் பின்னால் போனான். காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து ஓங்கி ஒரு அடி கொடுத்தான் அந்தத் தேள் சவத்துக்கு. கூழான உடம்போடு கிடக்கும் முதுபெரும் தேளன் உடம்பு வாடை தெள்ளுப் பூச்சிக் கும்பலுக்குப் பரவ அடுத்த பத்து நிமிடத்தில் துயிலரங்கில் இரண்டு தேளர்கள் முற்றுகையிடப்பட்டனர். முதுபெருந்தேளரும் அவரது இளைய மகனான இளந்தேளரும் அந்த இருவர்.

முதுபெருந்தேளரின் சவத்தின்மேல் தெள்ளுப் பூச்சிகள் படர்ந்து விருந்து உட்கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாக அவை முதுவரின் முகத்தை அரித்தெடுத்து கண்களை மட்டும் விட்டு வைத்து கால்களை அரித்துத் தின்ன முனைந்தன.

இலந்தேளன் உயிரோடு இருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி அடைந்ததுபோல் தெள்ளுப் பூச்சிகள் அந்தத் தேளன் அலற அலற அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து உண்டன. கொஞ்ச நேரத்தில் முதுபெருந்தேளனும் இல்லை இளந்தேளனும் அங்கே இல்லை.

வந்த வேகத்தில் தெள்ளுப் பூச்சி உயிர்கொல்லிப் படை துயிலரங்கம் கடந்து தாழப் பறந்து போயின. கர்ப்பூரமும் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலனும் அவற்றைப் பார்த்து அச்சம் மூண்டெழுந்து பிரமித்துப் போய் நின்றனர்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 27, 2023 19:00
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.