சந்தோஷத்தின் பெயரால்

Wang Xuebo இயக்கிய KNIFE IN THE CLEAR WATER  2016ல் வெளியானது. ஷி ஷுகிங்கின் நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

சீனாவின் வடமேற்கு நிங்சியா மாகாணத்திலுள்ள சிறிய கிராமம். அங்குள்ள விவசாயி மா ஜிஷானின் மனைவி இறந்துவிடுகிறாள். அவருக்கான இறுதி நிகழ்வில் படம் துவங்குகிறது. இறுதி ஊர்வலத்தில் மா ஜிஷான் தனியே அமைதியாக நடந்து செல்கிறார்.  தனது துயரை அவர் வெளிக்காட்டுவதில்லை.

இறந்த மனைவிற்கான நாற்பதாம் நாள் சடங்கில் அவர்களின் எருதைப் பலி கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கிறார்கள். இந்த ஆசை அவரது மகன் யெல் குபாவிடமிருந்து பிறக்கிறது. ஆனால் மா ஜிஷானுக்கு எருதைப் பலி கொடுப்பதில் விருப்பமில்லை

அவர் எருதைத் தனது மகனைப் போல வளர்த்து வருகிறார். மகனின் ஆசையும் இமாமின் விருப்பமும் எருதைப் பலி கொடுப்பது என்று உறுதியானதும் வேறுவழியின்றி மாஜிஷான் ஏற்றுக் கொள்கிறார்.  அந்த முடிவு எல்லோரையும் சந்தோஷப்படுத்துகிறது. ஆனால் அவர் குற்றவுணர்வில் அலைக்கழிக்கபடுகிறார்.

தன்னைப் பலி கொடுக்கப் போகிறார்கள் என்று உணர்ந்து கொண்டது போல எருது திடீரென உண்பதை நிறுத்திவிடுகிறது. இது மா ஜிஷானுக்குள் குற்றவுணர்வை அதிகரிக்கிறது. ஒரு ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்த இன்னொரு ஆன்மாவை இழக்க வேண்டுமா என்ற கேள்வி அவருக்குள் எழுகிறது.

படத்தின் ஒரு காட்சியில் தனது மனைவி வாங்கிய கடனை திரும்பக் கொடுக்க நண்பரின் வீட்டிற்குச் செல்கிறார் மா ஜிஷான் . அங்கே நண்பர் கால் எலும்பு முறிந்த நிலையில் படுக்கையில் கிடக்கிறார். வீட்டின் வறுமையான சூழலைப் பற்றி நண்பரின் மனைவி கவலையோடு சொல்கிறார்.

தனது மனைவி கைமாற்றாக வாங்கிய பணத்தை அவளிடம் தருகிறார். வீட்டுக் கஷ்டத்திற்கு அந்தப் பணம் பெரிதும் உதவும் என அதை ஏற்றுக் கொள்கிறாள். அத்தோடு மா ஜிஷானின் மனைவி எப்போது அப் பணத்தை கடன் வாங்கினார் என்று பழைய சம்பவம் ஒன்றை விவரிக்கிறார். அது அழகான சிறுகதை போலச் சொல்லப்படுகிறது. இறந்தவர்கள் உலகிலிருந்து மறைந்துவிட்டாலும் சிலரது நினைவில் என்றும் அழியாத சித்திரமாகத் தங்கிவிடுகிறார்கள். அதை மா ஜிஷான் நன்றாக உணருகிறார்.

இரவில் அவர்களின் வீடு தேடி வரும் இமாமிற்கு மா ஜிஷான் உணவளிக்கும் காட்சி அழகானது. அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் விதமும் அவர்களுக்குள் உள்ள நட்பும் அழகாக வெளிப்படுத்தபடுகிறது.

எருதுக்கு வயதாகிவிட்டது. அதனால் இனி பிரயோசனமில்லை ஆகவே பலி கொடுத்துவிடுவோம் என்று மகன் வாதிடுகிறான். அது உண்மையில்லை. எருதால் இன்னமும் வேலை செய்ய முடியும் என்கிறார் மா ஜிஷான். தந்தையின் விருப்பம் இருந்தால் மட்டுமே அதைப் பலி கொடுப்போம் என்று முடிவை அவர் வசம் தள்ளுகிறான் மகன். அவரால் மறுக்க முடியவில்லை. சம்மதிக்கிறார். ஆனால் அவர் மனைவி உயிரோடு இருந்திருந்தால் இப்படி எருதை பலி கொடுக்க சம்மதித்து இருக்க மாட்டாள் என்று அவருக்கு நன்றாகப் புரிகிறது. ஆனால் சந்தோஷத்தின் பெயரில் நாம் அறிந்தே தவறு செய்கிறோம் என உணர்கிறோம்.

வாழ்க்கை ஒன்றைப் பறித்தவுடன் நேசிக்கும் இன்னொன்றையும் ஏன் பறிக்க முற்படுகிறது துயரத்தின் அளவு நீளும் போது நாம் நிலை குலைந்து விடுகிறோம். கத்தி தானே எவரையும் கொல்வதில்லை. அதை பயன்படுத்தும் மனிதனே கத்தியை ஆயுதமாக்குகிறான். கொலை புரிகிறான். தெளிந்த நீருக்குள் கிடக்கும் கத்தி ஒரு குறியீடு. நீருக்குள் அமிழ்ந்திருக்கும் கூழாங்கல் போல கத்தி அத்தனை அழகாக இருக்கிறது. ஆனால் அது கொலைக்கருவியாகும் போது விழித்துக் கொள்கிறது.

படத்தின் இயக்குநர் வாங் ஜிபோ ரஷ்ய இயக்குநர் தார்க்கோவெஸ்கியின் பாணியில் படத்தை உருவாக்கியுள்ளார். நிலக்காட்சிகள் கதாபாத்திரங்களின் மனநிலையின் வெளிவடிவமாக விரிவு கொள்கின்றன. இரவுக்காட்சிகள் மிக நேர்த்தியான அழகுடன் படமாக்கபட்டுள்ளன.

நான்கே முக்கியக் கதாபாத்திரங்கள், விரிந்து பரந்த அழகிய நிலவெளி. ஹுய் முஸ்லிம்களின் வாழ்க்கை முறை, மையப்பிரச்சனையை விட்டு விலகாத திரைக்கதை என அழகான திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

ஊரில் இருந்து விவசாயத்தைத் தொடருவதா அல்லது நகரத்திற்குப் பிழைப்பு தேடி போய்விடுவதா என்ற கேள்வி படத்தின் அடிநாதமாக ஒலிக்கிறது.

மா ஜிஷான் துவக்க காட்சியிலிருந்தே மிகவும் நிதானமாக நடந்து கொள்கிறார். மனைவியின் கல்லறையில் படிந்துள்ள தூசிகளை அவர் துடைக்கும் விதம். மனக்குழப்பத்திலிருந்து விடுபடப் பிரார்த்தனை செய்யும் பாங்கு. எருதை எதிர்கொள்ளும் போதெல்லாம் அவரது கண்களில் வெளிப்படும் குற்றவுணர்வு. வீட்டில் குளிக்கும் காட்சியில் கூட அவர் காட்டும் நிதானம் கவனிக்க வேண்டியது.

எருதைக் கொல்வதா, வேண்டாமா என்ற பிரச்சனையைப் பேச முற்படும் திரைப்படம் நாம் நினைவுகளால் வழிநடத்தப்படுகிறோம் என்பதையும், வாழ்வின் நிலையாமையைப் பற்றியும் பேசத் துவங்குகிறது. அதுவே படத்திற்குத் தனியழகை உருவாக்குகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2023 02:16
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.