எழுகதிர்நிலம், கடிதம்

அருகர்களின் பாதை வாங்க 

பாலைநிலப்பயணம் செல்வேந்திரன் வாங்க 

தேவியின் தேசம் வாங்க 

அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு வணக்கம், நலம்தானே?

கடந்த 25-2-23 கடலூரில் ஒரு நூல் வெளியீட்டிற்குத் தலைமை ஏற்றேன். கவிஞர் மீனாட்சி சுந்தரமூர்த்தி எழுதிய ”அயல்வெளிப் பயணங்கள்” என்னும் பயண நூல் அன்று வெளியிடப்பட்டது. அவர் அமெரிக்கா சென்றது பற்றி எழுதி இருந்தார்.  என் தலைமை உரையில் தங்களைப் பற்றித்தான் பத்து நிமிடங்கள் பேசினேன். தங்களின் பயணம் செல்லும் ஆர்வம் பற்றியும், அடிக்கடித் தாங்கள் பயணம் செல்வதையும், எழுதும் பயணக்கட்டுரைகள் பற்றியும் விரிவாகப் பேசினேன். குறிப்பாக எழுகதிர்நிலம் பற்றிப் பேசினேன். நண்பர் சீனுவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.

இந்த எழுகதிர் நிலபயணக் கட்டுரைகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டன. பாராட்டவேண்டியதைப் பாராட்டும் தங்கள் பண்பு தவாங் சமவெளிக்குப் போகும்போது அங்கிருக்கும் சாலை அமைப்புகள் பற்றிக் கூறும்போது வெளிப்பட்டுள்ளது. வடகிழக்கு மக்களின் அன்றைய நிலை பற்றிய அறிய  தாங்கள் பி.ஏ. கிருஷ்ணன் எழுதிய  ”கலங்கிய நதி”யைப் படிக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறீர்கள். அந்த நூலைப் படிக்கும் ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

அசாமில் ஏற்பட்ட மாணவர் கிளர்ச்சிதான் ஒரு கட்சியாக உருவெடுத்துப் பின்னர் அது ஆட்சியையே அங்கு கைப்பற்றியது. ஆனால் அது அரசியல்கட்சியாக மாறியபின்னர் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரிய பண்புகள் அதற்கும் வந்து விட்டன. அதனால்தான் இன்றுவரை மாணவர் கிளர்ச்சியாளர்களை மனக்கசப்புடன் பார்க்கிறார்கள் என்று நீங்கள் எழுதி இருப்பதன் உண்மை புரிகிறது. அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவைத் தாங்கள் பாராட்டியது சிறப்பான பதிவாகும்.

சாலையில் ஆங்காங்கே ஆங்கிலத்தில் இருக்கும் சொற்றொடர்களின் கவிநயத்தைத் தாங்கள் குறிப்பிட்டிருப்பது சிறப்பாக உள்ளது. உதாரணத்திற்கு “This is a highway, not a runway”. மூங்கில் குருத்துகளைப் புட்டிகளில் அடைத்துவைத்துக் கடைகளில் விற்பதும், காட்டு உயிர்கள் ஏதும் வடகிழக்கே நிறைய இல்லை என்பதும் முக்கியமான செய்திகள். வேட்டையாடிகளின் கைவண்ணம் அது.

நம்நாட்டு முற்போக்கு இடதுசாரிகள் எப்பொழுது வாக்கு வங்கியைக் குறிவைக்கத் தொடங்கி விட்டார்களோ அப்போதே அவர்களின் கொள்கைப் பாரம்பரியம் அடிபட்டுவிட்டது. அதனால்தான் திபெத்தின் மீது நடந்த சீன ஆக்கிரமிப்பை அவர்கள் கண்டிக்கத் தயங்கிவிட்டார்கள்.

தெம்பாங்கில் நடந்த நிகழ்ச்சி இரண்டாம் நாள் பயணத்தில் முக்கியமான ஒன்று. ஓட்டுநரை வழி திருப்பித் திருவிழா பார்க்கச் சென்றதுதான் அது. அவ்வூர்த்தலைவர் அனைவர்க்கும் வெண்பட்டுச்சால்வை அணிவித்து வரவேற்றது மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் அது குடித்திருவிழா போலும். எல்லாருக்கும் இலவச மது வழங்கப்பட்டிருந்ததும் அனைவரும் நன்கு குடித்து அதை ஒரு கொண்டாட்டமாக அவர்கள் நிகழ்த்தியதும் அத்திருவிழாவின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. “ஆனாலும் நம்மூர் போல பூசல்களும் அத்துமீறல்களும் அங்கு அப்பொழுது இல்லை” என்ற தங்கள் பதிவு அவர்களின் பண்பை உணர்த்துகின்றது.   அவர்களின் பள்ளிக்கு ரூ 15000 அளித்த அரங்கசாமியின் நல்ல உள்ளம் போற்றுதலுக்குரியது.

சேலாபாஸ் உச்சி பற்றிய வருணனை சிறப்பாக உள்ளது. அங்குள்ள 101 ஏரிகளைப் பற்றிக் குறிப்பிட்டு அவை புனிதமானவை என்றும் அவற்றில் தீர்த்தாடனமும் நடக்கிறது என்றும் எழுதியிருப்பது நம் நாட்டின் 108  வைணவ திவ்யதேசங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது.

1965-இல் சீனப்போரில் நாட்டுக்காக உயிர் நீத்துத் தியாகம் செய்த இராஜஸ்தான் வீரர் ஜஸ்வந்த்சிங்கின் தியாகம் மறக்க முடியாதது. ஜாங் அருவியில் நின்றுகொண்டிருந்த போது எழுந்த உங்கள் மன எழுச்சிகளை நன்கு பதிவுசெய்து இருக்கிறீர்கள். படித்து உணர வேண்டிய ஒன்று அது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலமின்மை, மற்றும் எண்ணங்களின் ஒழுங்கு போன்றவை மிகவும் முக்கியமானவையாகும்.

சீன ஆக்கிரமிப்பு பற்றித் தாங்கள் எழுதி இருப்பது நேருவின் மறுபக்கத்தைக் காட்டுகிறது. உண்மையில் நேரு எல்லாரையும் தம்மைப் போலவே நினைத்தார். அதுதான் அது அவருக்குப் பல சங்கடங்களை உண்டாக்கியது. அவருக்கிருந்தது கற்பனாவாதப் புரிதல் என்று சரியாகக் குறிப்பிட்டு உள்ளீர்கள்.

”பனிச்சாலைகளில் சக்கரங்களைச் சங்கிலியால் கட்டிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பனியில் சக்கரங்கள் முன்னே செல்லாமல் சுழலத் தொடங்கிவிடும்” என்பது புதிய செய்தியாகும். எந்தச் செய்தியையும் விட்டுவிடாமல் பதிவு செய்வதால்தான் உங்கள் பயணக்கட்டுரைகள் வாசிக்கக் களைப்பின்றி சுவாரசியமாக இருக்கின்றன.

வழியில் நாய்க்குட்டியை அரங்கசாமி தூக்கிக்கொண்டது, வண்டிகளில் ஏற்பட்ட பழுது, உணவு ஒவ்வாமையாகி வயிற்றைத்  தொந்தரவு செய்தது போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம். ஷெர்கோவான் என்னும் இடத்தில் நூலகம் சென்றதையும், அங்கு ஹெலன்கெல்லர் பற்றி வாசித்ததையும் எழுதி உள்ளீர்கள். சிறந்த வாசிப்பாளருக்கு சிறிது நேரம் கிடைத்தாலும் வாசிக்கத்தான் தூண்டும் என்பதைத்தான் அது உணர்த்துகிறது

நோஹாலிகை அருவி பற்றிய தொன்மக் கதை நல்ல பதிவு. வழியில் பார்த்த ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தையும் குறிப்பிட்டுள்ளீர்கள். வியப்பு என்னவென்றால் அங்கு பெண்களே நிறைய இருந்தனர் என்பதுதான். எங்கும் வறுமை இல்லை, நல்ல சீருடையும், ஆங்கிலக் கல்வியும் காணப்பட்டது என்பது அவர்களின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது

கட்டுரையில் ஆங்காங்கே மின்னல் தெறிப்புகளாகத் தோன்றிய இலக்கிய நயங்களைக் காட்டி இதை முடிக்கிறேன்.

“புல் நுனிகள் தீட்டப்பட்டு சவரத் தகட்டினை  கூர்கொண்டுவிட்டதைப்போல”

”இந்தப் பயணம் ஒரு சுழல் படி. ஒரு மாபெரும் இசைத்தட்டில் ஊசியாகச் சுழல்வது போல”

”சாலையோரப் புற்கள் எல்லாம் பருத்திப் பூப்போல பனி ஏந்தி இருந்தன”.

”கற்பனாவாதக் கொண்டாட்டத்திற்கு அடியில் உடல் யதார்த்தவாதக் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது”.

”நுரையீரல் ஒரு குளிர்நீர் தோல்பை”

”சில இடங்களில் சாலை பிய்ந்து விழுந்து மலையில் புண் போல் தெரிந்தது”.

”நான் ஒரு பேனாவாக உணர்ந்தேன். என்னைக்கொண்டு சுழித்துச் சுழித்து எவரோ எழுதிக் கொண்டிருந்தார்கள்”.

”குறுந்துயில்கள் இனியவை; சிறு மிட்டாய் போலத் தித்தித்திப்பவை.

வளவ. துரையன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 28, 2023 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.