நினைவுச் சித்திரங்கள்
சசி எம் குமார் எழுதிய திண்ணை இருந்த வீடு சிறுகதைத் தொகுப்பைப் படித்தேன். 23 சின்னஞ்சிறு கதைகள். சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

தனது கிராமிய நினைவுகளையும் வாழ்வில் சந்தித்த மறக்கமுடியாத மனிதர்களையும் அழகான சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். மூன்று நான்கு பக்கங்களே உள்ள இந்தக் கதைகள் காட்சி ரூபமாகக் கண்முன்னே விரிகின்றன.
கதை என்று சொன்னாலும் இவை உண்மையான வாழ்க்கைப் பதிவுகள். இந்த மனிதர்களில் சிலரை நாம் அறிவோம். அவர்களுக்கு வேறு பெயர்கள் இருக்கக் கூடும். சசி இவர்களைத் தேர்ந்த ஓவியர் போல அழகான கோட்டுச் சித்திரமாக்கியிருக்கிறார்.
சித்திரமாடம் கதையில் வரும் ஓவியர் சேகர் மறக்கமுடியாத கதாபாத்திரம். கதையின் முடிவில் பரட்டை தலையுடன் அவர் ஆன்டன் செகாவ் சிறுகதைகள், மீராவின் கவிதைகள் மற்றும் அலுமினிய தட்டு டம்ளர் கொண்ட கிழிந்த பையோடு நிற்கும் கோலத்தைக் காணும் போது கண்ணீர் கசிகிறது. சேகர் போன்ற கலைஞர்களைக் காலம் இவ்வளவு இரக்கமின்றி விழச் செய்திருக்க வேண்டாம்.
அழியாத காதலைப் பேசும் கிருஷ்ணவேணியின் காதல் கடிதங்களில் ஆண்டுகள் கடந்தும் வெளிப்படும் காதல் பார்வை அழகானது. சசியின் கதைகளில் தஞ்சை நகரமும் காவிரி ஆறும் கிராமத்து மனிதர்களும் மிகுந்த அழகுடன் கலாபூர்வமாக வெளிப்படுகிறார்கள்.
எங்கிருந்தோ வந்து சேரும் லஜ்ஜாவின் கூடவே நாமும் நடக்கிறோம். வீடு பறிபோன துயரத்தில் பரதேசியாகிப் போன ஆர்கேபி, , சினிமா தியேட்டரில் வேலை செய்த ராஜா மணி, முருகேசன் மாமா லோகுமாமா என இவர் எழுதிக்காட்டியுள்ள மனிதர்கள் தஞ்சை மண்ணின் உண்மையான நாயகர்கள்.
வாழ்க்கை போராட்டத்தில் தோற்றுப் போன இந்த மனிதர்கள் தனது தீராத அன்பாலும் மனவுறுதியாலும் வெல்ல முடியாதவர்களாகிறார்கள். தன் மண்ணையும் மனிதர்களையும் கதைகளின் வழியே அழியா நினைவுச் சித்திரங்களாக்கியிருக்கிறார் சசி. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 658 followers

