கோயில் யானையின் திமிர்

அன்பின் ஜெ,

வணக்கம்.

பல மாதங்கள் என் “வாசிக்க வேண்டிய புத்தகங்கள்” பட்டியலிலிருந்த ஓம்சேரி என்.என். பிள்ளையின் “கோயில் யானை”யை (நாடகம்) சமீபத்தில் வாசித்தேன்.

“கோயில் யானை” சிறிய நாடகம்தான். ஆனால் பக்கத்திற்குப் பக்கம், அங்கதமும்/பகடியும்/எள்ளலும் தெறிக்கின்றன. ஸ்ரீலால் சுக்ல-வின் “தர்பாரி ராக”த்திற்குப் பிறகு, படிக்கும் நேரம் முழுவதும் நான் மனம்விட்டு வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்தது “கோயில் யானை” வாசிப்பின் போதுதான். வாசகர்கள் தவறவிடக்கூடாத நூல்.

ஒன்பது முழுநீள நாடகங்களும், 80 ஓரங்க நாடகங்களும், சில நாவல்களும் எழுதியிருக்கும் ஓம்சேரி என்.என். பிள்ளை, இருமுறை “கேரள சாகித்ய அகாடமி” விருதும், கேரள மாநில அரசின் உயரிய கௌரமான “கேரள பிரபா விருது”ம் பெற்றிருக்கிறார். ஓம்சேரி, கேரளாவின் கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில் பிறந்தவர். “கோயில் யானை”க்கு, திருவனந்தபுரம் பி.கே. வேணுக்குட்டன் நாயர் நல்ல முன்னுரை ஒன்றைத் தந்திருக்கிறார். இளம்பாரதியின் தமிழாக்கம் மிகச்சிறப்பு.

மலைக்காட்டில் சுதந்திரமாக மகிழ்ச்சியாகத் திரிந்து கொண்டிருந்த யானைக்குட்டி ஒன்று, தந்திரமாக, குழி வெட்டி பொறி வைத்து பிடிக்கப்பட்டு, நாட்டிற்குள் கொண்டு வரப்படுகிறது. செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டு, அக்குட்டி யானை ஏலம் விடப்பட, செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். கொச்சாம்பள்ளி தெய்வத்தின் அனுக்கிரகத்தினால் தனக்குக் கிடைத்த சௌபாக்கியங்களுக்குக் கைம்மாறாக, அவர் அந்த யானைக்குட்டியை கோயிலுக்கு கொடுத்து விடுகிறார். ஜமீன்தார் யானைக்குட்டிக்கு, “கேசவன்” என்று பெயரிடுகிறார். கேசவனுக்கு மாவுத்தனாக சங்குநாயர் நியமிக்கப்படுகிறான்.

யானை கேசவன் அடிமைத்தனத்தை வெறுக்கிறான். அதிகாரகட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறான். திருவிழாக்களில் தன் மேல் ஏற்றிய விக்கிரகத்தையும், குடை பிடிப்பவனையும், பூசாரிகளையும் இரண்டு/மூன்று முறை விசிறியடித்திருக்கிறான். அதனால் உற்சவங்களுக்கு யாரும் கேசவனைக் கூப்பிடுவதில்லை. கேசவன் ஒழுங்காக மரத்தடிகளும் தூக்குவதில்லை. கொச்சாம்பள்ளி மனய்க்கல் ருத்ரநாராயணன் நம்பூதிரி, உள்ளூர் கிராம பஞ்சாயத்தில் கேசவன் அட்டூழியங்கள் செய்வதாக  கம்பிளெய்ண்ட் கொடுக்கிறார். கேசவனுக்கு வருமானம் மிகக் குறைவாகக் கிடைப்பதால், அதற்கு போதிய அளவு உணவு கொடுக்கப்படுவதில்லை. பசிக்கொடுமையினால் நாளடைவில் அவன் உடல் தளர்வுறுகிறான்.

உள்ளூர் பத்திரிகை நிருபர் சு.ம., கேசவன் நோய்வாய்ப்பட்டிருப்பதாக, பத்திரிகையில் கட்டுரை எழுதுகிறார். “ஆல் கேரளா கவுன்சில் ஃபார் த ட்ரீட்மெண்ட் ஆஃப் கேசவன்” என்ற சபை ஆரம்பிக்கப்பட்டு, அதன் சார்பாக கேசவனைப் பரிசோதித்து, சிகிச்சையளிக்க டாக்டர் ஒருவர் வருகிறார். “அகில இந்திய கேசவ பாதுகாப்புக் கழகம்”-ம் அமைக்கப்பட்டு, கழகத்தின்வேண்டுகோளுக்கிணங்க, பிஷகாச்சார்யா ஜோசிய பூஷணம் கிட்டுப்பணிக்கர், சோழி உருட்டிப் பார்த்து கேசவனின் பிரச்சனையை அறியவும், கேசவனுக்கு பரிகார பூஜைகள் பரிந்துரைக்கவும் வருகிறார். டாக்டருக்கும், பணிக்கருக்கும் இடையே கேசவனுக்கான வைத்தியம் குறித்து வாக்குவாதம் வலுக்கிறது.

பி.ஏ. படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் பாஸ்கரன் என்ற பாஸ்கர் குமார், கோயில் கலைஞர்களான மிருதங்கக்காரர், பாகவதர், வீதிகளில் பொருடகள் விற்கும் கம்பர் ராமகிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து கேசவனைப் பற்றி ஒரு கதாகாலட்சேபம் நடத்தத் திட்டமிடுகிறான் (பின்னணி இசை கானபூஷனம் கொச்சாம்பள்ளி மதன் & பாலக்காடு பத்மநாபன்). கேசவன், பாஸ்கருக்கு நண்பன். சில சமயம் வலதுசாரியாகவும், சில சமயம் இடதுசாரியாகவும் மாறி மாறி சொற்பொழிவாற்றும் அரசியல்வாதி “காட்டாங்குளத்து குட்டி”, கள்ளுக்கடை மத்தாயி, டீக்கடைக்காரன் பரமு நாயர் அனைவரும் நாடகத்தில் வருகிறார்கள்.

நாடகத்தின் முதல் காட்சியே அபாரமாய் துவங்குகிறது. கையில் விளம்பரப் பலகையுடன் வரும் கம்பர் ராமகிருஷ்ணனின் விற்பனைக் குரல்…

#முந்திரிப் பருப்பேய்…, லாட்டரி சீட்டேய்…, பிண்டத்தைலம், சவுரி முடிகண் மை, காதுக் குரும்பி, கம்பராமாயணம், காமசூத்திரம், பகவத்கீதை, தேர்தல் அறிக்கை, பஞ்சாங்கம், பல்பொடி, தீர்த்த யாத்திரை டிக்கேஏஏஏட்…”#

இங்கு தொடங்கும் ஓம்சேரியின் அங்கதமும், எள்ளலும் நாடகத்தின் இறுதிக் காட்சி வரை சரவெடியாய் வெடிக்கின்றன.

*

கோயில் யானை கொச்சாம்பள்ளி கேசவனின் மாவுத்தன் சங்குநாயர் கள் குடித்திருக்கிறான். பாஸ்கரன் நக்கலும் நையாண்டியும் கொண்ட எழுத்தாளன். பாஸ்கரனுடன் சங்குநாயரின் உரையாடல்…

சங்குநாயர்: நீதாண்டா சரியான மரமண்டை. மரத்தைத் தூக்கறதுக்கும், சாமி ஊர்வலத்துக்குப் போறதுக்கும் இல்லாமவேறெ  எதுக்குடா யானை பொறந்துருக்கு? (பாஸ்கரனுக்குப் பக்கத்தில் சென்று) மனுஷன் பொறந்தது எதுக்காக?

பாஸ்கரன் : சாகிறதுக்கு

சங்குநாயர்: போடா மடையா. மனுஷன் பொறந்தது கள்ளு குடிக்கவும் கல்யாணம் கட்டிக்கவும்தான். ‘மகளிரவர் முகத் தாமரை,    மகளிரவர் பாதத்தாமரை‘. (சிறிது நடந்துவிட்டு சட்டென்று திரும்பி வருகிறான்) டேய்  கேள்விப்பட்டியாடா பாஸுகரா, நீ வாசிச்சயாடா,  பத்திரிகைகளிலேயெல்லாம்  வெண்டைக்காய்த்தனமா  வழவழான்னு  என்னன்னமோ எழுதியிருக்கானாமேகேசவனுக்கு உடம்பு சரியில்லஆபத்து அப்படின்னு. இதையெல்லாம் பத்திரிகைல எழுதனவன் எவன்டா?

பாஸ்கரன்: பத்திரிகைகாரங்களுக்கு எழுதறதுக்கு ஏதாச்சும் பெரிய சங்கதி வேணாமா சங்குமாமா? சர்க்காரைப் பத்தி எழுதினா ஜெயில்லே போட்டுருவாங்க. பெரிய ஆளுங்களைப் பத்தி எழுதினா கோர்ட்டுக்குப் போகணும்கேசவனுக்கு சீக்கு வந்தா செய்தி. இல்லியா பின்னே!. செத்தா அதைவிடப் பெரிய செய்தி!. நம்ம பத்திரிகை  நிருபர் சு.. எழுதி அனுப்பிச்சதா இருக்கும்.

சங்குநாயர்: எனக்கு இடுப்பு வலி எடுத்து எத்தனை வருஷமாச்சு! அதை அந்த சு..கிட்ட சொல்லவும் செஞ்சோம். ஆனாஅவரு இதுவரைக்கும் இதைப்பத்தி ஏதாச்சும் எழுதினாரா?

பாஸ்கரன்: அது குஞ்சியம்மா பத்திரிகை நடத்தினாத்தான் நடக்கும் (குஞ்சியம்மா, சங்குநாயரின் தொடுப்பு).அப்போ சங்குமாமாவோட சீக்கு, டூர் புரோக்ராம் கள்ளுக்கடைப் பிரசங்கம்ஆக எல்லாமே செய்தியா வெளிவருமில்லே?

*

முப்பது வருடங்களுக்கு முன்னால், ருத்ரநாராயண நம்பூதிரி, கோயில் யானை கேசவன் மேல் கொடுத்த புகாரையும், அது சம்பந்தமான ஃபைல்களையும் டுத்துக்கொண்டு மாவுத்தன் சங்குநாயரை விசாரிக்க கிராம அதிகாரி வருகிறார்.

கி. அதிகாரி: புகார்…(ஃபைலைப் புரட்டுகிறார்) புகார் இதோ இதுதான் (வாசிக்கிறார்). சில வருஷங்களாக இவன் (கேசவன் மரியாதைக்குரிய நாட்டாமைக்காரரோடும், மாவுத்தனோடும் அனுசரணையாக இல்லாமலும், அவர்களுடைய அதிகாரத்தைத் தட்டிக் கேட்கும் விதத்திலும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், நேற்று இரவில் தெய்வ விக்கிரகத்தைனப்பூர்வமாகவும், கெட்ட நோக்கத்துடனும் தலையிலிருந்து இரண்டு தடவை கீழே தூக்கி எறிந்துவிட்டு  தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் தலை நிமிர்த்திக் கொண்டிருந்ததும் கண்டிக்கத் தக்கதாகும். அதிகாரத்தைக் கேள்வி கேட்கறதுக்கும், யாருக்கும் அடங்காமல் இருக்கறதுக்கும் யானையை அனுமதிப்பதென்பது சட்டதிட்டங்களுக்கெதிரான அச்சுறுத்தல் என்பதாலும் பொதுப் பாதுகாப்பை முன்னிறுத்தியும் ஆயுதம் ஏந்திய இரண்டு வீரர்கள் மேற்பார்வையிட்டுச் சட்டதிட்டத்தைப் பராமரிக்க அவசரமாக வேண்டிக் கொள்ளப்படுகிறது.

பாஸ்கரன்: அப்போ போலீஸ்காரர்களுடைய நடத்தை நன்றாக இருக்க யாரை மேற்பார்வைக்கு வைப்பது?  (கிராம அதிகாரி முறைக்கிறார்)

சங்குநாயர்: புகார் மனு கிடைச்ச பிறகும் போலீஸ்காரங்களைக் கூப்பிடாம இருக்கறது ஏன்?

கி. அதிகாரி: அப்படியெல்லாம் போலீஸ்காரங்களை அமர்த்திட முடியுமா? அது அனுமதிக்கத் தக்கதுதானா என்று உள்துறைக்கு எழுதிக் கேட்டோம். உள்துறை, வனத்துறையின் அபிப்ராயத்திற்காக அனுப்பி வைத்திருக்கிறது. வனத்துறையின்      பதில் இதோ இந்தா இருக்கு (ஃபைல் பிரித்து முணுமுணுத்தபடி படிக்கிறார்). வனத்துறை நடைமுறைச் சட்டம் 5ஆம் பிரிவு-7ஆம் உட்பிரிவு…18ஆம் பிரிவு, 20ஆம் பிரிவு…54ஆம் பிரிவு-37ஆம் பிரிவுஅல்லாத பட்சத்தில்இப்போதுள்ள நடைமுறைச் சட்டதிட்டங்களிலுள்ள முரண்பாடுகளைக் களைவதற்காக ஒரு விசாரணைக் ழுவை நியமிப்பது… 

பாஸ்கரன்: அர்த்தம் புரியலயே

கி. அதிகாரி: தமிழிலே சொன்னாக் கூடப் புரியலயா?. நான் சொன்னதோட அர்த்தம்… (சுருக்கமாய் சொல்கிறார்)

பாஸ்கரன்: இதைச் சொல்லத்தானா இப்படி ஊரை வளைச்சிப் பேசினீங்க?

*

சோழிகள் போட்டுப் பார்த்துவிட்டு பணிக்கர் சொல்கிறார்…

கேசவன் மேல தெய்வக் கோபம் ஏராளமா இருக்கு. செவ்வாய் லக்கினத்துல இருக்கு. எட்டாம் இடத்தானுக்கு பலமில்லாதாக்கும். நாலாம் இடத்தானும், ஆரோக்கியக்காரனுமான புதன், பகை ஸ்தானத்துல இருக்கான். இப்படியெல்லாம் இருக்கறப்போ அஜீரணம், குன்மம் முதலானவை உண்டாகும். ப்ரமாணம் இப்படிச் சொல்லுது

           அஜீர்ணி குன்மாமயமூலமேதி
            கஜே விலக்னே விபலேரி நாதே“...

நான் சிரித்து ஓய பல நிமிடங்களானது.

வெங்கி

“கோயில் யானை” (நாடகம்) – ஓம்சேரி என்.என். பிள்ளை

மலையாள மூலம்: “Thevarutu Aana”

தமிழில்: இளம்பாரதி

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 29, 2023 11:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.