தளர்ந்தார் தாவளம் – மைத்ரி நாவலை முன்வைத்து- செளந்தர் G

மைத்ரி நாவல் வாங்க  மைத்ரி மின்னூல் வாங்க

கவிஞர் சாம்ராஜ், மைத்ரி நாவல் விமர்சன கூட்டத்தில், வேடிக்கையாகவும், தீவிரமாகவும் ஒன்றை சொன்னார், அதாவது, ”சில நாவல்களில் நிலம் சார்ந்த வர்ணனைகள் வரும்பொழுது பக்கம் பக்கமாக விவரித்திருப்பார்கள், நாம் அங்கே  நேரில் சென்று பார்த்தால் அப்படி ஒரு நிலமே இருக்காது, அல்லது நாவலாசிரியர் தனது கற்பனையில் உருவான ஒரு நிலத்தை மிக மோசமான கதை கூறும் முறையினால் நம்மால் அணுகவே முடியாத ஒரு சித்திரத்தை அளித்திருப்பார். அந்த வகையில் மைத்ரி நாவலில் உள்ள இமயமும் அதன் கிராமமும் இன்னும் அங்கே அப்படியே இருக்கிறது என்று தோன்றுகிறது, நான் என்றேனும் இமயம் செல்லும்போது அஜிதனின் மைத்ரி நிலத்தை அங்கே காண்பேன்” என்று சொல்லியிருப்பார்.

அதன் பிறிதொரு அனுபவம் தான் எனக்கு மைத்ரி நாவல் கொடுத்தது. கடந்த இருபது வருடங்களில் வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ தொடர்ந்து இமயம் நோக்கி பயணிப்பவன் நான். அஜிதன் விவரித்திருக்கும் நிலக்காட்சிகளும், கிராமம், மலைகளின் மோனமும், கனவிலும் நினைவிலும் இன்றும் எழுபவை. ஆகவே நாவலின் முதல் ஐம்பது பக்கங்கள் முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது.

சௌகத் அவர்களின் ”ஹிமாலயம்” நூல் பயண நூலாக ஒரு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. அதன் பின்,  மைத்ரி  அதன் கதை சொல்லும் முறையாலும் அடிநாதமாக  ஓடிக்கொண்டிருக்கும் இளமையின் துடிப்பும், சமநிலையின்மையும், ஊசலாட்டமும் தான்,  இமாலய சாகச நூல்களிலிருந்தும்  ஆன்மீக பயண நூல்களிலிருந்தும் இந்த நாவலை வேறுபடுத்தி, உயரப்பிடிக்கிறது.

காதல் தோல்வியும், அதையடுத்த பயணமும், புதிய காதலும். என சராசரியாக முடிந்திருக்க சாத்தியமுள்ள கதையை, தேவையற்ற சோக கீதங்களை இசைக்காமல், கழிவிரக்கம் வேண்டி நிற்காமல், ‘எல்லாம் சரியாகி விடும்’ என்கிற பசப்பு மொழிகள் இல்லாமல், மனித மன உந்து சக்தியின் விசைகளை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டிவிட்டு,  இவையனைத்திற்கும், அச்சாணியாக அமைந்த ‘இச்சா சக்தி’யிடம்  சரணடைந்து விடுகிறது. கதை.

தெற்கிலிருந்து எப்போதும் யாரேனும் ஒருவர் கிளம்பி இமயம் நோக்கி சென்று கொண்டே இருக்கிறார்கள். இமயத்தின் பைராகிகள் ராமேஸ்வரம் நோக்கி வந்துகொண்டே இருப்பது போல.  ஆன்மீகமாகவோ, அகவிடுதலை தேடியோ, தோல்வியில் அஞ்சியோ, பயணம் எனும் பித்தேறியோ, இது பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்த நிலத்தில் நிகழ்கிறது.

நாவலின் நாயகன் ஹரன் காதல் தோல்வியின் சலிப்பும், விரக்தியும் மேலெழ, இமயம் நோக்கி செல்கிறான்.  சில நாட்களை அங்கே செலவளிக்கிறான் அதில் முக்கியமான மூன்று நாட்கள் தான் அவன் மைத்ரி எனும் கிராம பெண்ணை கண்டு கொள்வதும், மையல் கொள்வதும், அது வேறொன்றாக முடிவதும். என விரிகிறது கதை.

நாவலுக்கு இதுவரை வந்த விமர்சனங்களில் பெரும்பாலும் ஹரன்-மைத்ரி இளமை குறித்தும்,  காதல் குறித்தும் அவர்கள் செய்யும் பயண தருணத்தின் அழகியல் குறித்தும் பேசப்பட்டாலும், நாவலின் அடிப்படையான வேறு ஒன்றும் உள்ளது அது ஆண்களின் உலகம்.

ஹரனின் கொந்தளிப்பும், முதிரா காதலின் கிறுக்குத்தனங்களும் நாவல் முழுவதும் பேசப்பட்டாலும், நாவலில் வரும் முக்கியமான சில ஆண்களின் உலகமும், வாழ்க்கையும் வரும் பகுதிகள் கதைக்கு மேலும் உயிர்சேர்ப்பவை,  உதாரணமாக ஹரன் மைத்ரியுடன் அவளுடைய கிராமத்திற்கு செல்கிறான், அவளுடைய பெரியம்மா பேரழகி என கண்டு வியக்கிறான், இளமையில் இன்னும் பேரெழிலுடன் இருந்திருப்பாள் என சொல்லிக்கொள்கிறான், ஆனால் பெரியம்மாவிற்கு ஒரு காதல் தோல்வி இருக்கிறது அவர் மைத்ரியின் திருமணமாகாத மற்றுமொரு பெரியப்பாவே தான், இந்த இருவரையும் சந்திக்கும் ஹரனை, பெரியப்பா மட்டுமே மேலும் நன்றாக புரிந்து கொள்கிறார், ஹரனை ஆசிர்வதிக்கையில் ஒரு தந்தைக்கே உரிய பதட்டமும், பாசமும் ஒருங்கே சேர ஆசீர்வதிக்கிறார், அந்த தருணத்தில் பெரியப்பா சொல்ல விரும்புவது ‘உனக்கும் இது நிகழலாம் , இது இயல்பான ஒன்று ,ஆகவே தயாராயிரு’ என்பது தான்.

அடுத்த முதியவர்,  ஹரன் ஒரு விடுதியில் தங்கி இருக்கிறான் அதன் மேலாளர்  இளவயதில் மனைவியை இழந்தவர், மறுமணம் செய்து கொள்ளாதவர் இன்றுவரை அவள் நினைவில் வாழ்பவர், அவரும் ஹரனின் அலைக்கழிப்பை கண்டு கொள்கிறார், அவன் உடல் நலிந்து படுக்கையில் வீழ்கையில், ஒரு தந்தை என பணிவிடை செய்கிறார், அந்த உபசரிப்பில் தெரிவதும் ஹரன் அடையப்போகும் துயரினை கண்டுகொண்ட ஒருவரின் கரிசனம் தான். இந்த இருவரின் சித்திரமும்  பங்களிப்பும் கதையின் இறுதி வடிவத்திற்கு ஒரு முன் மாதிரி எனலாம்

தன்முனைப்பு, தன்னை சுற்றியே மொத்த பிரபஞ்சமும் இயங்குகிறது என்கிற சுயமும், துரும்பின் அளவே பெற்ற சில வாழ்வியல் வெற்றிகளும், அதன் மீது கொண்டாட்டமும் கொண்டவனுக்கு, தெய்வங்கள் கனிந்து மேலும் மேலும் கொடுத்துக்கொண்டே இருப்பதில்லை, அவனது சுயத்திற்கு நிகரான ஒன்றை முற்றிலுமாகவோ, சிறிது சிறிதாக குறிப்பிட்ட காலகட்டத்திற்குள்ளோ மொத்தமாக அபகரித்து விட்டு, அடுத்து என்ன செய்வாய்? என்கிற வெறுமையை முன்னிறுத்திருக்கிறது. அப்படியான ஒருவன் தான் ஹரன், நாவல் முழுவதும் அவனுடைய எண்ணங்கள், சிந்தனைகள், சொற்கள், செயல்கள், என  அனைத்தும் ”நான்… நான்… நான்” என்றே துடித்துக்கொண்டிருந்தது. அப்படி துடித்தவனுக்குத்தான் ‘உன்னதம் என நினைத்த காதல் அவனிடமிருந்து பறிக்கப்படுகிறது.  அதிலிருந்து எரிச்சலும் சலிப்பும், தோல்வியை கண்ட இளைஞன் எனும் நிலைக்கு செல்கிறான்

ஆக,  அவன் மேல் இரக்கம் கொள்வதற்கோ, பரிதாபம் அடைவதற்கோ ஏதுமில்லை. ‘சுயம்’ மட்டுமே அனைத்தும் என சிந்திப்பவனுக்கு இது நிகழும் என்பது மாறாவிதி.  அதில் ஒரு நல்லூழாக, இமய பயணத்திலும், பிரமாண்டமான அதன் இருப்பிலும் அழகிலும் மீட்டெடுக்கப்படுகிறான். ஹரனின் காதல் துயர் அல்லது அலைக்கழிப்பு என்கிற   இடத்தில எந்த மனிதருடைய துயரையும் பொருத்திப்பார்த்துக்கொள்ளலாம், துயருக்குப்பின் அவர் என்னவாகிறார் என்பதே முக்கியமான ஒன்று. ஹரனுக்கு இமயம் எனும் மாபெரும் ஆற்றலும் அதை பரிமாற்றம் செய்ய மைத்ரி எனும் மிகக்குறுகிய கால காதலும் இருந்தது.

இப்படி ஒரு மாபெரும் சக்தி எங்கேனும் இருக்குமானால் தளர்ந்து ஓய்ந்து போன ஒவ்வொரு உயிருக்கும் சிறிது இளைப்பாறல் என, மீட்டெடுத்தல் என, மீண்டெழல் என சில சாத்தியங்களை கண்டடைந்து, வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடலாம்,  அந்த மாபெரும் சக்தி என்பது, அறிவுத்தேடல், இசை, கலை, பயணம், ஆன்மீகம் என எதோ ஒரு வடிவில் இருக்கலாம்.

வைணவத்தில் திருமாலுக்கு ‘தளர்ந்தார் தாவளம்’ என ஒரு வியாக்யானம் உண்டு. தாவளம் என்பது சிறிது இளைப்பாறும் அல்லது ‘தஞ்சமென’ செல்லக்கூடிய ஒரு இடத்திற்கு பொருள். அதாவது திருமால் தளர்ந்தவர்கள் அனைவர்க்கும் தஞ்செமென அருள்பவன் என்கிறது பெரிய திருவந்தாதி. அப்படியான தாவளம் தான் ஹரனுக்கு மைத்ரியும், இமயமும்.

தத்துவார்த்தமான கேள்விகளும்  உருவகங்களும், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, நாவலுக்கு ‘வெளியே’ நிற்கிறது என்கிற சித்திரத்தைத்தான் தருகிறது எனினும் இதை முதல் நாவலிலேயே முயற்சி செய்து பார்த்த அஜிதனுக்கு வாழ்த்துக்கள்.

செளந்தர்.G

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2023 11:31
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.