போர்ஹேஸின் 'மணல் புத்தகம்'
நேற்று மாலை திருவல்லிக்கேணியில் இருக்கும் பரிசல் புத்தக நிலையத்தில் "இடைவெளி" சிற்றிதழின் ஆசிரியர்க் கூட்டம் நடைபெற்றது. அடுத்த இதழுக்கான உள்ளடக்கம் குறித்தான விவாதத்தோடு, ஏதேனும் ஒரு படைப்பை எடுத்து அது பற்றி உரையாடலையும் வைத்துக் கொள்ளலாம் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. சம்பத்தின் 'இடைவெளி' நாவல் குறித்த உரையாடல் கடந்த முறை நடைபெற்றது. எழுத்தாளர் சி.மோகன் அன்று சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற கூட்டத்தில் போர்ஹேஸின் "மணல் புத்தகம்" சிறுகதை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. போர்ஹேஸின் கதைகள் அடர்த்தியும், செறிவும் கொண்ட சிறிய கதைகள். "மணல் புத்தகம்" கதையும் கூட மூன்றே பக்கங்கள் கொண்ட சிறிய கதை. (முதல் கமெண்டில் கதையின் லிங்க் தரப்பட்டிருக்கிறது). அந்த உரையாடலைத் தொகுத்து இங்கு கட்டுரையாக்கியிருக்கிறேன்."எல்லா அலங்காரமான வாக்கியங்களையும், திரும்பக் கூறல்களையும், தொடர் புள்ளிகளையும், பயனற்ற ஆச்சர்யக்குறிகளையும், நீக்குவதற்குக் (எனக்கு) கற்றுத் தந்தார் போர்ஹேஸ். இந்தப் பழக்கம் இன்றும் மோசமான இலக்கியத்தில் காணப்படுகிறது. அதில் ஒரு வரியில் சொல்லப்பட வேண்டியி விஷயம் ஒரு பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும்" - லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர் ஹூலியோ கொர்த்தஸார் (தமிழில் - பிரம்மராஜன்)"கணக்கிலடங்காத புள்ளிகளை ஒருங்கே கொண்டது ஒரு கோடு; எண்ணிக்கையற்ற பல கோடுகளை கொண்டது ஒரு சமவெளி; கணக்கிலடங்கா சமவெளிகள் ஒரு கண பரிமாணம்; எண்ணற்ற கணபரிமாணங்கள் பெருத்த அதிகனமான பரிமாணமாகும்" என்று ஒரு அறிவியல் தியரியை முன்வைத்து கதையை ஆரம்பிக்கிறார் போர்ஹேஸ். அதன் வழியே இப்பிரபஞ்சம் என்னும் முடிவிலி குறித்துப் பேச விழைகிறார். ஆனால் அப்படிப் பேசுவதற்கு அறிவியலை விட புனைவே அவருக்கு உகந்ததாக இருக்கிறது. இப்படியாக கதைக்குள் வருகிறார்.கதைசொல்லியின் வீட்டிற்கு அந்நியன் ஒருவன் வருகிறான். அவனிடத்தே மாயப்புத்தகம் ஒன்றிருக்கிறது. அதை அவன் இந்தியாவின் பைக்கானர் என்னும் இடத்திலிருந்த தீண்டதாகாதவன் ஒருவனிடமிருந்து பெற்று வந்ததாய்க் கூறுகிறான். அதன் விளிம்பில் திருமறை என்றும் அதன் பின்னால் "பம்பாய்" என்றும் எழுதப் பட்டிருக்கிறது. அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தையோ, கடைசிப் பக்கத்தையோ கதை சொல்லியால் கண்டறியவே முடியவில்லை. அதன் பக்க எண்கள் வரிசைப் பிரகாரம் இல்லாமல் தாறுமாறாக அச்சிடப் பட்டிருக்கின்றன. ஒரு முறை பார்த்த பக்கத்தை எத்தனை முறை முயற்சித்தும் அடுத்த முறை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை.கதை சொல்லி, தனது மாதாந்திர பென்சன் பணத்தையும் தன்னிடமிருக்கும் வைக்கிலிப்பின் கருப்பு எழுத்து பைபிளையும் தந்து அந்த மாய மணல் புத்தகத்தைப் பெற்றுக் கொள்கிறான்.இப்படிக் கிடைத்த அரிய புத்தகம் தன்னிடம் வந்ததிலிருந்து அவனுக்குத் தூக்கம் வருவதில்லை. அப்புத்தகத்தை புரிந்து கொள்ளவும் பெரிய சிக்கலாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அப்புத்தகத்தையே எரித்து விட எண்ணுகிறான். ஆனால், அது பற்றி எரியும் தீயும் முடிவிலியாகிவிட்டால் இந்த உலகம் என்னாவது என்றெண்ணி அதையும் கைவிடுகிறான். ஒரு இலையைத் தொலைப்பதற்கு வனம்தான் சிறந்த இடம் என்று முடிவு செய்து அப்புத்தகத்தை ஒரு நூலகத்தில் மறைத்து வைக்கிறான்.இப்படியாக முடிவிலியான பிரபஞ்சத்தை ஒரு மாய மணல் புத்தகம் கொண்டு எழுதியிருக்கிறார். உண்மையில் ஒவ்வொரு புத்தகமுமே அதனளவில் முடிவிலியாகவே இருக்கிறது. ஒரு ஆசிரியன் தன் வாழ்வின், தனது கதையின் ஒரு பகுதியை மட்டுமே புத்தகத்தில் தருகிறான். அப்புத்தகத்திற்கு முன்னும் பின்னும் சொல்லப்படாத விசயங்களின் தொடர்ச்சி முடிவிலியாகவே இருக்கிறது. அந்த மாயப்புத்தகத்தின் பக்கங்களைப் போலவே நாம் வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் இருக்கிறது. நானும் நீங்களும் ஒரு புத்தகத்தை ஆளுக்கு ஒரு பிரதியெடுத்து வாசித்தாலும், நான் வாசிக்கும் புத்தகமும் நீங்கள் வாசிக்கும் புத்தகமும் ஒரே புத்தகமாக இருக்க முடியாது. என்னுடைய அறிதலும், சூழலும், மனோபாவமும் அந்தப் புத்தகத்தை முற்றிலும் வேறோன்றதாக ஆக்குகின்றன. எனவே, ஒருவகையில் எல்லாப் புத்தகங்களும் மணல் புத்தகங்களே!இதற்கு ஏன் அவர் "மணல் புத்தகம்" என்று பெயரிட்டார்? அதன் விளக்கம் இக்கதையிலேயே ஒரு வரியில் வருகிறது. இப்பிரபஞ்சத்தைப் போலவே, இந்த மணலும் கூட முடிவிலியாக இருக்கின்றது. ஒன்றோடு ஒன்று கலவாமல் இருக்கிறது. ஆனாலும் ஒன்றாக இருக்கிறது. இந்தப் புத்தகம் இந்தியாவின் 'பைக்கானர்' என்னும் இடத்திலிருக்கும் ஒருவரிடமிருந்து பெறப்படுகிறது. பைக்கானர் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் நடுவில் பரந்த மணல்வெளியில் அமைந்திருக்கும் ஒரு நகரம். தலைப்பிலிருந்து கதையின் ஒவ்வொரு புள்ளியாக இணைத்து முற்றிலுமாக புதியதொரு பரிமாணத்தைத் தருகிறார்.இத்தனை மாயங்களையும் நிகழ்த்தும் ஒரு புத்தகம், அவன் நிழலை மிதித்தால் கூட பாவம் என்றெண்ணும் ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவனிடமிருந்தே கிடைக்கிறது. அப்போது அவன் எப்படி தீண்டத்தகாதவனாக இருக்க முடியும்?அந்தப் புத்தகம் ஏன் நம் கதைசொல்லியை அப்படி அலைக்கழிக்கிறது? எப்போதும் மனித மனம் முதலும் முடிவும் கொண்ட, அவனால் வரையறுக்க இயன்ற ஒன்றை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. அவனால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று அவனை எவ்வளவுக்கெவ்வளவு ஈர்க்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு வெளியே தள்ளுகிறது. பிரம்மிப்பூட்டுகிறது. திணரச் செய்கிறது. கடைசியில் அவனை தோல்வியில் தள்ளுகிறது.

Published on July 10, 2018 08:47
No comments have been added yet.
Karthik Balasubramanian's Blog
- Karthik Balasubramanian's profile
- 12 followers
Karthik Balasubramanian isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
