எழுகதிர் நிலம் -2

பிப்ரவரி ஒன்பதாம் தேதி காலையே காசிரங்கா வனத்தங்குமிடத்தில் இருந்து கிளம்பி அருணாசலப்பிரதேசத்திற்குள் நுழைந்தோம். ஒரு கார், ஒரு குழு என்பது ஒருவகையான ஒருமையை அடைகிறது. மாறிமாறி கேலிசெய்துகொள்வதும் சிரிப்பதும் சற்று நேரம். கொஞ்சம் தீவிரமான உரையாடல் சற்றுநேரம். பயணம் என்பதே ஒரு சிறு அறைக்குள் நண்பர்கள் சேர்ந்து அமர்ந்திருப்பதாக ஆகிவிடுகிறது.

காசிரங்காவில் இருந்து தெஸ்பூரை கடந்து காமெங் ஆற்றின் கரை வழியாக சென்றோம். காமெங் ஆறு முன்பு பராலி என அழைக்கப்பட்டிருக்கிறது. மலையிறங்கி சமநிலத்தை அடைந்ததும் வண்டல்படிவை உருவாக்கி, அந்த வண்டலால் விரைவழிந்து, பல கிளைகளாக பிரிந்து பிரம்மபுத்ராவில் சேர்கிறது. அருணாசலப்பிரதேசத்தில் தவாங் சமவெளியில் கோரி சென் என்னும் மலைமுடியின் அடியிலுள்ள பனியேரி ஒன்றிலிருந்து தோன்றி  தெஸ்பூரில் பிரம்மபுத்ராவில் இணையும் இந்த ஆறு நீர்ப்பரப்பு, அகலம் ஆகியவற்றின் அடிப்படையில் காவேரியைவிடவும் பெரியது. நாங்கள் செல்லவேண்டிய இடத்தில் இருந்து வந்த பெருக்கு.

ஆற்றங்கரை ஓரமாக சாலையில் சென்றுகொண்டிருந்தோம். மறைந்தும் தெளிந்தும் ஆறு உடன் வந்தது. அருணாசலப்பிரதேசம் பெரும்பகுதி காடுதான். அடிவாரத்தில் சோலைக்காடுகள், மேலே செல்லச்செல்ல ஊசியிலைக் காடுகள். சாலையை ஒட்டித்தான் ஊர்கள். ஊர்கள் என்றுகூட சொல்லமுடியாது, சாலைச்சந்திப்புகளை ஒட்டி கொஞ்சம் குடியிருப்புகள். பெரும்பாலானவை சுற்றுலாவீடுகள். கொஞ்சம் கடைகள். சாலைப்பணியாளர்களின் குடியிருப்புகள்.

இந்திய எல்லைப்புறச் சாலை நிறுவனம் (Border Road Organaization) இந்தியாவின் மிகமிகத் திறன்வாய்ந்த அமைப்புகளிலொன்று. இமையச்சாலைகளை அமைத்து நூறாண்டுக்கால அனுபவம் கொண்டது. உலகிலேயே அதுதான் அவ்வகையில் முதன்மையான அமைப்பு எனப்படுகிறது. இன்று பல்வேறு உலகநாடுகளில் மலைச்சாலைகளை அவ்வமைப்பு கட்டித்தந்துகொண்டிருக்கிறது.

ஆனால் அதிலுள்ள அறிவிப்புகளின் ’கவித்துவம்’ பல தளங்கள் கொண்டது. ‘This is a highway, not a runway’  போன்ற அறிவிப்புகள் பரவாயில்லை ரகம்.  I am curvaceous, go slow மேலும் சுவாரசியமானது.  Steady your nerves on these curves உச்சகட்டம். ஆனால் After whisky, driving risky போன்ற அறிவிப்புகள் எந்த ஓட்டுநரையும் உடனே குடி நோக்கி ஈர்க்கும் ஆற்றல்கொண்டவை.

ஆற்றங்கரையில் நிறுத்தி நீரோட்டத்தை பார்த்தோம். பெருக்கு பலவகையில் சுழிகளும் அலைகளுமாகச் சென்றுகொண்டிருந்தது. அஸாம் – அருணாச்சல் சமவெளி என்பதே இந்த ஆறுகள் கொண்டு பரப்பிய இமையமலைப் புழுதியாலானது. ஈரமானால் சேறு, ஆனால் உலர்ந்ததுமே பொடியாக உதிர்ந்துவிடும். மொத்த அஸாம் படுகையே ஒரு மாபெரும் புழுதிக்களம். ஆகவே மழைக்காலம் தவிர எப்போதுமே புழுதியால் மூடியே அஸாம் தென்படும்.

கற்களில் பெரும்பகுதி உருளைக்கிழங்கு வடிவில் அமைந்தவை. ஆகவே களிமண் மிக அரிது. பழையபாணி இல்லங்கள் எல்லாமே மூங்கிலால் ஆன தட்டிகள் மற்றும் உருளைக்கற்களாலானவை. அண்மைக் கட்டிடங்கள் சிமிண்ட் சதுரக்கற்களால் கட்டப்படுகின்றன.

வழியில் ஒரு சிற்றருவி. பல அடுக்குகளாக விழுந்து சாலைக்கு அடியில் சென்று மறைந்தது. நல்ல குளிர் தொடங்கிவிட்டிருந்தது. மேலே உறைந்திருந்த பனிப்பாளங்கள் உருகி வரும் அருவிகள் இவை. இன்னும் இவை பெருகும். கோடைகாலம் முழுக்க இந்த அருவிகளின் வழியாக நதிகள் நீர் பெறும். பனியோ என ஐயமுறச்செய்யும் கடுங்குளிர் பொழிவுகள் இவை.

வழியில் சாலையோர கடைகள் பல. சூடாக தேநீர் குடிக்கலாம். தேநீர் தவிர எவையும் நம் சுவைக்கு உகந்தவையாக இருக்காது. ஒரு கடையில் நூற்றுக்கணக்கான புட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. பலவகையான காட்டுக்காய்களாலான ஊறுகாய்கள் அவை. இங்கே பல தரப்பட்ட நார்த்தங்காய்களின் காட்டுவகைமாதிரிகள் உள்ளன. காடுகளில் பொறுக்கி ஊறுகாய்போட்டு விற்கிறார்கள். காட்டுச்சுனைகளில் பிடிக்கப்பட்ட மீன்களின் கருவாடுகள். கருவாட்டு ஊறுகாய்கள்.

வெண்ணிறமாக புட்டிகளில் அடைக்கப்பட்டிருப்பவை மூங்கில்குருத்துகள். இங்குள்ளவர்கள் பலவகையிலும் விரும்பி உண்பவை அவை. கிழங்குச்சுவை கொண்டவை.  பச்சையாகவும் உண்கிறார்கள். மூங்கில் வடகிழக்கே முக்கியமான உணவு.

வடகிழக்கில் காட்டுயிர்களே இல்லை. இங்குள்ள பெரும்பாலான பழங்குடிகள் வேட்டையர்கள். துப்பாக்கி வந்ததுமே அத்தனை விலங்குகளையும் வேட்டையாடி அழித்துவிட்டனர். பர்மா -அஸாம் வகை யானைகள்கூட முன்பு அருணாச்சலில் இருந்துள்ளன. இன்று ஒன்றுகூட இல்லை. பூட்டானில் சில பகுதிகளில் யானைகள் உள்ளன என்று சொல்லப்படுகிறது.

மாலையில் தவாங்- பொம்டிலா சாலையில் முன்னா காம்ப் என்னும் இடத்தில் இருந்து 15 கிமீ தொலைவிலுள்ள தெம்பாங் என்னும் கோட்டைக்கிராமத்தைச் சென்றடைந்தோம். வடகிழக்கு பகுதியில் மிகுந்த வரலாற்று பெறுமதி கொண்ட இடம் இது. பொமு முதல் நூற்றாண்டுக்கு முன்னரே இந்த இடம் நிறுவப்பட்டுள்ளதாக ஆய்வாளர் கூறுகின்றனர். தாமரையின் நகரம் (யுச்சோ-பெமா-சென்) என அழைக்கப்பட்டுள்ளது.

[image error]

தெம்பாங் இன்றிருக்கும் இடத்தில் இருந்து பத்து கிமீ  தொலைவில் சத்-த்ஸி ஆற்றின் படுகையில் இந்த ஊர் அமைந்திருந்தது. அங்கே ஒரு வெள்ளத்திற்கு பின் உருவான தொற்றுநோயில் பெரும்பாலும் அனைவருமே மடிந்தனர். எஞ்சியவர்களால் இன்றிருக்கும் இடத்திற்கு இந்த கிராமம் கொண்டுவரப்பட்டது. இது ஒரு காலத்தில் இப்பகுதியின் அதிகார மையமாக இருந்தது. இந்த ஊரை மையமாக்கி தொடர்ச்சியான போர்களின் வரலாறு உள்ளது.

அருணாசலப்பிரதேசத்தின் மோன்பா (Monpa) பழங்குடியினரின் கோட்டையூர் இது.மோன்பா மக்கள்  என்றால் சமவெளி மனிதர்கள் என பொருள். அருணாச்சலப்பிரதேசத்தின் ஒரே மேய்ச்சலின பழங்குடிகள் இவர்கள். யாக் மற்றும் செம்மரியாடுகளை மேய்ப்பதே இவர்களின் தொழிலாக இருந்துள்ளது. பூட்டானை மையமாகக் கொண்டு இவர்களின் பழங்கால நாகரீகம் பொமு 500 முதல் இருந்து வந்தமைக்கான சான்றுகள் உள்ளன.

பொயு 11 ஆம் நூற்றாண்டில் இவர்கள் திபெத்திய பௌத்தத்தின் செல்வாக்குக்கு ஆட்பட்டனர். ந்யிங்மா மற்றும் காக்யூ பௌத்த மரபுகள் இவர்களிடம் இன்றுள்ளன. இக்காலகட்டத்தில் இவர்களின் மொழிக்கு திபெத்திய எழுத்துரு ஏற்றுக்கொள்ளப்பட்டது. பொயு 13 முதல் பௌத்த கெலுக் மரபுக்குள் சென்றனர் (இன்றைய தலாய் லாமா இம்மரபினர். இன்று முதன்மைச் செல்வாக்குடனிருக்கும் திபெத்திய மரபு இதுவே)  இவர்களின் குடியைச் சேர்ந்த சங்யாங் கைஸ்டோ (Tsangyang Gyatso) ஆறாவது தலாய்லாமாவாக தெரிவுசெய்யப்பட்டார்.

இன்றைய மோன்பா மக்களின் தலைவர் தலாய் லாமாதான். இப்பகுதியின் எல்லா மடாலயங்களிலும் அவருக்கான சிம்மாசனம் உள்ளது. திபெத்தை சீனா ஆக்ரமித்தபோது தலாய் லாமா அருணாசலப்பிரதேசம் வழியாகவே தப்பி இந்தியாவுக்குள் வந்தார். அவர் வந்து தங்கியது தவாங் மடாலயத்தில்தான். தலாய் லாமாவுக்கு உலகளாவிய ஏற்பு உருவானபோது மோன்பா மக்களின் பண்பாடும் உலகமறியப்படலாயிற்று. இன்று அவர்கள் கல்வி, செல்வம் இரண்டிலும் முன்னேறி வரும் மக்கள்.

ஆறாம் தலாய் லாமா

சுவாரசியமான ஒன்றுண்டு. இந்திய இடதுசாரிகள், இந்தியா முழுக்க தனித்தேசியப் பிரிவினைவாதம் பேசுபவர்கள் வடகிழக்கிலுள்ள இனக்குழுக்களின் பிரிவினைவாதப் போராட்டத்தை சுதந்திரப்போர் என்றும், இந்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் அடையாளப்படுத்தி ஆதரிப்பார்கள். ஆனால் திபெத்தின் மீதான சீன ஆக்ரமிப்பை பற்றி ஒன்றும் சொல்லமாட்டார்கள், அல்லது ஆதரிப்பார்கள்.

வடகிழக்கின் பிரிவினைப்போர்கள் உண்மையில் நாடு என்னும் புரிதலற்ற பழங்குடிகள் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் பூசலே. ஒவ்வொரு பழங்குடியும் மற்ற அத்தனை பழங்குடிகளும் வாழும் நிலத்தை ஒட்டுமொத்தமாக தனது நிலம் என்று கேட்டு போரிட்டுக்கொண்டிருந்தது. உதாரணமாக நாகா பழங்குடிகள் கோரும் நாகாலாந்துக்குள்தான் அங்கமிகள் ,குக்கிகள் ஆகியோர் கோரும் தனி நாடுகளும் அடக்கம்.

ஆனால் திபெத் தனித்தன்மை மிக்க பண்பாடும், மதமும், இனக்குழு அடையாளமும் கொண்ட நாடு. நீண்டகாலம் தனிநாடாக விளங்கியது. அதன்மீதான சீன ஆக்ரமிப்பு என்பது ஹான் சீன பேரினவாதத்தின் இன ஆக்ரமிப்பு. பௌத்தமதத்தை அழிக்கும் பண்பாட்டு ஆக்ரமிப்பு. திபெத்திய கனிமவளத்தைச் சுரண்டும் பொருளியல் ஆக்ரமிப்பு. அதற்கு எதிராக எந்த முற்போக்கும் இங்கே முனகலைக்கூட எழுப்பியதில்லை.

சர்வதேச அரசியல் என்பது இங்குள்ள கருத்தியல் கூலிப்படைகளைக்கொண்டு புரிந்துகொள்ளத்தக்கதல்ல என்னும் தெளிவை அடையாமல் நாம் இவற்றைப்பற்றிப் பேசவே முடியாது. ஆனால் அதற்கு தனியனுபவங்கள் வழியாக அடையப்பெறும் ஒரு முதிர்ச்சி தேவையாகிறது. அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தன்முனைப்பின்மையும் தேவை. பொதுவெளியில் தனக்கென ஒரு முற்போக்குச் சித்திரம் சமைத்துக்கொள்வதை பற்றி மட்டுமே எண்ணுபவர்களால் அதை எய்த இயலாது.

மோன்பா பக்களின் பண்பாடு திபெத்துடன் மட்டுமே தொடர்பு கொண்டு தேங்கி நின்றுவிட்ட ஒன்று. பிரிட்டிஷார் 1914ல் சிம்லா ஒப்பந்தப்படி அன்றைய திபெத் ஆட்சியாளரான தலாய் லாமாவின் ஏற்புடன் மக்மோகன் எல்லைக்கோடு என்னும் எல்லைப்புரிதலை அடைந்தனர். அதன்படி மோன்பா மக்கள் பூட்டான், திபெத், அருணாசலப்பிரதேசம் ஆகிய மூன்று நாடுகளிலாகப் பிரிந்தனர். ஒருவரோடொருவர் தொடர்பற்ற இனக்குழுக்களாக இன்று நீடிக்கின்றனர்.

கடல்மட்டத்திலிருந்து 2300 அடி உயரத்திலுள்ள இந்த ஊர் உருளைக்கற்களாலான கோட்டையால் சூழப்பட்டிருந்தது. ஏறத்தாழ மூன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்டது. உள்நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் இரு வாயில்கள். அவை கற்களை அடுக்கி கட்டப்பட்ட கனமான சுவர்களால் ஆனவை. கற்கள் நடுவே சேறு அல்லது சுண்ணம் இல்லை. கற்களின் எடைதான் பிடிப்பு. கற்களுக்கு நடுவே மரத்தூண்களும் மரச்சட்டகங்களும் இன்றைய கட்டுமானங்களின் ‘பில்லர்’கள்போல உபயோகப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

உள்ளே கட்டிடங்களும் கற்களை அடுக்கி உருவாக்கப்பட்ட தடித்த சுவர்களாலானவை. பல கட்டிடங்களுக்கு நாநூறாண்டுக்குமேல் பழக்கமுண்டு. மோன்பாக்களில் ஒரு பிரிவினரான திர்கிபா மக்கள் (Dirkhipa) இங்கே வாழ்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் நூறாண்டுகளில் வெளியேறி வேறு ஊர்களில் வாழ்கிறார்கள். 42 வீடுகளிலாக 250 பேர்தான் இப்போது இங்கே குடியிருக்கிறார்கள். தெம்பாங் கோட்டையூர் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்படும் கலாச்சாரச் சின்னமாக அறிவிக்கப்படவுள்ளது (தெம்பாங். யுனெஸ்கோ அறிக்கை)

தெம்பாங் அருகே கற்கால நாகரீகத்தின் கருவிகள் கிடைத்துள்ளன. தெம்பாங் ஒரு காலத்தில் வல்லமைவாய்ந்த ஒரு மலையரசின் தலைநகராக இருந்துள்ளது. மோன்பா மக்களின் தொன்மங்களில் வாழும் மன்னரான சா சா ந்யெ(Cha-Cha-Nye) அப்பகுதியெங்கும் அதிகாரம் செலுத்தியிருக்கிறார். போடோக்கள் உள்ளிட்ட பிற இனக்குழுவினரிடம் அவர்களின் வேட்டை, வணிகப்பயணம் ஆகியவற்றுக்கு வரி வசூலித்திருக்கிறார்.

தெம்பாங்கை கைப்பற்ற பல போர்கள் நடைபெற்றுள்ளன. அவர்கள் தங்கள் அரசவம்சம் வாரிசற்று போனபோது திபெத்திய மன்னரின் மகனை திருடி வந்து அரசராக்கியதாகக்கூட கதைகள் உள்ளன. ஆனால் தெம்பாங்கின் தொடர்புகள் முழுக்க திபெத்துடன் மட்டுமே. போர்கள் பூட்டான் மற்றும் சிக்கிமுடன். இந்தியப்பெருநிலத்துடன் தொடர்பே இல்லை, வெள்ளையர் அந்நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது வரை பௌத்தம் ஒன்றே தொடர்பு.

(ஆனால் அருணாச்சலப்பிரதேசம் அப்படி அல்ல பரசுராம்குண்ட் போன்ற இந்துப் பண்பாட்டு தொடர்ச்சி அருணாச்சலப்பிரதேசம் முழுக்கவே உண்டு. ஆண்டுதோறும் தீர்த்தாடகர்கள் வந்துகொண்டுமிருக்கிறார்கள்.)

நாங்கள் அங்கே செல்லவேண்டும் என்று சொன்னபோது ஓட்டுநர் ‘அங்கே என்ன இருக்கிறது? வெறும் சுவர்கள்” என்றார். அவரே முடிவெடுத்து தாண்டிச்சென்றுவிட்டார். நாங்கள் திரும்பச் சொல்லி, வற்புறுத்தி மேலேறிச் சென்றோம். நல்ல வேளை. நாங்கள் சென்றபோது ஏழாண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் விழா நிகழ்ந்துகொண்டிருந்தது. திர்கிபா பழங்குடியினர் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்தனர்.

நாங்கள் தெம்பாங் ஊரில் இரவு தங்க விரும்பினோம். தங்கும் இடங்களுமுண்டு. ஆனால் விழா என்பதனால்  எல்லா வீடுகளிலும் விருந்தினர்கள். நாங்கள் மேலேறிச் சென்றபோது சாலையெங்கும் கார்களைக் கண்டோம். பழங்குடிவிழாவில் கார்களா என வியந்தோம். ஆனால் பழங்குடிகள் இன்று சுற்றுலா வருவாயால் பெரும்பாலும் அனைவருமே சொந்த கார் வைத்திருப்பவர்கள்

விழா நடைபெற்றது ஊருக்கு அப்பால் உள்ள பள்ளி மைதானத்தில். அங்கே பனிப்புகைக்குள் கார்கள் நின்றிருந்தன. வண்ணமயமான பாரம்பரிய உடை அணிந்த மக்கள் கூடி ஆடிப்பாடிக்கொண்டிருந்தனர். பெண்கள் வரிசையாக அமர்ந்து எதையோ கடைவிரித்திருந்தனர். எதையும் விற்கவில்லை, எல்லாமே மது. எல்லாமே இலவச மது. அளவின்றி. உள்ளூர் மதுவும் அயல்நாட்டு மதுவும் உண்டு. அயல்நாட்டு மது ரம், பிராந்தி. உயர்தர மதுவகைகள். அவற்றைச் சூடாக அருந்தினர்

எங்களை வரவேற்று மது அளித்தனர். மறுப்பது பண்பாடல்ல என்பதனால் நான் ஒரு மிடறு விழுங்கினேன். சாராய ஆவி மண்டையை அறைந்தது. அரங்கசாமி கொண்டாடினார். அவர்களுடன் ஒரு நடனம். உடலின் மீதான கவனத்தைவிட்டு நடனமாட எங்கள் எவராலும் இயலவில்லை, மதுவால் அரங்கசாமிக்கு மட்டும் இயன்றது.

ஊர்த்தலைவர் வந்து எங்களுக்கு பாரம்பரிய முறைப்படி வெண்ணிறப் பட்டு துண்டு அணிவித்து வரவேற்றார். அவரும் எங்களை மது அருந்தியாகவேண்டுமென வற்புறுத்தினார். அரங்கசாமி அவரை கௌரவித்து மீண்டும் மது அருந்தினார். அங்கிருந்த எல்லாருமே போதையில் இருந்தனர். ஆனால் எவருமே நம்மூர் போல சலம்பவில்லை. பூசல்களும் அத்துமீறல்களும் இல்லை. மது என்பது ஆடிப்பாடுவதற்கான ஒரு முகாந்திரம் மட்டுமே.

அரங்கசாமி அவர்களின் பள்ளிக்கு ரூ 15000 நன்கொடையாக வழங்கினார். தலைவர் எங்களுக்கு முகமன் உரைத்து துணைத்தலைவர்களை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் அனைவருமே பாரம்பரியமான உடைகளில் இருந்தனர். தலையில் ஒரு வளையம்போன்ற அமைப்பை அணிந்திருந்தனர். அதுதான் சரித்திரம் வழியாக மணிமுடியாக பரிணாமம் அடைந்தது போலும்.

பெரும்பாலும் அனைவருமே ஆங்கிலம் பேசினார்கள். இளைஞர் பலர் கௌஹாத்தியில் படித்தவர்கள். ஒருவர் வேலூர் வரை வந்திருந்தார். இளைஞர்களும் பாரம்பரிய உடையிலிருந்தனர். அவர்களிடம் தென்னாடு பற்றி பேசும்போதே ஓர் உற்சாகம் வெளிப்பட்டது. வடகிழக்கினர் மிக அணுக்கமாக தென்மாநிலங்களை உணர்கிறார்கள்.

மைத்ரிகளை நிறையவே பார்த்தேன். ஆனால் தத்துவ மனநிலையில் இல்லை, மென்போதையில் கைகோத்து மெல்ல சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்கள். நல்ல குளிர். இரண்டு டிகிரி. பல அடுக்கு உடைகள் அணிந்திருந்தாலும் கைகால்கள் இறுகி உடல் நடுநடுங்கியது. மது இல்லாமல் அக்குளிரைச் சமாளிப்பது கடினம்.

அருணாசலப்பிரதேசம் பௌத்தமாநிலம். பௌத்தம் இருக்குமிடங்களில் இந்தியத் தேசிய உணர்வு மிகுதி. தலாய் லாமாவிற்கு இந்தியா அளித்த ஆதரவே முதன்மைக் காரணம். அந்த மைதானத்திலேயே பலவண்ணக் கொடிகள் நடுவே இந்திய தேசியக் கொடி. அது ஒரு பழங்குடி விழா. ஆனால் அதை பௌத்தவிழாவாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்த அனைவருக்குமே கர்நாடகத்திலுள்ள திபெத்திய பௌத்த மையமான பைலேகுப்பை ஊரை தெரிந்திருந்தது.

அங்கிருந்து மாலை ஐந்து மணிக்குக் கிளம்பினோம். ஆனால் இரவு பத்துமணிபோல இருளும் குளிரும். சாலையில் அலைமோதி பலமுறை தொலைபேசி நாங்கள் தங்கவேண்டிய அன்னா ஹோம்ஸ்டேயை கண்டடைந்தோம்.

இங்கே, வடகிழக்கு முழுக்கவே எல்லா நிலமும், வீடும் பெண்களுக்கு உரியவை. ஆகவே எல்லா தங்குமிடங்களும் பெண்களால் மட்டுமே நடத்தப்படுகின்றன. பலவேலைக்காரர்களில் ஒருவராக அவள் கணவரும் இருக்கக்கூடும். தங்குமிடங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றன. மேலைநாட்டவருக்குரிய தரத்தில்.

பொதுவாக வடகிழக்கினர் தூய்மைப்பழக்கமும், விருந்தோம்பும் மனநிலையும் உடையவர்கள். ஆகவெதான் இந்தியாவின் நட்சத்திரவிடுதிகள் பணியாளர்களாக வடகிழக்கினரையே தெரிவுசெய்கின்றனர். அவ்விரு பழக்கத்தையும் நம்நிலத்து இளைஞர்களுக்கு கற்பிப்பது மிகக்கடினம் என என்னிடம் ஒரு நட்சத்திர விடுதி நிர்வாகி சொல்லியிருக்கிறார். அவர்கள் அங்கிருக்கும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் வழியாக இந்தியா முழுக்க வந்து பணியாற்றுகிறார்கள். இந்தியா என்னும் சித்திரம் அவர்களிடம் உருவாக அந்த இளைஞர்களும் முக்கியமான காரணம். நம்மவர் மிகுதியாக சுற்றுலா சென்று வடகிழக்கை அசுத்தப்படுத்தாமலிருக்கவேண்டும்.

இரவில் முதல்முறையாக நடுக்கும் குளிரை அனுபவித்தோம். வடகிழக்கில் பனிக்காலம் முடியும் பருவம் அது. சுற்றுலாவுக்குரியது அல்ல. நாங்கள் அந்த சூழலுக்காகவே வந்தோம். அறையை சூடாக்கும் கருவிகள் இல்லை. ஆனால் இரண்டு அடுக்கு மெத்தைகள் போர்த்திக்கொள்ள தந்தனர். அவை கதகதப்பூட்டின. ஏழரை மணிக்கு படுத்து மறுநாள் காலை ஏழரை மணிக்கு விழித்தோம். அப்போதுதான் விடியத் தொடங்கியிருந்தது.

இளவெயிலின் இனிமையை இந்தவகை குளிர்நிலத்திலேயே அனுபவிக்கமுடியும். வெயில் தித்திக்கும் என்று சொன்னால் அங்கே சென்றுவந்தவர்கள் நம்புவார்கள்

(மேலும்)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 20, 2023 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.