வேரும் விழுதும்
எழுத்தாளர் க.சுப்ரமணியன் கோவையைச் சேர்ந்தவர். பொருளாதாரம் படித்துப் பட்டம் பெற்று டெல்லியில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் பணியாற்றியவர். கலைமகள் இதழில் நிறையக் கதைகள் எழுதியிருக்கிறார் இவரது வேரும் விழும் நாவலை வாசகர் வட்டம் 1970ல் வெளியிட்டிருக்கிறது.

இந்த நாவலை எட்டு ஆண்டுகள் எழுதியிருக்கிறார். எவரும் இதனை வெளியிட முன்வரவில்லை. தி. ஜானகிராமனின் நண்பராக இருந்தவர் சுப்ரமணியன். ஜானகிராமன் இதனைப் படித்துப் பாராட்டி வாசகர் வட்டம் மூலம் நாவலை வெளியிடச் செய்திருக்கிறார். இந்த ஒரே ஒரு நாவலை மட்டுமே சுப்ரமணியன் எழுதியிருக்கிறார்.

நாவலின் துவக்கத்தில் ஒரு மரமும் நதியும் பேசிக் கொள்கின்றன. கவித்துவமான உரையாடலது. அந்த உரையாடலிலே சுப்ரமணியன் வாழ்வின் நிலையாமையைப் பற்றிப் பேசுகிறார். திடீரென ஏற்பட்ட பூகம்பம் காரணமாக நதியின் போக்கு மாறிவிடுகிறது. மரம் விழுந்து வெறும் கட்டையாகிவிடுகிறது. மரமும் நதியும் மனிதர்களைப் பற்றித் தான் பேசிக் கொள்கின்றன. தங்கள் வாழ்க்கையை விடவும் மனிதர்களின் மீது தான் அவற்றிற்கு ஈடுபாடு அதிகம்.
வேர் இல்லாவிட்டால் விழுதுகள் இல்லை என்று பீடிகையில் சுப்ரமணியன் குறிப்பிடுகிறார். பிறப்பும் இறப்பும் குறியீடாக மாறுகிறது.
கதையின் நாயகன் ஒரு என்ஜினியர். அதுவும் நதி நீரை தடுத்து அணை கட்ட முயலும் என்ஜினியர். நதியின் போக்கை தன்னால் மாற்றவும் தடுக்கவும் முடியும் என்று நினைப்பவர். ஆனால் அவர் நினைத்தபடி நடக்க முடிகிறதா என்ற கேள்வியை நாவல் எழுப்புகிறது.
காலத்தின் விசித்திர நகர்வை யார் அறிய முடியும். எதிர்பாராமையின் கைகள் உருட்டும் பகடை தான் நாவல் என்பது போலவே பீடிகை எழுதப்பட்டிருக்கிறது.
சிறுநகரவாசியின் கதையை விவரிக்கும் இந்த நாவலின் முதல் பகுதி இப்படி ஆரம்பிக்கிறது
நான் கிராமத்தில் பிறந்தவன் அல்ல. கிராமவாழ்க்கையின் இனிமையைப் பற்றி ஆசிரியர்கள் எழுதுவதெல்லாம் மிகைப்படுத்தபட்ட பொய்கள் என்று சொல்லமாட்டேன். ஆனால் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எப்பொழுதும் எனக்குண்டு
இந்திய மொழிகளில் கிராமத்து வாழ்க்கையை வியந்தோதும் நாவல்கள் ஐம்பது அறுபதுகளில் நிறைய வெளியாகின. நகர வாழ்க்கை என்பதே ஏமாற்று. மோசடிகளின் உலகம் என்பது போன்ற பொதுபார்வையும் அன்றிருந்தது. அதற்கு மாற்றகவே இப்படி நாவலை துவக்குகிறார் சுப்ரமணியன்.
சிறுநகர வாழ்க்கை தமிழில் அதிகம் எழுதப்படவில்லை. இவ்வளவிற்கும் நிறையச் சிறுநகரங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அதற்கெனத் தனித்துவமான வாழ்க்கையும் வேகமும் இருக்கின்றன. அவை முழுமையாக இலக்கியத்தில் பதிவு செய்யப்படவில்லை.
வாழ்க்கையில் அநேகமாக அதே முகங்களைத் தான் திரும்பத் திரும்பக்காண்கிறோம், அதே காரியத்தைத் தான் மீண்டும் மீண்டும் செய்கிறோம். ஆனால் அதைச் செய்யும் போது நாம் அலுத்துப் போவது கிடையாது. ஒரு மூலையில் உட்கார்ந்து அவற்றைப் பற்றி நினைத்தால் தான் அலுப்புத் தட்டுகிறது.
என்கிறார் சுப்ரமணியன். உண்மை. புதிய முகங்கள். புதிய அனுபவங்களைப் பெரும்பான்மையினர் விரும்புவதில்லை. பயணத்தின் மீதான பயத்திற்கு இது ஒரு முக்கியக் காரணம்.
எனக்குத் தெரிந்த ஒருவர் லண்டனில் பத்து ஆண்டுகள் பணியாற்றினார். அத்தனை வருஷங்களிலும் அவர் தனது வீடு அலுவலகம் நாலைந்து வீதிகள் இவற்றைத் தாண்டி எதையும் பார்க்கவில்லை. எவரோடும் நட்பாகப் பழகவில்லை. கிராமத்தில் இருந்தால் சிறிய வட்டத்திற்குள் வாழ்க்கை அடங்கிவிடும் என்பார்கள். பெரிய நகரில் வசித்தாலும் இப்படிச் சிறிய வட்டத்திற்குள் வாழுகிறவர்கள் அதிகமிருக்கிறார்கள். பாதுகாப்பான தனது சொந்தஉலகை விட்டு வெளியே செல்லவும் பழகவும் தயக்கமும் பயமும் காரணம்.
நாவலின் நாயகன் அரசாங்க அலுவலகத்தில் என்ஜினியராகப் பணியாற்றுகிறான். அதுவும் அணைக்கட்டு மராமத்துப் பணியில். பரலியாற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் என்று அரசு முடிவு செய்கிறது. இப்படி அணைகட்டினால் அதற்காக 150 கிராமங்கள் காலி செய்யப்பட வேண்டியது வரும். மேக்கூர் அணைத் திட்டத்தை நிறைவேற்ற இரண்டு வருஷமாகும். மூன்று கோடி செலவாகும் என்று மதிப்பிடுகிறார்கள். ஆனால் இத்தனை கிராமங்களை அழித்து அணை கட்டப்பட வேண்டுமா என்ற குற்றவுணர்வு நாயகனுக்கு ஏற்படுகிறது. அது அரசாங்க திட்டம் என்றாலும் அறிந்தே தான் இதற்கு உடந்தையாக இருக்க வேண்டுமா என்று யோசிக்கிறார்.
பரலியாற்றின் அழகினையும் ஆற்றுப்பாசன கிராமங்களின் வளத்தையும் சிறப்பாக எழுதியிருக்கிறார். குழுமணி ரயில் நிலையமும் ஸ்டேஷன் மாஸ்டர் ராயரும், ரயில் நிலையத்திற்கு போகும் பாதையும் கண்முன்னே விரியும்படியாக அபூர்வமான அழகுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
தெருவில் சினிமா வண்டி செல்வதைப் பற்றிச் சுப்ரமணியன் நாவலின் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். சினிமா விளம்பரத்திற்காக வீதிவீதியாகச் செல்லும் அந்த வண்டியில் நோட்டிஸ் கொடுப்பார்கள். அந்த வண்டியின் பின்னால் சிறுவர்கள் கூட்டமாகச் செல்வது வழக்கம். இன்று அந்தச் சினிமா வண்டியில்லை. சினிமா பேனர் வரையும் அபூர்வமான ஒவியர்கள் காலத்தின் சுழலில் மறைந்துவிட்டார்கள்.
நாவலின் நாயகன் இரவில் வரும் குடுகுடுப்பாண்டியை ஒரு முறை பகலில் கடைத்தெருவில் வைத்து பார்க்கிறார். குடுகுடுப்பைக்காரன் பற்றி இருந்த பயம் அந்த நொடியில் மறைந்து போகிறது,
சாமி மாடு கொண்டு வருபவனின் மாடு ஏன் எப்போதும் குள்ளமாக இருக்கிறது என்று ஒரு இடத்தில் கேட்கிறார் நானும் சாமி மாட்டினைப் பார்க்கும் போது இப்படி நினைத்திருக்கிறேன்.. சாமி மாட்டின் கழுத்திலுள்ள மணி. கழுத்தைச் சுற்றியுள்ள பழைய துணிகள். அந்த மாடு தலையாட்டும் விதம் என அந்தக் காட்சியை நாலைந்து வரிகளுக்குள் அழகான சித்திரமாக வரைந்திருக்கிறார்..
சோப்புசீப்பு விற்பவன். பிளாஸ்டிக் பொருள் விற்பவன். குரங்காட்டி, கரடி வித்தைகாட்டுகிறவன். பழைய காலக் கடிகாரம் வைத்துள்ள முதியவர், காய்கறிகாரனிடம் பேரம் பேசும் கிழவி. பேருந்து பயணிகளின் இயல்பான உரையாடல்கள். குழுமணி என்ற தனது சொந்த ஊருக்குச் செல்லும் பயணம் என அந்தக் காலம் கண்முன்னே கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து அந்த உலகிற்குள் நாம் நடமாடத் துவங்கிவிடுகிறோம்.
குழுமணியில் பெரியப்பா ஊர்மக்களை அழைத்து வந்த தனது அண்ணன் மகன் பெருமைகளைச் சொல்லும் காட்சியும், சீப் என்ஜினியருடன் நடக்கும் உரையாடலும், மந்திரியோடு நடக்கும் ஆலோசனைக் கூட்டமும் மிக இயல்பாக எழுதப்பட்டிருக்கிறது.
தன்னைச் சுற்றிய வாழ்க்கையின் வேகத்தையும் அதைத் துரத்தியோடும் மனிதர்களையும். சிலரது போலித்தனமான வாழ்க்கையினையும் காணும் நாயகன் தான் அவற்றிலிருந்து வேறுபட்டவன் என்பதை உணர்த்தியபடியே இருக்கிறான்.
சுப்ரமணியனின் கதை சொல்லும் விதம் மற்றும் அவரது மொழி சிறப்பானது. நாவலின் ஊடாக வந்து போகும் அத்தனை சிறுகதாபாத்திரங்களும் முழுமையானவர்களாக எழுதப்பட்டிருக்கிறார்கள்.. தனித்துவம் கொண்டிருக்கிறார்கள். நாவல் முழுவதும் கதை சொல்லி நம்மை அருகில் அமரவைத்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார்.
கடந்தகாலத்தின் மீது எந்தச் சாய்மானமும் இல்லாமல் நிகழ்கால வாழ்வில் காலூன்றியபடி வாழ்வை விசாரணை செய்யும் இந்த நாவல் தமிழ் நாவல் வரலாற்றில் தனித்துவமானது.
இந்த நாவலை சிறுவாணி வாசகர் வட்டம் அழகாக மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளது.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
