Shape Shifter enters the scene – Novel Thinai alladhu Sanjeevni

from chapter 27

மேசை மேல் தலையில்லாத குழலனின் உடல் அசைந்து கொண்டிருக்க தலை அறையை தரையிலிருந்து மூன்றடி உயரத்தில் சுற்றி வந்து கொண்டிருந்தது.

அக்ரெலிக் பெயிண்ட் வாடை தூக்கலாக வந்து கொண்டிருந்த இடம் அது. எந்தத் தலைமுறையிலோ அக்ரெலிக் வண்ணம் தேள்க் கூட்டத்துக்கு ஒவ்வாமை தருவதாக குணம் கொண்டிருந்தது. தேளர்கள் நடமாட்டத்தைக் கிட்டத்தட்ட அறவே இல்லாமல் செய்யச் சுவர்களை தினமும் அக்ரலிக் வண்ணமடித்து அந்த வாடை நீங்காமலும் குறையாமலும் கவனம் வைத்திருப்பது வழக்கம்.

குயிலியின் நாசியில் பலமாக அறைவதாக வண்ணத்தின் நெடி இருந்தது. வானம்பாடி பேப்பர் நாப்கின்னை முகத்தைச் சுற்றி வைத்து செலபோன் டேப் வைத்து ஒட்டியிருந்தாள்.

குழலன் உடல் குயிலியின் கையைப் பிடித்து அவள் உள்ளங்கையில் தன் விரல் கொண்டு எழுத, தனியாகப் பறந்த அவன் தலை ஜன்னலுக்கு வெளியே அசைவு இருக்கிறதா எனக் கண்காணித்தபடி நிலையாக மிதந்தது.

மூன்று பேரும் மனதில் பேசிக் கொண்டிருந்தார்கள். அது பின்வருமாறு

– பெருந்தேளரின் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் சஞ்சீவினியையும் நீலனையும் கோகர்மலைப் பிரதேசத்தில் ஜாக்கிரதையாக நிலைநிறுத்தியது, அதன் மூலம் பெருந்தேளரசுக்கு குடிமக்களிடையே ஆதரவு அதிகப்படுத்தத்தான்.

இந்தச் செயலால் அவருக்கு ஏற்கனவே இருந்த ஆதரவு அதிகப்படவில்லை என்று குழலன் கணித்திருந்தான். சிறு பறவைகளாகச் சிறிது நேரம் வடிவெடுக்க முடியும் குழலனுக்கு. ஷேப் ஷிப்டிங் என்ற உருமாற்றமடையும் ஆற்றல் இயல்பிலேயே அவனுக்கு உண்டு. நிரந்தரமாக இன்னொரு தேளாக அல்லது முழு மானுடனாக உருமாற்ற முடியாதே தவிர வேறே எந்த ஜீவராசியாகவும், கொம்பன் ஆனையாகக் கூட அவன் உருவம் மாறி பத்து நிமிட நேரம் அப்படியே செயல்படுவான்.

அதே போல் ஒரு குழலன் மாறி ஒரு குருவி அல்லது ஒரு சிலந்தி வரும் என்றில்லை. ஒன்று பலவாக ஒரு குழலன் அதிகபட்சம் எட்டு அணில்களாக, எட்டு கொக்குகளாக உருமாறித் திரும்ப குழலனாக முடியும். ஆணாக மாறவேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. பெண்பாலாக, நடுப் பாலாகவும் மாற வல்லமை உடையவன் அவன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 18, 2023 04:32
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.