கவிஞனும் கவிதையும் 1 பொதுவெளியின் குரல்

பிரிட்டனில் சென்ற ஆண்டு வெளியான கவிதைத் தொகுப்புகளைப் பற்றிய கட்டுரை ஒன்றில் நம்முடைய காலத்தில் கவிதை பொதுவெளியின் குரல் என்பதிலிருந்து உருமாறித் தனிப்பட்ட உரையாடலாகச் சுருங்கிவிட்டது என்று வால்டர் பிளமிங் குறிப்பிடுகிறார்.

அவரது கட்டுரையில் இன்று கவிதை வாசிப்பவர்களாகக் கவிஞர்களும் குறைவான வாசகர்களும் மட்டுமே இருக்கிறார்கள். கவிதை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் ஒன்றைப் போலிருக்கிறது . கவிதைக்கான பிரத்யேக மொழியும் சிறப்பு வடிவங்களும் தேய்ந்து கவிதையென்பது சிறிய உரைநடைபோல மாறிவிட்டது என்றும் விவரிக்கப்படுகிறது

இந்தக் கட்டுரை சமகாலத் தமிழ் நவீன கவிதை சூழலுக்கும் பொருந்தக்கூடியதே. ஆனால் இங்கே பொதுவெளியின் குரல் கவிதையில் உரத்துக் கேட்கவே செய்கிறது.சமகால நிகழ்வுகள் கவிதையில் வெளிப்படுகின்றன. ஆனால் வாசக கவனத்தை அதிகம் பெறுவதில்லை..

அதே நேரம் தமிழ் நவீன கவிதையின் சிறப்பாகக் கருதப்பட்ட அதன் மொழி, மௌனம் மற்றும் கவித்துவ வெளிப்பாடு பெரிதும் உருமாறியிருக்கிறது.

பிளமிங் இன்றைய கவிதையை இன்னும் ஓடிக்கொண்டிருக்கும் பழங்காலக் கடிகாரம் என்று குறிப்பிடுகிறார். அது பொதுவெளியில் உள்ள மணிக்கூண்டு கடிகாரமா. அல்லது வீட்டின் சுவரில் தொங்கும் பழமையான கடிகாரமா எனத் தெரியவில்லை. இரண்டுமாகவும் கவிதை விளங்கியிருக்கிறது.

டிஜிட்டில் கடிகாரங்களில் உலகில் இந்தப் பழைய கடிகாரங்கள் வெறும் அலங்காரப்பொருட்கள் தானா. கவிதையின் இடம் இன்று எங்கேயிருக்கிறது என்பதே கட்டுரை எழுப்பும் கேள்வி

இயற்கை, கவிதையில் வெளிப்படுவது போல நேரில் காணும்போதோ, கேமிரா வழியாகத் திரையில் காணும் போதோ நெருக்கம் தருவதில்லை. காரணம் கவிதை இயற்கையை அப்படியே பதிவு செய்வதில்லை. இயற்கையென விரியும் அதிசயத்தை அடையாளம் காட்டுகிறது. இயக்கம் இயக்கமின்மை. நிலைத்தவை நிலையாமை என்று உயர்தளங்களுக்கு எடுத்துச் செல்கிறது. இயற்கை உலகின் மர்மம் மற்றும் அழகு ஆகியவற்றைச் சொற்களால் முழுவதுமாக விவரித்துவிட முடியாதது.

குளத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மரம் போல இரண்டுமாகவும் ஒன்றாகவும் இயற்கை கவிதையில் வெளிப்படுகிறது.

இயற்கையைக் கவிதையின் வழியே தான் மனிதன் நம்பத் துவங்கினான். அது வரை இயற்கை அச்சம் தருவதாகவே இருந்தது. இயற்கையை ஒரு படைப்பாகக் கருதும் எண்ணம் அதன்பின்பு தான் உருவானது சூரியனையும் கோள்களையும் ஆபரணங்கள் போலக் கருதியவன் கவிஞன் மட்டுமே

பகலை இரவை நோக்கி இழுத்துச் செல்லும் சக்கரங்களை, குதிரைகளை அவனே பின்தொடர்கிறான். இந்த வியப்பும் அதிசயத்தலும் இன்று குறைந்துவிட்டது. இயற்கை இன்று ஒரு நுகர்பொருள் அல்லது அலங்காரம். மனிதனைச் சந்தோஷப்படுத்துகிறது என்பதே அதன் இருப்பின் தேவை. நகரவாழ்வில் எவரும் வேர்களைப் பற்றி நினைப்பதில்லை. அதற்கான தேவையுமில்லை.

காகித மலர்கள் உருவாக்கப்பட்ட காலத்தில் அதைக் கண்டு இயற்கையியலாளர்கள் கொதித்துப் போனார்கள். ஆனால் இன்று நாம் காணும் வரவேற்பு மேஜைகளில் காகித மலர்களே அலங்காரமாகக் காட்சி தருகின்றன. வால்பேப்பராக மாறிய பூக்களே அறையை அலங்கரிக்கின்றன. சுவர் முழுவதும் பூக்கள் உள்ள அறையில் தங்கும் ஒருவன் அதன் வாசனையின்மையைப் பற்றித் துளி கூட நினைப்பதில்லை. நவீன கவிதையும் இது போல காகிதமலராக மாறிவிட்டது தானா.

உண்மையில் இது இயற்கையிலிருந்து கவிதை விலகிப்போகும் செயல்பாடு மட்டுமில்லை. நமது கற்பனை அதன் ஈரத்தன்மையை இழந்துவருகிறது என்பதன் அடையாளமே

இன்னும் பார்க்காத ஒரு கல்லைத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் கவிஞர் வேர்ட்ஸ்வெர்த். உண்மையில் இன்னும் பார்க்காத கற்கள் இருக்கத்தானே செய்கின்றன. பயன்பாட்டு உலகில் அதற்கு தனிமதிப்பில்லை என்பதால் அது தேவையற்ற பொருளாகக் காட்சிதருகிறது.-

கல்லுக்குள் இன்னொரு கல் இருப்பது போல்,இலைக்குள் இன்னொரு இலை இருப்பதைக் கவிதையே காட்டித்தருகிறது. கவிதையின் பிரபஞ்சம் மிகப்பெரியது. அது பூமியை மட்டும் நம்பியதில்லை.

இன்றைய பெருநகர வாழ்வில் எந்த நிகழ்விற்கும் துவக்கம் எதுவன்றோ, முடிவு எது என்றோ அறிய முடியாது. நிகழ்வின் இடையில் நாம் அதை எதிர்கொள்கிறோம். வெற்றி கொள்கிறோம், வீழ்த்தப்படுகிறோம் அல்லது கடந்து போகிறோம். அன்றாடம் சுழல் போல ஆயிரமாயிரம் நிகழ்வுகள் நகரை வட்டமிடுகின்றன. கவிதை மட்டுமே தனி நிகழ்வின் துவக்கம் அல்லது முடிவு பற்றிக் கவலைப்படுகிறது. அல்லது கற்பனை செய்கிறது.

பெண்ணின் ஒரு கண் நீல நிறமாகவும், மறுகண பச்சை நிறமாகவும் இருப்பதைக் கவிதையில் மட்டுமே காணமுடியும். உலகில் இல்லாத பெண் கவிதையில் இடம்பெறுகிறாள். கவிதை இயங்குவது பறக்கும் உடல்களே

ஒரே உலகிற்குள் வேறு வேறு உலகங்கள் இயங்குகின்றன. இதை நம்மால் உணர முடியும் ஆனால் வரையறை செய்துவிட முடியாது. கவிதையில் இந்த மாற்று உலகைக் அறியும் ஒருவன் பரவசம் கொள்வது இதனால் தான்.

நமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் பற்றிப் பேசுவதை விடவும், தனக்கு மட்டுமே தெரிந்த, உணர்ந்த ஒன்றையே கவிதை எப்போதும் பேச முயலுகிறது. அதுவே கவிஞனின் செயல்பாடாகவும் இருக்கிறது.

ஏன் கவிதை உரைநடைக்கு இவ்வளவு நெருக்கமாக மாறிவிட்டது என்ற பிளமிங்கின் கேள்வி முக்கியமானது. காரணம் உரைநடையில் அன்றாட நிகழ்வுகளுக்கும் உணர்ச்சி நாடகத்திற்கும் அதிகச் சாத்தியங்கள் உள்ளன. குறைவான மௌனமே உரைநடைக்குப் போதுமானது. அதைவிடவும் உரைநடை பயன்பாட்டிற்கு மிகவும் நெருக்கமானது. அதாவது அதை ஒருவன் எளிதாக உள்வாங்கிக் கொள்ளவும் கொண்டாடவும் முடியும். இது தான் பிளமிங்கிற்கான விடையோ என்னவோ,

தற்காலக் கவிஞர்கள் அடிப்படையில் ஒருவர் மற்றவருக்காக எழுதுகிறார்கள் என்றும் பிளமிங் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். உண்மையில் அப்படி கவிதை வழியான அக உரையாடல் தமிழ்ச் சூழலில் நடைபெறுகிறதா என்று தெரியவில்லை.

இயற்கையுடனான நமது துண்டிப்பு தவிர்க்கமுடியாதது. ஆகவே. இயற்கையைப் பற்றி எழுதுவதற்குப் பதிலாக,நமக்குள் இருக்கும் அமைதியின்மை, கடினத்தன்மை, கொந்தளிப்பு அலையாடல். மௌனம் போன்றவற்றை நுகர்வோர் உலகின் வழியாகவும் எழுதிவிட முடியும்.

கவிஞர் டி.எஸ். எலியட் அப்படியான ஒரு கவிதை இயக்கத்தைத் தான் முன்னெடுத்தார். அவரது கவிதையில் இயற்கை அமைதியானதில்லை. அது கைவிடப்பட்ட பொருள். சிதைவின் அடையாளம். மயக்கமருந்து தரப்பட்ட நோயாளி

எலியட்டைப் போலக் கவிதை எழுத விரும்புவோர் அல்லது அவரைப் படிக்க விரும்புவோர் இன்று குறைவு.

கவிதையின் வாசகன் இன்றும் இயற்கையின் மர்மத்தை, வியப்பை விரும்பவே செய்கிறான்.

ஆகவே கவிதைக்காக எழுதப்பட்ட கவிதைகளுக்கும் தேவை இருக்கவே செய்கிறது

••

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2023 00:12
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.