லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்

லட்சுமி சரவணக்குமார் உரை, கடிதம்- விஷால்ராஜா

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் நீங்கள் லக்‌ஷ்மி சரவணகுமார் அவர்களின் படிக விழாவில் ஆற்றிய உரையை கேட்டேன். தொடர்ந்து அது குறித்து விஷால் ராஜா உங்களுக்கு எழுதிய கடிதத்தையும் தளத்தில் வாசித்தேன். ஒரு மாணவர் என்ற முறையில் அவர் உங்கள் உரையின் சாரத்தை நன்றாகவே தொகுத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதில் ஒரு சிறிய திரிபு நிகழ்கிறது. நீங்கள் ஆற்றிய அவ்வுரையின் நுண்மையான அதே சமயம் புறவயமான ஒரு பேசுபொருளை அவர் மேலும் பூடகமாக்கி புரிந்துகொள்கிறாரோ என சந்தேகம் எழுகிறது. மேலும் அவரது தனிப்பட்ட அழகியலுக்கு தங்கள் வார்த்தைகளை பயன்படுத்தி மதில் அமைத்துக் கொள்கிறார் எனவும் தோன்றுகிறது.

உங்கள் உரையில் நீங்கள் குறிப்பிடும் ‘புனைவில் காலம்’ குறித்தான அவதானம் நுண்மையானது. ஆனால் அது எவ்விதத்திலும் சம்பவங்களின் கோர்வையான “கதை” சொல்லலை மறுதலிக்கவில்லை. மாறாக கதையை, சம்பவங்களை காலத்தில், வெளியில் அகமும் புறமும் என விரிப்பதையே சொல்கிறீர்கள். விஷால் ராஜா தனது கடிதத்தில் “கதை” (இந்த இரட்டை மேற்கோளில் அவரது மெல்லிய பரிகாசம் இருப்பதை காண்கிறேன்) என்பதை நுட்பமாக விவரணைகள், எண்ணவோட்டங்கள், படிமங்கள் அல்லாத சம்பவங்களின் கோர்வை என மாற்றுகிறார். ஆனால் மாறாக இவைவே கதையை செழுமையாக்கும் கருவிகள். இவை வளர்த்தெடுக்கப்பட வேண்டியது கதைக்கு எதிராகவோ மாற்றாகவோ அல்ல. இதை குறித்த உங்கள் எண்ணம் உங்கள் கதைகளை வாசிப்பவர்களுக்கும் தெரியும். புற சம்பவம் என்பது செறிவானதாக இருக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் அர்த்தமற்று சிதறி கிடக்கும் சம்பவங்களை உங்கள் படைப்புலகில் எங்கும் காணமுடிவதில்லை.

விஷால் ராஜா சம்பவங்களின் கோர்வையான “கதை”யை மறுப்பதன் வழியாக மறுபுறம் கோர்வையற்ற விவரணைகள், கோர்வையற்ற எண்ணவோட்டங்கள், படிமங்கள் ஆகியவற்றை (சற்று கூடுதலாகவே) கலைமதிப்பு கொண்டதாக நினைப்பதாக எண்ணம் எழுகிறது. ஆசிரியருக்கு மிக அகவயமாக தோன்றும் ஒரு உணர்வுநிலையும், பொருள்/பொருளின்மையும் போதும் என கருதுவதாக படுகிறது.

மேலும் அபாயகரமான மற்றொரு முடிவுக்கு அடுத்த கட்டமாக அவர் செல்கிறார். அர்த்த ஒருமை கூடும் எந்த கதை மேலும் வைக்க சாத்தியமான “சமைக்கப்பட்டது” என்னும் குற்றச்சாட்டு அது. இது அவர் கடிதத்தில் பூடகமான ஒரு விமர்சன அதிகாரமாக வெளிப்படுகிறது. அவ்வுண்மை தேர்ந்த வாசகர்களையும் ஏமாற்றவல்ல, எழுத்தாளரையே கூட ஏமாற்றவல்ல ஒன்று. குறிப்பிட்ட சிலர் அதன் உண்மையை உள்ளுணர்வால் கண்டுகொள்வார்கள் என்கிறார்.

அர்த்த ஒருமை கூடிய உலகின் மகத்தான கதைகள் பலவும் அசாதாரணமான திட்டமிடல் தன்மை கொண்டிருக்கும். அதன் ”அசாதாரண” தன்மையே அவற்றை இலக்கியமாக்குகிறது திட்டமிட்ட தன்மையல்ல. அந்த அசாதாரண தன்மை அதன் எளிமையிலோ, செறிவிலோ இருக்கலாம். மாறாக திட்டமிட்ட தன்மை என்று ஒன்றை வகுத்து அது போதமனது செய்ததா அல்லது நனவிலியில் தோன்றியதா என்பதை பேசுவது ஒரு வகையில் விமர்சனத்துக்கு எதிரானது. அதில் இரு தரப்புக்கும் ஒருவரை ஒருவர் அங்கீகரிக்க பொது தளம் இல்லாமல் ஆகிறது. உளவியல் மேல் ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதை உளவியலாய்வு செய்யப்படுபவர் எந்நிலையிலும் மறுக்கமுடியாது என்பது தான் அது. “நான் அப்படி நினைத்ததே இல்லை” என்பதற்கு உளவியலாளரின் பதில் “ஆனால் உங்கள் நனவிலியில் அப்படி நினைக்கிறீர்கள், அது உங்களுக்கு போதமனதில் தெரிய வாய்ப்பில்லை” என்பது தான. ஒரு விதத்தில் விஷால் ராஜாவின் குற்றச்சாட்டு இதற்கு நேர் எதிராக உள்ளது. ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னையும் அறியாமல் போதமனதில் “சமைக்கப்பட்ட” கதையை எழுதிவிட வாய்ப்புள்ளது, தேர்ந்த வாசகர்களும் அதை அவ்வாறே அறியாமல் படித்துவிடவும் வாய்ப்புள்ளது என்கிறார். நனவிலி மேல் சத்தியம் பூண வேண்டும் என்கிறார்.

இவ்வாறு எழுத்து போதத்தை பூடகமாக்குவதினால், விளைவாக அதை சந்தேகிப்பதினால் எழுத்தாளர் ‘திட்டமிடல்’ என தோன்ற வாய்ப்புள்ள எல்லா வகை கலை ஒருமையையும் அர்த்த ஒருமையையும் மறுதலிப்பவர் ஆகிறார். இந்த குற்றச்சாட்டை பயந்தே அவர் கோர்வையற்ற அக/புற சித்தரிப்புகளிலும், படிமங்களிலும் தஞ்சம் புகுபவர் ஆகிறார். கதைக்கு எதிரான இச்செயல் உண்மையில் என் வரையில் இலக்கியத்திற்கும் ஓரளவு எதிரானதே. அந்த பாணியில் சில நல்ல கதைகள் அவ்வபோது தோன்றலாம். ஆனால் அவை ஒருபோதும் மகத்தானவையாகவோ, நேர்நிலையானதாகவோ இருப்பதில்லை.

எழுத்தும் வாசிப்பும் முற்றிலும் அகவயமான செயல்பாடு என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் விமர்சனம் அப்படி இருக்க இயலாது. படைப்பு செயல்பாட்டை முடிந்த அளவு தர்க்க நிலையில் வைத்து ஆராய்வதே விமர்சன மரபு. அதை பூடகமாக்கி ஆயுதமோ கேடயமோ செய்து கொள்வது அல்ல. அது அந்த விமர்சகனையும் சரி அதை கைகொள்ளும் எழுத்தாளனையும் சரி தொடர்புறுத்தலுக்கு அப்பாலான ஒரு தீவில் தேக்கி நிறுத்திவிடும். இளம் எழுத்தாளரான விஷால் இதை கருத்தில் கொள்வார் என நம்புகிறேன்.

அன்புடன்

வெங்கடரமணன்

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 10, 2023 10:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.