பெங்களூர் சந்திப்பு, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் படைப்புக்களை பதினைந்து வருடங்களுக்கு மேலாக வாசித்து வருகிறேன். உங்கள் கட்டுரைகள் மற்றும் உரைகள் எப்போதும் எனக்குள் பெரும் திறப்புகளாக இருந்து வருகின்றன.

காந்தியை மறுகண்டுபிடிப்பு செய்ததும், எந்த ஒரு கருத்தையும் வரலாற்று மற்றும் கலாச்சார பின்புலத்தில் வைத்து  பார்க்கக் கற்றுக் கொண்டது உங்கள் தளத்தின் மூலம் தான்.

உங்கள் கட்டுரைகளை போலவே உங்கள் புனைவுகளும் (அறம் தொடர், ஊமைச்செந்நாய், மாடன் மோட்சம், ஏழாம் உலகம்) கலாச்சசாரம், ஆழ்மனம் மற்றும் உளவியல் என்று பல தளங்களை தொட்டு செல்கின்றன.

தங்களை சமீபத்தில் நடந்த பெங்களூர் கட்டண உரை நிகழ்ச்சியில் முதன்முறையாக சந்தித்தேன். முதல் நாள் மாலை நீங்கள் தங்கியிருந்த அறைக்கு நான் வந்தபோது நீங்கள் சில வாசக நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உங்களிடம் கேட்க வேண்டிய பல கேள்விகள் மனதில் இருந்து வந்திருக்கின்றன என்றாலும் அன்று உங்களுடன் உரையாடும் நம்பிக்கையில் நான் வரவில்லை. உங்களையும் மற்ற வாசகர்களையும் நேரில் பார்க்கும் ஆவலில் மட்டுமே வந்திருந்தேன்.

உங்களுடன் ஓரிரு வார்த்தை பேசும் சந்தர்ப்பமும் அங்கு கிடைத்தது மகிழ்ச்சியே. நீங்கள் பேசும்போது ஒரு முறை நான் குறுக்கிட்டது உங்களை சற்றே எரிச்சலுறச் செய்தது. புதிய கருத்தை அணுகும்போது அதற்குத் தடையாக இருக்கும் சில fallacy-களைப் பற்றி அப்போது குறிப்பிட்டு பேசினீர்கள்.

அடுத்த நாள் உரையின்போது metaphysics பற்றியும் ஒரு காலத்தில் அது முக்கியத்துவத்தை இழந்து பின்பு மீட்சி அடைந்தது என்றும் பேசினீர்கள். நான் அப்பொழுது குறிப்பிட்டது போல physics-ஐ  metaphysics-லிருந்து பிரித்து முதன் முதலில் விடுதலை தந்தது நியூட்டன் தான் என்று தோன்றுகிறது. அவருக்கு முன் இருந்த அறிஞர்கள் ஒரு இயக்கத்தை விளக்கும் போது அது எப்படி இயங்குகிறது என்பதுடன் அது ஏன் இயங்குகிறது (metaphysics)  எது சரியான இயக்கம் எது தவறான இயக்கம் (morality) என்ற வழிகளிலேயே சிந்தித்து வந்திருந்தனர். நியூட்டன் அந்த சிந்தனை முறைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு இயக்கத்தை புரிந்துகொள்ள ‘ஏன்’ என்ற கேள்வி தேவை இல்லை, அது எப்படி இயங்குகிறது என்று கவனித்து அறிந்தால் மட்டுமே போதுமானது என்பதைச் செயல்படுத்தி  காட்டினார். அவரின் இந்த பங்களிப்பே புதிய அறிவியலுக்கு வழிகோலியது எனலாம்.

நீங்கள் சொன்னது போல metaphysics இல்லாமல் இயங்கும் அறிவியக்கத்தில்  ஒரு கட்டத்துக்கு மேல் தேக்க நிலை ஏற்படுகிறது. Gödel’s incompleteness theorems குறிப்பிடுவதுபோல் எந்த ஒரு அமைப்பும் (system) தன்னுள்ளேயே முழுமை பெறுவதில்லை அதற்கு வெளியே உள்ள ஒன்றை (metaphysics) சார்ந்தே இருக்க முடியும்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்ததன் மூலம் உங்களின் பலதரப்பட்ட வாசகர்களையும் அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள அன்பையும் ஆச்சர்யத்தையும் நேரில் பார்க்கக் கிடைத்தது. நீங்கள் உருவாக்கி முன்னெடுத்துவரும் ஒரு பெரிய எழுத்து இயக்கத்தின் ஒரு சிறு பகுதியை பார்த்த பிரமிப்புடன் வீடு திரும்பினேன்.

முக்கியமான ஆனால் அதிகம் கவனிக்கப்படாத சில புனைவுகள் பற்றி உங்கள் கருத்தை கேட்டு அறிந்து கொள்ளும் ஆவல் உள்ளது. அதைப்பற்றி விரிவாக எழுதி உங்களுக்கு அனுப்ப திட்டம் உண்டு ஆனால் அது உங்களுக்கு நேர விரயமோ என்ற தயக்கமும் உள்ளது.

இப்படிக்கு

சுரேஷ்குமார்

***

அன்புள்ள சுரேஷ்,

எரிச்சலடைந்தேன் என்று தெரிந்திருந்தால் மன்னிப்பு கோருகிறேன். உண்மையில் எரிச்சலடையவில்லை. அதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு சில அடிப்படைகளைச் சொன்னேன். அதை வலியுறுத்திச் சொல்லவேண்டிய தேவை நம் சூழலில் உள்ளது. காரணம், இங்குள்ள விவாதச் சூழல். நாம் முறையான விவாதப்பயிற்சியை எங்கும் பெறுவதில்லை. கல்விநிலையங்களில், பயிற்சிநிலையங்களில் அளிக்கப்படுவதில்லை.

ஆனால் நாம் மிகநெருக்கமாக வாழும் மக்கள். மிக தீவிரமான ஜனநாயகம் செயல்படும் நாடு. ஆகவே விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். விளைவாக, நம்மிடம் ஒரு மூர்க்கமான விவாதமோகம் உள்ளது. அரட்டை என நாம் நினைப்பதே விவாதத்தைத்தான். எதிர்தரப்பை கவனிக்காமலிருப்பது, எதிர்த்தரப்பை திரிப்பது, விவாதமுறைமை இல்லாமல் பேசுவது, நம் தரப்பை எந்நிலையிலும் விடாமலிருப்பது என பல இயல்புகள் நம்மிடமுண்டு. முன்பு நடந்த டீக்கடை விவாதங்கள் இன்று அப்படியே இணையத்திற்குச் சென்றுவிட்டன.

இந்தவகை கட்டற்ற விவாதங்கள் தத்துவம் போன்ற நுண்ணிய, அகவயமான புரிதலைக்கோரும் விஷயங்களில் மிகவும் பிழையானவையாக ஆகும். நேரவிரயம் நிகழும். நான் இந்த வீண் விவாதங்களை முப்பதுநாற்பதாண்டுகளாகக் கண்டுவருபவன். ஆனால் முறையான தத்துவ விவாதப்பயிற்சியும் எடுத்தவன். ஆகவே கூடுமானவரை வீண்விவாதங்களை தவிர்ப்பேன். தகுதியற்றவர்களிடம் விவாதிக்க மாட்டேன், முழுமையாக புறக்கணித்துவிடுவேன்.நட்புச்சூழலில் விவாதநெறிகளை வகுத்து முன்வைப்பேன்.

அன்றும் நண்பர்சூழலில் அவ்வாறு முன்வைக்க முயன்றேன், அவ்வளவுதான். எரிச்சல் அடையவில்லை. எரிச்சலூட்டும்படி நீங்கள் ஒன்றும் சொல்லவுமில்லை. இயல்பான ஒரு கருத்தையே முன்வைத்தீர்கள்.

நியூட்டன் பற்றி நீங்கள் சொன்னவற்றை நானும் யோசித்தேன். நிரூபணவாத அறிவியல்முறைமைதான் மீபொருண்மைவாதத்தின் இடத்தை இல்லாமலாக்கியது என்பதே என்புரிந்தல். பிரான்ஸிஸ் பேக்கன் முன்வைத்தது அது. அதுவே தொடக்கம். நிரூபணவாதத்தின் உச்சம் நியூட்டன் என்பதனால் நீயூட்டனில் அந்த மீபொருண்மை மறுப்புப் போக்கு முழுமையடைந்தது என்று கொள்ளலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 14, 2023 10:30
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.