பட்டினிக் கலைஞன் - ஃப்ரன்ஸ் காஃப்கா


இடைவெளி சிற்றிதழின் ஆசிரியக்குழு கூட்டத்தில் பட்டினிக் கலைஞன் கதை பற்றி நடந்த விவாதத்தை கீழே ஒரு குறுங்கட்டுரையாகத் தொகுத்திருக்கிறேன்.அவன் ஒரு பட்டினிக் கலைஞன். அவனால் நீண்ட நாட்களுக்கு ஒரு கவளம் கூட சாப்பிடாமல் இருக்கவியலும். இந்தக் கலையை பொதுமக்களுக்கு முன்னால் நிகழ்த்திக்காட்டி பிழைத்து வருகிறான். ஒரு காலத்தில் ஐரோப்பிய நகரங்கள் எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தக் கலை நாளடைவில் மக்களிடத்தே செல்வாக்கை இழக்க ஆரம்பிக்கிறது. முன்பு போல கூட்டம் வருவதில்லை. அதன் பொருட்டு அவன் சார்ந்திருக்கும் நிறுவனத்திலிருந்து விலகி சர்க்கஸ் ஒன்றில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அங்கு குதிரைகள் கட்டிப் போடும் இடத்திற்கு அருகே அவனுக்கு ஒரு கூண்டு ஒதுக்கப்படுகிறது. அங்கும் அவனுக்கு பெரிய கவனமில்லை. குதிரைகளைப் பார்க்க வருபவர்கள் ஒன்றிரண்டு பேர் வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவார்கள். ஆனாலும் தொடர்ந்து அவன் தன் பட்டினிக் கலையை நிகழ்த்துகிறான். ஒரு கட்டத்தில் உணவே எடுத்துக் காட்டாமல் அந்தக் கூண்டில் அவன் அமர்ந்திருக்கும் வைக்கோலுடன் வைக்கோலாகப் பொதிந்து இறந்தும் போகிறான். பின்பு, அதே இடத்தில் ஒரு இளம் சிறுத்தையை விடுகிறார்கள். அங்கே மக்கள் கூட்டம் குவிகிறது. இப்படியாக முடிகிறது கதை.அதிகம் கொண்டாடப்பட்ட காஃப்காவின் கதைகளுள் முக்கியமான கதை இது. இந்தக் கதை முழுவதும் ஒரு பார்வையாளனின் கோணத்தில், செய்தி அறிக்கையின் மொழியில் சொல்லபட்டிருக்கிறது. கதையில் பட்டினிக் கலைஞன் என்றே சொல்லப்பட்டிருந்தாலும், கிடைக்கப்பெற வேண்டிய உரிய கவனத்தைப் பெறாமல் வெதும்பும் அத்தனை கலைஞர்களின் கதையையுமே இது பேசுகிறது.இந்தக் கதையை அசோகமித்திரன் எழுதிய 'புலிக் கலைஞனுடன்' பொருத்திப் பார்க்கலாம். இவன் பட்டினிக் கலைஞன். அவன் புலிக் கலைஞன். இருவரும் அவரவர் கலையில் விற்பன்னர்கள். இவன் தன் பட்டினிக் கலைக்கு போதிய வரவேற்பில்லாமல் சர்கஸ்ஸில் சேருகிறான். அவன் புலிவேசக் கலைக்கு மக்களிடம் வரவேற்பில்லாமல் சினிமாக் கம்பெனியில் வாய்ப்பு தேடி வருகிறான். இருவருமே தற்தம் கலையின் அழிவுக்கு ஒருவகையில் காரணமாக இருந்த மற்றொரு நிறுவனத்தினிடமே வந்து சேர்கிறார்கள். (காஃப்கா நிறுவன அமைப்புகளுக்கு எதிராகச் செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது ) கடைசியில் அங்கும் தன்னைப் பொருத்திக் கொள்ளவியலாமல் ஒருவன் தொலைந்து போகிறான். மற்றொருவன் இறந்தே போகிறான். இந்தக் கதையில் அவன் இறந்ததும், அவனிடத்தில் வந்து அவனுக்கு கிடைக்காத அனைவரின் கவனத்தையும் தன்னிடத்தில் ஈர்க்கும் இளம் சிறுத்தை ஒரு முக்கியமான உருவகம். சினிமாவென்னும் மாபெரும் வெளிச்சத்தின் முன்பு கரைந்து போகும் புலிக்கலைஞன் போலவே இக்கதையில் வரும் சிறுத்தை அவனிருந்த சுவட்டைக் கூட முற்றிலும் அழித்துவிடுகிறது. ஒரு வேளை அசோகமித்திரன் இந்தக் கதைக்கு பட்டினிக் கலைஞன்தான் இன்ஸ்பிரேஸனாக இருந்திருக்குமோ? தெரியவில்லை. அப்படியே ஒரு வேளை இருந்திருந்தாலும் கூட அதனதன் அளவில் இரண்டு கதைகளுமே மிக மிக முக்கியமான கதைகள்.தன்னுடைய கலைக்கு மக்களிடத்தே உரிய கவனமும் பாராட்டும் கிடைக்கவில்லை என்றாலும் அவன் அதில் தொடர்ந்து இயங்குகிறான். இந்த இடத்தில் பாரதியையும், புதுமைப்பித்தனையும் நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.கதை முழுவதும் தன் கலையின் மீது அவன் கொண்ட தீராப்பற்றினைப் பற்றியே கூறப்பட்டிருக்கும். நாற்பது நாட்களுக்கும் மேலாகக் கூட அவனால் பட்டினி கிடக்கவியலும். அவனுடைய கலையின் மீதான பசியின் வழியே தான் அவன்தன் உடலின் பசியை வெல்கிறான். இப்படியாக சொல்லிக் கொண்டே வந்து, கடைசியாக ஓர் இடத்தில் தனக்கு 'திருப்தியான உணவு' கிடைத்திருந்தால் தான் ஏன் இந்தப் பட்டினிக் கலையில் ஈடுபடப் போகிறேன் என்று கூறுவான். இந்த இடத்தில் சுரா தன் பேட்டியில் சொன்ன ஒரு வாக்கியம் நினைவுக்கு வருகிறது - "கலைஞன் ஓர் அதிருப்தியாளன்". ஆம், அவன் கொண்ட அதிருப்தியின் வெளிப்பாடே கலையாக பிரவாகமெடுக்கிறது. காஃப்காவிடம் எழுத்தாகவும், வான்காவிடம் ஓவியமாகவும்.வாழ்வின் மீது திருப்தி கொண்ட ஒரு கலைஞன் கூட இருக்க முடியாது. அகம், புறம் என தான் எதிர் கொள்ளும் ஏதோ ஒரு வாழ்வியல் சிக்கலே எந்த ஒரு கலைஞனையும் தொடர்ந்து இயங்கச் செய்கிறது.
Image may contain: 1 person, suit and close-up
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 10, 2018 08:42
No comments have been added yet.


Karthik Balasubramanian's Blog

Karthik Balasubramanian
Karthik Balasubramanian isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Karthik Balasubramanian's blog with rss.