விசித்திரக் கனவு

சத்யஜித் ரேயின் நாயக் படத்தில் மறக்க முடியாத காட்சி ஒன்றுள்ளது. சினிமா நடிகரான அரிந்தமின் கனவது. கல்கத்தாவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் ரயில் பயணத்தின் போது அந்தக் கனவு வருகிறது.

கலையா அல்லது பணம் சம்பாதிப்பதா என்று இரண்டு பாதைகள் நாடக நடிகரான அரிந்தமின் முன்னால் இருந்தன. அவன் பணம் சம்பாதிப்பதைத் தேர்வு செய்கிறான். புகழும் பணமும் கிடைத்துவிட்டால் போதும் என்று நினைக்கிறான். தனது குருவின் ஆணையை மீறி சினிமாவிற்குச் செல்கிறான்.

அவன் ஆசைப்பட்டது போலவே பெரும்புகழும் பணமும் சேர்கின்றன. திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மாறுகிறான். ஆனால் மனதிற்குள் தான் ஒரு தோற்றுப் போன நாடகக் கலைஞனாக உணருகிறான். தனிமையை அனுபவிக்கிறான்.

படத்தில் வரும் கனவுக் காட்சியில் குவியல் குவியலாகப் பணம் கொட்டிக்கிடக்கும் பணமேட்டினைக் காணுகிறோம். கரன்சி நோட்டுகள் காற்றில் பறக்கின்றன, பணக்குவியல் நடுவில் புன்னகையுடன் அரிந்தம் நடந்து செல்கிறான். ஆசையாகப் பணத்தை அள்ளிக் கொள்கிறான். காற்றில் வீசி மகிழ்கிறான்.

ஆனால் இந்தப் பணமேடு சட்டெனப் புதைமேடு போல மாறுகிறது. எலும்புக்கூடு கை ஒன்று தொலைபேசியை ஏந்தியிருக்கிறது. டெலிபோன் மணி விடாமல் ஒலிக்கிறது. எலும்புக்கைகள அவனை அழைக்கின்றன. புதைகுழி போலப் பணம் அவனை இழுத்துக் கொள்கிறது. விடுபடப் போராடுகிறான். ஆனால் பயனில்லை. பணம் அவனைச் சீராக விழுங்குகிறது.

அங்கே தோன்றும் குருவான சங்கர் தாவை நோக்கி தன்னைக் காப்பாற்றும்படி கதறுகிறான். அவர் உதவி செய்வதில்லை. வணிக வெற்றிக்காகத் தனது கலைத்திறனை விற்றுவிட்ட குற்ற உணர்ச்சியே அவனை விழுங்குகிறது. இந்தக் காட்சியைச் சர்ரியலிச ஓவியம் போல அழகாக ரே உருவாக்கியிருக்கிறார். அரிந்தம் அக் கனவிலிருந்து விழித்துக் கொள்ளும் போதும் நினைவிலிருந்து பயம் அகல மறுக்கிறது.

பெரும்புகழும் பணமும் இருந்தாலும் இயல்பாக உறக்கம் வராமல் அரிந்தம் தவிக்கிறான். தூக்கமாத்திரையின் உதவியால் தான் உறங்குகிறான். ஆயினும் நல்ல தூக்கம் கிடைப்பதில்லை. பயணத்திலும் அரிந்தம் குடிக்கிறான். தனது பிம்பம் கலைந்துவிடாமல் பாதுகாக்கிறான்.

ரயில் பயணத்தின் ஊடே அரிந்தம் அதிதி இருவருக்குமான நட்பு அழகாக வெளிப்படுகிறது. அவனது கடந்தகாலத்தை அதிதி நினைவுபடுத்துகிறாள். பயண வழியெங்கும் அரிந்தமைக் காண ரசிகர்கள் திரண்டிருப்பதைக் காணுகிறாள். அவன் திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் நடித்துக் கொண்டேயிருக்கிறான். கேமிரா இல்லாத அந்த நடிப்பைக் கண்டு அதிதி பரிதாபம் கொள்கிறாள்.

அரிந்தம் புகழ்வெளிச்சத்திலிருந்து விடுபட விரும்பதை உணருகிறாள். ஆனால் அது எளிதானதில்லை. ரயில் டெல்லியை அடைந்ததும் ரசிகர்கள் திரண்டுவந்து மாலை அணிவித்து அவனைக் கொண்டாடுகிறார்கள். அரிந்தம் மீண்டும் நட்சத்திரமாகி விடுகிறான்.

அரிந்தமின் கனவு அவனது இன்றைய வாழ்க்கையின் அடையாளம். தொலைபேசி மணியொலிப்பதும், எலும்புக்கைகள் நீளுவதும் அவனது இப்போதைய திரையுலக வாழ்க்கை.

அவன் சினிமாவிற்குள் நுழைந்த போது கதாநாயகனாக இருந்த நடிகர் தற்போது படம் எதுவும் கிடைக்காமல் கஷ்ட ஜீவனத்திலிருக்கிறார். குடிப்பதற்குப் பணம் வாங்க அரிந்தமைத் தேடி வருகிறார். அவரைத் தான் வென்றுவிட்டதை உணர்த்தும் விதமாகவே அவருக்குப் பணம் தருகிறான். அவரது வீழ்ச்சி அரிந்தமிற்கான மறைமுக எச்சரிக்கை போலவே உள்ளது.

அரிந்தம் ரயிலில் ஏறும் போது கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறான். அது பாதுகாப்பு உணர்வின் அடையாளம். அதிதியோடு உரையாடும் போது அந்தக் கண்ணாடியை அகற்றிவிடுகிறான். அவள் முன்பு இயல்பாக நடந்து கொள்கிறான். இயல்பாகப் பேசுகிறான். சின்னஞ்சிறு ரயில் நிலையத்தில் இறங்கி தேநீர் அருந்துகிறான். அவனது விடுபடல் அழகாக வெளிப்படுத்தபடுகிறது.

ரயில் பயணமும் நினைவின் பயணமும் இரு சரடுகளாகப் பின்னிச் செல்கின்றன. அரிந்தம் தனது கடந்தகாலத்தை உண்மையாக அதிதியிடம் விவரிக்கிறான் அதில் அவனது தவறுகள். ரகசியங்கள் வெளிப்படுகின்றன. மனம் திறந்து எல்லாவற்றையும் அதிதியிடம் பகிர்ந்து கொண்டதே போதும் என்று நினைக்கிறான். நிகழ்வுலகம் அவனை மீண்டும் நட்சத்திரமாக்கிவிடுகிறது. வெள்ளித்திரையின் கடவுளாக நடமாடத் துவங்குகிறான்.

1966ல் இப்படம் வெளியாகியிருக்கிறது. நட்சத்திரங்களுக்குப் பின்னால் இருக்கும் இருளை உலகம் கண்டுகொள்வதில்லை . அந்த இருளில் மறைந்திருக்கும் உண்மைகளையே சத்யஜித்ரே நமக்கு அடையாளம் காட்டுகிறார்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2023 22:52
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.