அவனது மௌனமும் அவளது மௌனமும்
புதிய குறுங்கதை
புத்தக வாசிப்பும் அது பற்றிய பேச்சுமே அவர்களுக்குள் காதலை உருவாக்கியது. ஆசை ஆசையாகப் புத்தகங்களைப் பரிசளித்துக் கொண்டார்கள். பின்பு அவர்களுக்குத் திருமணமானது. மணவாழ்க்கையை துவங்கிய புதிதில் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
தாங்கள் வாங்கும் புதிய புத்தகத்தின் முதல் பக்கத்தை அவன் படித்தால் அவள் இரண்டாவது பக்கத்தைச் சப்தமாகப் படிக்க வேண்டும். இப்படி ஒரே புத்தகத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டார்கள்.
இருவருக்கும் விருப்பமான நாவல் ஒன்றை வாங்கினார்கள். அதன் ஒற்றைப் படையான பக்கங்களை அவனும் இரட்டைப்படையான பக்கங்களை அவளுமாகச் சேர்ந்து படித்தார்கள். இருவரால் படிக்கப்படும் போது புத்தகம் இறகுப்பந்தாட்டம் போலாகி விடுகிறது. அல்லது இருவரால் எழுதப்பட்டது போலாகிறது.

சில மாதங்களில் அவர்களின் திருமண வாழ்வில் சிறிய சண்டைகளும் கோபதாபங்களும் உருவாகின. இதைப் போக்கிக் கொள்ளப் புதிய ஊர்களுக்குப் பயணம் செய்தார்கள். நிறைய சினிமா பார்த்தார்கள். விதவிதமான உணவு வகைகளை ருசித்தார்கள். அப்படியும் சேர்ந்து படிப்பது போன்ற நெருக்கத்தை வேறு எதிலும் உணரவில்லை.
அவனுக்குக் கோபம் வந்த நாளில், நாவலின் ஒற்றைப்படையான பக்கத்தைப் படிக்க மறுத்தான். அவள் தனியே இரட்டைப் படையான பக்கத்தை வாசித்தாள். கதையின் விடுபடல் மனதை உறுத்தியது. ஆனாலும் முந்தைய பக்கத்தைப் படிக்க விரும்பவில்லை
இது போல அவளுக்குச் சலிப்பூட்டிய நாளில் தனது பக்கத்தை உரத்து வாசிக்காமல் மௌனமாக மனதிற்குள் படித்தாள். அவளது மௌனத்தை ஏற்றுக் கொண்டவன் போல அவனும் மௌனமாக வாசித்தான். இரண்டு மௌனங்கள் ஒன்று சேரும் போது அது பெரிய மௌனமாகுமா. அல்லது எடை மிகுந்துவிடுமா. அவனது மௌனமும் அவளது மௌனமும் ஒன்றா என்ன.
ஒரு நாள் அவன் வேண்டுமென்றே நாவலின் பக்க எண்களைப் பேனாவால் அடித்துத் திருத்தினான். இப்போது நான்காம் பக்கம் ஐந்தாம் பக்கமானது.. அதன்படி அவளது பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டான்.
அதை ஏற்காத அவள் தனது பக்கங்களுக்கு எல்லாம் ஆரஞ்சு வண்ணத்தில் வட்டமிட்டாள்.
அவன் தனது பக்கங்களுக்குக் கீழே தனது கையால் எழுதி சிறிய துண்டு காகிதம் ஒன்றை ஒட்டினான். அவள் தனது பக்கங்களில் உள்ள வினைச் சொற்கள் யாவையும் நீக்கினாள்.
அவன் தனது பக்கத்தில் ஒரு நாயின் படத்தை வரைந்தான். அவள் தனது பக்கத்தில் ஒரு பறவையின் படத்தை வரைந்தாள். நாயும் பறவையும் ஸ்நேகமாகவே நடந்து கொண்டன.
பின்பு ஒரு இரவு அவன் நாவலின் ஒற்றைப்படையான பக்கங்களைக் கிழித்து எறிந்தான். இரட்டைப் படையான பக்கங்கள் மட்டுமே கொண்ட அந்த நாவலை தனக்கான முழு நாவலாக அவள் வைத்துக் கொண்டாள். பின்பு அவர்கள் சேர்ந்து படிக்கவில்லை.
ஆனால் சில வாரங்களில் அவள் கர்ப்பம் தரித்தாள். பின்பு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் . அவர்கள் மகிழ்ச்சியாக முடியும் நாவலைப் வாழத் துவங்கினார்கள்.
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
