இன்னொரு பிறந்தநாள்

 

மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்

சென்ற ஆண்டு அறுபது, ஆகவே கொஞ்சம் கொண்டாட்டம் கூடுதலாகவே இருந்தது. இந்த ஆண்டு இதை அப்படியே கடந்துபோகவே எண்ணியிருந்தேன். அதுதான் வழக்கம். ஆகவே எர்ணாகுளம் போகலாமென முடிவுசெய்து ரயிலும் விடுதியும் பதிவுசெய்திருந்தேன்.

ஆனால் நிலக்கோட்டை மு.வ.மாணிக்கம் ஆண்ட் கோ நகைக்கடையின் போஸ்டர்கள் மற்றும் விளம்பரம் கவன ஈர்ப்பாக ஆகிவிட்டது. இம்முறை தமிழின் பிரபல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. ஆகவே ஏராளமான வாழ்த்துக்கள்.

அதற்கு பின்னால் ஒரு மனநிலை உள்ளது. ஆண்டுமுழுக்க  என்னை ஒரு சிறுகும்பல் வசைபாடுகிறது. அவர்களிடம் விவாதிக்கவேகூடாது என்பதே என் நண்பர்களுக்கு நான் போடும் நிபந்தனை. ஆகவே அது எப்போதுமே ஒற்றைப்படையாக நிகழ்கிறது. வசைபாடிகள் தங்களுடன் இணைந்து ‘தமிழகமே’ என்னை வசைபாடுவதாக எண்ணிக்கொள்கிறார்கள்.

பிறந்தநாள் போன்ற தருணங்கள் என் வாசகர்கள் நண்பர்களுக்கு என் மேல் தங்களுக்கு இருக்கும் பற்றை வெளிப்படுத்தும் தருணங்கள் மட்டுமல்ல, அந்த வசைகளுக்கு அவர்கள் அளிக்கும் ஆழமான எதிர்வினைகளும்கூட. அதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

21 ஏப்ரல் காலையில் நாகர்கோயிலில் இருந்து ரயிலில் எர்ணாகுளம் சென்றேன். ஏதேனும் ஊருக்குச் செல்லலாம் என நினைத்ததும் எர்ணாகுளம் என முடிவுசெய்தமைக்குக் காரணம் ஆஷிக் அபு இயக்கிய நீலவெளிச்சம். என் பிரியத்திற்குரிய பஷீரின் உலகம். நான் ஒரு கிளாஸிக் என நினைக்கும் பார்கவி நிலையம் படத்தின் மறு ஆக்கம்.

மாலை 4 மணிக்கு எர்ணாகுளம் சென்றோம். கெண்ட் பேவாட்ச் என்னும் விடுதியில் இரண்டுநாட்களுக்கு அறை பதிவுசெய்திருந்தேன். புதிய, பிரம்மாண்டமான விடுதி. இடக்கொச்சியில் உள்ளது. இன்னும் வணிகம் சூடுபிடிக்கவில்லை, ஆகவே வாடகை அந்த வசதிக்கு மிகக்குறைவு. 3500 ரூ. ஒரு படுக்கையறை, விரிவான இன்னொரு கூடம், கடல்குடா நோக்கித் திறக்கும் பால்கனி, சமையல்கூடம் ஆகியவற்றுடன் கூடிய சூட்.

சற்று ஓய்வெடுத்துக்கொண்டு உடனே கிளம்பி லுலு மாலில் உள்ள பிவிஆர் அரங்குக்குச் சென்றோம். வண்டி ஓட்டுநர் விஷ்ணு உற்சாகமான பையன். வைக்கம் முகமது பஷீர் பெயர் தெரியாத தலைமுறை.

படம் என்னை கவர்ந்தது. பொதுவாக கறுப்புவெள்ளை படங்களின் கனவுத்தன்மை வண்ணத்தில் வருவதில்லை – ஏனென்றால் கறுப்புவெள்ளையே இயற்கையற்ற காட்சிவெளி என்பதுதான். அதிலும் கடல், பனி, பாலைவனம், நிலவு ஆகியவை கறுப்புவெள்ளையில் அபாரமாக இருக்கும். பார்கவிநிலையம் ஒரு கனவுபோன்ற படம்.

சன்னலுக்கு வெளியே

வண்ணத்தில் அந்தக் கனவுத்தன்மையை கொண்டுவர ஆஷிக் அபுவால் இயன்றுள்ளது. டொவீனோ தாமஸ் பஷீரின் உடல்மொழியை அழகாக கொண்டுவந்திருந்தார். 1964ன் உலகம்.

படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு நடிகர் வில்லனாக நடித்த டாம் சாக்கோ. 1960-70 களில் வெட்டிப்பையன்களுக்கு ஓர் உடல்மொழி இருந்தது. ஆர்ப்பாட்டமான, சூழ்ச்சி நிறைந்த பாவனைகள். அதை மிகச்சிறப்பாக கொண்டு வந்திருந்தார்

பஷீரின் கனவுலகில் உருவாகி உள்ளேயே திரும்பிச்சென்றுவிட்ட பார்கவிக்குட்டியின் வாழ்க்கை. அந்த கனவின் மீளுருவாக்கம் அழகான ஓர் காட்சியனுபவமாக இருந்தது. எம்.எஸ்.பாபுராஜின் அதே பாடல்கள் புதிய இசையமைப்பில். ஆஷிக் அபுவுக்கு ஒரு பாராட்டு செய்தி அனுப்பினேன்.

மறுநாள் காலையில் ஆறுமணிக்கே கிளம்பி திருக்காக்கரை கோயிலுக்குச் சென்றோம். திருக்காட்கரை என பழைய பெயர். கேரளத்திலுள்ள பாடல்பெற்ற தலம். இந்த ஆலயத்தைப் பற்றிய நம்மாழ்வாரின் பதிகம் உள்ளது. திருக்காட்கரையப்பன் என்று பெருமாளையும் பெருஞ்செல்வநாயகி அல்லது வாத்ஸல்யவல்லி என தேவியையும் நூல்கள் குறிப்பிடுகின்றன. நம்மாழ்வார் பதிகம்

உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,
பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,
தெருவெல்லாம் காவி கமழ் திருக்காட்கரை,
மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே

எனத்தொடங்குவது.

நகருக்குள்ளேயே உள்ள ஆலயம். ஆனால் இங்கு நான் வந்ததில்லை. பெரும்பாலானவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன். மிகச்சிலரே ஆலயத்தில் இருந்தனர். வாமனமூர்த்தியாக பெருமாள் எழுந்தருளிய இடம். இங்கேதான் மகாபலியை பெருமாள் பாதாளத்திற்கு அழுத்தினார் என்பது தொன்மம்.

இந்த பிறந்தநாளுக்கு சிவகுருநாதன் வழக்கம்போல ஆடைகள் அனுப்பியிருந்தார். எனக்கும் அருண்மொழிக்கும். நீல நிற ஆடைகள். அதைத்தான் 22 காலையில் அணிந்துகொண்டு கோயிலுக்குச் சென்றேன். சிவகுருவின் ஆடைகளையே பெரும்பாலான தருணங்களில் இப்போதெல்லாம் அணிகிறேன். அவை தூய பருத்தியாலானவை. செயற்கை வண்ணங்கள் அற்றவை என்பதே முதன்மையான காரணம். ( நூற்பு )

எப்போதுமே காலையில் ஓர் ஆலயத்திற்குச் செல்வது அரிதான ஓர் உணர்வை அளிக்கிறது. புலரியொளி எல்லா கோயில்களையும் அழகாக ஆக்கும். அதிலும் மிக விரிவான சுற்றுமுற்றம் நடுவே அமைந்திருக்கும் பரபரப்பில்லாத கேரள ஆலயங்கள் மிகமிக அமைதியானவை, தூய்மையானவை.

எட்டு ஏக்கர் பரப்புள்ள விரிந்த நிலத்தின் நடுவே அமைந்த ஆலயம். வாமனமூர்த்தி ஆலயத்திற்கு தெற்காக சிறிய சிவன் கோயில். நீண்டகாலம் அரைகுறையாக கிடந்த இந்த ஆலயம் இப்போது புதியதாக கட்டப்பட்டுள்ளது. தொல்லியலாளர் இந்த ஆலயமே காலத்தால் பழையது என்கிறார்கள். மகாபலி சிவபக்தன் என்றும், அவன் வழிபட்ட சிவன் இது என்றும் சொல்லப்படுகிறது

வாமனமூர்த்தி ஆலயம் சேரக் கட்டிடக்கலை பாணியில் வட்டமாக அமைந்தது. பெரிய தூண்கள் கொண்ட நாலம்பலம், விரிந்த சுற்றம்பலம் கொண்டது. 160 அடி நீளமான வட்டவடிவ ஆலயம் செம்புத்தகடுகள் வேய்ந்த கூம்புவடிவக் கூரை உடையது. முக்கியமான மரச்சிற்பங்களும், கல்வெட்டுகளும் இங்குள்ளன. அண்மையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்குள் ஐந்து அறைகள் உண்டு. மேற்கு எல்லையிலுள்ளது கருவறை. கருவறை பிற அறைகளில் இருந்து ஐந்து படிகள் உயரத்திலுள்ளது. ஆகவே மண்டபத்திற்கு இப்பால் நின்றால் படிகளே தெரியும். மைய ஆலயத்தின் படியருகே நின்றால்தான் மூலச்சிலையை காணமுடியும். கரிய கல்லால் ஆன சிலை. வாமனன் என தொன்மம் என்றாலும் சங்கு. சக்கரம், கதை, தாமரை ஆகியவை நான்கு கைகளிலும் ஏந்தி நின்றிருக்கும். விஷ்ணுவின் சிலை அது

இந்த ஆலயம் பற்றிய தொன்மையான வரலாற்றுச் சான்று என்பது கொடுங்கல்லூர் (கொடுங்கோளூர். இன்னொரு பெயர் மகோதயபுரம் அல்லது மாக்கோதைபுரம்) தலைநகராக்கி ஆட்சி செய்த சேரமான் பெருமாளின் காலகட்டத்தில், அதாவது பொயு 10 ஆம் நூற்றாண்டுக்குப்பின் இப்போதிருக்கும் இடத்தில் ஓர் ஆலயம் கட்டப்பட்டது என்பதாகும். அதற்கு முன் சிற்றாலயமாக பொயு ஐந்தாம் நூற்றாண்டு முதலே இருந்திருக்கிறது. எட்டாம் நூற்றாண்டில் நம்மாழ்வார் இங்கே வந்திருக்கிறார். அன்று இது ஒரு சோலையாக இருந்தது.

பொயு 12 ஆம் நூற்றாண்டிலேயே இந்த ஆலயம் கைவிடப்பட்டு மறக்கப்பட்டது. ஆலயவளாகமே காடாகியது. ஆலயத்தின் அடித்தளம் மட்டுமே எஞ்சியது. 1921ல் அன்றைய திருவிதாங்கூர் மன்னரான ஸ்ரீ மூலம்திருநாள் ராமவர்மா மகாராஜா இந்த ஆலயத்தை இன்றிருக்கும் வடிவில் கட்டி மீண்டும் இறைநிறுவுகை செய்தார். 1949 முதல் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்ட் நிர்வாகத்திலுள்ளது.

திருக்காட்கரை

திருகாட்கரை ஓணத்துடன் தொடர்புடைய ஆலயம். சொல்லப்போனால் ஓணம் இந்த ஆலயத்தில் இருந்தே தொடங்குகிறது. சேரமான் பெருமாள் தன் சிற்றரசர்கள் தன்னை வந்து பார்த்து கப்பம் கட்டுவதற்கு ஓண நாளை வகுத்திருந்தார் என இங்குள்ள கல்வெட்டுகள் சொல்கின்றன. ஆடிமாதம் திருவோணநாள் முதல் ஆவணி மாதம் திருவோணம் வரை திருக்காக்கரை ஓணம் எனப்படுகிறது. அப்போதுதான் வாமனனால் பாதாளத்திற்கு அனுப்பப்பட்ட மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களைப் பார்க்க வருவதாக தொன்மம்.

ஓணக்கொண்டாட்டத்தின்போது முற்றத்தில் பூக்களால் கோலமிட்டு அதன் நடுவே களிமண்ணால் கூம்புவடிவில் திருக்காக்கரையப்பனை நிறுவி வழிபடுவது கேரள வழக்கம். திருக்காக்கரையப்பனின் உருவுக்கு மேல் காசித்தும்பை கிருஷ்ணதுளசி ஆகிய மலர்கள் சூட்டப்படவேண்டும். சேரமான் பெருமாள் திருக்காக்கரையப்பனை வழிபட நேரில் வராதவர்கள் ஓணக்காலத்தில் தங்கள் இல்லங்களில் நிறுவி மலர்வழிபாடு செய்தாகவேண்டும் என ஆணையிட்டதாகவும், அதன்பின்னரே ஓணம் தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

திருக்காக்கரையப்பன், ஓணக்கோலத்தில்... திருக்காக்கரையப்பன், ஓணக்கோலத்தில்…

அங்கிருந்து காலையுணவுக்குச் சென்றோம். நீண்ட நாட்களுக்குப்பின் சம்பா அரிசிப்புட்டு, வேகவைத்த நேந்திரம்பழம், கடலைக்கறி, பப்படம் என கேரளத்து காலையுணவு. மிகச்சிறப்பாக இருந்தது. (நான் பல மாதங்களாக காலையுணவாக முட்டை மட்டுமே சாப்பிடுகிறேன்)

அங்கிருந்து திருப்பணித்துறை ஆலயம். அரண்மனையும் அருங்காட்சியகமும் ரம்ஸான் விடுமுறையில். திருப்பணித்துறை ஆலயத்திற்கு நான் சிலமுறை வந்திருக்கிறேன்.

திருப்பணித்துறைதான் பழைய கொச்சி சம்ஸ்தானத்தின் தலைநகர். கொச்சியும் எர்ணாகுளமும் இணைந்து ஒரே நகரமாயின. இன்று காக்கநாடு, இடக்கொச்சி, இடப்பள்ளி என பல இடங்களுக்கு கொச்சி விரிந்திருக்கிறது. திருப்பணித்துறையின் பூர்ணத்ரயீஸ ஆலயம் விஷ்ணுவுக்குரியது. கருவறையில் அனந்தன் மேல் அமர்ந்த கோலத்தில் விஷ்ணு உள்ளார்.

கல்வெட்டுகளின் படி பொயு 947 இரண்டாம் சேரசாம்ராஜ்ய காலகட்டத்தில் மகோதயபுரத்தை ஆட்சி செய்த சேர மன்னன் கோதை ரவி இதை கட்டினார் என தெரியவருகிறது.  பொயு 1280ல் தான் இன்றிருக்கும் மூலச்சிலை நிறுவப்பட்டது. மேற்குக்கோபுரம் போன்றவை அதன் பின்னர் கட்டப்பட்டவை. பழங்காலத்தில் இருந்த குறியூர் என்னும் சிற்றரசின் ஆளுகைக்குக் கீழிருந்த இந்த ஆலயம் அந்தச் சிற்றரசின் அழிவுக்குப்பின்னர் கொச்சி அரசகுடியின் கட்டுப்பாட்டுக்கு வந்தது என சொல்லப்படுகிறது.

பழைய ஆலயம். சிவப்பான நான்கடுக்கு நாலம்பலம். மிக விரிந்த உள்முற்றத்தின் நடுவே முகப்பு மண்டபம்.  கல்லால் ஆன தூண்களுக்கு நடுவே சற்று இறங்கி உள்ளே செல்லவேண்டும். கல்லால் ஆன அடித்தளமும் செம்பு ஓட்டுக்கூரையும் கொண்டது. கல்லால் ஆன வட்டவடிவமான அடித்தளம் மீது சுதையாலான வட்டச்சுவர். சுவர் முழுக்க பித்தளைக் கவசங்கள். அவற்றில் சிற்பங்கள்.

சன்னலுக்கு வெளியே

திருப்பணித்துறை ஆலயத்தின் அருகே கூத்தம்பலத்தில் காலையில் செண்டை – தாயம்பகை வாசிப்பதற்கான பயிற்சி நடந்துகொண்டிருந்தது. கனமான கோல்களால் அடிமரக் கட்டைகளில் தட்டி பயிற்சி எடுத்தனர். வாய்த்தாரியை வாய்க்குள் சொல்லிக்கொள்ளவேண்டும். வழிகாட்டியான ‘மும்பன்’ காட்டும் சைகைகளை புரிந்துகொண்டு தாளத்தின் கதியை மாற்றவேண்டும். ஐம்பதுபேர் இருக்கும். முப்பதில் இருந்து ஐந்து வயதுவரை இருக்கும். பலரும் ஏற்கனவே நன்கு பயின்றிருந்தார்கள் என தெரிந்தது.

திருப்பணித்துறை ஆலயமுகப்பில் அரும்பொருட்கள் விற்கும் கடைவீதி உண்டு. அன்று விடுமுறையானதனால் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த ஒரு கடையில் ஒரு நாராயணகுரு படம் மட்டும் வாங்கிக்கொண்டேன். சட்டமிடப்பட்ட பெரிய படம்.

பதினொரு மணிக்கு அறைக்கு வந்தோம். வழக்கமாக பயணங்களில் முழுநாளையும் எங்காவது போய் செலவிடுவதுபோல் அன்றி அறைக்குள்ளேயே இருக்கலாமென முடிவுசெய்தேன். அற்புதமான அறை. அமர்ந்து வாசிப்பதற்குரிய, படுத்து வாசிப்பதற்குரிய வசதிகள். வெளியே வானமும் கடலும்.

திருப்பணித்துறை

இரண்டு புத்தகங்கள் கொண்டு வந்திருந்தேன். இவான் துர்க்கனேவின் மூன்றுகாதல்கதைகள். கே.ஸி.நாராயணனின் ’மகாபாரதம் ஒரு ஸ்வதந்த்ர சாஃப்ட்வேர்’ (மலையாளம்) இரண்டையும் மாற்றி மாற்றி வாசித்துக்கொண்டும் கடலைப்பார்த்தபடி சும்மா நின்றுகொண்டும், அங்கிருந்த சிறு சமையலறையில் சீனி இல்லாத கறுப்புதேநீர் போட்டு குடித்தபடியும் இரவு வரை இருந்தேன்.

வாழ்த்துக்கள் வந்து வாட்ஸப், மின்னஞ்சல்களை நிரப்பியிருந்தன. இருநாட்களிலாக எல்லாவற்றுக்கும் பதில் அளித்தேன். மூவாயிரம் மின்னஞ்சல்கள். எல்லாருக்கும் ஒரு வரியேனும் எழுதினேன்.

23 காலை கிளம்பி ரயிலில் நாகர்கோயில். அண்மையில் பெய்த மழையால் கோடையிலும் கேரளம் பசுமைகொண்டிருந்தது. பசுமை வழியாகச் சென்று பசுமை வழியாகவே மீண்டேன்.

மலர்த்துளி 12 காதல் கதைகள் வாங்க பிறந்தநாள், பன்னிரண்டு காதல்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 23, 2023 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.