இந்துமதமும் தாராளவாதமும்

இந்து மெய்மை வாங்க

இந்துஞானமரபில் ஆறுதரிசனங்கள் வாங்க

ஆலயம் எவருடையது? வாங்க

இந்து ஞானமரபில் ஆறுதரிசனங்கள் மின்னூல் வாங்க

இந்து மெய்மை  மின்னூல் வாங்க

ஆலயம் எவருடையது? மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ,

வணக்கம்.

சுதந்திரச் சிந்தனை (Free Thought)  கோட்பாட்டை இந்து ஞானத்தில் எவ்வாறு பொருத்திப் பார்ப்பது? சற்று விளக்கவும்.

அன்புடன்,

கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி

ஏறத்தாழ 15 ஆண்டுகளாக நாளும் எழுதி வருகிறேன். ஆகவே எல்லாவற்றைப் பற்றியும் முன்னரே எழுதியிருப்பேன். மீண்டும் எழுதும்போது முன்னர் எழுதியவற்றையே விரிவாக்கி எழுதுகிறேன் என்று தோன்றுகிறது. அதுவும் நல்லதே. ஒரு சிந்தனையை உரையாடல் மூலம் நானே வளர்த்து முன்னெடுத்துச் செல்கிறேன் அல்லவா? இக்கடிதத்திற்கான பதிலை கலாச்சார இந்து என்னும் கட்டுரையில் எழுதியுள்ளேன். அத்தகைய கட்டுரைகள் ஒரு நூலாகவும் வெளிவந்துள்ளன.

நீங்கள் சொல்லும் சுதந்திரசிந்தனையே தாராளவாத சிந்தனை (Liberalism) என்றும் சொல்லப்படுகிறது. அதன் வரையறை இது. தனிமனிதனின் சிந்தனையும் வாழ்க்கையும் மதம், அரசு மற்றும் சமூகத்தால் கட்டுப்படுத்தப்படக் கூடாது. தனிமனிதன் தன்னுடைய மகிழ்ச்சி, ஆன்மிகமலர்ச்சி ஆகியவற்றை தானே தேடிக்கண்டடையும் உரிமை உடையவன். ஒரு தனிமனிதனின் சுதந்திரம் இன்னொரு தனிமனிதனின் சுதந்திரத்தை பாதிக்காதவரை அது அனுமதிக்கத் தக்கதே. அதற்கு உலகியல் சார்ந்த, நடைமுறை சார்ந்த கட்டுப்பாடுகள் இருக்கலாமே ஒழிய மனிதனுக்கு அப்பாலுள்ள எந்த நெறியும் அதை வரையறைசெய்யவோ வழிநடத்தவோ, கட்டுப்படுத்தவோ கூடாது’

இந்தக் கொள்கை, இதையொட்டிய மனநிலை பதினேழாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் உருவானது. அதற்கான வரலாற்றுப்பின்புலம் இது. பொயு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்தவ மதத்தின் பேரமைப்பான கத்தோலிக்க திருச்சபை ஐரோப்பிய வாழ்க்கையை முழுமையாகவே கட்டுப்படுத்தியது. ஆன்மிகத்தை,  சிந்தனைகளை, கலையை, அன்றாடவாழ்க்கையை, அகவாழ்க்கையை எல்லாம் வரையறைசெய்தது. நெறிவகுத்து, கண்காணித்து, மீறுபவர்களை கடுமையாக தண்டித்தது. அரசியலதிகாரம், பொருளியலதிகாரம், அறிவதிகாரம், மதஅதிகாரம் ஆகிய நான்குமே கத்தோலிக்கத் திருச்சபையிடமிருந்தன.

அந்த முற்றதிகாரத்திற்கு எதிராக மூன்று முனைகளில் ஐரோப்பாவில் கிளர்ச்சி உருவானது. அரசியல்களத்தில் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த நவீனத்தேசிய உருவகங்கள் உருவாகி, அவை தனிநாடுகள் என்னும் அமைப்பாகி, கத்தோலிக்கத் திருச்சபை என்னும் புனிதரோமப் பேரரசுக்கு எதிராக கிளர்ந்தன. பொருளியல் களத்தில் நிலவுடைமையாளர் (டியூக்குகள்) விவசாயிகள் மற்றும் கைத்திறன் பணியாளர் (மேசன்கள்) போன்றவர்களின் எதிர்ப்பு உருவானது. ஆன்மிகத் தளத்தில் மார்ட்டின் லூதர், ஜான் ஹுஸ் போன்றவர்களின் எதிர்ப்புகள் உருவாயின. ஐரோப்பா கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தை உதறியது.

அந்த கிளர்ச்சியின் ஆதாரமாக இருந்த அடிப்படைச் சிந்தனை என்பது ’தனிமனிதனின் உரிமை’ என்பதே. ஆன்மிகநிறைவு, சிந்தனை, மகிழ்ச்சி ஆகியவற்றுக்கான தேடலுக்கான உரிமை அது. ஆனால் ஐரோப்பாவில் தேசிய அரசுகள் உருவானபோது மன்னர்கள் வரம்பில்லா முடியாட்சியை கொண்டுவந்தார்கள். தனிமனித உரிமைகள் தேசியஅரசுகளை ஆட்சிசெய்த மன்னர்களால் கட்டுப்படுத்தப்பட்டன. அதற்கு எதிராக தனிமனிதனின் உரிமையை முன்வைத்த எதிர்ப்புகள் உருவாயின. பிரெஞ்சுப்புரட்சி முதலியவை அதன் வெளிப்பாடுகள். மன்னராட்சி வீழ்ச்சி அடைந்தபோது சர்வாதிகாரிகளின் ஆட்சிகள் உருவாகி மீண்டும் தனிமனிதனின் உரிமைகளை ஒடுக்கின. அதற்கு எதிராகவும் போராடவேண்டியிருந்தது.

இந்தப் போராட்டங்களின் விளைவாகவே ஐரோப்பா நவீன ஜனநாயகத்தை கண்டடைந்து வலுப்படுத்திக் கொண்டது. அங்கிருந்து ஜனநாயகம் உலகம் முழுக்கப் பரவியது. ஜனநாயகத்தின் அடிப்படையே தனிமனித உரிமைதான். சுதந்திரசிந்தனை  இல்லாத இடத்தில் ஜனநாயகம் வாழமுடியாது. தன்னுடைய அரசு எப்படி இருக்கவேண்டுமென முடிவெடுக்கும் முழு உரிமையும் குடிமகனுக்கு இருக்கும் அமைப்பே ஜனநாயகம் என்பது. அதில் அவன்மேல் எந்த புறச்சக்தியும் கட்டுப்பாடு செலுத்தலாகாது.

தனிமனித உரிமையை மேலும் விரிக்கையில் தாராளவாதம் உருவாகிறது. தனிமனித உரிமை என்பது எப்போதும் சமூகச்சராசரி மனிதனை உத்தேசிக்கிறது. உரிமை அனைவருக்கும் உள்ளது என்னும் பார்வையில் சமூகத்தின் சராசரியாக இல்லாமலிருப்பவர்களின் உரிமையையும் கருத்தில்கொள்வதே தாராளவாதம். சமூகப்புறனடையாளர்கள், சிறுபான்மையினர், பலவகையிலும் குறைபாடு கொண்டோர் மட்டுமல்ல அச்சமூகத்திற்கு அன்னியமானவர்கள் ஆகியவர்களையும் உள்ளிட்ட உரிமைப்பார்வை அது. ஜனநாயகம் தனிமனித உரிமைகோரும் சுதந்திரசிந்தனையால் உருவாகி  தாராளவாத சிந்தனையால் மேலும் வலுப்பெறுகிறது.

இனி, உங்கள் வினா. இந்துமதத்தில் சுதந்திர சிந்தனைக்கும் தாராளவாதத்திற்கும் உள்ள இடம் என்ன?

முதலில் சொல்லப்படவேண்டியது, இந்துமதம் நிறுவனரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்றல்ல என்பதே. அதற்கு புறவயமான மையம் இல்லை. ஆகவே அது நேரடியாக எந்த சிந்தனையையும் கட்டுப்படுத்தவில்லை. எவ்வகையிலும் எவரையும் தண்டிக்கும் அதிகாரம் அதற்கு இல்லை. ஆகவே சென்ற ஆயிரமாண்டுக்கால வரலாற்றை எடுத்துப்பார்த்தால் தொடர்ச்சியாக மைய ஓட்டச் சிந்தனையை மீறிச்செல்லும் சிந்தனைப்போக்குகள் உருவாகி, நிலைபெற்றுக்கொண்டே இருப்பதைக் காண்கிறோம்.

எவையெல்லாம் இந்து மதத்தின் அடிப்படைக் கருதுகோள்கள் என சொல்லப்படுகிறதோ அவையெல்லாமே முழுமையாக மறுக்கப்பட்டு, புதிய போக்குகள் உருவாகியிருக்கின்றன. கிளைபிரிந்து வளர்ந்து பரவுவதே இந்துமதத்தின் இயல்பாக உள்ளது. இது இந்துமதம் நிறுவப்பட்ட ஒன்றல்ல, பழங்குடி மரபுகளில் இருந்து நீண்டகால வரலாற்றால் மெல்லமெல்ல திரண்டு தன்னியல்பாக அதன் வடிவை அடைந்தது என்பதே காரணம்.

இந்த வாய்ப்பு எப்போதும் சுதந்திரசிந்தனைக்கு உகந்ததாகவே உள்ளது. ஓர் இந்து எந்த மேலாதிக்கத்தையும் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதில்லை. தனக்கான சிந்தனையை, ஆன்மிகத் தேடலை அவன் அமைத்துக் கொள்ள எப்போதுமே வழி உள்ளது.

இரண்டாவதாக, இந்துமதம் சொல்லும் மீட்பு (முக்தி, மோட்சம்,வீடுபேறு) என்பது தனிப்பட்டை முறையில் ஒவ்வொருவரும் தேடி அடையவேண்டியது. அனைவருக்கும் உரிய பொதுவான மீட்பு என ஒன்று இதில் இல்லை. கூட்டான பயணமே இல்லை. முழுக்கமுழுக்க ஆன்மாவின் தனிப்பயணம். அந்த ஆன்மா மட்டுமே அறிந்த வழி அது. இறையுணர்வும், மீட்பும் மிகமிக அந்தரங்கமானவை என சொல்லப்பட்டுள்ளன. ஆகவே அந்தப் பயணம் எவராலும் கண்காணிக்கப்படுவதில்லை. கட்டுப்படுத்தப்படவில்லை.

இதுவும் ஒரு முக்கியமான வாய்ப்பு. ஓர் இந்து தன் மீட்பின் வழியை தானே தெரிவுசெய்துகொள்ளலாம். ஒரு வழியிலிருந்து இன்னொன்றுக்கு இயல்பாக மாறலாம். மத அமைப்பின் ஆணை எதுவும் அவனுடைய ஆன்மிகம் மேல் செலுத்தப்படாது. இறைவழிபாடு முதல் நானே இறை என உணர்வது வரை எல்லா வழிகளும் உள்ளன. நாத்திகத்திற்கும் இந்து மரபில் இடமுள்ளது. என்றும் இருந்து வந்துள்ளது. பல்வேறு மறைஞானச் சடங்குகளுக்கு இடமிருந்து வருகிறது. இதுவும் சுதர்ந்திர சிந்தனைக்கு மிக உவப்பானதே.

இந்து மரபில் சுதந்திரசிந்தனைக்கு எதிரான மனநிலைகள், அதற்கான கட்டுப்பாடுகள் எங்குள்ளன?

ஒன்று, ஆசாரவாதம். இந்து மரபில் கணிசமானவர்கள் இந்து மதத்தை ஆசாரவாதமாகவே அறிபவர்கள். ஆசாரவாதத்தை பொறுத்தவரை முன்னோர் சொற்கள் மட்டுமே எதற்கும் முடிவான விடையாக அமைபவை. அவற்றை முழுமையாக ஏற்று கடைப்பிடிப்பது மட்டுமே மீட்பின் வழி. அவ்வாறு கடைப்பிடிப்பதற்குரிய நெறிகள் முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஆசாரவாதம் எந்தவகையான சுதந்திரசிந்தனைக்கும் எதிரானது. சுதந்திரசிந்தனை என்பதே மீறலும் பாவமும்தான். அதை ஆசாரவாதம் அமைப்புகள் வழியாகக் கட்டுப்படுத்தவில்லை – அத்தகைய அதிகார அமைப்புகள் இல்லை. அதை ஆசாரவாதம் கடுமையான பிரச்சாரம் மற்றும் குற்றவுணர்ச்சி வழியாக கட்டுப்படுத்தியது.

இரண்டாவது, இங்குள்ள மத அமைப்புகளுக்கு கட்டுப்பட்டிருப்பது சுதந்திரசிந்தனைக்கு எதிரானது. மடங்கள், மதவழிபாட்டு அமைப்புகள் உள்ளன. அவற்றில் நம்பிக்கைகொண்டு இணைந்திருப்பவர்கள் தங்கள் சுதந்திரசிந்தனையை முன்வைக்கமுடியாது. அவர்கள் அந்த அமைப்பின் பொதுவான நெறிகள், கொள்கைகளை ஏற்றாகவேண்டும்.  எந்த அமைப்பும் அந்நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் செயல்பட முடியும்.

அமைப்புகளுடன் இணைந்திருப்பதில் பல வசதிகள் உள்ளன. மரபை கற்க அது நிலையான கட்டமைப்புகளை அளிக்கிறது. கூட்டான செயல்கள் அளிக்கும் நிறைவும் உள்ளது. ஆனால் தனிச்சிந்தனை கொண்டவர்களுக்கு அங்கே இடமில்லை. ஆன்மிகத்தேடலை அகவயமாக ரகசியமாக வைத்துக்கொள்ளலாம். சிந்தனையை அப்படி வைத்துக்கொள்ள முடியாது.

ஆகவே, இந்து ஆசாரவாதத்தை ஏற்காத ஒருவர் எந்த அமைப்புகளுடனும் இணைந்திருக்கவில்லை என்றால் அவர் ஓர் இந்து என்னும் நிலையில் முழுமையான சிந்தனைச் சுதந்திரம் கொண்டவரே. அந்த வாய்ப்பை அளிக்கும் மதங்கள் உலகில் மிக மிக அரியவை. இந்துமதம் இன்றைய உலகில் முதன்மையான ஆன்மிக மரபு என நான் நினைப்பது இதனால்தான்.

இதற்கு அப்பால் இங்கே சுதந்திரசிந்தனைக்கு எதிராக இருப்பது சமூகக்கட்டுப்பாடுகள். நாம் தொன்மையான ஒரு பழங்குடிநாகரீகத்தின் தொடர்ச்சியை இன்னும் தக்கவைத்துக் கொண்டிருப்பவர்கள். நம் சாதி, குலதெய்வம், குடும்ப மரபுகள் ஆகிய மூன்றுமே பழங்குடிப் பண்பாட்டில் இருந்து உருவாகி வந்து நீடிப்பவை. அவை நம் சிந்தனையை ஆழமாக கட்டுப்படுத்துகின்றன.

இந்து மதம் வேறு இங்குள்ள சமூக வழக்கங்கள் வேறு. ஆனால் இந்துமதம் சமூக வழக்கங்களை நிலைநிறுத்துவதற்கு உதவும்படி நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே சமூக வழக்கங்களின் தேக்கநிலைகள் எல்லாமே இந்துமதத்தின் தேக்கநிலையாகவே அரசியலாளர்களால் பொதுவாக முன்வைக்கப்படுகின்றன

ஆனால் இந்துமதத்தின் மெய்யியலில் இருந்து உருவாகி வந்த ஞானிகளே இந்து சமூகத்தின் தேக்கநிலைக்கு எதிராக என்றும் போராடிவந்துள்ளனர். எல்லா மாற்றங்களும் அவர்களால் உருவாக்கப்பட்டவையே. ஆதிசங்கரர் முதல் விவேகானந்தர், நாராயணகுரு, வள்ளலார் வரை அதற்கு ஆயிரகணக்கான முன்னுதாரண ஆளுமைகளை நாம் சுட்டிக்காட்டமுடியும்.

நவீன சுதந்திரசிந்தனை இந்தியாவுக்கு ஐரோப்பாவில் இருந்து வந்தது. ஐரோப்பா மாபெரும் போராட்டங்கள், ஒடுக்குமுறைகள் வழியாக இருநூறாண்டுகளில் வந்தடைந்தது அந்த உச்சம். ஆனால் இங்கே எந்த வகையான ஒடுக்குமுறைகளும் இல்லாமல், வெறும் கருத்துமோதல் வழியாகவே நவீன சுதந்திரசிந்தனை வேரூன்றி நிலைகொண்டதை வரலாறு காட்டுகிறது. இங்கே பழமைவாதிகளோ அமைப்புகளோ எந்த வன்முறையையும் செலுத்தவில்லை. கருத்தியல் களத்தில் அவர்கள் வெல்லப்பட்டனர்.

அவ்வாறு நவீன சுதந்திரசிந்தனையை உடனே ஏற்றுக்கொண்டவர்கள் தயானந்த சரஸ்வதி, ராஜா ராம்மோகன் ராய், விவேகானந்தர், நாராயணகுரு, காந்தி போன்ற இந்து மெய்யியல் ஞானிகள் என்பதை கவனிக்கவேண்டும். அவர்களால்தான் இங்கே பழமைவாதம் தோற்கடிக்கப்பட்டது.

இந்தியாவில் நவீன ஜனநாயகம் வெறும் முப்பதாண்டுக்காலத்தில் அறிமுகமாகி உறுதியாக நிலைகொண்டது. அதற்குக் காரணம் இந்தியாவின் அடிப்படையான மரபு இந்துமதமாக இருப்பதுதான். அதைநம்பியே இங்கே ஜனநாயகம் இன்னும் நிலைகொள்கிறது. நமக்கு அண்மையிலுள்ள பிறநாடுகளை நம்முடன் ஒப்பிட்டுப்பார்த்தால் இதை நம்மால் உணரமுடியும்.

இந்துமதம் சுதந்திரசிந்தனைக்கு சாதகமான ஆன்மிக மையமும், தத்துவ உள்ளடக்கமும் கொண்டது. இந்துமதத்தின் வரலாற்றுப்பரிணாமம் அதை மையம் சார்ந்ததாக ஆகாமல் விரிந்து பரவுவதாக ஆக்கியுள்ளது. பிறவற்றை அழித்து தன்னை நிறுவிக்கொள்வது அதன் வழி அல்ல, பிறவற்றை உள்ளிழுத்து தன்னை விரித்துக் கொள்வதே அதன் வழி. அது ஜனநாயகத்தின் அடிப்படையான இயல்பு.

சுதந்திரசிந்தனையின் விரிவாக்கமான தாராளவாத சிந்தனையும் இந்தியாவில் இயல்பாகவே ஏற்பு பெற்று வந்ததையே வரலாறு காட்டுகிறது. பிறநாடுகளில் பெரும் பழமைவாத எதிர்ப்புகளைச் சந்தித்த புதியசிந்தனைகள் இங்கே இயல்பாக ஏற்கப்பட்டன. இந்து வாழ்க்கைமுறையையே மாற்றியமைத்த இந்து சிவில் சட்டம் ஏற்கப்பட்டது ஓர் உதாரணம். இன்று, மூன்றாம்பாலினத்தவர், மாற்றுப்பாலுறவினர் உரிமை வரை அனைத்தையும் பெரிய எதிர்ப்புகளில்லாமல் இந்து சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு அடிப்படையில் இதிலுள்ள ஏற்கும்தன்மை, உள்ளிழுக்கும் தன்மையே காரணம்.

இத்தனையையும் சொல்லி முடிக்கும் இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். இந்துமதம் அதன் உள்ளிழுத்து விரியும் தன்மை, சமரசத்தன்மை, தனிமனிதத் தேடலை அனுமதிக்கும் தன்மை, ஆன்மிகத்தை அந்தரங்கப்பயணமாகவே முன்னிறுத்தும் தன்மை , மைய அமைப்புகளில்லாத தன்மை ஆகியவற்றின் வழியாக சுதந்திர சிந்தனையையும் தாராளவாதத்தையும் இயல்பாக ஏற்பதாக உள்ளது. ஆனால் இவ்வியல்புகள் எல்லாமே அதிகாரத்தை உருவாக்கிக் கொள்வதற்கு எதிரானவை.

ஆகவே மதம்சார்ந்த அதிகாரத்தை உருவாக்கிக் கொள்ள முயல்பவர்கள் இவற்றுக்கு நேர் எதிரான இயல்புகளை இந்துமதத்தின்மேல் ஏற்றமுற்படுகிறார்கள். இந்துமதத்தை சமரசமற்றதாக, அன்னியரை விலக்குவதாக, தனிமனித தேடலுக்குப் பதிலாக திரள்மனநிலையை உருவாக்கக்கூடியதாக, மையமான அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படுவதாக ஆக்க முயல்கிறார்கள். அண்மைக்காலமாக நாம் கேள்வியே பட்டிராத மதஅமைப்புகள் ஆணைகளை பிறப்பிக்க ஆரம்பித்திருப்பதைக் காண்கிறோம். மதஅமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியலதிகாரத்தை நோக்கிச் செல்வதைக் காண்கிறோம்.அதாவது, இந்துமதம் எந்த இயல்பால் இன்றைய உலகின் மிக அரிய ஞானமரபாக உள்ளதோ அந்த இயல்பு அழிக்கப்படுகிறது.

இரு நிலைகளிலும் அந்த அழிப்பே நிகழ்கிறது. இந்து மரபின் அரவணைக்கும்தன்மை, தனிமனித விடுதலை சார்ந்த ஆன்மிகம், மையமற்ற ஜனநாயகத்தன்மை ஆகியவற்றை முற்றாகவே மறுத்து அதை ஒரு தேங்கிப்போன அடக்குமுறை கருத்தியலாக முத்திரையிட்டு, இழிவுசெய்து ஒழித்துவிடும் பெருமுயற்சிகள் நிகழ்கின்றன. அவை முற்போக்குச் சிந்தனை என்றபெயரில் உலகளாவிய நிதியுதவியுடன் நிகழ்கின்றன. இந்துமதம் அழியவேண்டுமென்னும் குரல் காதில் விழாமல் நம்மால் ஒருநாள் கூட நம்மால் வாழமுடிவதில்லை. உலகின் எந்த மதத்தின்மீதும் இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதல் இன்று நிகழவில்லை

அவர்கள் இந்து சமூகத்தின் எல்லா சமூகவியல் பிரச்சினைக்கும் இந்துமதமே காரணம் என வாதிடுகிறார்கள். கருணையை, சமத்துவத்தை முன்வைத்த மாபெரும் இந்துஞானியர் எல்லாருமே கொடிய அடக்குமுறையை பரப்பியவர்கள் என்கிறார்கள்.  ஆனால் கத்தோலிக்கச் சபையும் போப்பாண்டவரும் நேரில் ஈடுபட்டிருந்த போதிலும்கூட செவ்விந்தியர்களையோ ஆஸ்திரேலிய தொல்குடிகளையோ முற்றழித்ததும், கறுப்பின மக்களை அடிமையாக்கி வணிகம் செய்ததும் சமூகசக்திகளே ஒழிய கிறிஸ்தவத்திற்கு அதில் பங்கில்லை என வாதிடுவார்கள்.

மறுபக்கம் இவர்கள் சொல்லும் இதே முத்திரைகளை அப்படியே வாங்கிக்கொண்டு, அதற்குச் சாதகமானவகையில் இந்து மதத்தை ஆக்கும்படியாக மதவாத ஆதிக்க அரசியலை நிகழ்த்துபவர்கள் செயல்படுகிறார்கள்.

இந்த இருமுனைத் தாக்குதல்களில் இருந்து இந்துமதம் காக்கப்படவேண்டும் என்றால் அதன் ஆன்மிகம் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படவேண்டும். அதன் அடிப்படை சுதந்திரசிந்தனையே என நிறுவப்படவேண்டும்

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 12, 2023 10:35
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.