எஸ்.ரா கதைகள் -நூறு
எஸ் ரா கதைகள் -நூறு என எனது சிறுகதைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இணைய வழியாக நடைபெற்ற இந்த அறிமுக உரைகள் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளன. ‘
இதுவரை நூறு சிறுகதைகளுக்கும் மேலாகவே அறிமுகவுரை நிகழ்த்தியுள்ளார்கள். தமிழ்ப் பேராசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள். எழுத்தாளர்கள் துவங்கி பள்ளி மாணவி வரை இதில் பங்கு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெரிய பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து நடத்த வேண்டிய நிகழ்வை அஞ்சிறைத்தும்பி இலக்கிய அமைப்பின் வழியே நடத்திக் காட்டி சாதனை புரிந்துள்ளார் பேராசிரியர் வினோத். அவருக்கும் அஞ்சிறைத் தும்பி இலக்கிய வட்டம் அமைப்பிற்கும், நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துக்களும்.
இப்படி ஒரு நிகழ்வு இதுவரை எந்தப் படைப்பாளிக்கும் நடந்ததில்லை. அதுவும் நூறு சிறுகதைகளை வாசகர்களே தேர்வு செய்து அறிமுகம் செய்வது பாராட்டிற்குரிய செயல். எனது முதல் சிறுகதைத்தொகுப்பிலிருந்து சமீபத்திய சிறுகதைத் தொகுப்பு வரை வாசித்து சிறந்த கதைகளைத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது மிகுந்த சந்தோஷம் அளிக்கிறது.
சிறுகதை படிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று பொதுவெளியில் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அது பொய் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்திருக்கிறது.
நல்ல சிறுகதைகளைத் தேடிப்படிப்பதோடு அதை சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைக்கிறார்கள் என்பது மிகுந்த நம்பிக்கைக் குரிய செயல்பாடு. இந்த நிகழ்வில் தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் அதிகம் கலந்து கொண்டு உரையாற்றி யிருக்கிறார்கள். நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையே அது வெளிப்படுத்துகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
இந்த உரைகள் யாவும் முறையாகத் தொகுக்கப்பட்டு யூடியூப் சேனலில் தனிவரிசையாக வெளியிடப்படும்.
இன்று மாலை இணைய வழியே நடைபெறும் நிகழ்வின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

Topic: எஸ்.ரா கதைகள் -100
Time : 4pm
Join Zoom Meetinghttps://us04web.zoom.us/j/74619738004?pwd=EiAaxrgfwgNGkbxh5FbaLDjlAW3NVR.1
Meeting ID: 746 1973 8004 Passcode: 5Qu0uT
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 659 followers
