சைபீரியப் பனியில் சில காலடிகள்

அகிரா குரோசாவாவின் திரைப்படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றத் துவங்கி அவரது திரைப்படங்களின் தயாரிப்பு உதவியாளர் வரையான பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் டெருயோ நோகாமி

அகிரா குரசோவாவின் 19 படங்களில் பணியாற்றியிருக்கிறார். குரோசாவாவின் பக்கத்திலேயே கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் இருந்திருக்கிறார். இவர் தனது திரையுலக அனுபவங்களை Waiting on the Weather: Making Movies with Akira Kurosawa என்ற நூலாக எழுதியிருக்கிறார்.

அவர் திரைப்பட உலகிற்கு அறிமுகமான விதம் மற்றும் குரசோவாவின் படத்தில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு, ரஷோமான். டெர்சு உசாலா, இகிரு, செவன் சாமுராய், ட்ரீம்ஸ் போன்ற பல்வேறு படப்பிடிப்புகளில் நடந்த சம்பவங்களை சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார்

குரோசாவாவின் ஆளுமை, பணி முறைகள் மற்றும் மனநிலையைப் பற்றிய நோகாமியின் பதிவுகள் சிறப்பானவை. ஒரு பெண்ணாக படப்பிடிப்பு தளத்தில் தான் சந்தித்த பிரச்சனைகளையும் இதில் விவரித்துள்ளார்.

பெடரிகோ பெலினி, ஐசன்ஸ்டைன், ஓசு, சத்யஜித்ரே போன்ற சிறந்த இயக்குநர்கள் அடிப்படையில் ஓவியர்களே. அவர்கள் திரைக்கதை எழுதும் போதே காட்சிகளைச் சித்திரமாக வரைந்துவிடக்கூடியவர்கள். அதனால் தான் அவர்களால் துல்லியமாகப் படமாக்கமுடிகிறது. குரோசாவாவும் சிறப்பாக ஓவியம் வரையக்கூடியவர். ஆகவே அவர் படமாக்கவேண்டிய காட்சிகளைத் தனித்தனியான சித்திரங்களாக வரைந்துவிடுவார். இது போலவே அரங்க அமைப்பு. உடைகள் மற்றும் தேவையான கலைப்பொருட்கள் அனைத்தையும் படம் வரைந்து கொடுத்துவிடுவார் என்கிறார் நோகாமி.

ரோஷோமான் படப்பிடிப்பில் சூரிய வெளிச்சம் காட்டு மரங்களின் மீது பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக எட்டு நிலைக்கண்ணாடிகளைக் கொண்டு எப்படிச் சூரிய ஒளியைத் தேவையான இடங்களில் பிரதிபலிப்புச் செய்தார்கள் என்பதை விவரித்துள்ளார். முதன்முறையாகச் சூரியனை நோக்கி கேமிராவை திருப்பியது இந்தப் படத்தில் தான் நடந்தேறியது. அதுவரை சூரியனை நேராகப் படம்பிடிக்கக் கூடாது என்ற விதி இருந்தது எனும் நோகாமி  தன்னை எவரும் சென்சாய் என மரியாதையாக அழைக்க வேண்டாம். பெயரைச் சொல்லியே அழைக்கலாம் என்ற நடைமுறையை குரோசாவா கொண்டுவந்தார் என்கிறார்

முத்தக்காட்சியில் நடித்த மிபுனே தனது வாயிலிருந்து வெளிப்படும் பூண்டு வாசனையை நீக்குவதற்காக மேற்கொண்ட முயற்சிகளும் அந்த முத்தக்காட்சிக்கு முன்பு நடிகையிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதையும் வேடிக்கையாகப் பதிவு செய்திருக்கிறார்.

ரோஷோமான் படத்தின் இறுதிப்பணிகள் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருந்த போது திடீரெனத் தீவிபத்து ஏற்பட்டது. இதைக் கேள்விப்பட்ட கேமிராமேன் மயங்கி விழுந்துவிட்டார். படச்சுருள்கள் அவ்வளவு தான் என்று அனைவரும் பயந்து போனார்கள். நல்லவேளையாக சிறிய தீவிபத்து என்பதால் உடனடியாக தீ அணைக்கப்பட்டது. சொன்ன நாளில் படத்தைத் தயார் செய்து வெளியிட்டார்கள்.

டெர்சு உசாலா திரைப்படத்தை ரஷ்ய ஜப்பானியக் கூட்டுறவில் உருவாக்க முனைந்த போது ஏற்பட்ட சிரமங்களை, பிரச்சனைகளை உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார் நோகாமி

அகிரா குரோசாவோடு இணைந்து திரைப்படம் உருவாக்க வேண்டும் என்று சோவியத் யூனியன் விரும்பியது. ஆகவே டெர்சு உசாலா கதையை அவர்கள் தேர்வு செய்து திரைக்கதையாக்கி அனுப்பி வைத்தார்கள். கதை பிடித்திருந்த போதும் திரைக்கதை சரியாக இல்லை என்பதால் தாங்களே அதன் திரைக்கதையை உருவாக்குவதாகக் குரோசாவா கூறினார். அதன்படி ரஷ்ய திரைக்கதை ஒன்றும் ஜப்பானியத் திரைக்கதை ஒன்றும் தனித்தனியே உருவாக்கப்பட்டது. இரண்டினையும் இணைந்து இறுதி திரைக்கதையைக் குரோசாவா உருவாக்கினார்

படப்பிடிப்பு நடக்க இருந்த சைபீரியப் பனிப்பிரதேசம். மாஸ்கோவிலிருந்து எட்டாயிரம் மைல் தூரத்திலிருந்தது. ஜப்பானியப் படக்குழுவில் இயக்குநரையும் சேர்த்து ஏழு பேர் மட்டுமே இடம்பெற்றார்கள். ரஷ்ய தயாரிப்பில் 75 பேர்கள் இணைந்து கொண்டார்கள்.

ஜப்பானிலிருந்து ரஷ்யாவிற்கு வரும் விமானத்தில் அகிரா குரோசாவாவும் எகானமி வகுப்பில் தான் பயணம் செய்தார். அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது என்பதால் படப்பிடிப்பு முழுவதற்கும் இருமொழி அறிந்தவர் தேவைப்பட்டார். இதற்காக லெவ் கோர்ஷிகோவ் நியமிக்கப்பட்டார்.

70 எம்எம்மில் படமாக்க வேண்டி இருந்த காரணத்தால் அதிக எடை கொண்ட கேமிராவை பனிப்பிரதேசத்திற்குக் கொண்டு செல்வது கடினமாக இருந்தது. இத்தோடு சோவியத் நடைமுறையில் தினமும் இத்தனை காட்சிகள் எடுக்க வேண்டும். இவ்வளவு படச்சுருள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கட்டாயமிருந்தது. அதை ஆரம்பத்திலே குரோசாவா ஏற்க மறுத்துவிட்டார்.

மாஸ்கோவில் இருந்த ஸ்டுடியோவில் டெர்சு உசாலா படத்தின் முக்கியக் காட்சிகள் சுவர் ஓவியங்களாக வரையப்பட்டிருந்தன. அத்தோடு படப்பிடிப்பு நடக்க வேண்டிய இடங்கள் அத்தனையும் புகைப்படங்களாக எடுக்கபட்டு தனி ஆல்பமாக உருவாக்கப்பட்டிருந்தன.

படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஜப்பானிய உணவு ஏற்பாடு செய்து தருவதாகச் சோவியத் நிர்வாகிகள் சொல்லியிருந்தார்கள். ஆகவே அவர்கள் தங்கிய விடுதியிலே ஜப்பானிய உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன. மிக மோசமாகத் தயாரிக்கபட்ட அந்த உணவைச் சாப்பிட முடியவில்லை.

தாங்க முடியாத குளிர். நீண்ட தூரப் பயணம். அதுவும் இரவில் நடக்கும் படப்பிடிப்பு எனக் கடினமான சூழ்நிலை. தினமும் படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு பாட்டில் வோட்காவை தனியே குடித்து முடிப்பார் குரோசாவா. இந்த எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகத் துவங்கியது.

பனிப்பிரதேசத்திற்குள் படப்பிடிப்பு நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்காது. கேமிரா வேலை செய்யாமல் போய்விடும். அவர் விரும்பியது போல நடிகர்களால் செய்ய இயலாத சூழ்நிலை. இப்படி தினமும் பிரச்சனைக்கு மேல் பிரச்சனை. இத்தோடு சரியான உணவும் கிடைக்காமல் போனதால் குரோசாவா மிகுந்த அவதிப்பட்டார். படப்பிடிப்பை பாதியில் விட்டுவிட்டு ஜப்பான் போய்விடப் போவதாக மிரட்டினார். அவரது கோபத்தை எப்படிச் சமாளிப்பது என எவருக்கும் தெரியவில்லை

அவர் ஒரு ராணுவ அதிகாரி போலப் படப்பிடிப்பில் நடந்து கொண்டார். மொழி தெரியாத போதும் தான் விரும்பியபடியே காட்சிகளை எடுக்க முனைந்தார். இதனால் ரஷ்ய படக்குழுவினர் அவரைக் கண்டு பயந்தார்கள். குறிப்பிட்ட காட்சியில் என்ன லென்ஸ் உபயோகிக்க வேண்டும். கேமிரா எங்கிருந்து எங்கே நகர வேண்டும் என்பதை அவரே தீர்மானித்தார்.

முக்கியக் காட்சி ஒன்றில் காட்டில் வாழும் டெர்சு இரவில் புலியைக் காணுகிறார். அந்த காட்சியை எப்படிப் படமாக்கினோம் என்பதை நோகாமி பதிவு செய்திருக்கிறார்.

படப்பிடிப்பு துவங்கும் போது குட்டியாகப் பிடிக்கப்பட்ட புலி அவர்கள் படமாக்கும் நாளில் மிகப் பெரியதாக வளர்ந்திருந்தது. புலியைத் தான் சொல்வது போல மரத்தின் பின்புறமிருந்து வெளியே வர வைக்க வேண்டும், அது திரும்பி டெர்சுவை நேராகப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் குரோசாவா. ஆனால் அப்படி புலி செய்யவில்லை. இதற்காக படக்குழு போராடினார்கள்.  முடிவில் அவர் நினைத்தது போன்ற காட்சி அமைந்தது.

படப்பிடிப்பு நடந்த இடத்தில் புத்தாண்டினைக் கொண்டாடியது. ஒன்றரை வருஷ காலம் பனிப்பிரதேசத்தில் பட்ட கஷ்டங்கள். குரோசாவாவின் தீவிரமான செயல்பாடு, தினசரி பிரச்சனைகளால் ஏற்பட்ட மனச்சோர்வு.  படம் வெளியாகிப் பெற்ற வெற்றி என நடந்த உண்மை நிகழ்வுகளை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.

ரஷ்யாவில் படப்பிடிப்பினை முடித்துக் கொண்டு ஜப்பான் திரும்பும் போது நோகாமி ஒரு பூனைக்குட்டியை விலைக்கு வாங்கியிருக்கிறார். இதை ரஷ்யாவிலிருந்து கொண்டு செல்வதற்குத் தனியே அனுமதி கடிதம் பெற வேண்டியிருந்தது என்பதையும், தனது வீட்டில் அந்த ரஷ்யப் பூனை எப்படிச் செல்லப்பிராணியாக இருந்தது என்பதையும் குறிப்பிடுகிறார்.

குரோசாவாவிற்கும் தொஷிரே மிபுனேவிற்குமான நட்பு மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநர்கள் அவரோடு பழகிய விதம், அவரது திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுடன் உள்ள நெருக்கம் போன்றவற்றைக் கடைசி அத்தியாயத்தில் பதிவு செய்திருக்கிறார்

படப்பிடிப்பு இல்லாத போதும் நாங்கள் ஒரு குடும்பம் போல ஒன்றாகச் சேர்ந்து இருந்தோம். உணவு உண்டோம்.  இது ஒருவகையான சேனை. எங்கள் நோக்கம் சிறந்த திரைப்படத்தை உருவாக்குவது என்கிறார் நோகாமி. இவரது பதிவுகளின் வழியே குரோசாவாவின் விருப்பு வெறுப்புகளும் ஆளுமையின் பன்முகத்தன்மையும் சிறப்பாக வெளிப்படுகிறது.

சைபீரிய பனிப்பிரதேசத்தின் பிரம்மாண்டத்தைக் காணும் அகிரா குரோசாவா உடனே ஆன்டன் செகாவை நினைவு கொள்கிறார். அவர் எழுத்தில் உருவாக்கிக்காட்டிய அழகினை எப்படித் திரையில் கொண்டுவருவது எனக் கேமிராமேனிடம் கேட்கிறார். ரஷ்ய இலக்கியங்களின் மீது குரோசாவா கொண்டிருந்த பெரு விருப்பம் வெளிப்படும் அழகான தருணமது.

டெர்சு உசாலாவைக் காணும் போது அவர் ஆன்டன் செகாவ் எழுத்தில் காட்டியதை விடவும் பேரழகுடன் பனிப்பிரதேசத்தை பதிவு செய்துள்ளார் என்பது புரிகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 03:31
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.