சைபர்சாலை புத்தர்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

புதிய தலைமுறை டிஜிட்டலுகாக நீங்கள் பரிசல் கிருஷ்ணா அவர்களுக்கு கொடுத்த பேட்டியை பார்த்தேன். அதில் நீங்கள் சமூக வலைதளங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தது என்னை உலுக்கிவிட்டது.

கடந்த 5 ஆண்டுக்கு முன்பு  ‘சைபர் உளவியல்’ படிக்க வேண்டும் என தேடி பின்பு சைபர் உளவியல் தந்தை ஜான் சுலர் அவர்களின் மின்னஞ்சல் வழிகாட்டுதல் மூலம் நானாக பாடங்களை கற்றுத் தேர்ந்தேன். அன்றிலிருந்து சமூக வலைதள உளவியல், அரசியல், சைபர் சமூக ஆபத்துகளை பேசிக்கொண்டிருக்கிறேன். பெரிய அளவு யாரையும் அடைய முடியவில்லை. 

சமூக வலைதளங்கள் அடிப்படையில் இயங்கும் முறை என்பது echo Chamber என்றைழைப்பார்கள் நாம் பேசும் கருத்துக்கள் ஒத்த எதிரொலிக்கும் கருத்துகளை கொண்ட நபர்கள் தங்களுக்குள் குழு அமைத்துக்கொண்டு filter Bubbelல் சிக்கி கொள்கிறார்கள். நன்றாக அரசியல் படித்தவர்கள், வாசிப்புள்ளவர்கள், நிபுணர்கள்  கூட இந்த விஷ சூழலில் சிக்கிக்கொள்வதை பார்க்க முடிகிறது. 

எதிர்க்கருத்தை பேசவே கூடாது என்பதில் தொடங்கி, சிறிதும் கவனிப்பதே இல்லை என்னும் நிலைபாடு வரை சென்றடைகிறார்கள். வெறுப்பை எழுதும் போது கிடைக்கும் கவனம் அன்பை எழுதும் போது கிடைப்பதில்லை. அவதூறுகள், கேலிகள் நிரம்பிய மீம்களில்  தொடங்கும் நாள் அன்றைய டிரெண்டில் கலந்து கரைந்து விடுகிறது.

நீங்கள் முன் வைப்பது போல கவனம் சிதறுதலில் தொடங்கி அதற்கு அடிமையாகும் நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள் (Adiicted to Distraction). பின்பு கவனம்செலுத்த வைக்கும் எதுவும் இவர்களுக்கு கோபம் தருவதாக இருக்கிறது.   

உங்கள் பேச்சை கேட்கும் போது என்னை ஆச்சரியப் படுத்தியதும் உற்சாக படுத்தியதும், நீங்கள் முன்வைத்த சிறு-குறு சிதறல் எழுத்துகளில் இருந்து வெளியேறி நீண்ட வாசிப்பை முன் வைத்தமைதான். 

சரியாக சில ஆண்டுகள் முன் தான் சமூக வலைதள ஆர்ப்பரிப்பில் இருந்து விலகி இதற்கு மாற்றாக Long Reads கவனம் செலுத்த தொடங்கினேன். சில வாரங்களுக்கு முன்  மீண்டும் வலைப்பூவில் எழுதுவதை கட்டாயமாக்கியுள்ளேன். சமூக வலைதலத்தில் எழுதுவதை விட வலைப்பூவில் எழுதும் போது என தகவலும், சிந்தனையும் ஒழுங்கமைந்து வருவதை உனர முடிகிரது. இது தான் நிபுனர்களின் ஆலோசனையும், வழிகாட்டியும்.

பொதுவாக எனக்கு உங்களின் பல கருத்துகளில் உடன்பாடில்லை, என் சமூக வலைதளத்தில் உங்களை கேலி செய்த பதிவுகள் நிறைய இருக்கும். ஆனால் என் அடிப்படை கருத்து Listening. குறிப்பாக மாற்றுக் கருத்து, நமக்கு பிடிக்காத கருத்து கொண்டவரையும் கவனித்து, அவர் ஏன் அப்படி சிந்திக்கிறார் என்று ஆராய்வது என் வேலை. அதில் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. இது என அனுபவம். அதனால் உங்கள் எழுத்தை படிப்பதும் பேட்டிகளை கவனிப்பதும் தொடர்கிறது. பேட்டியில் பல கருத்தில் உடன்பாடில்லை ஆனால் இந்த சமூகவலைதளத்தை பற்றிய உங்கள் கருத்து கொஞ்சம் அசைத்து பார்த்தது. இந்த கடிதம் எழுத தூண்டியது. இத்த்னை ஆண்டுகள் உங்களை படிக்கிறேன் கடிதம் எழுத வேண்டும் என்று தோன்றியதில்லை. காரணம் நிறைய.

இரவு நாவலை 2011ல் படிக்கும் போது இதே இணையக் கூச்சலை பற்றி எழுதி இருந்தீர்கள் என்பதும் நினைவுக்கு வந்தது. அன்றிலிருந்து சமூக வலைதளங்களின் வெறுப்பு அதிகம் ஆகிகொண்டே தான் இருக்கிறது.

மூன்று வருடம் முன்பு ஏன் இந்த சமூக வலைதளங்களில் இருப்பவர்களை அன்பின் வழி திருப்ப முடியாதா, கவனிக்க வைக்க முடியாதா, சிந்திப்பதை ஒரு பணியாக தூண்ட முடியாதா என யோசித்து- பேசி வருகிறேன். பெரிய அளவில் சென்று சேரவில்லை. ஆனால் உங்கள் பேட்டியில் நீங்கள் சொல்வது போல் ஒருவேளை பொறுமையாக  என் பணியை செய்தால் ஒரு சிறு குழுவையாவது சென்று சேர முடியும் என நம்பிக்கை வந்தது. நன்றி.

பின்குறிப்பு: 

எனக்கு தமிழில் எழுத ஆசை ஆனால் பிழை அதிகம் வரும். எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் ஒரு இடதுசாரி ஆதரவாளன். உங்களுடன் முரண்படத்தான் வாய்ப்புகள் அதிகம். உங்களுடன் உடன்படும் கருத்து அதுவும் நான் பயணப்படும் களம் என்பதாலும், மிக சோர்வாக இருந்த நேரத்தில் உங்கள் பேச்சை கேட்டதும் உற்சாகம் வந்து கடிதம் எழுதிவிட்டேன். இதை நீங்கள் படிப்பீர்களா என்று கூட எனக்கு தெரியாது. 

வாழ்த்துகள். வணக்கம்.

நன்றி,

வினோத் ஆறுமுகம். (Cyber Buddha)
Vinod Kumar Arumugam
Digital Life Coach,
Pradanya e-Life
@thiruvinod4u

https://cybersangam01.blogspot.com/

அன்புள்ள வினோத்

உங்கள் பெயர் வினோதமாக உள்ளது– சைபர் புத்தர். 

ஒவ்வொரு செயலுக்கும் ஒருவகை துறவும் தேவைப்படுகிறது என்பது ஓரு நடைமுறை உண்மை. ஒரு தேர்வில் வெல்வதென்றால்கூட அதற்கான துறத்தல்கள் சில உள்ளன. ’நோன்பில்லாத புண்ணியம் ஒன்றில்லை’ என இதை மலையாளத்தில் சொல்வார்கள்.

இன்றைய சூழலில் நான் அறிவியக்கத்துக்காக கடைப்பிடிக்கவேண்டிய ஒரு நோன்பு என ’சமூக ஊடக விலக்கத்தை’ச் சொல்வேன். இன்று மாபெரும் தொடர்புவலையாக இணையம், சமூக ஊடகம் உள்ளது. அது அனைவரையும் இணைக்கிறது. அந்த இணைப்பு வணிகத்திற்கு மிக உதவியானது. அறிவியக்கத்துக்கு எதிரானது.

ஏனென்றால் அது அனைவரையும் நிகராக்குகிறது. அனைவரையும்  சராசரரியாக மாற்றுகிறது. அனைவரையும் ஒன்றையே பேச, ஒன்றுபோல யோசிக்க வைக்கிறது. அனைவருக்கும் ஒரே செய்திகளை அளிக்கிறது, அதை மட்டுமே பேசுபவர்களையே தூக்கிக் காட்டுகிறது. சராசரிகள்தான் அதற்கு வேண்டும். சராசரிகளைக் கொண்டுதான் அது செயல்பட முடியும்.

ஆனால் சிந்தனை, கலைச்செயல்பாடு, சேவை ஆகிய மூன்றுமே ஆளுமைத்திறனின் வெளிப்பாடுகள். ஆளுமைத்திறன் (பர்சனாலிட்டி) என்பது தனித்தன்மைதானே ஒழிய சராசரித்தன்மை அல்ல. ஒருவரிடம், அவருடையது மட்டுமான ஏதேனும் ஒன்று வெளிப்படவேண்டும். அவர் தன்னைத்தானே அவ்வண்ணம் கண்டடையவேண்டும். அதுவே அவருக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. தான் பொதுவெளியில் வெளிப்படுவதற்குரிய நியாயமான காரணம் உண்டு என உணரச்செய்கிறது. எவ்வகையிலேனும் இந்த சராசரிப் பரப்பில் இருந்து மேலே எழுந்து தெரிபவர்களையே நீண்டகால அளவில் அந்த சராசரிப் பரப்பேகூட கவனிக்கும்.

ஆனால் அவ்வாறு கவனிக்கப்படுபவர்கள் சராசரிகளால் எதிர்மறைக் கருத்துக்களால்தான் எதிர்கொள்ளப்படுவார்கள். ஏனென்றால் இன்றைய இணைய ஊடகம் எதிர்மறை மனநிலைகளாலானது. அதற்குக் காரணம், அது திரளின் விதிகள் வழியாகச் செயல்படுவது. 

ஆள்கூட்டம் அல்லது திரள் நான்கு விதிகள் வழியாகச் செயல்படுகிறது.

அ.சராசரித்தன்மை. அறிவார்ந்ததும், நுட்பமானதுமான விஷயங்களை விட மிக அதிகமானவர்களைச் சென்றடைவது அனைவருக்கும் உரிய சராசரியான விஷயங்களே. (இன்றைய விளம்பர உலகின், திரையுலகின் அடிப்படை விதி இது) 

ஆ. பெரும்பான்மை. ஒரு வெற்றிகரமான விஷயத்தின் இடம் பொதுவெளியில் பெரும்பான்மையினரால் வகுக்கப்படுகிறது. பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டதே அனைவருக்கும் உரியதாகிறது. அதுவே வணிகவெற்றி.

இ.  எதிர்மறைத்தன்மை. பெரும்பாலான சராசரி மக்கள் எதிர்மறைத்தன்மையால் ஈர்க்கப்படுகின்றனர். எதிர்மறை மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் இரண்டு அடிப்படை உணர்வுகளால் கட்டுண்டிருக்கிறார்கள். ஒன்று எதிர்காலம் பற்றி அச்சம். இன்னொன்று அன்றாடத்தின் சலிப்பு. 

இன்று எவ்வளவு வசதியாக இருந்தாலும் ஒரு சராசரி மனிதன் எதிர்காலம் என்னாகுமோ என்னும் ஐயமும் அச்சமும் உள்ளூரக் குடைந்துகொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கிறான். வீடு திரும்பும்போது தன் வீட்டுமுன் ஒரு சிறு கூட்டம் தென்பட்டால் திக் என உள்ளம் பதறுபவனே சாமானிய மனிதன். 

வேலை, தொழில், குடும்பச்சூழல், சமூகச்சூழல் அனைத்துமே இங்கே மாறாத ஒரு சுழல் வட்டம். தனிப்பட்ட சாதனைகளுக்கும் நிறைவுக்கும் இடமே இல்லை. நிறைவூட்டும் கேளிக்கைகள் கூட அவனுக்கில்லை. காரணம், இசை, நாடகம், இலக்கியம் என உயர்ந்த கேளிக்கைகள் எல்லாமே அடிப்படையான கலாச்சாரப் பயிற்சி தேவைப்படுபவை. சற்றேனும் பொறுமை தேவைப்படுபவை.

எதிர்மறை மனநிலை என்பது அச்சத்தின் விளைவாக இயல்பாக உருவாகிறது. அச்சத்தைப் பெருக்கிப் பரப்பிக்கொள்ள மனிதர்கள் விரும்புகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் எத்தனை விதமான அச்சங்கள்! எல்லாமே கற்பனையானவை. அந்த அச்சங்களை மக்கள் மிகையான ஊக்கத்துடன் திட்டமிட்டு பெருக்கிக் கொண்டார்கள் என்பதை கண்டோம். 

எதிர்மறைத்தன்மை ஒரு மறைமுகமான கேளிக்கையாக மாறி வாழ்க்கையை நிறைத்து சலிப்பை இல்லாமலாக்கிவிடுகிறது. செய்திகள் கேளிக்கையாக ஆவது இப்படித்தான். கொரோனா காலகட்டத்தில் பலர் எதிர்மறை மனநிலையைக் கொண்டுதான் பொழுதுபோக்கினர். அதற்கு எந்தப் பயிற்சியும் தேவையில்லை. எந்தக் கவனமும் தேவையில்லை.

சமூகவலைத்தளங்களின் அரசியல் மட்டுமல்ல சினிமா, தொலைக்காட்சி என பொதுக்கேளிக்கையேகூட எதிர்மறை மனநிலையின் வழியாகவே இயங்குகின்றன. சமூக வலைத்தளச் சூழலில் உண்மையான அரசியலீடுபாடு கொண்டவர் அனேகமாக எவருமில்லை. சிலர் சுயலாப அரசியலில் இருப்பார்கள். அவர்களின் ஈடுபாடு மட்டுமே உண்மையானது. எஞ்சியோருக்கு அது எதிர்மறை மனநிலையில் திளைப்பதற்கான ஒரு சாக்குதான். ஏதாவது ஓர் அரசியல் நிலைபாட்டை எடுத்துவிட்டால் காலை எழுந்தது முதல் மாலைவரை எவரையாவது வசைபாடிக்கொண்டே இருக்கலாம். வம்புகளை பேசலாம். அவதூறு பரப்பலாம். அச்சங்களையும் ஐயங்களையும் பெருக்கி விரிக்கலாம்.

இங்கே சினிமாவேகூட அந்த மனநிலையில்தான் அணுகப்படுகிறது. சினிமா ஒரு கேளிக்கை. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அதை கேளிக்கையாகக்கூட ரசிக்க முடியவில்லை. அதில் சிலரை வெறுக்கிறார்கள். அந்த வெறுப்பால் வேறு சிலரை விரும்புகிறார்கள். ஒரு சினிமாவுக்கான அறிவிப்பு வந்ததுமே அதை வசைபாட ஆரம்பிக்கிறார்கள். அது தோற்கவேண்டுமென வஞ்சினம் உரைக்கிறார்கள். அவர்கள் வாழும் மனநிலை எத்தனை இருள் நிறைந்தது.

இந்த எதிர்மனநிலை வழியாக இங்குள்ள மற்ற அனைவருமே அயோக்கியர்கள், மூடர்கள் என நிறுவுகிறார்கள். அதன் வழியாக தங்கள் தோல்விகளுக்கு சால்ஜாப்பு கண்டடைகிறார்கள். தங்கள் அயோக்கியத்தனங்களை தங்களுக்கே சற்று நியாயப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஈ. தனிமைக்கூச்சம். சாமானியன் தனித்துநிற்க விரும்புவதில்லை. திரள் ஆக விரும்புகிறான். ஒட்டுமொத்தமாக ஒரு திரளின் பகுதியாக நிலைகொள்கையில் நிம்மதியாக உணர்கிறான். ஆனால் அவனுக்கு கொஞ்சம் தனியடையாளமும் தேவையாகிறது. ஆகவே அதற்குள் சிறு உட்குழுக்களை உருவாக்கிக் கொள்கிறான். மேலும் மேலும் குழுக்களாகிக்கொண்டே இருக்கிறான். ஆகவே குழுக்களை வளர்ப்பதையே சமூகவலைத்தளங்கள் செய்கின்றன. அதற்கு ஒவ்வொருவருக்கும் அவரைப்போன்ற சிலரை அடையாளம் காட்டி அவர்கள் ஒன்றாக வழியமைக்கின்றன

நம்மை இன்று இப்படி தட்டையாக்கிக்கொண்டிருக்கும் இந்த மாபெரும் ‘சராசரி இயந்திரத்தை’ எதிர்கொள்வது எப்படி என்பதே இந்நூற்றாண்டின் பிரச்சினை. அதற்கு ஒவ்வொருவரும் தனக்கான வழியைக் கண்டடையவேண்டும். அதன் வழியாக வெல்லவேண்டும். அதுவே இன்று தேவையாக உள்ள நோன்பு.

உங்கள் பணிகள் எவையாக இருந்தாலும் அவற்றை நீண்டகால அளவில் வகுத்துக்கொள்வதும், குறைந்தது பத்தாண்டுகளுக்காவது தொடர்ச்சியாகச் செயல்படுவதும், அந்தப் பணியின் சவால்களை கூர்ந்து கவனித்து தொடர்ச்சியாக மேம்படுத்திக் கொண்டே இருப்பதும்தான் முக்கியமான தேவைகள். எச்செயலும் அதற்கான வழியை கண்டடையவேண்டும் – நீர் தன் வழியை கண்டடைவதுபோல. எந்த அணையும் ஓர் ஆற்றை முற்றிலுமாக நிறுத்திவிடமுடியாது. வாழ்த்துக்கள்.

*

கல்பற்றா நாராயணனின் ஒரு கவிதை இது

நெடுஞ்சாலை புத்தர்

நீங்கள் செல்வது சைபர் நெடுஞ்சாலை

ஜெ

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நீங்கள் கடித்தத்தை படித்து பதில் எழுதியதில் மகிழ்ச்சி. கவிதை மிகவும் அருமை, மேலும் என் நிலைக்கு ஒத்த கவிதையாகவும் இருந்தது. உங்கள் கடிதத்தை படிக்கும் முன்பு  ”இன்ஸடாகிராமில் எப்படி புகழடைவது” என்ற கட்டுரையை படித்துக்கொண்டிருந்தேன். சிறு கேலிகளையும், துணுக்குகளையும் பகிருங்கள் என ஆலோசனை சொல்லி இருந்தார்கள்.  மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே செல்கிறர்கள்.

நானும் சமூகவலைதளக் கூச்சல்களில் இருந்து விலகியே இருக்கிறேன்– Digital Diet. மிக எளிதாக நேரத்தை தின்று விடுகிறது ஆனால் நான் எங்கே செயல்பட வேண்டும் என்பதில்  எனக்கு மிகப்பெரிய கேள்வி இருக்கிறது. நீங்கள் சிறுபத்திரிக்கை எனும் ஊடகத்தில் செயல்பட்டீர்கள், ஆனால் எனக்கு அப்படியான ஊடகம் அமையவில்லை அல்லது இருக்கும் ஊடகத்தில் அறிவு சார்ந்த மக்களை இழுக்கும் ஊடகம் எது என்பது குழப்பமாகவும் கேள்விக்குள்ளானதாகவும் இருக்கிறது. வலைப்பூவை படிப்பார்களா என தெரியவில்லை. ஆனாலும் நம்பிக்கை மட்டும் இருக்கிறது. குழப்பங்களுக்கு பதில் கிடைத்துவிடும் என நினைக்கிறேன்.

உரையாடல் என்று ஒன்று சத்தியம் தான் என புரிய வைப்பதே இங்கு குதிரைக்கொம்பாக உள்ளது.

நீங்கள் சொல்லியிருக்கும் பலவற்றுடன் உடன்படுகிறேன். மெல்ல மெல்ல அடிகளை நகர்த்தி இந்த சைபர் நெடுங்சாலையை கடக்க முனைகிறேன்.

நன்றி,

வினோத் ஆறுமுகம் – Cyber Buddha

Vinod Kumar Arumugam
Digital Life Coach,
Pradanya e-Life
@thiruvinod4u

https://cybersangam01.blogspot.com/

அன்புள்ள வினோத்

உரையாடல் என நீங்கள் முடிவுசெய்தால் அதற்கு யூடியூப் மற்றும் மேடையுரைகளே வழி. பிளாக் அடுத்தபடியாக.

ஒரு முழுநூலை வாசிப்பது, ஒரு முழுமையான சிந்தனையை தெரிந்துகொள்வது ஏன் முக்கியம், எப்படி அதைச் செய்வது என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம்.

யுடியூப் உரைகள் நல்ல ஊடகமே. அதில் உரையாடலுக்கு முயலக்கூடாது. உரையாடல் நேரடியாக மட்டுமே நிகழவேண்டும்

ஜெ 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2023 11:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.