விடுதலை, திரையரங்கில்…

இன்று, 3 ஏப்ரல் 2023 ல் விடுதலை படத்தை நாகர்கோயில் ராஜேஷ் திரையரங்கில் அருண்மொழியுடனும் அஜிதனுடம் சென்று பார்த்தேன். நல்ல கூட்டம், குடும்பத்துடன் ஏராளமானவர்கள் வந்திருந்தார்கள்.

எப்போதுமே திரைப்படங்களை அரங்கில் பார்க்க நான் விரும்புவேன். திரையரங்க அனுபவம் என்பதே தனியானது. தமிழகத்தில் என்றுமே சினிமா பார்ப்பதில் ஏராளமான சிக்கல்கள் உண்டு. சினிமாவை  என்றல்ல, எதையுமே கவனமாகவும் முறையாகவும் பார்க்கும் பழக்கம்பொதுவாக நமக்கில்லை. அது ஒரு வாழ்முறையாகவே இங்குள்ளது.

படம் தொடங்கி பாதியில் வந்து கதை கேட்பவர், படம் ஓட ஓட கதையை சொல்லிக்கொண்டே வருபவர், முன்னரே பார்த்துவிட்டு வரப்போகும் காட்சியைச் சொல்பவர் என முன்பிருந்தே பல கதாபாத்திரங்கள் உண்டு. இப்போதைய புதிய சிக்கல், செல்பேசி. படம் ஓடும்போதே போனில் பேசிக்கொண்டும், டைப் செய்துகொண்டும் இருக்கிறார்கள். ஒளி கண்ணில் அடிக்கிறது. என் முன் ஓர் அம்மையார் படத்தின் காட்சிகளை செல்பேசியில் படம்பிடித்தபடியே இருந்தார், முழுப்படத்தையும் செல்பேசித் திரையில்தான் பார்த்தார்.

ஆனாலும் கூட்டத்துடன் படம் பார்ப்பது இனியது. முதலில் வீட்டைவிட்டு வெளியே கிளம்புவதே ஒரு நல்ல அனுபவம். கூட்டத்துடன் ஒன்றாக இருக்கும் எல்லாமே எனக்கு பிடிக்கும், திருவிழாக்கள் குறிப்பாக. படம் பற்றிய எதிர்வினைகளை அரங்கிலேயே காணமுடிவது படங்களில் வேலைபார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு முக்கியமானது.

நாகர்கோயில் ராஜேஷ் அரங்கம் பழையது. பத்தாண்டுகளுக்கு முன் புதுப்பித்து ஏஸி செய்தார்கள் என நினைக்கிறேன். ஒலி அமைப்பு கொடூரம். அதைவிட திகைக்கவைப்பது படம் திரையிடப்படுவதின் தரம். திரையில் பிரச்சினையா, புரஜக்டர் பிரச்சினையா தெரியவில்லை, திரையில் வட்டமாக ஒரு இளநீல வெளிறல் இருந்துகொண்டே இருந்தது. எல்லா காட்சிகளும் வெளிறிப்போய் அபத்தமாக தெரிந்தன. பழுதடைந்த பழைய தொலைக்காட்சியில் படம் பார்க்கும் அனுபவம். பாவம் வேல்ராஜ் என நினைத்துக் கொண்டேன்.

திரையரங்கில் எவரும் என்னை அடையாளம் காணவில்லை. ஒருவர் மட்டும் கொஞ்சம் தயங்கி கேட்டார், ஆமாம் என்றேன். அஜிதன்  “எப்படி தைரியமாக நம்பி தியேட்டருக்கெல்லாம் வர்ரே?” என்றான்.

“என்னை யாருக்கும் தெரியாது, நீயே பாரேன்” என்றேன்

“யூடியூபிலயும் ஃபேஸ்புக்கிலேயும் ஒரே ரணகளமா இருக்கே” என்றான்.

“யூடியூபிலே சினிமா டிரெயிலர்கள், பிரமோ நிகழ்ச்சிகள், பாட்டுகள் வர்ரது வேற. ஆனா சினிமா பத்தி அதிலே பேசுறவங்களோட உச்சகட்ட ஹிட் என்பதே ரெண்டு மூணு லட்சம். அப்டீன்னா மொத்தமா எல்லாத்தையும் ஒரு லட்சம்பேர் பாக்கிறாங்க. ஒரு ஹிட் சினிமாவை தியேட்டருக்கு வந்து பாக்கிறவங்களே ஒரு கோடிக்கும் மேல்… நூற்றிலே ஒருத்தர்கூட யூடியூப் சினிமாப் பேச்சுக்களைப் பாக்கிறதில்லை. அதிலே என்னோட பேட்டிகள் எல்லாம் அதிகபட்சம் அம்பதாயிரம் ஹிட் போகும். அதாவது ஒரு பதினஞ்சாயிரம் பேர் பாக்கிறாங்க. சினிமா பாக்கிறவங்களிலே ஆயிரத்திலே ஒருத்தர் பாக்கிறாங்க… ஃபேஸ்புக்ல மிஞ்சிப்போனா ஒரு அஞ்சாயிரம்பேர், அவ்வளவுதான்” என்றேன்

”அவ்ளவுதானா?”

“சினிமா பத்தின இந்த சர்ச்சைகள் முழுக்க நடக்கிறது ஒரு ரொம்ப குட்டி உலகத்துக்குள்ள… ஆனா அதிலே ஒரு வருமானம் இருக்கு. கொஞ்சம் புகழ் இருக்கிற மாதிரி இருக்கு. அதை பங்குவைக்கத்தான் அவ்வளவு போட்டி. ஒவ்வொரு சினிமா வந்ததும் பலபேர் அதைப்பத்தி ஏதாவது பேசுறது, யூடியூப்ல பதிவு போடுறது எல்லாமே அந்த சினிமாவோட வெளிச்சத்திலே கொஞ்சநேரம் நிக்கிறதுக்காகத்தான். ஏன்னா சினிமா தவிர எதையும் இங்க ஜனங்க கவனிக்கிறதில்லை. அதான் எல்லாருமே சினிமா விமர்சனம் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. எழுத்தாளர்கள் , பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் எல்லாமே… இப்ப சினிமா விமர்சனம் கொஞ்சம் சலிப்பாயிடுச்சு… ஏகப்பட்டபேர் வந்திட்டாங்க. அதனாலே ஏதாவது நெகெட்டிவா சொல்லியாகணும். ஏதாவது வசைபாடியாகணும். அப்பதான் ஹிட் வரும்…அது ஒரு டிரெண்ட்…அந்த மொத்த பேச்சும் அதிகம்போனா ரெண்டு வாரம்தான். அடுத்த சினிமா வர்ர வரைக்கும்…யாரும் யாரையும் கவனிக்கிறதே இல்லை…” என்றேன்.

இணையம் சினிமாவுக்கான செலவு குறைந்த வலுவான விளம்பரச் சாதனம். சினிமா ’பிரமோ’ எனப்படும் உரையாடல்கள் ஒரு மெல்லிய கவனச்சூழலை உருவாக்குகின்றன. ஆகவே அதை சினிமா பயன்படுத்திக் கொள்கிறது. அதற்குமேல் சினிமாக்காரர்களுக்கு அவை முக்கியமில்லை. ஆனால் எப்படியும் ஒரு பத்தாயிரம்பேர் அதிலேயே உணர்ச்சிகரமாக விழுந்து கிடக்கிறார்கள் என நினைக்கிறேன். நல்லதுதான், சினிமாவுக்கு எந்தக் கவனமும் நல்லதே. மேலும் இப்படி சினிமா சர்ச்சைகளில் இருந்து  அடுத்த சினிமாச் சர்ச்சைக்குச் சென்று அதிலேயே வாழ்பவர்கள் வேறு எதையும் குறிப்பிடும்படிச் செய்யும் தன்மை அற்றவர்கள்.

படம் அரங்கில் வலுவான தாக்கத்தை உருவாக்குவதைக் காணமுடிந்தது. காட்சிகள் வழியாக உணர்த்தப்படும் உணர்ச்சிகளே முதன்மையாக இப்படத்தின் தனித்தன்மை. தொடக்கக் கட்ட ரயில் விபத்துக் காட்சி தமிழ் சினிமாவின் சாதனைகளில் ஒன்று.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 03, 2023 11:34
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.