பிள்ளைகள் நிலவொளி புகுந்த அறையில் கிடக்கிறார்கள்
அவர்கள் வீட்டில் டம்ப்பெல்கள் இருக்கின்றன
கணவனோ மனைவியோ அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம்
கல்லூரிக்குச் செல்லும் பிள்ளைகள் பயன்படுத்தியிருக்கலாம்
ஆரோக்கியமான உடல்வாகு
நாள் தவறாத தேகப் பயிற்சி
குடும்ப ஆரோக்கியத்தில் கவனம்
இப்படி எத்தனை குடும்பம் உங்களுக்கும் எனக்கும் தெரியும்?
“பாப்பா படுக்கப்போகும்முன் ப்ரஷ் செய்துவிட்டுப் படு”
“பாப்பா தட்டில் கேரட் மிச்சம் இருக்கக்கூடாது”
“பாப்பா நல்ல வெயில் ஊர் சுற்றாதே”
அம்மாவும் அப்பாவும் பிள்ளைகளிடம் மாறி மாறி
சொல்லியிருந்திருப்பார்கள்
பிறகு ஒரு நாள்
அம்மாவோ அப்பாவோ பிள்ளைகளை
டம்ப்பெல்களால் அடிக்கும்போது சொல்கிறார்கள்
“பாப்பா பயப்படாதே நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம்”
“பாப்பா பயப்படாதே பொறுத்துக்கொள்”
”பாப்பா சத்ய யுகம் பிறக்கப்போகிறது அதில் சந்திப்போம்”
அப்பா ஆதரவாகப் பிடித்துக்கொள்ள
அம்மா அடிக்க அல்லது
அம்மா அணைத்துக்கொள்ள
அப்பா அடிக்க
தனித்தனி அறைகளில்
இரண்டு பிள்ளைகளும்
கதறியிருப்பார்கள்
”அம்மா சத்ய யுகமென்று ஒன்றில்லை”
“அப்பா ரொம்ப வலிக்கிறது”
எது எப்படியிருந்தாலும்
இன்னும் லட்சம் அம்மா அப்பாக்கள்
லட்சம் டம்ப்பெல்களோடு
களத்தில் இறங்கும்வரை
நாம்
மனிதர்களைவிட சிறந்த தாய் தந்தைகளாகக்
குரங்குகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை
The Nightmare, Henry Fuseli, 1781
The post பிள்ளைகள் நிலவொளி புகுந்த அறையில் கிடக்கிறார்கள் appeared first on Writer Perundevi.
Perundevi's Blog

