மிளகு பெருநாவலில் இருந்து ஒரு பயணம்

கொச்சி நெடும்பாஸ்ஸேரி விமான நிலையம் நீங்கி மங்களூர் செல்லும் விமானம் குறிப்பிட்ட நேரமான காலை ஆறு மணிக்குப் புறப்படத் தயாராக இருந்தது. நாலு மணி நேரம் எடுக்கும் நீண்ட பயணம் இது.

விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை என்பதாலோ என்னவோ அந்தச் சிறு விமானத்திலும் வெற்று இருக்கைகள் நிறைய இருந்தன.

ஜெயம்மா மங்களூருக்கு வரச்சொல்லிக் கையோடு அழைத்துப் போகும் வசந்தியும் சங்கரனும் தவிர தெரிசாவும் அவர்களோடு இருந்தாள். தெரிசாவும் கூட இருப்பது சங்கரனுக்கு ஏதாவது ஒரு விதத்தில் அனுகூலமாக இருக்கும் என்று ஜெயம்மா கருதியது தவிர இன்னும் ஒரு திடமான காரணமும் இருந்தது.

இத்தனை வருடம் மேற்குக் கடற்கரையில் ஆலப்புழை – அம்பலப்புழையில் இருந்தாலும் தெரிசா மங்கலாபுரம் என்ற மங்களூர் போனதே இல்லை என்பது அது.

ஜெயம்மாவிடம் தெரிசா அவள் பெயருக்கு முன்னொட்டாக வரும் பிடார் என்ற பிதார் பற்றி விசாரித்தபோது பலபேர் அதை பிடாரி என்று சொல்கிறார்கள் என்று சந்தோஷத்தோடு குறிப்பிட்டாள். பிறகு, “கர்னாடகத்தின் மலைப் பிரதேசமாக மகாராஷ்டிரத்துக்கும் தெலுங்கானாவுக்கும் அருகில் இருக்கும் எல்லைப்புற மாவட்டத் தலைநகர்” என்றாள் ஜெயம்மா.

வசந்தி கையை இறுக்கமாகப் பிடித்தபடி சங்கரன் இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்திருந்தார். சீட் பெல்ட்டைப் போட்டுக்கொள்ள முடியாது என்று குழந்தை மாதிரி பிடிவாதம். விமானத்துக்குள் ஓட வேண்டியிருந்தது என்றால் இப்படிக் கட்டிப் போட்டபின் செய்ய முடியாது என்பது அவர் வாதம்.

‘உயிர் முக்கியமில்லியா’ என்று தெரிசாவிடம் யாரோ மூன்றாம் மனுஷியிடம் விசாரிப்பது போல் கேட்டபோது அவர் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும், எல்லாவற்றையும் மறந்து விட்டிருந்தார் என்று தோன்றியது.

அவ்வப்போது இப்படி தன்னை இழந்து விடுகிறார் என்று வசந்தி தெரிசாவிடமும் ஜெயம்மாளிடமும் சொன்னாள்.

“மூச்சா வந்தா வாயைத் திறந்து சொல்லுங்கோ. இப்போ போய்ட்டு வந்துடறேளா?”

“மாட்டேன், வரலே” என்று சீட்டில் உட்கார்ந்து முன் சீட் முதுகில் செருகி இருந்த நேற்றைய பத்திரிகையைப் பிரித்தார் சங்கரன். “ஜிலேபி ஜிலேபியா போட்டிருக்கு” என்று அந்த மலையாளப் பத்திரிகையைத் திருப்பி வைத்தார் உடனே. தெரிசாவும் வசந்தியும் சிரிக்க, அட என் சமத்துக் கொடமே என்றாள் ஜெயம்மா.

“ஜெயம்மா, என் முதல் ப்ளேன் பிரயாணத்துக்கு டெல்லி சப்தர்ஜங் ஏர்போர்டுலே நீங்க தான் கொண்டு வந்து விட்டுட்டுப் போனேள். ஓர்மையுண்டோ?” என்று விசாரித்தாள் வசந்தி.

”ஓ, நன்னாவே இருக்கு. நேற்றைக்கு, கிட்டத்தட்ட முப்பத்தைஞ்சு வருஷத்துக்கு அப்புறம் அன்னிக்கு உன் கூடவும் சங்கரன் கூடவும் கார்லே சப்தர்ஜங்குக்கு லிஃப்ட் கேட்டு சவாரி செஞ்ச ஒருத்தரை பார்த்தேன். திலீப் ராவ்ஜியோட நூற்றுப்பத்து வயசு அப்பா” என்றாள் ஜெயம்மா.

”ஆமா, நானும் அதேபடி வருஷம் முப்பத்தஞ்சு போய்த்தான் அவரை நேற்றைக்கு பிஷாரடி வைத்தியர் வீட்டிலே வச்சுப் பார்த்தேன். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு அவரை அங்கே பார்த்ததுமே யோசிச்சேன். பிடி கிட்டலே. அவர் கிட்டேயே கேட்டேன், எங்கேயோ பார்த்திருக்கோம் மாமான்னு.

டக்குனு சொல்லிட்டார். ஆமா, எங்க கூட ப்ளேன்லே வந்துட்டு நாக்பூர்லே இறங்கிக் காணாமல் போய்ட்டார் ரொம்ப நாளைக்கு ரொம்ப நாள் முந்தி” என்றாள் வசந்தி. வெகு சகஜமாக, முந்தாநாள் நடந்தமாதிரி சொன்னாள் அவள்.

”என்ன ஆச்சுன்னா, அவரை சுட்டுக் கொல்றதுக்கு கூட்டிப் போறபோது மூத்திரம் போய்” என்று ஆரம்பித்த சங்கரன் எழுந்து நின்றார். பாத்ரூம் போகணும் என்றார். அவரை தாங்கிப் பிடித்தபடி விமான டாய்லெட்டுக்கு நடத்திக் கூட்டிப் போனாள் வசந்தி.

“கதவை மூடலே. நானும் இருக்கேன். பயப்படாமல் போங்கோ. யாரும் துப்பாக்கி வச்சுண்டு நிற்கலே வாசல்லே” என்றாள் வசந்தி, டாய்லெட் கதவைத் திறந்தபடிக்கு வைத்து, சங்கரனை கமோடில் இருத்தியபடி.

இவர்கள் பத்து நிமிடம் வரவில்லையே என்று தெரிசா இருக்கைகளின் ஊடாக நடந்து கழிவறை வாசலுக்கு வந்தாள்.

“தெரிசா, அடல்ட் டயாபர் போட்டுவிட்டு பழக்கம் இருக்கா?” வசந்தி கேட்டாள். ”தெரிஞ்சுக்கிட்டா போச்சு” என்று வசந்தி சங்கரனுக்கு டயாபர் போட உதவி செய்தாள் அவள். ”கூல், இனி நான் பார்த்துக்கறேன்” என்றாள்.

இரண்டு அறுபது வயசுக்காரிகள் அதே வயசு வரம்பில் ஒரு ஆணுக்கு டாய்லெட் போக இப்படி விழுந்து விழுந்து உதவி செய்வதை ஏர் ஹோஸ்டஸ்களும் ப்ளைட் பர்ஸர்களும் விநோதமாகப் பார்க்க, அவர்களிடம் சுருக்கமாக முன்கதை சொன்னாள் தெரிசா. அதற்கப்புறம் அவர்கள் பார்வையே மாறிப் போனது.

மிட்டாயும், காதில் அடைக்கப் பஞ்சும், விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் ”டாஃபி சார்” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள். குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 15, 2023 05:30
No comments have been added yet.


இரா. முருகன்'s Blog

இரா. முருகன்
இரா. முருகன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. முருகன்'s blog with rss.