அமைதியற்ற நிழல்
Land and Shade படம் பார்த்து முடியும் போது நம் உடல் முழுவதும் எரிக்கப்பட்ட கரும்பு வயலின் தூசியும் சாம்பலும் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல உணருகிறோம். அவ்வளவு நெருக்கமான உணர்வைப் படம் ஏற்படுத்துகிறது. கொலம்பியாவைச் சேர்ந்த இப்படத்தைச் சீசர் அகஸ்டோ அசெவெடோ இயக்கியிருக்கிறார். 2015ல் வெளியானது. சிறந்த ஒளிப்பதிவிற்கான கேன்ஸ் விருதைப் பெற்றுள்ளது,

படத்தின் முதல் காட்சியில் அல்போன்சா கரும்புத் தோட்டத்தின் நடுவே நடந்து வருகிறார். பெரிய டிரக் ஒன்று மண் சாலையில் வேகமாக அவரைக் கடந்து போகிறது. ஒதுங்கி வழிவிடுகிறார். அந்த வாகனத்தால் எழும் தூசி மேகம் போல எழுந்து அவரது உடல் முழுவதும் படிகிறது. படம் முழுவதும் கரும்புத்தூசி குறியீடு போலவே சித்தரிக்கப்படுகிறது.
Land and Shade கொலம்பிய கரும்புத் தோட்ட வாழ்க்கையைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளது. குறிப்பாகத் தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவை மிக அழகாக வெளிப்படுத்துகிறது. பேரனின் ஆசையை நிறைவேற்ற தாத்தா மேற்கொள்ளும் முயற்சிகள் சிறப்பானவை.

ஐந்தே முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களின் வாழ்விடமான கரும்புத் தோட்டம். ஒற்றை வீடு. அதன் முன்னுள்ள பெரிய மரம். சிமெண்ட் பெஞ்ச். வீட்டின் மூடிய ஜன்னல்கள். தூசி படிந்த இலைகள் கொண்ட செடிகள். அல்போன்சோ ஒரு மீட்பனைப் போலவே வருகை தருகிறார்.
குடும்பம் தன்னை ஏற்றுக் கொள்ளாது என அறிந்தும் மகனது நிலையைக் கணக்கில் கொண்டு பதினேழு வருடங்கள் கழித்து வீடு திரும்புகிறார், அவருடைய மகன் ஜெரார்டோ சுவாசக் கோளாறு காரணமாகப் படுக்கையில் கிடக்கிறான். ஜெரார்டோவின் மனைவி எஸ்பெரான்சா கரும்புத் தோட்டக் கூலியாக வேலை செய்கிறாள்.
அல்போன்சோவின் மனைவி அலிசியா அவருடன் பேசுவதில்லை.வீட்டை விட்டு ஓடிய மனிதர் என அவரை வெறுத்து ஒதுக்குகிறாள். பேரனுடன் நெருக்கமாகும் அல்போன்சோ அவனைக் கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்கிறார். தன்னால் முடிந்த சிறிய உதவிகளைச் செய்கிறார்.
கரும்பு வயலுக்கு நடுவில் உள்ள அவரது வீடும். அதன் முன்புள்ள மரமும் மண்சாலையும் கனவில் காணும் சித்திரம் போல விநோத தோற்றம் தருகின்றன.

கரும்பு வயல் எரிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்தான சாம்பல் நுரையீரலை நிரப்புவதைத் தடுக்க, படுக்கையறையின் ஜன்னல்கள் எப்போதும் மூடி வைக்கப்பட்டிருக்கின்றன. அவன் நோயிலிருந்து மீள முடியாத சிரமத்தில் தவிக்கிறான். வீடு திரும்பிய அல்போன்சா ஜன்னலைத் திறக்கிறார். அவரால் அந்தக் குடும்பத்தில் மாற்றம் உருவாகப்போகிறது என்பதன் அடையாளம் போலிருக்கிறது.
அன்றாடம் கரும்புத் தோட்ட வேலைக்காக ஆட்கள் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அவர்களின் விநோதமான தோற்றம். கரும்பினை வேக வேகமாக அறுத்துத் தள்ளும் விதம், ஏமாற்றும் முதலாளி என அந்த வாழ்க்கை கண்முன்னே விரிகிறது.
கரும்புத் தோட்ட பணியாளர்களுக்கு முறையாகக் கூலி தரப்படுவதில்லை. அவர்கள் போராட்டம் செய்கிறார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டால் முதலாளி தனக்குரிய சம்பளத்தைத் தராமல் போய்விடுவாரோ என எஸ்பெரான்சா பயப்படுகிறாள். கணவனின் உடல்நிலை குறித்த கவலை அவள் முகத்தில் படிந்திருக்கிறது.

கரும்புத் தோட்டம் எரிக்கப்படுவது போலவே அவர்கள் வாழ்வும் கண்முன்னே அழிந்து கொண்டு வருகிறது. தாயிற்கும் மகனுக்குமான அன்பு ஒரு தளத்திலும் பேரனுக்கும் தாத்தாவிற்குமான உறவு வேறுதளத்திலும் ஒன்று போல இணைவு கொள்கின்றன.
அபாரமான ஒளிப்பதிவு படத்தின் தனிச்சிறப்பு. மிகக் குறைவான கேமரா அசைவுகளுடன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அல்போன்சோ தனது பேரனுக்குப் பட்டம் பறக்கக் கற்றுக்கொடுக்கும் ஷாட் மிகவும் அழகானது.

அல்போன்சோவை அவரது மனைவி ஏற்றுக் கொள்ளும் இறுதிக்காட்சி உணர்ச்சிப்பூர்வமானது. படத்தின் சில காட்சிகள் டெரன்ஸ் மாலிக்கின் “டேஸ் ஆஃப் ஹெவன்” யை நினைவுபடுத்துகின்றன.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

